தொல்காப்பியரும் வரருசியும் இந்திய மரபில் புகழ்பெற்ற இலக்கண ஆசிரியர்கள். தொல்காப்பியர் படைத்த நூல் அவரது பெயராலே தொல்காப்பியம் என வழங்குகிறது. வரருசி பிராகிருத மொழிக்கு இலக்கணம் எழுதினார். அ வரது இலக்கணம் பிராகிருதப் பிரகாசிகை என்று அறியப்படுகிறது. மேலும் வரருசியின் சூத்திரங்கள் (Sutras of Vararuchi) என்றும் பிராகிருத சூத்திரங்கள் (Sutras of Prakrit) என்றும் அறியப்படுகின்றது. அவர்கள் படைத்த இலக்கணங்கள் இன்று வரை அந்தந்த மொழிகளுக்கு முதன்மையான, பழமையான நூல்களாகத் திகழ்கின்றன. பலராலும் பலகாலும் கற்பிக்கப்பட்டும் கற்கப்பட்டும் வருகின்றன.

இரு இலக்கணங்களுக்கும் உரைகள் உள்ளன. வரருசிக்குப் பாமகர் எழுதிய மனோரமா என்ற உரை பிரசித்தி பெற்றது. பிராகிருத இலக்கணங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொல்.இலக்கணத்தின் தாக்கம் பிற்கால இலக்கணங்களில் இருந்தது போலவே வரருசி இலக்கணத்தின் தாக்கம் பிற்காலத்தில் எழுதப்பட்ட இலக்கணங்களில் இருந்தது. இரு நூல்களும் அரசர்களின் ஆதரவில் எழுந்தவை. தொல்காப்பியம் நிலதரு திருவின் பாண்டியன் அவைக்களத்து அரங்கேறியதென்றால் வரருசி விக்ரமாதித்தன் அரசவையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அச்சபையில் பிராகிருதப் பிகாசிகை அரங்கேறியது. வரருசியின் இலக்கணம் கி.பி நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் அந்நூலுள் தென்னிந்தியாவைப் பற்றிய குறிப்பு இருப்பதாகவும் தெ.பொ.மீ. குறிப்பிடுவார். தொல்காப்பியரின் காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டு என்றும் கிபி ஐந்தாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.மேலும் சிலர் இடைப்பட்ட காலத்தில் வளர்ந்த இலக்கணம் என்றும் உரைப்பர்.suvadiஅதிகார, இயல் அமைப்பு:

தொல். இலக்கணம் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. அவையாவன: எழுத்து, சொல், பொருள் என்பன. அதிகாரத்தின் உட்பிரிவாக இயல் அமைந்தது. ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒன்பதொன்பது இயல்கள் என 27 இயல்கள் உள்ளன. அதிகாரம் மூன்று; ஒரு அதிகாரத்திற்கு ஒன்பது இயல் (3*3) மொத்த இயல்கள் 27 (3*9) என்று யாவும் மூன்றின் மடங்காக இருப்பதைக் கவனிக்கலாம். இது சமஸ்கிருத மரபுக்கு மாறாக உள்ளது. சமஸ்கிருத இலக்கண மரபு அஷ்டாத்யாயி (4*2) நான்கின் மடங்காக இருக்கும். வரருசியின் இலக்கணத்தில் 12 பரிசேதங்கள் உள்ளன.இவற்றுள் முதல் ஒன்பது பரிசேதங்கள் மட்டுமே வரருசியால் எழுதப்பட்டன என்றும் மீதமுள்ள 4 பரிசேதங்கள் உரையாசிரியர்களால் சேர்க்கப்பட்டன என்றும் பிற்சேர்க்கை என்றும் கருதப்படுகின்றன.

