‘இந்திய - சோவியத் நாடுகளின் நட்புறவைக் குறித்து டிசம்பர் 2014-இல் பழ.நெடுமாறன் அவர்கள் விரிவான முறையில் ஒரு பெரு நூலை எழுதி யுள்ளார். அந்நூல் இரட்டைப் புத்தக வடிவில் (Double Crown)) அழகான சிறிய எழுத்தில் 708 பக்க அளவில் விரித்துள்ளது. சாதாரணப் புத்தக வடிவில் வெளியிட்டிருந்தால் நூல் 1500 பக்கங்களுக்கு நீண்டிருக்கும். நூலின் உள்ளடக்கத்திற்கேற்ப என்.சி.பி.எச். நிறுவனம் மிகச் சிறந்த முறையில் நல்ல அச்சில் கலைக்களஞ்சிய வடிவில் அழகாக வெளியிட்டிருக்கிறது. நூல் கண்ணையும் கருத் தையும் கவரும் முறையில் அமைந்துள்ளது பாராட்டத் தக்கது. நூல் 16 பாகங்களையும் 114 உள் தலைப்பு களையும் கொண்டுள்ளது. இந்திய சோவியத் நட்புறவை முன்னிட்டு 1984-ஆம் ஆண்டில் பழ.நெடு மாறன் சோவியத் நாட்டிற்குச் சென்றிருக்கிறார். பின்னர் அப்பயணம் குறித்து அதே ஆண்டில் ஈரோட்டில் இந்திய - சோவியத் நட்புறவுக் கழகச் சார்பில் உரையாற்றி உள்ளார். அந்த உரையைக் கேட்ட தோழர் இரா.நல்லகண்ணு அதனை நூலாக வெளியிட்டால் நன்றாக இருக்குமே என்று கூறியுள்ளார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றியதே இந்நூலாகும்.

nedumaran 300பழ.நெடுமாறன் சோவியத் ஒன்றியத்திற்குச் செல்வதற்கு முன்பு, இரு நாடுகளின் உறவைப் பற்றி ஆய்ந்து குறிப்புகள் எடுத்துள்ளார். அந்தக் குறிப்பு களும் பயண அனுபவமும் புத்தகம் எழுதுவதற் காக எடுத்த குறிப்புகளும் அடங்கிய நூலே இந் நூலாகும். இந்நூல், இந்திய - சோவியத் நட்புறவு தொடங்கிய காலத்தில் தொடங்கி 1917-ஆம் ஆண்டு அக்டோபர்க்குப் பிற்பட்ட காலகட்டம் வரை யிலும், அடுத்து அப்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கத்தையும், அரிய குறிப்புகளோடு எழுதப்பட்ட நூலே இந்நூலாகும். மலைக்க வைக்கும் வரலாற்றுக் குறிப்புகளும் அரிய செய்திகளும் இந்நூலில் நிரம்பியுள்ளன. குறிப்பாக இரு நாடு களுக்குமிடையேயான வரலாற்றுத் தொடர்பு களும் சமயத் தொடர்புகளும், 1905இல் நிகழ்ந்த புரட்சிக்கு முன்னர் இரு நாட்டுப் புரட்சியாளர் களுக்கு ஏற்பட்ட தொடர்புகளையும், ஜார் மன்னர் காலத்தில் ரசியாவில் இருந்த சூழலோடு, அக் காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிச் சூழலையும் விளக்குவதாகவும், சிறப்பாக இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சோவியத் நாடு சென்று தம் நாட்டிற்கு அரிய உதவியைக் கேட்டதும், மற்றும் வேறு சில இந்திய வீரர்கள் செஞ்சேனையில் சேர்ந்து, சோவியத்துக்கு எதிரான படைகளோடு போரிட்டு உயிர்த்தியாகம் செய்த அரிய குறிப்பு களையும் கொண்டதாக இந்நூல் உள்ளது. மாதுளம் பழத்தைப் பிளக்கும்போது அதில் எண்ணற்ற மணிகள் இருப்பதைப் போன்று இந்நூலிலும் எண்ணற்ற மணிச் செய்திகள் உள்ளன. அவை நமக்கு வியப்பை அளிக்கின்றன.

சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி முதல் பாகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அந்நாகரிகம் இந்தியாவில் மட்டுமன்றி மத்திய ஆசியா வரை பரவியிருந்ததை வரலாற்றாசிரியர்கள் எழுதியிருப் பதை நமக்கு எடுத்துக் காட்டுவதோடு, நம் காலத்தில் வாழும் இந்திய ஆராய்ச்சியாளர்களின் குறிப்பு களோடு, அயல்நாட்டு ஆய்வாளர்களின் குறிப்பு களையும் தருகிறார். குறிப்பாகச் சிந்து வெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடே என்பதை வரலாற்றாசிரியர்கள் நிறுவியுள்ளதைக் காட்டுவ தோடு, சோவியத் வரலாற்றாசிரியர்களின் குறிப்பு களையும் இணைத்துத் தருகிறார். இந்தப் போக்கை நூல் முழுதும் நம்மால் காண முடிகிறது. ஏதோ சில குறிப்புகளைத் தருபவராக அவர் அல்லாமல், தொடர்புள்ள அனைத்துச் செய்திகளையும் திரட்டித் தரும் அரும் ஆய்வாளராகவே அவர் உள்ளார். இந்நூல் முழுதும் காணப் பெறுவது அக்காட்சி தான். அக்காட்சியின் கருவூலம்தான் இந்நூல். இந்தியாவுக்கும் ரசியாவுக்கும் கி.மு.1 முதல் கி.பி. 1 வரை கலை - பண்பாடு - சமயம் - ஆகியவை குறித்து பழந்தொடர்புகள் இருந்துள்ளதை ரஷிய நாட்டுத் தொல்பொருள் துறையினர் உறுதி செய் துள்ளதை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். குறிப்பாக தெற்கு உஸ்பெகிஸ்தான், தெற்கு தாஜிகிஸ்தான், தெற்கு துர்கிஸ்தான் ஆகியவற்றில் பௌத்த மடாலயங்கள், கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் சிதைவுகளையும், எண்ணற்ற கலைப் பொருட்கள், சிற்பங்கள் வண்ண ஓவியங்கள் ஆகியவற்றோடு பிராமிய கல்வெட்டுகளையும் தொல்லியல் துறையினர் கண்னடுத்துள்ளதை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இவற்றுடன் இரு நாடுகளுக்குமிடையே இருந்த அரசியல் தொடர் பையும் காட்டுகிறார்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்தி யர்கள் நடத்திய போராட்டங்களை அறிஞர்கள் அனுதாபத்தோடு கவனித்ததோடு, அன்றைய சூழலில் இந்தியாவில் எழுதப்பட்ட நூல்களை ரஷியாவில் உடனுக்குடன் மொழிபெயர்த்துள்ளனர். மேலும் அந்நாட்டுப் புரட்சிகர ஜனநாயகவாதிகளாகிய நோவி கோவ் ரதிஸ்சேவ் பெலின்ஸ்கி, தாப்ரோலி யோபோல் போன்றோர் இந்தியாவிலிருந்த பிரித் தானிய ஆட்சியை எதிர்த்து எழுதியதோடு, அவ் வாட்சியை ஜார்மன்னனின் கொடுங்கோல் ஆட்சி முறையோடு ஒப்பிட்டுக் கட்டுரைகளையும் நூல் களையும் எழுதியுள்ளதை எல்லாம் நூலாசிரியர் அரிதின் முயன்று நமக்கு எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறே பண்டைய வணிகத் தொடர்பையும், பிற்கால மருத்துவத் தொடர்பையும் சுட்டிக் காட்டுகிறார். சில செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியாவில் பலநாட்டினர் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம். ஆனால் பற்பல நூற்றாண்டுகட்கு முன்னர் ரஷியாவைச் சேர்ந்த ஜார்ஜியர்கள், அர்மேனியர்கள் இந்தி யாவில் வாழ்ந்து வருவதையும் ஆசிரியர் குறிப் பிட்டுள்ளார். இமயமலையின் அடிவாரத்தில் வாழும் குஜார்கள் ஒரு காலத்தில் ஜார்ஜியாவி லிருந்து வந்து குடியேறியவர்களாகக் கூறிக்கொள் வதையும், தற்போது அவர்கள் பேசும் மொழிக்கும், ஜார்ஜிய மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருப் பதையும், பண்பாட்டுத் தொடர்புகள் இருப் பதையும் இன-வரலாற்று அறிஞர்கள் பதிவு செய் திருப்பதை ஆசிரியர் விரிவாக விளக்கியிருப்பது போற்றத்தக்கது.

ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த அர்மினிய நாடு, பின்னர் சோவியத் ஆட்சி ஏற்பட்டதும் ஒரு குடியரசாக விளங்கியது. இது துருக்கி, ஈரான் ஆகிய நாடுகளின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டைச் சேர்ந்த அர்மினியர்கள் 16-ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் குடியேறியுள்ளார். அக்பர் ஆட்சிக் காலத்தில் (1556-1603) அவர்கள் செல் வாக்குடன் இருந்துள்ளனர். பின்னர் கல்கத்தா விலும், சென்னையிலும் மிகுதியாக குடியேறி யுள்ளனர். 1666-இல் சென்னையில் தங்களுக்குக் குடியிருப்பை அமைத்துக்கொண்டு, உலக நாடு களோடு வணிகம் செய்துள்ளனர். வணிகத்தில் இவர்கள் யூதர்களோடு ஒப்பிடத்தக்கவர்கள், சென்னையில் அர்மினியர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிதான் அர்மினியன் தெரு. அத்தெரு, இப் போது அரண்மனைக்காரன் தெரு என்று தவறாக அழைக்கப்பட்டு வருகிறது. அத்தெருவிலுள்ள கிறித்தவ கோயில் அவர்களால் 1712-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்க்கும் பிரான்சு நாட்டினர்க்கும் ஏற்பட்ட போரில் அக்கோயில் சேதமடைந்தன. பின்னர் மீண்டும் அக்கோயில் 1772-இல் புதுப்பிக்கப் பெற்றது. அத்தோற்றத் துடன்தான் இன்றும் அக்கோயில் காட்சியளிக் கிறது. அக்கோயிலின் மதகுருவான ஒருவர் 1794இல் அர்மீனிய மொழியில் ஆஸ்தரார் என்ற இதழை வெளியிட்டுள்ளார். அச்செய்தித்தாள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துள்ள தையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். இன்னொரு முக்கியச் செய்தியையும் கூடுதலாகத் தெரிவித்து உள்ளார். அர்மினியாவின் தலைநகரான ஏரவான் பல்கலைக்கழகத்தில் 1054 தமிழ் ஓலைச்சுவடிகள் இப்போதும் உள்ளனவாகக் குறிப்பிட்டுவிட்டு, அவற்றைக் குறித்து இதுகாறும் யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை எனும் வருத்தத்தையும் குறிப் பிட்டுள்ளார். அக்பர் ஓர் அர்மினிய அழகியை மணந்து அரசியாக அமர்த்திக் கொண்டதையும் தவறாமல் நூலில் பதிவு செய்துள்ளார்.

