யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காமல் இயங்கும் காலத்தின் பதிவுகளை இலக்கியமாக்குவதில் எழுத்தாளர்களும் கவிஞர்களும் சலிப்படைவதில்லை. எழுதப்படும் மொழி எக்காலத்தில் தோன்றியதாக இருப்பினும், அதில் எழுதப்படும் இலக்கியங்கள் எழுதப்படும் காலத்தின் குரலாக இருப்பதோடல்லாமல், எல்லாக் காலத்திலும் நிகழ்காலத்தியச் சாயல்களோடு இருக்கும் தகுதி படைத்தவை. எனவே, காலத்தே தோன்றிய எழுத்தாக்கங்கள் காலங்கடந்து நிற்கும் பெற்றி உடையவை. இந்தப் பெற்றி என்பது அவை யாருக்காக, யாரால் எழுதப்பெற்றன என்பதைப் பொருத்தது.
கவனக் குறைவாலும் கரையானுக்கு இரையானதாலும் அழிந்தவை போக, எஞ்சிய ஆக்கங்களே, தமிழின், தமிழர்களின் ஆவணங்களாக விளங்கிவருகின்றன. பழந் தமிழ் இலக்கியங்களைப் பேணுதலில் காட்டுகிற அக்கறையில் சிறிதும் குறையாமல் புத்திலக்கியங்களைப் பேணிக் காப்பதிலும், வாசகர்களுக்கு அழகுற வழங்குவதிலும் ஈடுபடுகிற பதிப்பகங்களுள் முதன்மைபெறும் நிறுவனங்களில் ஒன்று, என்.சி.பி.எச். கிளை பல தாங்கியும், வாசகர்களின் நிறை பலம் கொண்டும் வளர்ந்து வருகிற இந்நிறுவனத்தின் அரிய பெரிய வெளியீடுகள் ஆவணக் களஞ்சியங்கள்.
வாய்ப்புகளும் வசதிகளும் பெருகி வரும் இக்காலத்தில், இம்மாதிரியான தொகுதிகளை வெளிக்கொணர்தல் சாத்தியம்தான் எனினும், தமிழுக்குத் தகு உயர்வளிக்கும் தக்க படைப்புகளைத் தெரிவு செய்து வழங்குவதில் இந்நிறுவனம் தனிக்கவனம் செலுத்திவருகிறது. நூற்றாண்டு கண்ட கவிஞர் ‘தமிழ்ஒளி’யின் படைப்புகளை முழுத் தொகுப்பாக வெளியிட்ட கையோடு, கவிஞர் சிற்பியின் கவிதைத் தொகுதிகள் முழுமையையும் திறம்படத் தந்திருக்கிறது.
*
மகாகவி பாரதிக்குப் பின்னர் தமிழ்க் கவிதையில் தடம்பதித்து முன்னேறியவர்கள் பலர். அவர்களுள் பாரதியை விடவும் அதிகக் கவிதைகளைப் படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் கவிதைகள் பாரதியின் உயரத்தைத் தாண்டி வளர்ந்துள்ளனவா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அவர் உருவாக்கிய கவிதைத் தடத்தில் தன் காலம் முழுவதும் கவிதைக்காக இயங்கிய கவிஞர்களின் வரிசையில், கவிஞர் சிற்பி சிறப்பிடத்தைப் பெறுகிறார். அதற்கான அறிமுகத்தை, பாரதியின் தலைமைச் சீடரான பாரதிதாசனே தன் வாழ்த்துக் கவிதையில் கொடுத்திருக்கிறார். ‘நிலவுப் பூ’- கையெழுத்துப் பிரதியைக் கண்ணுற்ற மாத்திரத்தில், ‘கவிதை ஒவ்வொன்றும் அமிழ்தாக நான் கண்டேன்’ என்று மகிழ்ந்துரைத்த அவர்,
பாட்டுத் திறம் கண்டேன்; பாலசுப்பிரமணியப்
பாவாணர் செய்த அப் பச்சைத் தமிழ்நூலில்
நாட்டுத் திறம் என்னே; நாற்கவியும் முத்தமிழும்
நல்கும் பயன் என்னே; நாவூறிப் போனேன் நான்!
