tha.pandiyan4பச்சையப்பன் கல்லூரியில் உணவு விடுதியில் நான் நின்றுகொண்டிருந்தபோது வணக்கம் தோழர் என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். வெள்ளை சட்டை போட்டு வெள்ளை வேட்டி கட்டித் தோளில் சிகப்பு துண்டு போட்டுக் கொண்டிருந்த பண்பாட்டுப் பெட்டகமான தா.பா. அவர்கள் நின்றுகொண்டிருந்தார்.

தோழர் குற்றாலம் அவர்கள் தாங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படிப்பதற்குச் சென்னை வருவதாகக் கடிதம் எழுதியிருந்தார். கல்லூரியில் சேர்ந்துவிட்டீர்களா இல்லையா என்று பரிவுடன் கேட்டார். கவனமாக இருக்கவேண்டும். நன்கு படிக்க வேண்டும் என்ற அறிவுரையும் தந்தை நிலையில் இருந்து வழங்கினார்.

சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராசா விடுதியில் சேர்ந்தபிறகு இலக்கிய நிகழ்ச்சி நடத்துவதற்காக என்னை மாணவர்கள் தேர்வு செய்தார்கள். தா.பா. அவர்களை இலக்கியக் கூட்டத்திற்கு அழைத்திருந்தேன். அவரும் வருகை தந்தார். திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன.

ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் உள்ளன. ஒரு எழுத்தாளன் பத்துக் குறட்பாக்களை எண்ணிப்பார்த்து எழுதிக் கொண்டிருப்பானா? பன்னிரெண்டு, பதிமூன்று பாடல்கள் எழுதமாட்டானா? எனவே திருக்குறள் அதிகார வைப்புமுறை திட்டமிட்டச் செயலாக எனக்குப் படுகிறது. அன்புகூர்ந்து திருக்குறளை ஆய்வு செய்கிறவர்கள் என் ஐயத்தைப் போக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 30 ஆண்டுகளுக்கு முன்பு தா.பா. அவர்கள் ஆற்றிய உரை இன்னும் என் மனத்தில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். காங்கிரசு தோல்விக்கு முழுப் பொறுப்பாளராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று சொன்னார். ஆனால் புளியம்பழத்தின் விலை மட்டும் மலிவான விலையில் கிடைக்கிறது என்று கூறினார்.

சைதாப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது தா.பா. அவர்கள் புளியம்பழத்தின் விலை மலிவாகக் கிடைக்கிறது என்று பக்தவத்சலம் கூறியதற்கு, புளியமரங்கள் பழங்கள் நிறையக் காய்த்துவிட்டதால் விலை குறைந்துவிட்டது என்று கூறினார்.

கவிஞர் மீ.ரா. அவர்கள் பாரதியார் நூற்றாண்டு விழா சிவகங்கையில் நடத்தினார். அதில் பங்கேற்றுப் பேசிய தா.பா. அவர்கள் வடநாட்டுப் பார்ப்பனர்களுக்கும் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கும் வேறுபாடு உண்டு. வடநாட்டில் - வங்காளத்தில் வாழ்கின்ற பார்ப்பனர்கள் மீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

மீன் உணவு புலால் உணவு அல்லவா என்று கேட்டால் அவர்கள் கங்கா புஷ்பம் என்று சொல்வார்கள். தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மீன் உணவு புலால் உணவு என்பார்கள். படித்தவன் நாட்டைத் திருத்தவேண்டும். அதற்கு மாறாக நடந்தால் சூது வாது பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான் என்று பாரதியார் பாடினார். படித்த இளைஞர்கள் மிகவும் விழிப்புடன் நாட்டைத் திருத்துகின்ற பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருச்சிக்கு நான் தொடர்வண்டியில் செல்லுகின்றபோது எதிர்பாராதவிதமாக, தா.பா. அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவருடைய தம்பி மறைந்த பொன்னிவளவனைப் பற்றிப் பேசினேன். பாரதியார் பாடல்களைக் கேட்பவர்கள் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுகின்ற வகையில் பேசுவதில் வல்லவர் தா.பா அவர்கள் தம்பி பொன்னிவளவன் இளம் வயதிலே மறைந்துவிட்டார்.

அவருடைய துணைவியார் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். விரும்பினால் மறுமணம் செய்துகொள்ளுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எங்கள் குடும்பத்தில் மிகப் பெரிய சோகம் அது என்று கூறினார்.

வடசென்னை மக்களவைத் தொகுதியில் 1989லும் 1991லும் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். தா.பா. தமிழ்நாட்டில் பொதுவுடைமை வகுப்புகளை நடத்துவார். புதுடெல்லிக்குச் சென்றால் இந்தியக் குடிமைப் பணிப் (IAS) பயிற்சியில் தமிழர்கள் பெரும்பாலும் தேர்ச்சி பெறவேண்டும் என்ற கருத்தின்படி படிப்பார்வம் உள்ளவர்களுக்கு உதவுகின்ற வகையில் இலவசமாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தோழர் ஜீவா அவர்களைப் பற்றி அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஜீவா அவர்கள் தனது திருமணத்திற்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கி நடத்துவதற்கு அழைத்தார். நான் தலைமை தாங்கித் திருமணம் நடத்த பணம் தரவேண்டும் என்று தந்தை பெரியார் கேட்டார்.

அதற்கு ஜீவா அவர்கள் கட்சித் தலைமை­யிடம் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். நீ எப்போ கட்சியில் வாங்கித் தருவது நான் எப்போது திருமணத்துக்குத் தலைமை தாங்கி நடத்துவது என்று பெரியார் சலித்துக்கொண்டார். பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்றுசொல்லி நானே வருகிறேன் என்று திருமணத்தைப் பெரியார் நடத்தித் தந்தார்.

மேலும் ஜீவா குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களைத் தந்தை பெரியார் வாங்கித் தந்தார். பெரியாரைக் கவர்ந்த ஜீவாவைப் பற்றிக் கேட்பவரும் மனங்கலங்கும் வகையில் தா.பா. உரை நிகழ்த்தினார்.

இவ்வாறு பெரியாரை மதித்துப் போற்றிய தா.பா. அவர்களுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பாகப் பெரியார் விருது வழங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது. பெரியார் பற்றிச் சிறந்த நூலை எழுதிய பெருமை தா.பா.வுக்கு உண்டு. உடல்நலிவுற்று மருத்துவமனையில் இருந்தபோது அவர் சக்கரவண்டியில் வந்து விருதினைப் பெற்றார்.

நானிலம் போற்றும் நாவீறு படைத்த நக்கீரன். உழைப்பில் வாரா உறுதிகள் உள்ளனவோ என்ற வினாவுக்கு விடையாக விளங்கியவர். பண்புடைமையின் பெட்டகம். நயத்தக்க நாகரிகம் மிக்கவர். பொது வாழ்க்கையில் தூய்மையாக இருக்கவேண்டும் என்று செயல்பட்டவர். உச்சிவெயில் காயும் உசிலம்பட்டி அடுத்த கீழவெள்ளிமலைப்பட்டியில் பிறந்து உலகம் சுற்றிய தமிழர்.

- டாக்டர் ச.சு.இளங்கோ

Pin It