இந்து சமயம் மற்றும் பௌத்த சமயம் குறித்து ஆய்வு நிகழ்த்திய அறிஞர்களையும், அவர்கள் எழுதிய அரிய குறிப்புகளையும் ஆசிரியர் குறிப் பிட்டுள்ளார். குறிப்பாகப் பௌத்தம் குறித்துச் சிறப்பான ஆய்வு நிகழ்த்திய ஓல்டன் பர்க், யூரி ரோயரிச், செர்பாட்ஸ்கி ஆகியோரைக் குறித்து அரிய தகவல்களைத் தந்துள்ளார். பண்டைய இந்தியத் தத்துவஞானத்தையும் கிரேக்கத் தத்துவ ஞானத்தையும் ஒப்பிட்டு ஆய்ந்த மேலைநாட்டு அறிஞர்கள் சில தவறான முடிபுகளைத் தத்து உள்ளனர். அவற்றைச் செர்பாட்ஸ்கி எவ்வாறு மறுத்துள்ளார் என்ற குறிப்பை ஆசிரியர் இதில் இணைத்துள்ளது பெரிதும் பாராட்டத்தக்கது. அச்செய்தியை ஒவ்வொரு ஆய்வாளரும் அறிந் திருக்க வேண்டியது மிக முக்கியமானது. அக் குறிப்பைச் சுருக்கமாக நோக்குவது நம் கடமை.

“இந்தியப் பண்பாட்டின் உயர்வுமிக்க சாதனை களின் சாரமாகப் பௌத்தத் தத்துவம் விளங்கு கிறது. இந்தியத் தத்துவமானது கிரேக்கத் தத்து வத்தை அடிப்படையாகக் கொண்டது என ஐரோப்பிய கீழ்த்திசை அறிஞர்கள் மதிப்பிட்டு உள்ளனர். இந்தியத் தத்துவமும் தர்க்க சாஸ்திரமும் இந்திய மண்ணில் தோன்றி வளர்ந்தவை. அவை இந்தியச் சிந்தனையின் சுயேச்சையான படைப்புகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் ஆய்வுத் திறத்தைப் பாராட்டி நேரு அவர்கள் தம் இந்தியத் தரிசனம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதையும் ஆசிரியர் சுட்டியுள்ளார். இது மிக முக்கியமானது. செர்பாட்ஸ்கியைப் போன்றே ஓல்டன்பர்க்கும் இந்தியத் தத்துவ ஞானத்தைக் குறித்து அரிய குறிப்புகளை அளித்துள்ளார். இந்திய அறிஞர் களைக் காட்டிலும் இவர்கள் அரிய ஆய்வுக் குறிப்புகளைத் தந்துள்ளது எவராலும் மறக்க முடியாதவை. இந்தியத் தத்துவ அறிஞரான தேவி பிரசாத் சட்டோ உபாத்யாயா தம் நூல்களில் இந்த இரு அறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகளைத் துணையாகக் கொண்டு விளக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. சோவியத் அறிஞர்கள் இந்திய மண்ணையும், அதன் தத்துவங்களையும் எவ்வாறெல்லாம் மதித்துப் போற்றியுள்ளனர் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும்.