வீட்டில் குறட்டை விட்ட செந்தமிழர் கண்விழிக்க
வெற்றி இலக்கியத்தை அன்றளித்த பாரதிபோல்
பாட்டைத் திறக்க வந்த பாலசுப்பிர மணியப்
பைந்தமிழ்ப் பாவாணர் புகழ் பெற்று வாழியவே!
என்ற வாழ்த்து அப்படியே பலிதமாகியிருக்கிறது.
*
‘எனக்கவனே குரு, அவன் எழுத்து வேதம், வார்த்தை சட்டம், வாழ்க்கை சத்தியம்’ என்று பாரதியை முன்னிறுத்திச் சூளுரைத்துக் கொண்டு, தனது 16 வயதில் கவிதை எழுதப் புகுந்தவர் சிற்பி. ஆத்துப்பொள்ளாச்சி, ‘நடராச பாலசுப்பிரமணிய சேதுராமசாமி‘ எனும் பெயர் கொண்ட ‘பொ. பாலசுப்பிரமணியம்’ என்பவர், கண்ணதாசனின் தென்றல் இதழுக்கு வெண்பாப் புனைய அமைத்துக் கொண்ட ‘சிற்பி’ என்கிற பெயரே இயற்பெயராய்க் கவிதை உலகில் நிலைத்தது. 1963இல் வெளிவந்த ‘நிலவுப் பூ’ தொகுப்புத் தொடங்கி, அண்மை(2025)யில் வெளிவந்த ‘கிரண ஊர்வலம்’ வரையிலான 24 தொகுப்புகளும், திரண்ட முழுத் தொகுதிகளாக, ‘சிற்பி கவிதைகள்’ என்கிற பெயரில் மூன்று பெரு நூல்களை, புகழ் பூத்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
சென்ற நூற்றாண்டின் சரி பாதியில் தொடங்கி, இந்த நூற்றாண்டின் கால் பகுதி வரைக்குமான காலப் பெருவெளியில் கவிஞர் எழுதிய இக்கவிதைகள், வெவ்வேறு காலக்கட்ட அரசியலை, அறிவியல் வளர்ச்சியை, ஆன்மிகப் புரிதலை, பண்பாட்டு நெருக்கடிகளை, கலை, இலக்கிய, பொருளாதார மாற்றங்களை, தத்துவ சித்தாந்தங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை, மானுடத்தின் அற்புதங்களை, அவலங்களைக் கவித்துவத்தோடு கதைத்தன்மை துலங்க எடுத்துரைக்கின்றன.
மிகைப்படுத்தல் இல்லாது இயல்புநவிற்சியுடன் சொற்சித்திரங்களாகும் இக்கவிதைகளில் மனிதம் மலர்கிறது. பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு பெண்மை குறித்தும், ஒடுக்கப்பட்டோர் நலன் குறித்தும் பரக்கப்பேசும் இவருடைய கவிதைகள், தனி ஆராய்ச்சிக்குக் களம் விரிக்கின்றன. இதிகாச, காப்பியப் பாத்திரங்களை முன்னிறுத்திக் கதைக் கவிதைகளாக விரியும் படைப்புகள் இவர்தம் கவியாளுமைக்குச் சான்றுகளாகின்றன. “கவிஞர் சிற்பிக்கு வியக்கத்தக்க படைப்புப் பரப்பு இருக்கிறது. ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகளிலிருந்து விலகி, புதிய வடிவங்கள், புதிய நடை, புதிய கற்பனைகளைப் படைக்கிறார்’ எனச் சொல்லிப் பாராட்டுகிறார், ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவ நாயர். அதனை மெய்ப்பிக்கும் கவிதைகள் அடங்கிய பெருந் தொகுதிகள் இவை.