முதல் ஒன்பது பரிசேதங்கள் வரருசியால் எழுதப்பட்டன என்று கொண்டால் தமிழ் மரபு போலவே வரருசி இலக்கணமும் மூன்றின் மடங்காக இருக்கிறது எனக்கொள்ளலாம். திரிவர்க்கத்திற்கு (முப்பால்) எதிராக சதுர்வர்க்கம் (நாற்பால்) இருப்பதை இங்குச் சுட்டலாம். சிலப்பதிகாரமும் மூன்று காண்டங்களைக் கொண்டதல்லவா? சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மலையாள இலக்கணமான லீலா திலகம் எட்டு சில்பங்கள் கொண்டு நான்கின் மடங்காக உள்ளது. தொல்.இலக்கணத்தில் அதிகாரம், இயல்களுக்கு அடுத்த நிலையில் சூத்திரங்கள் உள்ளன. பிராகிருதப் பிரகாசையில் பரிசேதங்களின் கீழே சூத்திரங்கள் உள்ளன. பொதுவாக வரருசியின் இலக்கணம் உட்பட வடமொழி இலக்கணச் சூத்திரங்கள் சுருக்கத்திற்கு (Brevity) பெயர் பெற்றவை. பெரும்பாலும் சூத்திரங்கள் ஒரு வரிக்குள் அடங்கி விடும். ஆனால் தொல்காப்பியத்தில் இந்நிலை இல்லை. "தொல்காப்பியம் ஏனைய இலக்கணங்களைப் போலச் சொற்சுருக்கமுடையதன்று. பல சூத்திரங்கள் பத்து வரியுடையன. இருபது வரிக்கு மேல் செல்லும் சூத்திரங்களும் உண்டு.ஒரே பொருளைப் பல இடங்களில் கூறுவதும் உண்டு"

ஒருங்கிணைந்த இலக்கணம்:

தொல்காப்பியத்தை ஓர் ஒருங்கிணைந்த இலக்கணம் என்பர் (தெ.பொ.மீ.,2002; அகத்தியலிங்கம், 2006) எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டு வாழ்க்கைக்கும் பொருள் இலக்கணம் கூறுவதால் இதனை ஒருங்கிணைந்த இலக்கணம் என்று அழைப்பர். மேலும் உலக வழக்கு செய்யுள் வழக்கு என இரு வழக்குகளையும் ஒன்றிணைத்து விளக்குவதாலும் ஒருங்கிணைந்த இலக்கணம் என்று கொள்வர்.எழுத்தும் சொல்லும் மொழி சார்ந்த விதிகளையும் பொருளதிகாரம் அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாடு, உவமை, செய்யுள் இயற்றும் விதிகள், மரபியல் ஆகியவற்றுக்கு இலக்கண விதிகளயும் தருகிறது. "தொல். இலக்கியம் எவ்வாறு அமையவேண்டும் என்ற பொருளை முக்கியமாகக் கணக்கில் எடுத்து இலக்கணம் செய்துள்ளது என்று கூற இயலும்". (வ.அய்.சுப்ரமணியம், 2007, பக்:45) மேலும் தொல்காப்பிய அதிகாரங்களுக்குள்ளே பொருளதிகாரம் முக்கியமானது சொல்லும் பொருளதிகாரத்துக்குத் என்றும் எழுத்தும் துணையாக அமைவது என்பதும் இறையனார் களவியல் கருத்தாகும் (வ.அய்.சு,2007; பக்:45). வரருசியின் இலக்கணத்தை ஒருங்கிணைந்த இலக்கணம் என்று கூறமுடியாது.பொருளுக்கு இலக்கணம் சொல்லும் நோக்கில் விதிகளோ விளக்கங்களோ ஏதும் அமையவில்லை.