1857ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிப்பாய் கலகம் எரிமலை போன்று திடீரென்று வெடித்தாலும், அதனையடுத்து பல முன்னேற்பாடுகள் கமுக்கமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் பகதூர்ஷா ஜாப்பர், ஜான்சிராணி, தந்தியாதோபே, நானாசாகிப் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில், அந்தப் போராட்டத்தில் மூளையாக விளங்கியவர் நானாசாகிப் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பல முனைகளில் இருந்தவர்களை ஒன்று திரட்டிய தோடு, ஆங்கிலேயரை இந்தியாவிலிலேயே விரட்ட ரஷியாவின் ராணுவ உதவியையும் நாடியுள்ளார். இதற்காகத் தம் படைத்தளபதியான அஜ்முல்லாகான் என்பவரைத் தந்திரமாக ரஷியாவுக்கு அனுப்பி யுள்ளார். ரஷியாவுக்குச் சென்ற அவர் இந்தி யாவுக்குத் திரும்பினாரா? என்பது குறித்து இது வரை எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் ஜான்சிராணி போர்க் களத்தில் மடிந்தார். பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டுப் பர்மாவில் இறந்து போனார். தந்தியாதோபே தூக்கிலிடப்பட்டார். பற்பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். இதனால் நானாசாகிப் நேபாளத்திற்குத் தப்பி ஓடியுள்ளார். இந்தியாவில் எங்கு தேடியும் கிடைக்காததால், அவரைப் பிடித்துத் தருபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று வெள்ளையாதிக்கம் அறிவித்திருந்தது. ஆனால், இறுதி வரை நானாசாகிப்பைக் கைது செய்ய முடியவில்லை. நானாசாகிப்பைக் குறித்துச் சில தகவல்களை நூலாசிரியர் சில நூல்களிலிருந்து திரட்டித் தந்துள்ளார். இவற்றோடு இந்து நாளி தழிலிருந்து ஒரு செய்தியைத் தெரிவித்திருப்பது நமக்கு ஓர் அதிர்வையும் அடங்கா ஆச்சரியத் தையும் அளிக்கிறது. நூலாசிரியரின் உலையா உழைப்பு இங்குப் பகல்பட்ட ஞாயிறு போல் காட்சியளிக்கிறது.

நானாசாகிப்பின் தாய் 24-9-1889-இல் சாகிப் இறந்ததாகவும், அவரது உடல் இந்திய எல்லை யருகில் எரியூட்டப்பட்டதாகவும், அந்த எலும்பை காசியில் புதைக்கப்பட வேண்டுமென்று ஒருவரிடம் கொடுத்தனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 1864-இல் நானாசாகிப் பூடான் அரசின் பாதுகாப்பில் இருந்ததாக வெள்ளையாதிக்கம் குறித்துள்ளது. 1885இல் அலகாபாத்தில் நிகழ்ந்த கும்பமேளாவின் போது நானாசாகிப் அங்கு கலந்துகொண்டதாகவும் ஒரு செய்தியுள்ளது. வெள்ளையாதிக்கத்திடமிருந்து தப்பித்துக் கொள்ளவே நானாசாகிப் இறந்துவிட்டதாகச் செய்தி பரப்பப்பட்டதாகவும், அவர் உத்திரப்பிரதேசத்திலுள்ள பிரதாப்கார் மாவட்டத்தில் பல ஆண்டு காலம் வாழ்ந்ததாகவும், அங்கு அவருக்கு மூன்று மகன்கள் பிறந்ததாகவும், இறுதியில் சித்தாப்பூர் மாவட்டத்தில் கோமதி நதிக்கரையின் ஓர் ஊரில் 102 வயதில் 1926ஆம் ஆண்டில் காலமானதாகவும் ஒரு செய்தி உள்ளது. இச்செய்தியை இந்து நாளிதழ் 10-7-1953-இல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு நானா சாகிப்பை குறித்து நூல்களில் மட்டுமல்லாமல், செய்தித்தாள்களிலிருந்தும் பல அரிய செய்தி களைக் குறிப்பிட்டிருப்பது திகைப்பூட்டுவதாக உள்ளது.

இதனைப் போன்றே சுவாமி விவேகானந் தரைப் பற்றியும் பெரும்பாலோர் அறிந்திராத பல அரிய செய்திகள் இந்நூலில் உள்ளன. முன்னைய ரஷியாவையும் அதனையடுத்து உருவாகிய சோவி யத் யூனியனையும் விளக்கும் நூலாக இது இருப் பதால் அதன் தொடர்பாக எச்செய்தியையும் விடாமல் அனைத்தையும் பெரும் முயற்சியில் ஆசிரியர் திரட்டித் தந்துள்ளார். ரஷியாவில் ஜார் மன்னரை எதிர்த்து நடந்த போராட்டங்களை விவேகானந்தர் அனுதாபத்தோடு நோக்கியுள்ளார். அவர் அமெரிக்கா சென்ற போது, ஜாரை எதிர்த்துப் போராடி பின்னர் அமெரிக்காவில் மறைந்திருந்த புரட்சியாளர் பாகுனினையும், பின்னர் இங்கிலாந்தில் இருந்த ரஷ்ய புரட்சியாளர் குரோம் போட்கினையும் அவர் ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளார். இவற்றால், அவர் தம் சீடரான கிறிஸ்டியானாவுக்கு எழுதிய கடிதத்தில், உலகில் முதல் புரட்சி ரஷியா விலோ சீனாவிலோதான் வெடிக்கும் எனக் கூறி யுள்ளார். இச்செய்திகளோடு, இந்தியாவில் இனி, சூத்திரர் ஆட்சிதான் ஏற்படும் என்று கூறியதையும், பலரோடு ரஷியாவைக் குறித்து அவர் உரையாடி யிருப்பதையும், அவருடைய சகோதரரான வீரேந்திர நாத் தத்தாவும் அரவிந்தரும் ஆயுதம் ஏந்திப் போராடுவதில் எத்துணை ஈடுபாடு கொண் டிருந்தார்கள் என்பதையும், விவேகானந்தரின் கட்டுரையையும் நூலையும் டால்ஸ்டாய் படித்துப் பாராட்டியுள்ளதையும் ஆசிரியர் நமக்குக் காட்டு கிறார். குறிப்பாக, விவேகானந்தரின் ஒரு கட்டு ரையைக் குறித்து டால்ஸ்டாய், “தீமையை வன் முறையால் எதிர்ப்பதை நியாயப்படுத்தும் ஓர் அத்தியாயம் உள்ளது. அது திறமையாக எழுதப் பட்டுள்ளது” என்று எழுதியிருப்பதையும், மற் றொரு நூலை அவர் பாராட்டியிருப்பதையும் ஆசிரியர் விளக்கியிருப்பது நம்மை மகிழ வைக் கிறது.

