தமிழ் மொழி வளர்ச்சிக்கென புதிதாக வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அத்துடன் எட்டுத் தமிழறிஞர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிக்காக விருதும் பொற்கிழியும் வழங்கிச் சிறப்பிக்கப்படுவர் என்ற அறிவிப்பையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

Manavai Mustafaமேலெழுந்தவாரியாக இச்செய்தியைப் பார்க்கும் போது தமிழ் வளர்ச்சிக்கு ஆக்க பூர்வமான முறையில் ஏதோ வரைமுறையோடு கூடிய செயல்திட்டம் ஒன்றை வடிவமைத்து மத்திய அரசு மேற்கொள்ளவிருப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால் அவ்வாரியம் மைசூரிலுள்ள இந்திய மொழிகள் ஆணைய நடுவத்தில் அமைக்கப்படும் என்பதை அறியும் போது, அது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு என்பது தெளிவாகிறது.

மேலும், "இரண்டு சர்வதேச விருதுகள் உட்பட சிறந்த தமிழ் அறிஞர்கள் ருவருக்கு தலா ரூ.1 இலட்சம் மதிப்புள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்' என்றும், "தமிழ் மொழிக்கு சிறந்த பங்களிப்பை அளித்த ஐந்து தமிழறிஞர்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும்' என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

இவ்விரண்டு வகை விருதுகளும் பரிசுத் தொகையும் புதிதாகத் தமிழுக்கென வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட புத்தம் புதிய திட்டம்போல் பாவனை செய்யப் பட்டுள்ளதே தவிர, இச்செம்மொழிக்கான விருதும் பரிசுத் தொகையும் பல ஆண்டுகளாகச் செம்மொழி என்பதற்காக சமஸ்கிருதம், பாரசீக, அரபி மொழி அறிஞர்கட்கு வழக்கமாக அளிக்கப்பட்டு வருபவைகளேயாகும். இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு வழங்கப்படும் விருது பரிசுகளில் ஒரு பகுதி மட்டுமே இதுவெனக் கூறலாம்.

ஆனால், ஒரு வேறுபாடு உண்டு. சமஸ்கிருதம் போன்ற செம்மொழிக்கான இவ்விருது, பரிசுகளை முறையாகக் கல்வித் துறை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. ஆனால், செம்மொழித் தமிழுக்கு மட்டும் மைசூரில் கன்னட மொழி ஆதிக்கவாதிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட இந்திய மொழிகளின் ஆணைய நடுவம் அளிக்கும். ஏன் இந்த வேறுபாடு? என ஆழ்ந்து சிந்தித்தால் நாம் எந்த அளவுக்கு ஏமாளிகளாக ஏமாற்றப்படுகிறோம் என்பது தெளிவாகத் தெரியவரும்.

அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங் டாக்டர் கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசியதன் விளைவாக மத்திய அரசின் செம்மொழி அறிவிப்பில் காணப்பட்ட குறைகள், குழப்பங்கள், தவறுகளைச் சரி செய்து, பண்பாட்டுத் துறையில் இடைச் செருகலாக வைக்கப்பட்டுள்ள செம்மொழித் தமிழ் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையில் கல்வித்துறைக்கு கொண்டு சென்று மற்ற செம்மொழிகளோடு சேர்க்கப்படும். மேலும், ஆயிரம் ஆண்டுப் பழமை என்பது இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மை என மாற்றப்படும் என்றெல்லாம் பேராவலோடு எதிர்பார்த்த தமிழ் உள்ளங்கட்கு மிகப்பெரும் ஏமாற்றம் தரும் வகையில் புதிய வாரிய அமைப்பு அறிவிப்பு அமைந்துள்ளது. ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது இதுதானோ?

உண்மைக்குப் புறம்பான மற்றொரு செய்தி "மத்திய அரசு தமிழைச் செம்மொழி ஆக்கி விட்டது எனக் கூறப்படுகிறது, எழுதப்படுகிறது. இது வரலாறு தெரியாதவர்களின் உளறல். உலகம் தமிழைச் செம்மொழியாக ஏற்று எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன. யுனெஸ்கோ போன்ற உலகப் பேரமைப்புகள் தமிழைச் செம்மொழியாக ஏற்றுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்திய அரசு இப்போதுதான் சட்டபூர்வமாக அங்கீகாரம் செய்து அறிவித்துள்ளது. உலகில் சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்ற ஒரு மொழி என்பது தமிழருக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்ப்பதாகும்.'