பிராகிருத இலக்கியங்களின் பாடுபொருள் குறித்த பாகுபாடோ (அகம், புறம் எனப் பிரிப்பது) காதாக்களை இயற்றுவது, காதாக்களின் உறுப்புகள் (செய்யுளியல் போல) குறித்தோ எந்த விளக்கமும் வரருசி இலக்கணத்தில் இல்லை. மொழிக்குரிய எழுத்து சொல் குறித்த விதிகளே முதன்மையாக அமைந்துள்ளது. இவ்விடத்தில் மலையாள லீலாதிலக இலக்கணப் பொருண்மை குறித்துக் குறிப்பிடலாம். எட்டு சில்பங்கள் கொண்ட லீலாதிலகத்தில் முதல் சில்பம் மணிப்பிரவாள நடை பற்றியும் இரண்டாம் சில்பம் சொல்லியல் பற்றியும் மூன்றாம் சில்பம் சந்தி விதிகளையும் விவரிக்கின்றன. நான்கு, ஐந்து ஆகிய இரு சில்பங்களும் மணிப்பிரவாள நூல்களின் குணத்தையும் குற்றத்தையும் பேசுகின்றன. சில்பங்கள் ஆறும் ஏழும் அலங்காரங்கள் குறித்தும் இறுதியில் வரும் எட்டாவது சில்பம் இரசங்களைக் குறித்தும் பேசுகின்றன. லீலாதிலக ஆசிரியருக்கு வடமொழி நெறியும் தமிழ் நெறியும் தெரியும் என்று கூறுவர். (வ.அய்.சு 2007; பக்:43) லீலா திலக இலக்கணத்தையும் ஒருங்கிணைந்த இலக்கணம் என்று கொள்ளலாம். வரருசி இலக்கணத்தில் அலங்காரம், இரசக் கோட்பாடுகளுக்கு இடம் இல்லை.மொழி வளர்ச்சி, மாற்றம் குறித்து மட்டுமே விதிகளைத் தந்து செல்கிறது.

வரருசி வரலாற்று இலக்கணமா?

தொல்காப்பியத்தை ஒரு விளக்கமுறை இலக்கணம் (Descr iptive Grammar) என்றால் வரருசியின் நூலை ஒரு வரலாற்று இலக்கணம் (Historical Grammar) என்று கூறலாம். மொழி­யியலார் இரண்டு விதமான இலக்கணங்களைப் பற்றிப் பேசுவர். ஒன்று விளக்கமுறை இலக்கணம் மற்றொன்று வரலாற்று இலக்கணம். விளக்கமுறை இலக்கணம் சமகால மொழிக்கு எழுதப்படுவது. வரலாற்றில் ஏதாவதொரு காலகட்ட (language spoken at a point of time) மொழிக்கு இலக்கணம் வகுப்பது. மாறாக வரலாற்று இலக்கணம் இரு காலகட்டத்தில் பேசப்பட்ட மொழியைத் தொடர்புபடுத்தி மொழி வளர்ச்சியை விளக்குவது.

வரலாற்று இலக்கணம் எழுத விளக்கமுறை இலக்கணம் முன் தேவையாக இருக்கிறது. தொல்காப்பியம் விளக்கமுறை இலக்கணம் என்று மேலே குறிப்பிட்டோம். அதாவது அவர் காலத்தில் வழக்கில் இருந்த தமிழ் மொழியை மட்டும் பெரும் பகுதி விவரித்துள்ளார். பெரும்பகுதி என்பது கவனிக்கத்தக்கது. தொல்காப்பித்துக்கு முன்பே வழக்கொழிந்த சில மொழிக்கூறுகளையும் அவர் விளக்குகிறார். வரருசியின் இலக்கணத்தை வரலாற்று இலக்கணம் என்றோம். இதையும் சற்று விளங்கிக் கொள்வோம். சமஸ்கிருத பண்டிதர்கள் பிராகிருத மொழி சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது என்று கருதினர். "Sanskrit is perfected, Prakrit is derived" சமஸ்கிருதமே பழையது எனக் கொண்டு பிராகிருதம் அதிலிருந்து வந்தது என்று விதிகள் வகுத்தனர். பிராகிருத பிரகாசையில் ஒன்பது பரிசேதங்கள் உள்ளன. அவை:

1) அஜ விதிகள்

2) அயுக்த விதிகள்

3) யுக்த விதிகள்

4) சங்கீர்ண விதிகள்

5) லிங்க விபக்தி விதிகள்

6) சர்வநாமம்

7) திங் விதிகள்

8) தாத்வா தேசம்

9) நிபாத சஞ்ஞா விதிகள்

ஒன்பது பரிசேதங்களைக் குறித்து வேறொரு கட்டுரையில் விளக்கலாம்.