ரஷியாவில் நடந்த அக்டோபர் புரட்சிக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வு களையும், அப்புரட்சியால் இந்தியாவில் நிகழ்ந்த மாறுதலையும் வளர்ச்சியையும் விளக்குவதாகவே இந்நூல் பெரிதும் அமைந்துள்ளது. அதுவே உயிரோட்டமாக உள்ளது. புரட்சிக்கு முன்னும் பின்னும் அங்கு சென்றவர்களைக் குதித்து எண்ணற்ற தகவல்கள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. எதை விளக்குவது எதை விலக்குவது என்பதில் இந்நூல் ஒரு மலைப்பை ஏற்படுத்துகிறது. கவிக் குயில் சரோஜினி நாயுடுவின் தமையனாரான வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா, அபார்னி முகர்ஜி இராஜா மகேந்திர பிரதாப், எம்.பி.டி. ஆச்சாரியா மற்றும் சோவியத் நாட்டில் தங்கி வாழ்ந்த இந்தியப் புரட்சியாளர்கள் ஆகியோர் பற்றி கிடைத்தற்கரிய அருந்தகவல்கள் உள்ளன. அவற்றை அறியும்போது நமக்கு வீறுணர்வு ஏற்படு கிறது. வீரேந்திரநாத் லண்டனுக்கு ஐ.சி.எஸ். படிக்கச் சென்று, அதனை நிறைவேற்றாது உலகப் புரட்சியாளர்களைச் சந்தித்து, வெள்ளையரிட மிருந்து இந்தியாவுக்கு எப்படி விடுதலை பெறுவது என்பதைக் குறித்தே செயல்பட்டுள்ளார்.

1906-இல், துருக்கியின் தலைவர் கமால்பாட்சாவைச் சந்தித்துப் பேசியதையும், 1907-இல் ஜெர்மனியில் நடந்த உலக சோசலிச மாநாட்டில் கலந்துகொண்டு பல சிந்தனையாளர்களோடு விவாதித்ததையும் மொராக்காவில் புரட்சி செய்த ரிப்ஸ்களுடன் தொடர்பு கொண்டு இராணுவப் பயிற்சி பெற்ற தையும், மேடம் காமாவுடன் இணைந்து பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினரானதையும், பின்னர், இந்திய விடுதலைக்காக அவர் இந்தியச் சுதந்திரக் குழுவை அமைத்து, அதில், இராஜா மகேந்திர பிரதாப், பூபேந்திரநாத் தத்தா, செண்பக ராமன், டாக்டர் அபினாஸ் பட்டாச்சார்யா, மௌலானா பரூக்கத்துல்லா, தாதாசாம்ஜி, புரோ முந்நாத்தத்தா ஜிதேந்திரநாத் லாஹரி, பிரேந்திர நாத் தாஸ்குப்தா, திருமாலாச்சாரி ஆகியோரை உறுப்பினர்களாக அமர்த்தி, தான் செயலாளராக இருந்ததையும், 1920-இல், இந்திய விடுதலையைக் குறித்து எம்.என்.ராய் கொண்டிருந்த தவறான கருத்தை விளக்கி லெனினுக்கு ஒரு கடிதத்தை அவர் அனுப்பியதையும், அதனைப் படித்த லெனின் அவரை நேரில் சந்திக்க அழைத்ததையும், சந்திக்கச் சென்ற அவரை எம்.என்.ராய் எப்படியோ தவிர்த்து விட்டதையும், நேரு, அக்காலத்திலேயே அவருடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்ததையும், அவரது தூண்டுதலினாலேயே 1927-ஆம் ஆண்டில் பிரஸெஸ்சில் நடந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டில் நேரு கலந்துகொண்டதையும் நூலா சிரியர் நமக்குச் சுட்டிக்காட்டியிருப்பது அருமை யிலும் அருமையாகும். இந்நூலை முழுமையாகப் படித்தால், நாம் மறந்துவிட்ட, அல்லது தொடர் புள்ள பல செய்திகள் முன்வந்தும் நிற்கும். சிறந்த மார்க்சிய அறிஞரான எம்.என்.ராயின் மற்றொரு முகத்தையும் இந்நூல் அறிமுகப்படுத்தியுள்ளது.

மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஒரு பகுதியில் அரசராக ஆட்சி புரிந்த வம்சத்தில் வந்தவர்தான் இராஜாமகேந்திர பிரதாப்சிங் என்பவராவர். இவர் மக்கள் நலம் எண்ணிப் போராடி வாழ்ந்த ஒரு பெருந்தகை; இவரை மறவாது இந்நூலில் குறிப்பிட்டு எழுதியிருப்பது சிறப்புக்கு உரியது. இவர் இந்தியப் புரட்சியாளர்கள் அடங்கிய தூதுக் குழுவின் தலைவராக இருந்து மாஸ்கோவில் லெனினைச் சந்தித்துப் பேசியவர். இதற்கு முன், ரஷியா சென்று ஜாரையும், அடுத்து அதிபராக இருந்த கெரன்ஸ்கியையும் சந்திக்க முயன்றிருக் கிறார், முடியவில்லை. மூன்றாம் முறை 1919இல் லெனினைச் சந்தித்து இந்தியச் சுதந்திரத்திற்கு ஆதரவு அளிக்கக் கேட்டுள்ளார். இவருடன் மௌலானா பர்க்கத்துல்லா மௌல்வி அப்துல்ரப், எம்.பி. திருமாலாச்சாரியா, தலிப்சிங்கில், பெர்ச்சிம் ஆகியோர் சந்தித்துள்ளனர். இவர்கள் இந்தியாவி லிருந்து காபூல் சென்று அங்கிருந்து தரைவழியாக தாஷ்கண்ட் சென்று பின்னர் மாஸ்கோ சென்று உள்ளனர்.

இராஜா மகேந்திர பிரதாப்சிங்கைக் குறித்து பல செய்திகள் உள்ளன; காலஞ்சென்ற மூத்த தோழர் கே.டி.கே. தங்கமணி இறுதி நாட்களில் பாலன் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் இறப் பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் பல செய்திகளோடு இரு முக்கியச் செய்தி களைச் சொன்னார். மகேந்திர பிரதாப் சிங் தம் சோவியத் பயணத்தைக் குறித்து பெஷா வரிலிருந்து தாஷ்கண்ட் ((From peshawar to Tashkant)) எனும் நூலை எழுதியுள்ளதாகவும், அதில் பல அரிய தகவல்கள் உள்ளன என்றார். அடுத்து அவர் மற்றொரு நூலையும் (பெயர் அவர் நினைவுக்கு வரவில்லை) எழுதியுள்ளதாகவும், அதில், அவர் லெனினைச் சந்தித்த போது, லெனின் அவரை நோக்கி “மயிலாப்பூர் சிங்கம் சிங்காரவேலர் எப்படி உள்ளார்” என்று கேட்டதையும் குறித் துள்ளாராம். ஆனால் இந்த இரு நூல்களும் இப் போது கிடைப்பதில்லை. ரஷியாவைக் குறித்து ஐயா பழ.நெடுமாறன் எழுதிய நூலில் கூடுதலாக பல அரிய தகவல்கள் உள்ளன. சோவியத் அரசு 1918-இல் “இந்தியா இந்தியர்க்கே” எனும் நூலை வெளியிட்டிருப்பதாகவும், அந்நூலில் பிரித்தானிய ஆட்சியின் கொள்ளையையும், அதனை எதிர்த்து இந்தியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து விளக்கி எழுதியுள்ளதையும் ஆசிரியர் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார் மற்றும் திலகர், காந்தியடிகள் சுரேந்திரநாத் பானர்ஜி, லஜபதிராய், விபின் சந்திரபாலர் போன்ற தலைவர்களை லெனின் அறிந்திருந்ததையும், அவர்களுள் சிலருடைய நூல் களை லெனின் படித்திருந்ததையும் லெனின் நிகழ்த்திய அக்டோபர் புரட்சியால் இந்தியத் தலைவர்களுக்கு ஏற்பட்ட மாற்றத்தையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறே, மாக்சிம் கார்க்கியைப் பற்றியும் நூலாசிரியர் அரிய செய்திகளைத் தந்துள்ளார். கார்க்கி, இந்தியாவையும், இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் நன்கு அறிந்திருந்ததையும் இந்தியாவின் விடுதலை குறித்து ஈடுபாட்டோடு எழுதியிருப் பதையும் அவர், எப்படியும் ஒரு முறை இந்தி யாவில் பயணம் செய்ய விரும்பியதையும் எடுத்துக் காட்டியுள்ளார். “வெள்ளை வல்லாதிக்கத்திற்கு இந்தியர்கள் சாவு மணியடிக்கும் காலம் நெருங்கி விட்டது” என்று கார்க்கி குறிப்பிட்டிருப்பதையும் தவறாமல் சுட்டிக்காட்டுகிறார். இதனைப் போன்றே, ஜாரின் கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் பல போராட்டங்களில் போராடிய கார்க்கியை வியந்து, காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் 1905இல் இந்தியன் ஒப்பினியன் எனும் ஆங்கில இதழில், “இந்திய விடுதலைக்குப் போராடும் தலைவர்கள் கார்க்கியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்” என்று எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இதுபோன்ற செய்திகள் இந்நூலில் எத்தனை எத்தனையோ உள்ளன. நூலைப் பக்கம்பக்கமாகப் படித்தால் தான் அவை தெரியும்.