*
கடலூர்ச் சிறையில் அடைபட்ட பாரதியின் தன்னுணர்வுச் சிந்தனைகளைத் தாங்கிய ‘பாரதி கைதி எண் 253’, தமிழர் வாழ்வொடு பிணைந்த மகாத்மா காந்தியின் மகத்தான வாழ்வுச் செய்திகளைச் சித்திரங்களாக்கிய ‘மகாத்மா’, தன் சமகால மானுடப் பாத்திரங்களைக் கொண்டு படைக்கப்பெற்ற கதைக் காவியமான ‘மௌன மயக்கங்கள்’, வரலாற்றுக் கவிதை நாடகமாகிய ‘ஆதிரை’, தத்துவச் செறிவுமிகுந்த ‘பூஜ்யங்களின் சங்கிலி’, தன் கிராமத்துக் கதாபாத்திரங்களை அலைகளாய் விரித்து ஓடிவரும் ‘ஒரு கிராமத்து நதி’, அரசியல் காத்திரம் மிகுந்த ‘சர்ப்ப யாகம்’, அறிவியல் தளம் விரிக்கும் ‘சூரிய நிழல்’, சூழலியல் சிந்தனையில் முகிழ்த்த ‘கண்ணாடிச் சிறகுள்ள பறவை’, வினாக்களின் வேள்வியாய் விளைந்த ‘இதுவும் ஒரு கேள்விகளின் புத்தகம்’, முதுமையின் அழகியல் காட்டும் ‘நீலக்குருவி’, ‘கை நழுவும் காலம்’, முகநூலில் எழுதிய கவிதைகளின் தொகுப்புகளாக, ‘முகந்து தீராக் கடல்’, ‘நறிவிலி’, தமிழ் உணர்வு பெருக்கெடுக்கும் ‘கிரண ஊர்வலம்’ முதலான தொகுப்புகள் மூல நூல்களின் தன்மை மாறாமல் இத்தொகுப்பில் தரப்பெற்றிருக்கின்றன. கூடுதலாக, கவிஞரின் சிறார்பாடல்தொகுப்புகளான வண்ணப்பூக்கள், சிற்பி தரும் ஆத்திசூடி ஆகியனவும் இடம் பெறுகின்றன. மூன்றாம் தொகுதியில், இவ்வனைத்து நூல்களுக்குமான முன்னுரைகள், பதிப்புரைகள், அணிந்துரைகள், கால வரிசையில் முழுமையாகத் தரப்பெற்றிருக்கின்றன. அவற்றுள், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன், ஞானபீட விருதாளர் ஜெயகாந்தன், இசை மேதை எம்பி.சீனிவாசன், தீபம் நா.பார்த்தசாரதி, கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர்கள் மீரா, பாலா, கல்யாண்ஜி, இந்திரன், மேனாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி, திறனாய்வாளர் க.பஞ்சாங்கம் உள்ளிட்டவர்களின் அணிந்துரைகள், ஆய்வுரைகள் எனக் கொள்ளத்தக்கவை. சிற்பி என்ற ஆளுமையை, அவர்தம் கவிதைகளைக் கொண்டு அளந்தறிந்து அறிவித்த முன்னோட்டக் கணிப்புகள்.
*
90களில் தொடங்கி, இன்றளவும் கவிதைத்துறையில் இயங்கிவரும் என்னை ஈர்த்த பெருங்கவிஞர் சிற்பி. அவர் கவிதை எழுதுபவராக மட்டுமல்ல, கவிஞராகவும் வாழ்ந்து வருகிறவர். தன் வாழ்வில் கண்ட, தமிழ் வாயிலாகக் கற்ற, மார்க்சிய நெறியில் நின்ற, பிற மொழிகள் எழுப்பி வரும் புதிய கலை இலக்கிய அலைகளை உள்வாங்கி மொழிபெயர்த்த, அனுபவங்களின் அடர்த்தியில் விளைந்த நிகழ்வுகளைக் கதைத்தன்மையோடு கவிதையாகத் தரும் கலையில் பொய்மை கலவாத வாய்மையாளராக அவர் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.
