மதுரை மண்டலத்திலுள்ள உசிலம் பட்டிக்கருகில் அமைந்த வெள்ளைமலைப்பட்டி என்ற கிராமம்தான் பொதுவுடைமை இயக்கத்தின் புகழ் பூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களின் சொந்த ஊர். ‘டேவிட் பண்ணை’ என்ற பெயரிலான தா.பாவின் குடும்பப் பூர்வீக விவசாய நிலம் இங்குதான் உள்ளது.
ஏக்கர் கணக்கிலுள்ள இந்த டேவிட் பண்ணையில்தான் சென்னையிலிருந்து எடுத்துவரப்பட்ட தா.பாவின் உடல் மக்கள் பார்வைக்கும் அஞ்சலிக்கும் வைக்கப்பட்டிருந்தது. காலையிலிருந்து அப்பகுதி மக்களும் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த தோழர்களும் வரிசையில் நின்று மலர்வளையம் வைத்தும் மலர் மாலைகள் சூடியும் உதிரிமலர்களைத் தூவியும் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
காலை பதினோரு மணிக்கெல்லாம் அஞ்சலி செலுத்திய தோழர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக அமர்ந்தும் இடமின்மையால் கால்கடுக்க நின்று கொண்டுமிருந்தனர்.
இருபதுபேர், முப்பதுபேர் என்று தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து கட்சித் தோழர்களும் தொழிற்சங்க ஊழியர்களும் வாகனங்களில் வந்திறங்கி அணிவகுத்துச் சென்று மலர் வளையம் வைத்து வீர அஞ்சலியைச் செலுத்தினர். தனிப்பேருந்து ஏற்பாடுகளுடன் வந்தோரும் உண்டு.
அவ்வாறு அஞ்சலி செலுத்தியோர் கண்கலங்கி நின்றதும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத சிலர் கதறி அழுததும் அங்கிருந்தோரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. அவ்வாறு அமைப்பாகத் திரண்டு வந்த பலர் தா.பாண்டியன் உடலைச் சுற்றி நின்று கொண்டு ‘வீர வணக்கம்... வீரவணக்கம்... தோழர் தா.பாவுக்குவீரவணக்கம்’ என்று உணர்ச்சி பொங்க முஷ்டியை உயர்த்தி முழக்கமிட்டனர்.
வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், பொது அமைப்புகளைச் சார்ந்தோர், பொது வாழ்வுப் பிரமுகர்கள் என பலரும் வரிசையில் நின்று இறுதி வணக்கம் செலுத்தினர்.
நண்பகல் 12 மணிக்கெல்லாம் ‘டேவிட் பண்ணை’ அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கானோரால் நிரம்பியது. சுட்டெரிக்கும் வெயிலில் வெளியிலுள்ள பாதை ஓரங்களிலும் தோட்டத்து மரநிகழ்களிலும் தோழர்கள் ஒதுங்கி நின்றனர்.
கணீர் குரலுடன் தா.பாவின் சொற்பொழிவுகள் அங்கு ஒன்றன்பின் ஒன்றாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.
மதியம் இரண்டு மணிக்கு மேல் தா.பாவின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. டேவிட் பண்ணையின் ஒரு பகுதியில் தா.பாவின் முன்னோர்கள், குடும்பத்தார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தா.பாவின் உடல் அடக்கம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருகில் அவரின் மனைவி உட்பட குடும்பத்தார் சிலரின் கல்லறைகள் காணப்பட்டன.
வெட்டப்பட்டிருந்த குழிக்குள் தா.பாவின் உடல் அடங்கிய சவப்பெட்டி இறக்கி வைக்கப்பட்டது.
மண் மூடப்படுவதற்கு முன்பு குழியைச் சுற்றி இளைஞர்கள் சூழ்ந்தனர். முஷ்டியை உயர்த்தி முழங்கத் தொடங்கினர். ஐம்பது அறுபது பேருக்கும் மேல் இருக்கும். அத்தனைபேரும் முப்பது வயதுக்கும் கீழ் மதிக்கத்தக்க இளைஞர்கள். அவர்களுள் சிலர் கட்சித் தோழர்களாக உள்ள கல்லூரி மாணவர்கள். வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள்.