அக்டோபர் புரட்சியின் தாக்கத்தால், இந்தி யாவுக்கும் ஏனைய ஆசிய நாடுகளுக்கும், காலனி நாடுகளுக்கும் பெரும் விழிப்பு தோன்றியது. இதனால் சோவியத் நாட்டிற்கும் மற்ற நாடு களுக்கும் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டு தொடர்பும் உறவும் மேம்பட்டன; எல்லாவற்றைக் காட்டிலும் அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடும் தலைவர் களுக்கு போராட்ட உணர்வையும், வீரத்தையும் அப்புரட்சி அளித்தது. சுருங்கக் கூறின் அப்புரட்சி உலகெங்கும் புரட்சியாளர்களைத் தோற்றுவித்தது. தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. ரஷியாவுக்குத் தப்பிச் சென்ற இந்தியப் புரட்சியாளர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்பதைப் பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் அது அறிஞர் களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. பெரும் பாலோர் அறிந்திராத அந்த அரிய செய்தியை இந் நூலில் ஆசிரியர் பதிவு செய்திருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. தப்பிச் சென்ற இந்தியப் புரட்சி யாளர்கள், சோவியத்தின் செஞ்சேனையில் சேர்ந்து எதிர்ப்புரட்சியாளர்களிடம் போரிட்டதையும், அப்போதிருந்த பாஸ்மாச்சிகள் எனுங் கொள்ளைக் கூட்டத்தை எதிர்த்து வீர சமர் புரிந்ததையும், இப்போர்களில் 27 இந்திய வீரர்கள் மாண்டதையும் ஆசிரியர் எழுதிக்காட்டியிருப்பதோடு அக்டோபர் புரட்சியின் 50ஆண்டு விழாவின் போது சோவியத் அரசு போரிட்ட வீரர்களில் அப்போது உயிர் வாழ்ந்து கொண்டிருந்த ஏஃபிக் அகமதுக்கு வீரப் பதக்கம் அளித்துச் சிறப்பித்ததையும் மறவாமல் பதிவு செய்துள்ளார். இச்செய்தி, நமக்கு வியப் பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

நூலின் இறுதியில் அக்டோபர் புரட்சியால் விழிப்பும், தெளிவும், துணிவும் கொண்ட இந்தியத் தலைவர்களையும் இந்திய இலக்கியவாதிகளையும், ஆய்வாளர்களையும் ஆசிரியர் குறிப்பிட்டுச் செல்வது நமக்குக் கூடுதலான தெளிவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அவர்கள் மீது நமக்கு அவை மதிப்பை ஏற்படுத்துவதோடு நம்மையும் அவ்வழியில் ஊக்கத் துணை செய்கிறது. திலகர், விபின் சந்திரபாலர், லஜபதிராய், பகத்சிங், காந்தியடிகள், நேரு, சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சிங்கார வேலர், வ.உ.சி., தந்தை பெரியார், திரு.வி.க, வரதராஜுலு நாயுடு, நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்பிரமணிய சிவா, இராஜாஜி, எஸ்.சீனிவாச அய்யங்கார், ப.ஜீவானந்தம் ஆகியோரை குறித்தும், தாகூர், இக்பால், நஸ்ருல் இஸ்லாம், வள்ளத் தோள், மிர்ஜா காலிப், பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் பற்றியும் அருங்குறிப்புகள் உள்ளன. இவையெல்லாம் ஆசிரியரின் உலையா முயற்சி யாலும் தணியா வேட்கையாலும் அளிக்கப்பட்டனவாகும். இவர்களைப் பற்றி பற்பல அரிய செய்திகள் இருந்தாலும், சுருக்கம் கருதி, கவிஞர் தாகூர் குறித்த இரு செய்தியை நோக்குவது சிறப் புடையது.

தாகூர் 1933ஆம் ஆண்டில் சோவியத் யூனியனைக் கண்டு வந்தவர். இரண்டாம் உலகப் போரில் செஞ்சேனைக்கும் நாசிப் படைகளுக்கும் போர் ஏற்பட்டது. அந்தப் போரின் விளைவுகளை அவர் செய்தித்தாள்களில் மிகுந்த அக்கறையோடும் அனுதாபத்தோடும் செய்திகளை நோக்கி இருப் பதையும், போரில் செஞ்சேனைக்குப் பின்னடைவு ஏற்பட்ட போது அவர் வருத்தமுற்று கலங்கியதையும், செஞ்சேனை முன்னேறும் போது பெரிதும் மகிழ்ந்த தையும், நாசிசமும் பாசிசமும் இணைந்து வளர்ந்த போது தாகூர் வருந்தி “நாகரிகத்திற்கு நெருக்கடி” எனும் கட்டுரை எழுதியிருப்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுவது முற்போக்குச் சிந்தனையாளர் களுக்கும், மானுட நேயம் கொண்டோர்க்கும் பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. சோவியத் புரட்சியைப் பற்றி தாகூர் பிரகடனம் செய்திருப் பதையும் ஆசிரியர் மறவாமல் பதிவு செய்துள்ளார்.