“கவிஞருள் மகாத்மா” என்று ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனாலும், “கவிஞர் சிற்பி அவர்களின் கவிதைப் படைப்புகளைப் படிக்கும்போது, தூங்காமல் துயில் கொண்டு கவிதைப் பண் பாடி வாழ்ந்து இவ்வையகத்தைச் சிறப்பிக்கும் ஒரு கவிதை மகான் என்று போற்றத் தோன்றுகிறது” என்று மேதகு மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமாலும் பாராட்டப்பெற்ற கவிஞர் சிற்பிக்கு வந்த பட்டங்கள் பல; என்றாலும், தன்னைக் கவிஞர் என்று கூடக் குறித்துக் கொள்ளத் தயங்குகிறவர்; ஆனால், கவிதைக்காகவே, தன் வாழ்வை அர்ப்பணித்து இயங்குகிறவர். சிறுகதைக் கூறுகள் குறையாத கவிதைகளையும், புதினப் பாங்குடைய கதைக் காவியத்தையும் படைத்தளித்த அவர் முயன்றிருந்தால், சிறப்புமிகுந்த புனைகதைகளை உருவாக்கியிருக்க முடியும். அதற்கான அனுபவமும் எழுத்து முதிர்ச்சியும் அவருக்கு உண்டு என்பதை அவர்தம் கட்டுரைகளும், மொழிபெயர்ப்புப் படைப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும், தனது களம் கவிதை என்பதில் எப்போதும் உறுதி கொண்டிருக்கிறார். உள்ளூர்க் கவிஞர்கள் தொடங்கி உலகக் கவிஞர்களின் ஆக்கங்கள் பலவற்றையும் விமர்சித்தும், மொழிபெயர்த்தும் தமிழுக்குப் பங்களித்து வருகிற கவிஞர் சிற்பியின் கவிதைகள், மொழிபெயர்ப்புச் சாயல்கள் சிறிதும் அற்ற அசலான, உலகு தழுவிய பார்வை கொண்ட தமிழ்க் கவிதைகள்.
“கவிஞர் சிற்பி, தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். ஆனால், நாம் அவரைத் தமிழுக்கு மட்டும்தான் சொந்தம் என்று ஒரு பேழையிலே வைப்பது நல்லதல்ல. அவர் உலகக் கவிஞர்” என்று உணர்ந்து உரைக்கிறார், கவிஞரும் விஞ்ஞானியுமான டாக்டர் ய.சு.ராஜன்.
*
பாரதியின் கவிதைகளைப் போல், இவரது கவிதைகளும் எளிமையானவை; ஆனால், பொருட்செறிவு மிக்கவை. குறியீடு, படிமம் என்கிற எல்லைகளைக் கடந்து உள்ளுறையையும் இறைச்சியையும் உள்ளடக்கிய சங்கப் பாடல்களின் சாயல்கள் வாய்ந்தவை. ஐங்குறுநூறைப்போல் அமைந்த கவிதைகளும், கலித்தொகையைப் போல் நீண்ட கவிதைகளும் இடம்பெற்ற இத் தொகுப்புகளில், புதிய புறப்பாடல்களும், அரிய அறிவியல் கவிதைகளும், செறிவார்ந்த வரலாற்று, தத்துவப் பார்வையைக் கொண்ட கவிதைகளும் இடம்பெறுகின்றன. ஒன்பான் சுவைகளுள் ரௌத்திரம் பொங்கும் கவிதைகளும், நகைச்சுவைக்குக் களம் அமைக்கும் பல நல்ல கவிதைகளும் இருக்கின்றன.
“ஆலிவர் கோல்ட்ஸ்மித்தைப் பற்றி சாம்யுவல் ஜான்ஸன் கூறினார்: ‘அவர் தொடாத இலக்கியத் துறை எதுவுமில்லை; தொட்டு அணி செய்யாதது எதுவுமில்லை.’ எனக்குக் கவிஞர் சிற்பியை இப்படித்தான் சித்திரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது” என்கிறார் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. இக்கூற்று மிகையானதில்லை என்பதற்குக் கவிஞர் ஆற்றிய இலக்கியப் பணிகளே சாட்சியங்கள்; அதன் தலைச்சன் குழந்தை, இக் கவிதைப் படையல்.
*
வார்த்தை விளையாட்டு, கூறியவை கூறல், மிகையுணர்ச்சி, வலிந்து யாப்பொழுங்கினைத் தவிர்த்தல் அல்லது புகுத்தல், இயற்கை இறந்த எழுத்து எனும் குறைபாடுகள் ஏதுமில்லாத இத்தொகுப்பில், ஹைகூக் கவிதைகள் இல்லை. அளவு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டுப் பிதுங்குகிற, தொங்குகிற வரிச் சுமைகள் இல்லை. சிற்பம் போன்ற செதுக்கல்களில் பிசிறு தட்டாத செய்நேர்த்தியுடன் கவிதாப் பாத்திரங்கள் கச்சிதமாய் அமைகிற தனித்தன்மை சிறப்பு.