எங்கெங்கிருந்தோ வந்த இளைஞர்கள் கடைசி வினாடியில் எதிர்பாராத விதத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் உரக்க முழக்க மிட்டனர். அது ஒரு ஏற்பாடில்லை. அவர்களுக்குள் ஒரு திட்டமிடல் கிடையாது. அவர்களுக்குள் பலர் ஒருவருக்கு ஒருவர் ஏற்கனவே அறிமுகமானவர்களாகக் கூட இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஒருவர் முழக்கம் உச்சத்திலிருந்த போதே இன்னொருவர் முழக்கம் இடைமறித்தது. இப்படி மாறி மாறி முழக்கமிட்ட இளைஞர்களை பத்து, பதினைந்தடி வித்தியாசத்தில் நின்று கொண்டுநாங்கள் எல்லோரும் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.
‘நிறுத்திக்கொள்ளலாம்’ என்று சொல்வதற்கு மனம் வரவில்லை. இளைஞர்கள் கரங்களைத் தூக்கித் தூக்கி தங்களை மறந்து முழக்கமிட்டனர். அவர்களின் உயர்ந்து ஓங்கிய இளம் கரங்களில் நரம்புகள் புடைத்திருந்தன.
எழுதி முழங்கப்பட்டவையல்ல அவை! மனதிற்குள் எழுந்து முழங்கப்பட்டவை.முழக்கங்களில் பிரவாகமாக தன்னெழுச்சியுடன் மின்னிய உருக்கமான தமிழ்ச் சொற்கள் கூடியிருந்தவர்களின் கண்களில் நீர்சுரக்கக் காரணமாயிருந்தன.
‘உள்ளத்தில் உண்மையளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்’ என்ற பாரதியின் வார்த்தைகள் உயிர்பெற்றெழுந்தது போன்றதோர் உணர்ச்சி உருவாயிற்து.
கொள்கைக் குருத்துகளாக விளங்கும் இவர்களின் இத்தகைய தவிப்பிற்குக் காரணம் என்ன? இவர்கள் என்ன சீடர்களா? இல்லை... இல்லவே இல்லை... தோழர்கள். ஆம்... தா.பா.வின் தோழர்கள். பொதுவுடைமை இயக்கத்தில் புடம் போட்டு எடுக்கப்பட்ட புரட்சிகரத் தோழர்கள்.
தா.பா. மட்டுமல்ல... உயிருடன் உலவிய எந்தத் தலைவரையும் தனி மனித அடிப்படையில் தாங்கிப்பிடித்து... துதிபாடி... முழக்கமிட்டுப் பழக்கமே இல்லாத கொள்கை வார்ப்புகளான இளம் தோழர்கள்தான் சடலமாகக் கிடக்கின்ற தா.பாவைச் சுற்றி... ‘எழுந்து வாருங்கள் தா.பா’ என்று எழுச்சி முழக்கமிட்டார்கள்.
எங்களைப் போன்ற இரண்டாம் தலைமுறையை மட்டுமல்ல... முழக்கமிட்ட மூன்றாம் தலைமுறையிடமும் தா.பாவின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதற்கான சாட்சியாக அமைந்தது இக்காட்சி.
ஜீவாவின் ஆழமான தாக்கம் பாலனுக்கும் தா.பாவுக்கும் இருந்துள்ளது என்பதை அவர்கள் இருவருமே அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். அதே போன்று தா.பாவின் தாக்கம் பலருக்கும் இருக்கிறதென்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. தா.பாவின் கருத்திலும் கொள்கையிலும் அரசியல் நிலையிலும் வேறுபட்டவர்கள் கூட தாக்கத்தை உருவாக்கும் ஆளுமை அவரிடமிருந்தது என்ற கருத்தில் வேறுபட மாட்டார்கள்.
பேச்சிலும் எழுத்திலும் ஓயாத உழைப்பிலும் உற்சாகம் குன்றாத சூறாவளிச் சுற்றுப்பயணத்திலும் தனித்துவம் மிக்கவர் தா.பா என்பதை அனைவரும் அறிவர்.
நான் ஆறாம் வகுப்புப் படித்தபோது... பத்தாவது வயதில் கட்சி அலுவலகத்திற்குள் காலெடுத்து வைத்ததை இன்று எண்ணிப் பார்க்கிறேன். சரியாக ஐம்பதாண்டுகள்... அரை நூற்றாண்டு காலம் உருண்டோடி விட்டன. ஆழமான கட்சிக் குடும்பத்தில் பிறந்ததால் அந்த வயதில் அத்தகையதொரு சூழல் உருவாயிற்று.