யுனெஸ்கோ போன்ற உலகப் பேரமைப்புகளும் ஆக்ஸ்ஃபோர்டு போன்ற புகழ்பெற்ற உலகப் பல்கலைக் கழகங்களும் தமிழை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொன்மை மொழி என்ற அடிப்படையிலேயே செம்மொழியாக ஏற்றிருக்கின்றன. 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் செம்மொழி வேண்டுகோளுக்கிணங்க மத்திய அரசின் கல்வித்துறை சார்ந்த மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் ஆணைய நடுவம், இரண்டாயிரம் ஆண்டு எனும் அளவுகோல் கொண்டு தமிழின் தொன்மையை அளந்து முத்திரை குத்தியிருக்கும் போது, அதே மத்திய அரசின் பண்பாட்டுத் துறை ஆயிரம் ஆண்டுத் தொன்மை எனும் அளவு கோல் கொண்டு தமிழின் தொன்மையை அளப்பது முரண் பாடாகத் தெரியவில்லையா? ஒரே மொழிக்கு மத்திய அரசின் இருபெரும் துறைகள் வெவ்வேறு அளவுகோல் கொண்டு அளப்பது முரண்பாடாக மட்டுமல்லாது கேள்விக்குரிய ஒன்றாகவும் இருக்கிறதே!

ஆயிரம் ஆண்டுப் பழமையுடைய மொழிகள் உலகில் நூற்றுக்கு மேற்பட்டவை உள்ளன. யுனேஸ்கோ போன்ற உலகப் பேரமைப்புகள் ""செம்மொழி என்று சொன்னால், அது குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட பழமையும் தொன்மையும் பெற்றிருக்க வேண்டும் என்ற அளவுகோலின் அடிப்படையில் தேர்வு செய்திருக்க, தற்போது மத்திய அரசு ஆயிரமாண்டுத் தொன்மையின் அடிப்படையில் தமிழைச் செம்மொழியாக ஏற்றிருப்பதைக் கொண்டு தமிழைத் தன் செம்மொழிப் பட்டியலிலிருந்து யுனெஸ்கோ நீக்கும் நிலை உருவாகாதா? அப்படியொரு நிலை மத்திய அரசின் ஆயிரமாண்டுத் தொன்மை அறிவிப்பால் தமிழுக்குத் தேடித்தரும் பெருமையா? இந்நிலை உருவாகக் காரணமாக இருந்தவர்கள் இதை நினைத்துப் பார்க்க மறுப்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
'
மேலும், "செம்மொழித் தகுதி பெற குறைந்தது ஆயிரம் ஆண்டுத் தொன்மை இருக்க வேண்டும்' என்றுதானே கூறப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கு மேல் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் தொன்மை இருக்கலாமே எனச் சப்பைக் கட்டு கட்டப்படுகிறது. இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐ.ஏ.எஸ்) அடிப்படைத் தகுதி ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பட்டம் பெறவே முடியாத சிலருக்கு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு குறைந்தபட்ச அடிப்படைக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. இருந்தாலே போதும் என விதி மாற்றம் செய்தால் அது எவ்வளவு நகைப்புக்குரியதோ அவ்வளவு நகைப்புக்குரியது செம்மொழித் தகுதி குறைந்தது ஆயிரம் ஆண்டு என நிர்ணயம் செய்துள்ள செயல். ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே தொன்மையுடைய கன்னடம் போன்ற மொழிகள் செம்மொழி சிங்காதானம் ஏறத்தானே இந்த ஏற்பாடு, தமிழுக்கு இழைக்கப்பட்ட இந்த இழிவுக்குத் துணை போனவர்களை என்னென்றுரைப்பது? எப்படியோ நடந்துவிட்ட இந்த இழிவு விரைந்து துடைக்கப்பட வேண்டாமா?