எச்சவியலும் சங்கீர்ண விதிகளும்:

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் இறுதியில்' எச்சவியல்' (எஞ்சி நின்ற அல்லது சொல்லாமல் விடுபட்ட இலக்கணம்) அமைந்துள்ளது. பிராகிருத பிரகாசையின் நான்காம் பரிச்சேதம் சங்கீர்ண விதிகள் (miscellaneous rules) என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. எச்சவியல் என்றால் என்ன? "முற்கூறிய எண்வகை ஓத்தினுள்ளும் உணர்த்துதற்கு இடமின்றி எஞ்சி நின்ற இலக்கணங்களைத் தொகுத்து உணர்த்துதலின், இஃது எச்சவியல் என்னும் பெயர்த்தாயிற்று" என்பார் நச்சினார்க்கினியர் (தொல்.சொல்-பக் - 222)

இந்த இயலுள் செய்யுள்ஈட்டுதற்குரிய நால்வகைச் சொற்கள் குறித்தும் செய்யுளில் வரும் விகாரங்கள் குறித்தும் செய்யுள் பொருள்கோள் குறித்தும் உணர்த்துகிறார். மேலும் அறுவகைத் தொகைமொழிகள் குறித்தும் விவரிக்கிறார். ஒரு சில வழுவமைதிக்கு விதிகள் தருகிறார். சொல்லதிகாரத்தில் முதற்கண் வரும் கிளவியாக்கம், வேற்றுமை, வேற்றுமை மயங்கியல், விளிவேற்றுமை, பெயரியல், வினையிய இடை­யியல், உரியியல் ஆகிய இயல்களில் சேர்க்க முடியாத இலக்கணங்களை எச்சவியலில் அடக்கியுள்ளார்.

வரருசியின் நான்காவது பரிச்சேதம் சங்கீர்ண விதிகளைத் தருகிறது. சங்கீர்ண விதிகள் எச்சவியல் போலத்தான். பிராகிருதப்பிரகாசையில் முதல் மூன்று பரிச்சேதங்களில் சொல்லாமல் விடப்பட்ட செய்திகள் இங்கே விளக்கப்படுகின்றன. முதல் பரிச்சேதம் உயிர் எழுத்துக்கள் அடையும் மாற்றங்களையும் (vowel changes) இரண்டாம் பரிச்சேதம் தனிமெய்கள் அடையும் மாற்றங்களையும் (changes in single consonants) மூன்றாம் பரிச்சேதம் மெய் மயக்கங்கள் அடையும் மாற்றங்களையும் (dissimilar consonant clusters) விவரிக்கின்றன. மேற்கண்ட மூன்று பரிச்சேதங்களிலும் விடுபட்ட ஒலி மாற்றங்களை இப்பரிச்சேதம் விளக்குகிறது. சொல்லுக்கு இறுதியில் வரும் மகரம் திரிந்து அனுஸ்வரமாக ஒலிக்கும். சில சொற்களில் ஒலி இடம் பெயரல் (metathesis) ஏற்படும். சமாசங்களில் (தொகை) தோன்றும் சந்தி விதிகள் இவையாவும் சங்கீர்ண விதி என்ற நான்காம் பரிச்சேதத்தில் சுருக்கமாக விளக்கப்படுகின்றன. அதாவது எச்சவியல் என்ற தலைப்பு இரு இலக்கணகளுக்கும் பொதுவாக உள்ளது. எஞ்சி நின்ற இலக்கணத்தை விவரிக்கிறது. இது குறிப்பிடத்தக்கது.

கலைச்சொற்கள்:

இலக்கண விவரணையில் கலைச்சொற்கள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன. கலைச்சொற்களில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டு ஓர் இலக்கணம் எந்த மரபை (School of thought) சார்ந்தது என்று கண்டறியலாம் என்பர். தொல்காப்பியத்தில் பயின்று வந்துள்ள கலைச்சொற்களை நான்கு விதமாகப் பிரித்துக் காணலாம். 1) மொழியில் இயல்பாகப் பயன்படுத்தும் சொற்களைக் கலைச்சொற்களாகப் படுத்தல், (எகா : உயிர், மெய், வினை, பெயர், இடை, ஈறு, வல், மெல் போன்றவை) 2) ஆக்கப் பெயர்களைப் பயன்படுத்திக் கலைச்சொற்கள் உருவாக்குதல் (எ-கா: நெடில், குறில், இயைபு, இழைபு, ஈற்று, இயல்பு, புணர்ச்சி போன்றவை) தொகைப் சொற்களைப் பயன்படுத்துதல் (எ-கா: அளபெடை, உடம்படு மெய், பெயரெஞ்சு கிளவி, ஓரெழுத்து ஒரு மொழி, ஆற்றுப்படை, போன்றவை) வடசொற்களாக வரும் ஒரு சில கலைச்சொற்கள் (அந்தம், அதிகாரம் ஆசிரியம் போன்றவை). னகரம், னஃகான், போன்றவை எழுத்துக்களைச் சுட்டும் கலைச்சொற்கள்.