தொடக்க காலத்திலிருந்தே கட்சி அலுவலகத்தையும் அமைப்பு ரீதியான உள்வட்டச் செயல்பாடுகளையும் மையப்படுத்தியே எமது இயக்கப் பணிகள் இருந்து வந்துள்ளன. நான் பள்ளியில் - கல்லூரியில் படித்ததை விடவும் கட்சி எனும் பல்கலைக் கழகத்தில் படித்ததே அதிகம். பட்டம் பெறுவதற்கு கல்லூரிகள் பயன்பட்டன. பக்குவப்படுவதற்குக் கட்சியே காரணமாயிற்று.
வீட்டுக்கு அடுத்தபடியாக நான் அதிகமாக இருந்ததும் தங்கியதும் கட்சி அலுவலகத்தில்தான்.
வெவ்வேறு நிகழ்வுகளுக்காக ஈரோடு வரும் கட்சித் தலைவர்கள் பலரை சிறுவயதிலிருந்து பார்க்கவும் பழகவும் கூட்டங்களில் அவர்களின் உரைகளைக் கேட்கவும் இந்தப் பின்புலமே காரணமாக இருந்துள்ளது.
இந்த வகையில் நான் அறிந்த, எனக்குத் தெரிந்த தலைவர்கள் பலரைப் பற்றி எண்ணுவதற்கும் எழுதுவதற்கும் நிறைய நிகழ்வுகளும் செய்திகளும் இருக்கின்றன. கட்சியின் தலைவர்கள் பலர் வாழும் வரலாறாகத் திகழ்ந்துள்ளனர். பல சிறப்பியல்புகளும் தனித் தன்மைகளும் பல தலைவர்களிடம் இருந்துள்ளன.
தா.பாவைப் பற்றியான கட்டுரையென்பதால் அவருடனான அனுபவங்கள் சிலவற்றை இவ்விடத்தில் பகிர்வதும் பதிவிடுவதும் பொருந்தும்.
ஏறத்தாழ பத்து வயதிலிருந்தே அவரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் பதினைந்து வயதிலிருந்து அருகிலிருந்து பார்க்கும் - உரைகேட்கும் - உற்று கவனிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
பள்ளி மாணவனாக இருவரின் உரையை பலமுறை கேட்டுள்ளேன். ஒருவர் கே.டி.ராஜ]: மற்றொருவர் தா.பா. ஒருவரின் உரை சிரிக்க வைத்து சிந்திக்கத் தூண்டும். இன்னொருவரின் பேச்சு சிலிர்க்க வைத்து சிந்திக்க வைக்கும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் தா.பாவை பக்கத்திலிருந்து பார்க்கவும் அவரின் உரைகளைக் கேட்கவும் அவரைப் பற்றியான ஒரு புரிதல் ஏற்படவும் தொடங்கி நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன.
அவரை ரயில் நிலையத்தில் வரவேற்றதிலிருந்து அத்தனை நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு திரும்பி ரயில் நிலையம் சென்று வழியனுப்பும் வரை உடன் இருந்து பயணிக்கிற வாய்ப்பும் - பெரும்பான்மையான சமயங்களில் அந்நிகழ்ச்சிகளில் அவருடன் பங்கேற்கிற வாய்ப்பும் எமக்குக் கிடைத்துள்ளன.
பெரும்பாலும் ப.பா.மோகன், சி.எம்.துளசிமணி, கே.ஆர்.திருநாவுக்கரசு, வி.பி.குணசேகரன் உள்ளிட்ட ஐந்தாறு தோழர்கள் ரயில் நிலையம் செல்வோம். ரயிலிலிருந்து இறங்கியவுடன் ஒரு உணவகத்திற்குச் சென்று காபி குடிப்போம். சிவப்புத் துண்டைக் காரில் வைத்து விட்டு உணவகத்திற்குள் வருவார் தா.பா.ஓட்டல் உரிமையாளருக்கோ ஊழியர்களுக்கோ தா.பாவை பளிச்சென்று அடையாளம் தெரியாது. இந்த ஓட்டலுக்கு பெரிய தலைவர் வருவார் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். இன்னொன்று அவரது அடையாளமான சிவப்புத் துண்டு இல்லை.