தொடக்கத்தில் மரபுமணம் கமழும் கவிதைளைப் பற்றி எழுதியபோதும், இடைக்காலத்தில் சமூகச் சிக்கல்களைச் சாடிய போதும், நிகழ்காலத்து நிகழ்வுகளை நேருறப் புதுநடையில் வழங்கியபோதும், தமிழ் மரபு மாறாமல் தனித்துவத்தைப் பேணி வந்திருக்கிறார். அதனால்தான், மலையாளத்தில் எழுதி வரும் உலகக் கவிஞரான சச்சிதானந்தன், “சிற்பியின் கவிதைகள் நேர்மையானவை; செறிவானவை. இயற்கையின் மீதான அன்பு, தன் கிராமம் குறித்த ஏக்கமூட்டும் நினைவுகள் மற்றும் தன் மொழி, மரபு ஆகியவற்றின் மீதான ஆழ்ந்த மதிப்பு ஆகியவற்றால் அவை நிரம்பியுள்ளன. ஐரோப்பியச் சாயலற்ற ஒரு தனித்துவமான நவீனத்துவத்தை அவர் கைக்கொள்கிறார்; மரபையும், சமகாலச் சமூக விழிப்புணர்வையும், நவீன உணர்வுகளையும் ஈடுஇணையற்ற வகையில் அவர் ஒன்றிணைக்கிறார்” என்று மதிப்பிட்டுரைக்கிறார்.
பாரதிக்குப் பிறகு, அவர்தம் வழியில் இயங்கிவரும் எழுத்தாளராக தோழர் ஜெயகாந்தனையும், கவிஞராக சிற்பியையும் காலம் நமக்குக் கொடையளித்திருக்கிறது. புலனழுக்கற்ற செந்தண்மைகொண்டிலங்கும் சிற்பியின் பண்பு நலன்களும் கவிதை இயக்கமும் பலரைக் கவர்ந்தவை. இவர்தம் கவியாளுமையைத் தேர்ந்து தெளிந்து, தனது கம்பீரக் குரலால் கலகக்குரல்களுக்குப் பதில் கொடுத்துவந்த கவிஞர் பாலா, தன் காலத்தில் இவரது கவிதைகளைத் தொகுப்பு நூல்களாக்கித் தந்திருக்கிறார். அவர்தம் மறைவுக்குப் பிறகு, தோழர் நவபாரதியின் முன்னுரையோடு, சிற்பியின் கவிதைகளைத் தொகுத்து, அவர்தம் பவளவிழாவில் என்னால் தர முடிந்தது. அதற்குப் பிறகு, அவர் படைத்த கவிதைகளையும் இணைத்த மூன்று தொகுதிகளாக இவை வெளிவந்திருக்கின்றன. (‘கருணைக் கடல் இராமாநுசர் காவியம்’ தனிக் காப்பியம். எனவே,இதில் சேர்க்கப்பெறவில்லை; கணக்கிற்குக் கால் நூறு படைப்புகளைக் கவிநூல்களாக்கிய சிற்பி, கவியரங்குகளில் பாடிய கவிதைகளைப் பெரும்பாலும் தவிர்த்தே இருக்கிறார். தொகுத்தால், அதுவே தனிநூலாக வரும்.)
*
கால வரிசையில், நூல் முகப்புகளுடன் தரப்பெற்ற இத்தொகுதிகளுக்கான கவிஞர் சிற்பியின் முன்னுரை, அவர்தம் கவிதை வரலாற்றையும், அவர் களம் இறங்கிய வரலாற்றையும் உரிய தரவுகளோடு, இயல்புறப் பேசுகிறது. அவர் யாருக்காக, எந்தத் தளத்தில் இருந்து தன் மொழியில் கவிதை எழுதுகிறார் என்கிற புரிதலை அது புலப்படுத்துகிறது. தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் முதுபெரும் இலக்கிய ஆளுமைகளுள் ஒருவராகத் திகழும் கவிஞர் சிற்பியின் படைப்பாளுமையை, மார்க்சியச் சிந்தனையோடு அணுகிய தோழர் நவபாரதியின் விரிவான முன்னுரை, அவரது மகாகவித்துவ அடையாளங்களைக் காட்சிப்படுத்துகிறது. அவர், “பாரதிக்குப் பிறகு பன்முகத் தன்மை கொண்ட ஒரு மகாகவியாக எழுச்சி பெறும் பேறு பெற்றவர் சிற்பி; சிற்பி மட்டுமே. வெறும் புகழ்ச்சி அல்ல இது. சிற்பி நம்மோடு வாழ்கின்ற நூற்றாண்டுகளின் சாரமும், சிற்பி எழுதுகின்ற பல நூறு கவிதைகளின் சாரமும் அவர் மகாகவி என்பதை நிலைநிறுத்தும்” என்று உரத்து மொழிகிறார்.