பிராகிருத பிரகாசையில் அருவமான (abstract) உருபன்கள் அமைக்கப்பட்டு மாற்றுருபுகள் தரப்பட்டுள்ளன. இயல்பான கலைச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. பாணினி இலக்கணத்தில் கலைச்சொற்களை கிருத்திரும என்றும் அகிருத்திரும என்று பிரிப்பர் (க.பாலசுப்பிரமணியன், (2007). கிருத்திரும என்றால் செயற்கையான கலைச்சொல் எனப்படும். அகிருத்திரும என்றால் இயல்பான சொல்லைக் கலைச் சொல்லாக பயன்படுத்துதல் ஆகும். வரருசி இலக்கணத்திலும் இத்தகைய. வகைப்பாட்டைக் காணலாம். 'அச்' என்பது உயிரெழுத்துக்களைக் குறிக்கும் கிருத்துரும கலைச்சொல். 'சு' (Su) என்பது எழுவாய் உருபன் (abstract morpheme) ஒருமைப் பெயர்களுடன் மட்டுமே வரும். இதுவும் கிருத்திரும (Abstract) கலைச்சொல் ஆகும். எ.கா:

ஆண்பால் : சிவ + Su-சிவோ

பெண்பால் : மால + Su-மாலா

அலிப்பால் : வன + Su = வனம்.

அடுத்து, அகிருத்திரும கலைச்சொல் 'ஸ்வர' என்பது உயிரெழுத்துகளையும் குறிக்கும்; இராகங்களையும் குறிக்கும்.

முடிவுரை

வரருசியின் இலக்கணமும் தொல்காப்பியமும் அறிமுகமாக ஒப்பிட்டுப் காட்டப்பட்டன. எச்சவியல் என்ற இயல் இரண்டு இலக்கணங்களிலும் காணப்படுகிறது. இயல்கள் மூன்றின் மடங்காக உள்ளன.தொல். பெரும்பகுதி விளக்கமுறை இலக்கணமாய் இருக்க, பிரகாசை இலக்கணமாய்த் திகழ்கிறது. கலைச்சொற்களை மேலும் ஆராய வேண்டிய திருக்கிறது.

துணை நூல்கள்

1.            சண்முகம்,செ.வை, 1994, இலக்கண உருவாக்கம், அடையாளம் பதிப்பகம்: புத்தாநத்தம், திருச்சி மாவட்டம்.

2.            பாலசுப்பிரமணியன், க. 2017.தொல்காப்பிய இலக்கண மரபு அரிமா நோக்கு பதிப்பு: பெருங்குடி, சென்னை.

3.            வ.அய்.சுப்ரமணியம் கட்டுரைகள், 2007, ஜெயா அரிகரன் தொகுப்பு: அடையாளம் பதிப்பு, புத்தாநத்தம், திருச்சி.

4.            வ.அய்.சுப்ரமணியம், 2007. இலக்கணமும் ஆளுமைகளும் கட்டுரைத் தொகுப்பு, அருண் சுப்ரமணியம். அடையாளம் பதிப்பு: புத்தாநத்தம், திருச்சி

5.            Prakrita Prakshai, Vararuci, (edited,D.C. Sircar: Motilal Banarsidas: New Delhi

6.            Niti Dolshi, Prakrit Grammarians. Motilal Banarsidas: New Delhi.

(தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேரா.கி.அரங்கனார் நிறுவிய அறக்கட்டளைச் சார்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

Pin It