வட்டமாக உட்கார்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்குவார் தா.பா. இந்த செய்தி படித்தீர்களா... புதிதாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறதே பார்த்தீர்களா... என்பதுபோல் உரையாடல் தொடங்கும். பல நேரங்களில் வந்திருக்கிற தோழர் யாரையாவது ஒருவரைப் பற்றி ஏதேனும் வேடிக்கையான ஓரு செய்தியை அவரிடம் சொல்வோம். குபீரென்று சிரித்து விட்டு கலகலப்பாகி விடுவார். பல நேரங்களில் அரை மணிநேரத்திற்கும் மேல் அவ்வாறு பேசியபடி இன்னொரு காபியும் குடித்துவிட்டு அறைக்கு வந்ததுமுண்டு.
எந்தக் கடைக்கு அழைத்துச் சென்றாலும் எவ்விதமான சூழலில் எவ்விதமான உணவு பரிமாறப் பட்டாலும் தா.பாமுகம் சுளித்து நாங்கள் பார்த்ததில்லை. எந்த இக்கட்டான இடங்களிலும் அமர்ந்து எவ்விதமான எளிய உணவையும் சிறிதும் தயக்கமின்றி உட்கொள்ளும் பண்பும் பக்குவமும் அவருக்கிருந்தது.ஒரு முறை கூட உணவை விமர்சித்தது கிடையாது.
அதேபோன்று மிகச் சாதாரண விடுதியில் மிகக் குறைவான வசதிகளுடன் கூடிய அறைகளில் தங்க வைத்தபோதும் அவ்வாறே நடந்து கொண்டுள்ளார்.
எந்தத் தோழர் வீட்டுக்கு நாங்கள் அழைத்துச் சென்றாலும் வருவார். பவானியில் ஒரு எளிய தோழரின் குடிசை போன்றிருந்த மிகச் சிறிய வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டபோதும் ஈரோட்டில் கட்சிக்கு அனுசரணையாக இருக்கும் அக்னி ஸ்டீல் உரிமையாளரின் மாளிகை வீட்டில் அமர்ந்து உணவருந்திய போதும் ஒரே மாதிரி உணர்வுடன் காணப்பட்டார் தா.பா.
ஆரம்ப காலத்தில் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றுள்ளோம். கல்லூரிக் கூட்டங்கள் அனைத்துக்கும் ஆட்டோவில்தான் அழைத்துச் சென்றுள்ளோம்.எந்த வாகனங்களில் செல்கிறோம் என்பதைவிட எத்தகைய நிகழ்ச்சிக்குச் செல்கிறோம் என்பதிலேயே கவனமாக இருப்பார் தா.பா.
ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த காலத்தில் ஒருமுறை ஈரோடு வந்திருந்தார். அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு இரவு 10.00 மணிக்கு ரயில் நிலையம் சென்றடைந்தோம்.
ரயில் வருவதற்கு சிறிது நேரமிருந்தது. பிளாட்பாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தோம்.அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.நசீர். இவர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பீடித்தொழிலாளி. மூத்த தோழர். பண்பானவர். அவரை நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்திருந்தோம். அவர் ஈரோடு கட்சி அலுவலகத்தில் முழு நேர ஊழியராகவும் விளங்கினார்.
எங்களுடன் பேசிக் கொண்டிருந்த தா.பா நசீரை தனியாக அழைத்துச் சென்று அவரின் தோள்மீது கைபோட்டு ஏதோ சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். ரயில் புறப்பட்டது. ரயில் நிலையப் படிகளில் இறங்கி வரும்போது ‘என்னங்க தோழர் நசீர்... தா.பா உங்களிடம் ஏதோ ரகசியம் பேசினார் போலிருக்கு’ என்று நான் வேடிக்கையாகக் கேட்டேன்.
அதற்கு நசீர் ‘நாம் தா.பாவிடம் வழிச் செலவிற்கு ரூ.500/- கொடுத்தோமல்லவா... அதைத்தான் என் தோள் மீது கைபோடுவதுபோல் போட்டு என் சட்டைப் பாக்கெட்டில் போட்டார்’ என்றார்.
