லால்சந்த் ஹீராசந்த் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே! வடநாட்டுப் பெரும் முதலாளிகளில் ஒருவர். இவர் இந்திய தூதுக்குழுவில் ஒருவராக ரஷ்யா சென்று வந்தவர்; இவர் சொல்கிறார்:-

kuthoosi gurusamy 300விவசாயத்துக்குப் பயன்படக்கூடிய “ட்ராக்டர்”களை மூன்று நிமிஷத்துக்கு ஒன்று வீதம் ரஷ்யர்கள் தயாரிக்கிறார்களாம்! இவைகளைப் போர்க்காலத்தில் வெகு சுளுவாக “டாங்கி” களாகத் திருத்தியமைத்து விடலாமாம்!

தினசரி ரஷ்யாவின் முன்னேற்றத்தைப் பற்றி ஏதாவதொரு செய்தி வந்து கொண்டேயிருக்கிறது.

ரஷ்யர்களின் மன உறுதியையும் இமாலய சாதனைகளையும் கண்டு திகைத்துப் போய் விட்டதாக காந்தி சீடர் ஜே. சி. குமரப்பா சென்னைக் கூட்டமொன்றில் பேசியிருக்கிறார்!

ஹீராசந்த் பெரும் பணக்காரர்! குமரப்பா சாதாரணர்! இரண்டு பேரும் ரஷ்யாவைப் பற்றிப் புகழ்கிறார்கள்!

நகைச்சுவை அரசரான என். எஸ். கிருஷ்ணனும் ராஷ்யா சென்று வந்தது முதல், சிதம்பரத்தை நினைத்துப் புலம்பிய நந்தனாரைப் போலப் புலம்பிக் கொண்டேயிருக்கிறார்! நந்தனார் நடராஜனை நினைத்துப் புலம்பினார்! கிந்தனார் ஸ்டாலினை நினைத்துப் புலம்புகிறார்!

இவர்கள் போகட்டும்! நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் சீனா சென்று வந்தாரே! இவராவது சும்மாயிருந்து தொலையக்கூடாதா? ரஷ்யக் கொள்கையைக் கொண்ட சீன ஆட்சியை வானளாவப் புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்! இரண்டே ஆண்டுக்குள் சீனமக்கள் அபாரமாக முன்னேறி விட்டார்களாம்! அடிமையில் மூழ்கிக் கிடந்த சீனப் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் நிற்கிறார்களாம்! இளைஞர் உலகம் உற்பத்தித் துறையில் எதிர்பாராத சாதனைகளைச் செய்து வருகிறதாம்!

இந்த மாதிரி, பலவகையான மக்களும் ரஷ்யாவைப் பற்றியும் சீனாவைப் பற்றியும் புகழ்ந்து கொண்டேயிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை! நம் தேச பக்திக்கு இது அழகல்லவே, அம்பலவாணா!

பாரதமாதா மட்டும் எதிலே குறைச்சல் என்று கேட்கிறேன்!

ரஷ்யாவில் மூன்று நிமிஷயத்துக்கு ஒரு ட்ராக்டர் உற்பத்தி செய்தால், நாம் மூன்று நிமிஷத்துக்கு ஒரு கடவுளை உற்பத்தி செய்து கொண்டு தானே இருக்கிறோம்?

ஒரே தடவையில் 30-40 பயல்களுக்குப் பூணூல் மாட்டி (உபநயனம்)க் கொண்டுதானே இருக்கிறோம்? (திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சி!)

நாம் என்ன, சோம்பேறிகளா, என்று தலையணயைக் குத்தி (மேஜையைக் குத்தினால் கை நோகுமாதலால்!)க் கேட்கிறேன்! இங்கு:-

அமிர்தானந்தயோகி “தட்சணாமூர்த்தி ஸ்தோத்ரம்” பற்றிப் பேச வில்லையா?

உடையாளூர் அப்புசாஸ்திரிகள் “சுந்தர காண்டம்” பற்றிப் பேச வில்லையா?

ஆர். சக்ரபாணி அய்யங்கார் “பகவத்கீதை” பற்றி சொற்பொழிவாற்ற வில்லையா?

மயிலை காஞ்சனமாலை அம்மையார் “தில்லை வாழ் அந்தணர் புராணம்” பற்றிப் பேசவில்லையா?