இரு நூற்றாண்டுகளின் இலக்கிய சாசனங்களாக இக்கவிதைகள் அமைந்த பாங்கினை, காலப் பின்புலத்தோடு விவரிப்பதாகத் தொகுப்பாசிரியத் தொகுப்புரை அமைகிறது.
*
மண்ணின் மீதும் மனிதத்தின்மேலும் கவிஞர் கொண்டுள்ள அக்கறையின் புலப்பாடாய், அறச்சீற்றத்துடன் தோன்றிய ஏகாதிபத்திய, போர் எதிர்ப்புக் கவிதைகளும், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பும் கவிதைகளும் அடங்கிய முதல் தொகுதிக்கு செம்மண்ணிறப் பின்னணியில் சிரித்த முகச் சிற்பியைத் தன் தூரிகை விரல்களால் தீட்டித் தந்த ஓவியர் திலகம் மணியன் செல்வன், பசுமைக்கும் சூழலியல் செழுமைக்கும் குரல் கொடுக்கும் கவிதைகள் அடர்ந்த இரண்டாம் தொகுதிக்குப் பசுமை வண்ணத்தையும், முதுமையின் அனுபவச் செறிவுடனும், அழகுடனும் முழுமையை நோக்கி முன்னேறும் கவிதைகள் மலிந்த மூன்றாம் தொகுதிக்கு நீல வண்ணத்தையும் பின்புலமாக்கி, சிற்பியின் முகச் சிரிப்பினைச் சித்திரங்கள் ஆக்கியிருக்கிறார்.
மொழிபெயர்ப்புக்கும் தன் சுய படைப்புக்குமாக, சாகித்திய அகாதெமியின் இரு விருதுகளை முதன்முதலில் தமிழுக்குப் பெற்றுத் தந்தவரும், பத்மஸ்ரீ விருது முதலான பல விருதுகள் பெற்றவருமான கவிஞர் சிற்பி, தன் காலத்துக் கவிஞர்களைத் தக்கவாறு அடையாளம் கண்டு, தன் பெயரில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிப் பாராட்டிவருகிறவர். வாழும் காலத்தில் மூத்த படைப்பாளியின் ஒட்டுமொத்தக் கவிதைப் பங்களிப்பினை ஆவணப்படுத்திய வரலாற்றுப் பெருமையை என்.சி.பி.எச். ஏற்றிருக்கிறது. கவிதை ரசிகர்களுக்கும், கவிதை எழுதுவோர்க்கும், ஆய்வாளர்களுக்கும் சிறந்த இலக்கிய விருந்து அளிக்கும் இத் தொகுதிகள் காலத்தின் சாட்சியமாக நின்று தமிழுக்குப் பெருமிதம் தரக்கூடியவை; மகாகவி பாரதிக்குப் பிறகு வரும் தமிழ்க் கவிஞர்களின் வரிசையில், ஒரு மாபெரும் கவிஞராக, சிற்பியை நிலைநிறுத்தும் வல்லமை மிக்கவை. பாரதி, பாரதிதாசன் கவிதைகள் வரிசையில், ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய இலக்கிய சாசனங்கள் இவை என்பதைத் தேர்ந்த வாசகர்கள் மறுக்க மாட்டார்கள்.
(சிற்பி கவிதைகள் மூன்று தொகுதிகள், (தொகுப்பாசிரியர் – கிருங்கை சேதுபதி, என்.சி.பி.எச். சிறப்பு வெளியீடு. 2026.)
- முனைவர் சொ.சேதுபதி