எம்.பி. என்பதால் ரயில் கட்டணம் ஏதுமில்லை. கைச் செலவுக்கு கொடுத்த ரூ,500/-ஐயும் எங்களுக்கும் தெரியாமல் நசீருக்குக் கொடுத்துச் சென்றுள்ளார் தா.பா.
ஈரோடு - மாணிக்கம் பாளையத்தில் கட்சிப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார் தா.பா. மேடையில் மணிபாரதி என்ற இளைஞரின் பரதநாட்டியம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடனம் முடிகிறவரை பார்வையாளர்களுக்குப் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டார் தா.பா. ஒரே பாட்டுக்கு ஆடிய நடனமாக இருந்தாலும் ஏறத்தாழ 7-8 நிமிடங்களுக்கு அந்நடனம் இருந்தது.
கீழே தா.பா.வுக்குப் பக்கத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். பாதிப்பாட்டிலேயே பரவசமடைந்துவிட்டார் தா.பா. அந்த இளைஞன் எளிய. பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவன். நடனத்தில் லயித்துப்போன தா.பா நடனம் முடிந்த பிறகு எதிர்பாராத விதத்தில் படியேறி மேடைக்கு விரைந்தார்.
மைக்கின் முன்னாள் நின்று நடனமாடிய இளைஞனின் நளினம் பற்றியும் அவன் ஆடிய விதம் பற்றியும் அவனது கலைத்திறன் பற்றியும் சுமார் ஐந்து நிமிடங்கள் சிலாகித்துப் பேசிவிட்டு மேடையில் நூறுரூபாய் தொகையில் அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார். தா.பாவின் எதிர்பாராத இச்செயலால் கிடைத்த மகிழ்ச்சி எதிர்காலத்தில் எவ்விருது பெற்றாலும் அவனுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே!
எல்லோரையும் எதற்கெடுத்தாலும் பாராட்டுவார்களே சிலர்... அத்தகைய சுபாவம் தா.பாவுக்குக் கிடையாது.இந்தப் பாராட்டு மொழிகள் அவருடைய உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்தவை.
மூத்த தோழர் கே.டி.ராஜி பேசுவதை அப்படி ரசிப்பார் தா.பா தா.பா பேசுவதை வியந்து பார்ப்பார் கே.டி.ஆர். இருவரும் பேசும் கூட்டங்களில் பேச்சைத் தொடங்கும் போது கே.டி.ஆர் ‘எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் தாவண்ணா பாண்டியன் அவர்களே’ என்றுதான் தொடங்குவார்.கே.டி.ஆர். வயது என்ன... மக்கள் மதியில் அவரது மதிப்பென்ன... அதிலும் ஈரோட்டின் முதல் எம்.எல்.ஏ... தாமிரப்பட்டயம் பெற்ற விடுதலைப் போராட்டவீரர்... தோழர் எம்.கல்யாணசுந்தரத்துடன் அக்காலத்தில் ரயில்வே தொழிற்சங்கத்தில் பணியாற்றியபோது அவருடன் ஒரே கட்சிக் கிளையில் இருந்து செயல்பட்டவர்.
தான் தலைவராக மதிக்கப்படும் இடத்தில் இன்னொருவரை தலைவர் என்று அழுத்தமாக சபையில் குறிப்பிடும் பேருள்ளம் கே.டி.ஆருக்கு இருந்தது.
கே.டி.ஆர். தனியாக இருக்கும்போது தனது மருந்துப் பெட்டியைக் காட்டி ‘இதைப் பாருங்க. எதுஎதுக்கெல்லாம் மாத்திரைகள். எமன் ‘வா வா’ங்கறான். நானும் எமனிடம் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறேன், எப்ப எமன் ஜெயிப்பானோ தெரியலை’ என்று வேடிக்கையாக எங்களிடம் சொல்வார்.
கே.டி.ஆரின் இத்தகைய உரையாடலின் போது பலமுறை தா.பா வலுவாகத் தலையிட்டு ‘கே.டி.ஆர்... புலம்பாதீங்க.மருந்தையும் மாத்திரையையும் வேளா வேளைக்குச் சாப்பிடுங்க. எதிர்மறையா எப்போதும் பேசாதீங்க... ஓடற வரைக்கும் வண்டி ஓடட்டும். உற்சாகமாகவே இருங்க... கடைசி வரைக்கும் நம்ம வேலையை நம்பிக்கையோடு செஞ்சுக்கிட்டே இருப்போம்! நடப்பது நடக்கட்டும்’ என்று கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார்.