மேலும், மொழி என்ற அளவில் செம்மொழித் தமிழ், கல்வித்துறையில் இடம் பெறுவதுதானே முறை. கல்வித்துறையில் தான் சம்ஸ்கிருதம் முதலான மற்ற செம்மொழிகள் உள்ளன. ஆனால், செம்மொழித் தமிழ் மட்டும் லலித்கலா அகாதெமியும், சாகித்திய அகாதமியும் உள்ள, துறை விரிவோ, நிதி வசதியோ இல்லாத பண்பாட்டுத் துறையில் கொண்டு போய் வைக்கப் பட்டுள்ளது. ஆனால், செம்மொழித் தமிழுக் கான விருதுகளையும் பரிசுகளையும் கல்வித் துறை வழங்குமாம். பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டுவது என்பது இதுதானா? யாரை ஏமாற்ற இப்படியொரு ஏற்பாடு.

இன்னொரு சமாதானமும் அமைச்சர் வாயிலாகக் கூறப்படுகிறது. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக சட்ட அங்கீகாரம் பெற்ற ஒரே செம்மொழி தமிழ். எனவே, அது தனிப்பட்டியலில் இடம் பெறுவதுதான் முறை என்று சமாதானம் அமைச்சரைக் கொண்டு கூறப்படுகிறது. அப்படியானால் சம்ஸ்கிருதம் போன்ற மொழிகட்கு மரபு முறையில் வழங்கிவந்த "செம்மொழி' தகுதி நீக்கப்பட்டு விட்டதா? விருதுகளும் பரிசுகளும் நிதியுதவி களும் நிறுத்தப்பட்டு விட்டனவா? அல்லது அவற்றிற்கும் சட்டபூர்வ "செம்மொழி' தகுதி வழங்கப்பட்டு, தமிழ்ச் செம்மொழிப் பட்டியலில் சேர்க்கப்பட விருக்கிறதா? இதில் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லையே! கன்னட மொழிக்குச் "செம்மொழி' தகுதியைச் சட்டபூர்வமாக வழங்க தேர்வுக்குழு அமைக்கப் பட்டதாக "டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ள நிலையில் ஏன், எதற்காக தனிப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. ஏதோ ஓரிரு மொழிகளுக்காக அவை செம்மொழி அங்கீகாரம் பெறுவதற்காக தமிழின் தொன்மைச் சிறப்பு சிதைக்கப்பட்டு, பலிகடா ஆக்கப்பட வேண்டுமா? அதுவும் நம்மவர்களின் துணையோடு! நெஞ்சம் கனக்கிறது.

நம்மைப் போல் அவர்களும் தங்கள் மொழிக்குப் பெருமை தேட முயல்வது இயல்பு தானே. அதற்கு நõமை ஏன் குறுக்கீடு செய்ய வேண்டும்? இது இயல்புதானே என சமாதானமும் கூறப்படுகிறது. உலகம் ஒருமுகமாக ஒப்புக்கொண்ட இரண்டாயிரம் ஆண்டுத் தொன்மை எனும் தகுதிப்பாட்டின் அடிப் படையில் எந்த மொழியும் போட்டியிட்டு வெற்றிபெறலாமே. ஏன் குறுக்கு வழியில் ஆயிரம் ஆண்டு எனும் அளவுகோலில் இடம் பெறத் துடிக்க வேண்டும்.

செம்மொழித் தமிழ் கல்வித்துறையில் இடம் பெற்றால்தானே கல்வித்துறையின் பேரங்கமாக உள்ள பல்கலைக் கழக மானியக் குழு தமிழைச் செம்மொழியாக ஏற்கும். அவ்வாறு ஏற்றால்தானே மொழிப்பாடமுள்ள இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழாய்வுத் துறையோ தமிழாய்வு இருக்கைகளோ உருவாக முடியும். இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழு தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்தால்தானே உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழைச் செம்மொழியாக ஏற்று ஆய்வுத்துறைகளையோ இருக்கை களையோ உருவாக்கும். இதற்கு மாறாக, பண்பாட்டுத் துறையில் செம்மொழித் தமிழ் இடம்பெற்றிருப்பதால் மேற்கூறிய ஆய்வு முயற்சிகள் எதுவும் இல்லாமற் போக நேர்கிறதே. இந்நிலைமைக்குக் காரணமானவர் களின் மனத்தை இந்நிகழ்வு உறுத்தாதது ஆச்சரியமளிக்கிறது.