“ரஷ்ய புரட்சியைப் பற்றி இந்தியா மிக குறைவாகவே தெரிந்துகொண்ட போதிலும், அந்தப் புரட்சி புதிய யுகத்தின் உதய காலத்தைத் தோற்றுவிக்கும் விடிவெள்ளி போல விளங்கும்” என்று தாகூர் கூறியுள்ளார். இந்திய சோவியத்தின் நட்புறவையும், இரு நாடுகளுக்குமிடையே நிலவிய தொடர்பையும், அனைத்து செய்திகளையும் சிந்தாமல் சிதறாமல் அளிக்கும் இந்நூலும், ஒரு விடிவெள்ளிதான்; அந்த விடிவெள்ளியைக் காண வேண்டிய பொறுப்பு நம் அனைவர்க்கும் உள்ளது.

*     உருவத்தில் கனமாகக் காட்சியளிக்கும் இந் நூல் உள்ளடக்கத்தில் அதனைக் காட்டிலும் கனமான நூலாக உள்ளது.

*     இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் உள்ள தொன் மையான தொடர்புகளையும், சோவியத் ஆட்சிக்குப் பின்னர் உருவாகிய நட்பையும் உறவையும் ஒன்றுவிடாது பதிவு செய்துள்ள ஆவணமாக இந்நூல் விளங்குகிறது.

*     அரசியல், வரலாறு, பண்பாடு, இலக்கியம் குறித்த அரிய செய்திக் களஞ்சியமாக இந்நூல் உள்ளது.

*     தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் ஆகி யோரின் கிடைத்தற்கரிய அரிய படங்கள் நூலுக்குக் கூடுதலான மதிப்பை அளிக்கின்றன.

*     அரசியல் வரலாறு தொடர்பான செய்திகளுக்கு நூல்களை மட்டுமல்லாமல், மாத இதழ், வாரஇதழ், நாளிதழ் ஆகியவற்றின் அரிய செய்திகளைக் கொண்டு விளக்கியிருப்பது ஆசிரியரின் கடும் உழைப்பைக் காட்டுகிறது.

*     தொடர்ந்து நேரம் கிடைக்காததால், தம் பணிச்சுமைகளுக்கிடையே விட்டுவிட்டு எழுதி யதால், இந்நூல் முழுமை பெற 30 ஆண்டுகள் ஆகியுள்ளன. அத்தனை ஆண்டுகள் ஆகி யுள்ளதால் அவற்றிற்கேற்ப இந்நூல் ஓர் அறிவுக் கலைக்களஞ்சியமாக உருப்பெற்று உள்ளது.

*     அலுப்பும் சலிப்பும் இல்லாமல், நெருடலும் சிக்கலும் தோன்றாமல் ஆசிரியரின் மொழி நடை எளிமையும், தெளிவும் கொண்டு படிப் போரை மேலும் ஊக்குவிக்கின்றன.

*     இந்திய - ரஷிய அனைத்துத் தொடர்பு களையும் அறிந்துகொள்ள வேண்டியவர் களுக்கு இந்நூல் ஓர் ஆயத்த கணிப்பானாக (Ready reckoner)) உள்ளது.

*     சோவியத் நாட்டை நன்கு படித்துணர்ந்து அங்கு சுற்றுப்பயணம் செய்தோரும் கூட, மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய பற்பல செய்திகள் இந்நூலில் உள்ளன.

*     மொத்தத்தில் இந்நூல், “தொகச் சொல்லி தூவாத நீக்கி, நன்றி பயக்கும்” நூலாக உள்ளது.

*     தோழர் இரா.நல்லகண்ணுவின் அணிந்துரை நூலை நன்குணர திசைகாட்டியாக உள்ளது.

*     இந்நூலைப் படிக்கும் போதும், படித்து முடித்தபோதும் “அந்தமொன்றிலா ஆனந்தம் கொண்டேன்” என்று மாணிக்கவாசகரின் அனுபவ நிலையையே நாமும் பெறுகிறோம்.

இந்நன்னூலை மிகச் சிறந்த முறையில் வண்ண அழகோடு அழகிய பேழையாக வெளியிட்டு இருக்கும் என்.சி.பி.எச். நிறுவனத்திற்கு நம் பாராட்டுகள்; வாழ்த்துகள் உரியனவாகுக!

காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய - ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும்)

ஆசிரியர்: பழ.நெடுமாறன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 09

விலை – 800/-

Pin It