நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு என்று பாரதி சொன்ன புதுமைப் பெண்ணின் பண்புகள், அறிவாற்றலும் அசைக்க முடியாத கொள்கைப் பிடிப்பும் பெற்ற தோழர் தா.பா.வுக்கும் பொருந்தும். தலை பணியாத இந்தத் தமிழன், தமிழர்களைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்த தலைவர்களுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை.
1953-55 இல் காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் நான் இண்டர் மீடியட் வகுப்பில் படித்தபோது, தா.பா. பி.ஏ. பொருளாதாரம் படித்தார். அப்போது ஜனசக்தியில் பணியாற்றிய நண்பர் எஸ்.சோமசுந்தரமும் என் வகுப்புத் தோழர். நாங்கள் (நானும் - தா.பா.வும்) கல்லூரி இலக்கிய விழாக்களிலும், பேச்சுப் போட்டிகளிலும் இணைந்து பேசுவோம்.
அந்த நாட்களிலேயே, கருத்தாழத்தோடு கம்பீரமாக உரையாற்றுவார். அவர் கல்லூரிப் பேரவைத் தலைவராகவும் இருந்தார். மாற்றுக் கருத்துள்ள தலைவர்களையும் அழைத்துக் கல்லூரியில் பேச வைத்தவர். அவர்களின் கருத்து உடன்படாதபோது, மேடையிலேயே தக்க பதில் தருவார்.
நாங்கள் இருவரும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டாளும். எங்களிடையே போட்டியுணர்வு இருந்ததில்லை. எங்களிடையே இலக்கியம் அரசியல் பற்றி சிறு சிறு கருத்து வேறுபாடுகளிலிருந்தாலும் இருவரும் ஒருவரையருவர் பெரிதும் மதித்து வந்தோம். அவர் ஜீவாவைப் போன்று இலக்கியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் பெற்றிருந்தார் அவர்.
ஜீவாவை கல்லூரிக்கு அழைத்து வந்து, கம்பனைப் பற்றி சிறப்பானதோர் உரையாற்ற வைத்தார்.என்னைக் கம்பன்பால் அந்த உரைதான் ஈர்த்தது. தமிழ் இனத் துரோகியாகவும், வெறும் வருணனைக் கவிஞனாகவும் கருதப்பட்ட கம்பனை, கோசலத்தில் புதிய பொதுவுடைமைத் தமிழகத்தைக் கண்ட. மானுடக் கவியாகக் காண வைத்தவர்கள் ஜீவாவும் தா.பா.வும்.
பொதுவுடைமை சித்தாந்தத்தை முழுமையாகக் கற்றுணர்ந்து. இளமையிலிருந்தே அதில் ஈடுபாடு கொண்டிருந்த தா.பா. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து அதில் பல பொறுப்புகளை ஏற்று சிறப்பாகப் பணியாற்றியதில் வியப்பில்லை.
பொதுவுடைமையை வெறும் அரசியல் கொள்கையாகக் கருதாமல். ஒரு பிரம்மாண்ட வாழ்வியல் கோட்பாடாக ஏற்றுக் கொண்டவர். அறிவு சார்ந்த அரசியல் வாதியாக இருந்த அதே நேரத்தில், தீவிரமான சமூகப் போராளியாகவும் திகழ்ந்தார். சிந்தனை செயல் வடிவமாவதுதான் மார்க்ஸியத்தின் அடிப்படை. அதுமட்டுமின்றி, விலைவாசி உயர்வு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை ஆழமாக ஆய்வு செய்து நூல்கள் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில். அவரது வாதத்திறமையும், கொள்கைப் பிடிப்பும், அறிவாற்றலும் பளிச்சிட்டன. ஆனால் தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்ற முடியாமற் போனது தமிழகத்தின் துரதிருஷ்டமே.
அவரை தேசியக் கட்சியினர் சிலர் தங்கள் கட்சிக்கு இழுக்க முயன்றபோது, அதற்கு இடம் தராமல், ‘நான் கடைசி வரை கம்யூனிஸ்டாகவே இருப்பேன்; இறுதியில் என் உடலில் செங்கொடிதான் போர்த்தப்பட வேண்டும்’ என்றார்.
சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றியபோது தளராமல் பணியாற்றியவர். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புகூட, சக்கர நாற்காலியில் அமர்ந்து, சிங்கமென கர்ஜித்ததைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்த கொள்கைக் குன்று, இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவரது பணிகளின் அடையாளங்களும், கருத்துக்களும் என்றும் இம்மண்ணில் நிலைத்திருக்கும், வாழ்க தா.பா.வின் புகழ்!
- பேரா. கா. செல்லப்பா