கே.டி.ஆரிடம் வெகு காலத்திற்கு முன்பு என்ன சொன்னாரோ அதை தனது கடைசி மூச்சுவரை தன் விஷயத்தில் கடைபிடித்தவர் தா.பா.
தா.பாவின் அரசியல் வாழ்விலும் தனிவாழ்விலும் பல முக்கிய நிகழ்வுகள் நடந்த காலத்தில் உடனிருந்திருக்கிறோம்.
1978இல் டி.ஐ. சைக்கிள்ஸ் தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரித்து கட்சி சார்பில் தமிழகம் தழுவிய கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தா.பா டி.ஐ.சைக்கிள்ஸ் போராட்டத்திற்காக ஈரோட்டில் கைது செய்யப்பட்டார்.
ப.பா.மோகன் சி.எம்.துளசிமணி என்.ரமணி
இரா.செவ்விளம்பதிரி உள்ளிட்ட எங்களில் சிலர் மறியலில் ஈடுபட்டதால் கைதானோம். கோவை மத்திய சிறையில் சுமார் 15 நாட்கள் தா.பா.வோடு வைக்கப்பட்டிருந்தோம். அப்போது ‘சி’ வகுப்புச் சிறைச்சாலையில் தா.பாவுடன் ஒரே செல்லில் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது எனக்கு 19 வயது.
1986ஆம் ஆண்டு பாட்னாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. ஒரு பெரிய காட்டுப் பகுதியில் பிரதிநிதிகள் தங்குவதற்கு ராணுவ முகாமைப்போல வரிசையாக டென்ட் அடித்திருந்தனர். அத்தனை பிரதிநிதிகளும் டென்ட்களில்தான் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஒரு டென்ட்டுக்குள் இரண்டு கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. இரண்டு பிரதிநிதிகள் தங்குவதற்கான ஏற்பாடு. அப்போது தா.பா தங்கியிருந்த டென்ட்டில் இன்னொரு பிரதிநிதியாக நான் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு 27 வயது.
தோழர் எம்.கல்யாணசுந்தரம் டெல்லிக்கு தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைக்குச் சென்றபோது எதிர்பாராத விதத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது தா.பா ஈரோடு மாவட்டம் - தாமரைப்பாளையம் என்ற ஊரில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
பேச்சைத் தொடங்கி சில நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். ஒரு துண்டுச் சீட்டில் ‘எம்.கே உடல்நிலை கவலைக்கிடம்’ என்று எழுதிக் கொடுத்தோம். உடனே உரையைப் பாதியில் நிறுத்தி அவசரமாக தா.பாவை அழைத்துக் கொண்டு ஈரோடு விரைந்தோம். எம்.கே மரணச் செய்தி வந்தடைந்தது. அங்கிருந்து தா.பா.வுடன் சென்னை விரைந்தோம்.
இப்படி நல்லதும் கெட்டதுமான பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எத்தகைய சூழலிலும் தா.பா கையறு நிலையில் காணப்பட்டதில்லை.புலம்பிக் கிடந்ததில்லை. செய்வதறியாது கவலைக் கடலில் மூழ்கியதில்லை. கோபப்பட்டுள்ளார்... ஆவேசப்பட்டுள்ளார்... ஆனால் முடங்கிப்போனதில்லை.
நேரமும் வாய்ப்பும் கிடைக்கிற போதெல்லாம் தா.பாவிடம் நிறையக் கேள்விகள் கேட்டிருக்கிறோம். பேசியிருக்கிறோம். விவாதித்திருக்கிறோம். உரையாடியிருக்கிறோம். அவரும் சலிக்காமல் சங்கடப்படாமல் பதில் சொல்லியிருக்கிறார் - விளக்கியிருக்கிறார் - கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
அவையெல்லாம் பெரும்பாலும் அரசியல், அறிவியல் பொருளாதாரம், இலக்கியம், வரலாறு சார்ந்தவையாகவோ, ஒரு புத்தகம் தொடர்புடையதாகவோ இருக்கும்.என்னுடைய அனுபவத்தில் தனிப்பட்ட உரையாடல்களில் அவரது ஆர்வமும் ஈடுபாடும் அத்தகையதாகவே இருந்திருக்கிறது.