வீட்டிலே ஒருவர் மாண்டு போனால் நம் பெண் திலகங்கள் அழகாக ஒப்பாரி வைத்து அழவில்லையா?

ஒரு சாண் பொம்மையை மூவாயிரம் டன் தேர் மீது வைத்துப் பத்தாயிரம் பேர் இழுக்கவில்லையா?

அதிகக் கூலி கேட்கும் உழவனையும் தொழிலாளியையும் மண்டை நொறுங்க அடிக்கவில்லையா?

தர்ப்பைப் புல்லைக் காட்டிக் கேட்டால், பசுமாடு முதல் பச்சரிசி வரையில் எதை வேண்டுமானாலும் கொடுக்கவில்லையா?

கடவுளுக்கு மயிர் கொடுப்பதற்காகக் குடும்ப சகிதமாக ரெயிலேறிச் சென்று வரவில்லையா?

“கடவுளே! தயவு செய்து மேகத்தினிடம் கூறி ஒரே ஒரு நாளைக்காவது மழை பெய்யச் சொல்லமாட்டாயா?” என்று ரிமைண்டர் பெட்டிஷன் போடவில்லையா?

ஒரு சிறு பாலம் கட்டுவதற்குப் பல லட்சத்தைப் பாழக்கி, 3-4 வருஷம் கட்டவில்லையா?

ஒரு குண்டூசி கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாவிட்டாலும் ஆண்டு தோறும் ஆயுத பூஜை செய்து வரவில்லையா?

100க்கு 80 பேர் தற்குறிகளாயிருந்தாலும் சரஸ்வதி பூஜை செய்து வரவில்லையா?

ரஷ்யாவிலோ, சீனாவிலோ, அமெரிக்காவிலோ, உள்ள ஒரு சர்வ அடி முட்டாள் கூட, நம்ப முடியாத ஒரு கதையை நம்பிக் கொண்டு, தீபாவளிப் பண்டிகை கொண்டாடவில்லையா?

வெளிநாட்டார்கள் காரித் துப்பக்கூடிய ஒரு உருவத்தைக் கொண்டு விநாயக சதுர்த்தி கொண்டாட வில்லையா?

ஹிட்லரைவிட - முசோலினியைவிட -100 மடங்கு அதிகமான அயோக்கியனும் கொலைகாரனுமாகிய ஒருவனைப் புகழ்ந்து பாராட்டி, ஸ்ரீராமநவமி கொண்டாடவில்லையா?

குறுக்கு வழியில் பணந்திரட்டலாமென்று கருதி குறுக்கு வார்த்தைப் போட்டிகளில் பணத்தைப் பாழாக்கி விட்டு, “அய்யோ! என்னை முட்டாளாக்கினானே!” - என்று தலையிலடித்துக் கொள்ளவில்லையா?

கோடி கோடியாக விலை மதிப்புள்ள நகைகளைக் கோவில் பொம்மைகள் மீது மாட்டிவிட்டு, “அந்தோ! நம்நாடு ஏழை நாடாச்சே! பணமில்லையே!” என்று மந்திரிகள் முகாரி பாடிக் கொண்டிருக்கவில்லையா?

நிலத்துக் கடியிலுள்ள பெருஞ்செல்வங்களைத் தோண்டியெடுக்க வகையறியாது அமெரிக்காவையும், ஜப்பானையும், இங்கிலாந்தையும் அழைத்து ஒப்படைத்து விட்டுப் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கவில்லையா?

இவைபோலப் பல சாதனைகளை நாமும் செய்து கொண்டு தானிருக்கிறோம்!

நம்மைப் நாமே புகழ்ந்து மாலை போட்டுக் கொண்டு கை தட்டிக் கொள்வதைவிட்டு, மற்றவரைப் புகழ்வது எனக்கென்னமோ பிடிக்கவில்லை!

மற்றவர் நல்லவர்; கெட்டிக்காரர் - என்று கூறலாமா? “நான்தான் அசகாயசூரன்; என்னைவிட அறிவாளி கிடையாது” என்றல்லவா கூற வேண்டும்? அதுதானே அறிஞர்களுக்கழகு? பாரத மாதாவே! உன் புதல்வர்களைப் பார்த்தாயா? மாற்றானைப் புகழ்கிறார்கள்! வடிகட்டின தேசத் துரோகிகள்!

பாரத் மாதா-கீ-கீ-கீ-ஜே!

- குத்தூசி குருசாமி (21-06-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It