பண்பாட்டுத் துறை அமைச்சர் மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு வேண்டுமானால் வேண்டுகோள் விடுக்கலாம். இதற்கு ஓரிரு மத்தியப் பல்கலைக்கழகங்கள் கூட செவி சாய்க்க முன்வருமா என்பது சந்தேகமே. சம்ஸ்கிருதம், அரபி போன்ற செம்மொழிகள் கல்வித்துறையில் இருப்பதால்தானே பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரமும் போதிய நிதியுதவியும் அதன் விளைவாக சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களில் ஆய்வுத் துறைகள் அமைய முடிந்தது. செம்மொழித் தமிழ் மட்டும் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வி÷நிõதமான முறையில் நடத்தப்பட வேண்டும்.

"செம்மொழித் தமிழ்' தமிழ்நாட்டளவில் இந்திய மற்றும் உலக அளவில் அடையக் கூடிய பயன்கள் ஏராளம் உண்டு. குறைந்த அளவு சமஸ்கிருதம் போன்ற செம்மொழி களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து நிதியுதவிகளும் சலுகைகளும் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டு வரும் விருது, பரிசுகளும் செம்மொழித் தமிழுக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டாமா? வெறும் செம்மொழி அறிவிப்பு அரசியலுக்கு வேண்டுமானால் போதியதாக இருக்கலாம். ஆனால், உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு?

தமிழறிஞர் எவருமே இடம்பெறாத குழுவால் தமிழ் செம்மொழியாகத் தேர்வு செய்யப்பட்டு, பண்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டது. காலங்கடந்து இரு உறுப்பினர்கள் தமிழறிஞர்கள் என்ற போர்வையில் டாக்டர் கலைஞரால் இனங்காட்டப்பட்டுத் தேர்வு செய்யப் பட்டனர். இத்தேர்வு மூலம் தமிழ்நாட்டில் தமிழ் கற்ற தமிழறிஞர்கட்கு எவ்வளவு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்ற உண்மை வெளிச் சத்துக்கு வந்தது. தமிழறிஞர் வ.அய்.சுப்பிர மணியனார் மொழியியலறிஞர் ச.அகத்திய லிங்கம் போன்றவர்கள் அல்லது தமிழ் செம்மொழியாக அரசு ஏற்று அறிவிப்புச் செய்ய கடந்த கால் நூற்றாண்டுக்கு உழைத்தவர் களெல்லாம் ஏனோ உரியவரின் கவனத்துக்கு வராமலே போய்விட்டனர். இதே முறையில் தான் அடுத்து வாரியம் வாரி வழங்கவிருக்கும் தமிழறிஞர் விருதுக்கும் பரிசுக்கும் எத்தகைய வர்கள் இனங்காட்டப்படப் போகிறார்கள் என்பதைத் தமிழ் மக்கள் இப்பொழுதே ஓரளவு ஊகிக்க முடியும்.

தமிழை எப்படியெல்லாம் தங்கள் வளர்ச்சிக்கு உரமாக்கிப் பயனடையலாம் எனச் சிந்திப்போரே எங்கும் மிகுந்துவரும் சூழலில் தமிழ் வளர்ச்சிக்குத் தங்களை உரமாக்கிக் கொள்ளும் உண்மைத் தமிழ் நெஞ்சங்களாலே இக் குழப்பங்களுக்கு விடை காண முடியும்.

இன்றையச் சூழலில் குறைந்த அளவு வேலைத் திட்டத்தில் திறமையாக செம்மொழி கோரிக்கையை இணைத்து, வெற்றிகரமாக அறிவிக்கச் செய்த டாக்டர் கலைஞர் அவர்களே நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர் துணையுடன் இக்குழப்பத்துக்கு விடிவுகாண முடியும். அதையே தமிழுலகும் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டுள்ளது.

- அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா

(தென்செய்தியில் வெளியான கட்டுரை )