நாங்கள் ஏதாவது புதிய செய்திகள் சொன்னால் அதையும் ஆர்வமாகக் கேட்பார். ஒருமுறை எழுத்தாளர் ராஜேந்திரசோழன் எழுதிய சிறுகதை ஒரு இதழில் வெளியாகியிருந்தது.
அது கட்சிக்குள் நடக்கிற விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையுடன் எழுதப்பட்ட கதை. அந்த இதழை தா.பாவிடம் கொடுத்தோம். அந்த சிறுகதையைப் படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தார். சிரித்துச் சிரித்து அவருக்குக் கண்ணீரே வந்து விட்டது. ‘கெட்ட பய..’ என்பதுதான் அதற்கு அவர் வழங்கிய பாராட்டு மொழி.
தா.பாவுடனான உரையாடல் எப்போதும் ஓரு வழிப்பாதையாக இருக்காது, உரையாடலில் அவர் பேசுவதற்குக் கொடுக்கிற அதே முக்கியத்துவத்தை பிறர் பேச்சைக் கேட்பதற்கும் கொடுப்பார்.
ஐம்பது பேர் உட்கார்ந்திருக்கிற சபையில் பேசியபோதும் ஐயாயிரம்பேர் அமர்ந்துள்ள அவையில் உரையாற்றியபோதும் ஒரே மாதிரி உணர்வுடன் - ஈடுபாட்டுடன் பேசியுள்ளார் தா.பா. எண்ணிக்கை அவரது உரையின் தரத்தை நிர்ணயித்ததில்லை. சில சமயங்களில் ஐயாயிரம் பேர் கூட்ட உரையைவிட ஐம்பதுபேர் கூட்ட உரை சிறப்பாக அமைந்த கதையுமுண்டு. எடுத்துக்கொண்ட தலைப்பு, கேட்போரின் கவனம், புறச் சூழல், ஒதுக்கப்பட்ட நேரம் போன்றவைதான் அவரின் உரையின் சிறப்பையும் ஆழத்தையும் நிர்ணயித்துள்ளன.
ஒருமுறை அமைச்சர் கா.காளிமுத்து, தா.பா பேசும் பொதுக்கூட்ட சாலை வழியாக காரில் சென்றுள்ளார். தா.பா.வின் குரலைக் கேட்டு காரை மேடைக்குப் பின்புறமாக தள்ளி பிறருக்குத் தெரியாதவாறு நிறுத்தச் சொல்லி காரில் உட்கார்ந்திருந்தவாறே. உரை முழுவதையும் கேட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
அடுத்தநாள் சென்னைக்குச் சென்ற பிறகு தா.பாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘இவ்வளவு சின்ன ஊரில்... இவ்வளவு குறைவான கூட்டத்தில் எப்படித்தான் உங்களால் இவ்வளவு சிறப்பாகப் பேச முடிகிறதோ! நல்ல வேளை நீங்கள் பேச்சைத் தொடங்கியபோதே அங்கு வந்து விட்டேன். முழுப்பேச்சையும் கேட்டேன்.
புள்ளிவிவரங்களுடன் ஆழமான அரசியலை சாதாரண மக்களுக்குப் புரியுமாறு மிகுந்த சிரத்தையெடுத்துப் பேசினீர்கள். எங்களுக்கெல்லாம் கூட்டம் இல்லையென்றால் பேச்சு வராது’ என்று சிலாகித்துச் சொன்னாராம் காளிமுத்து. இதை தா.பாவே எங்களுடனான உரையாடலில் சொல்லியிருக்கிறார்.
காலமெல்லாம் கம்பீரமாகப் பேசிய குரல் ஓய்ந்துவிட்டது. அவரது பேச்சும், எழுத்தும் உழைப்பும், இயல்பும் இளைஞர்களின் இதயங்களை காந்தம்போல் கவர்ந்திருக்கின்றன. அவரது அசைக்க முடியாத தன்னம்பிக்கையும், அஞ்சாமையும், துணிச்சலும் இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்திருக்கின்றன. அவரது தம¤ழும் சிந்தனைத் தெளிவும், குரல் வளமும் இளைஞர்களை மட்டுமல்ல தமிழர்களைத் தட்டியெழுப்புவதில் தன்னிகரற்றறு விளங்கியிருக்கின்றன.
- த.ஸ்டாலின் குணசேகரன்