நாம் சமய நம்பிக்கை உடையவராக இருந் தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தமிழ்மொழிக்கும் சமயங்களுக்கும் இடையிலான உறவைப் புறக் கணித்துவிட முடியாது. பக்தியுணர்வு என்ற எல்லையைத் தாண்டி அவற்றின் பங்களிப்பு தமிழ் மொழியில் உள்ளது.

narendran 259இலக்கிய இலக்கணங்களாகவோ, தத்துவங்களாகவோ எழுதப்பட்டிருப்பினும் அவை இப் பயன்பாட்டு எல்லையைத் தாண்டி தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கான அரிய தரவுகளைத் தம்முள் கொண்டுள்ளன. சமூகவியல் செய்திகளும்கூட இவற்றில் அடங்கியுள்ளன.

இவ்வகையில் தமிழ்க் கிறித்தவத்தின் பங் களிப்பும் உண்டு. ஐரோப்பியர்களால் பரப்பப் பட்ட சமயம் என்று ஒதுக்கிவிட முடியாது. பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறித்தவமும் இங்கு அறிமுகமாயின.

தம் சமயம் பரப்பல் பணியின் ஓர் அங்கமாக இவர்கள் தமிழ்மொழியைப் பயின்றனர். கூட்டு வழிபாட்டைக் ((Congregational prayer) கொண்ட சமயம் என்பதால், கிறித்தவர்கள் தம் சமயம் சார்ந்த சில வழிபாட்டு மந்திரங்களை (மன்றாட்டுகளை) அவசியம் தெரிந்திருக்க வேண்டும். கிறித்தவத்தின் புனித நூலான விவிலியத்தை வாசிப்பதும் அவசிய மான சமயக் கடமையாக இருந்தது. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரே பெருமளவில் கிறித்தவத்தைத் தழுவியிருந்தனர். அவர்களுக்கு எழுத்தறிவு கற்றுக்கொடுக்க வேண்டிய கடமை கிறித்தவ மறைப் பணியாளர்களுக்கிருந்தது.

இக்கடமையை நிறைவேற்றும் வழிமுறையாக, புதிய கிறித்தவர்கள் பயில பள்ளிக்கூடங்களை நிறுவினர். நூல்களை அச்சடிக்க அச்சுக்கூடங் களை நிறுவினர். தமிழைப் பயின்று நூல்களையும், குறுநூல்களையும், துண்டு வெளியீடுகளையும் அச்சிட்டு வெளியிட்டனர். விவிலியம், இறையியல் பக்தி என்பனவே அச்சிடப்பட்ட நூல்களின் உள்ளடக்கமாக அமைந்தன. தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், அகராதி உருவாக்கல், இலக்கணம், இலக்கியம் படைத்தல் என்பன இவற்றின் தொடர்ச்சியாய் அமைந்தன. பதினாறாவது நூற்றாண்டிலேயே போர்ச்சுக்கீஸ் தமிழ் அகராதி உருவானது.

பள்ளிக்கூடங்கள் நிறுவி கற்பிக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டனர். ‘எண்’, ‘எழுத்து’ என்ற எல்லையைத் தாண்டி நிலவியல், அறிவியல் போன்ற நவீன அறிவுத்துறைகளைக் கற்பிக்கலா யினர். கற்கும் மாணவர்களுக்காக இவ்அறிவுத் துறை சார்ந்த பாடநூல்களைத் தமிழில் எழுதி அச்சிட்டனர். ஐரோப்பாவின் ‘புத்தொளிக்காலம்’ ((Age of Enlightenment) உருவாக்கிய புதிய அறிவு கிறித்த வத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் அறிமுகமானது.

‘கிறித்தவமும் தமிழும்’ என்ற நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி, ‘விஞ்ஞான நூல் வரலாறு’ என்ற தலைப்பிலான இயலில் இப்பணிகள் குறித்து, பின்வரும் மதிப்பீட்டைச் செய்துள்ளார்.

“ஐரோப்பியரின் தொடர்பினால் தமிழ் மொழியில் உரைநடை நூல்களும் அச்சுப் புத்தகங் களும் ஏற்பட்டது போலவே மற்றொரு வகை நூலும் உண்டாகியிருக்கிறது. அதுதான் விஞ்ஞான நூல். நாம் விஞ்ஞான நூல் என்று சொல்வது பூகோள நூல், வானநூல், பிராணி நூல், nக்ஷத்திரக் கணிதம், தேச சரித்திரம், உடல் நூல் முதலியவை களையே. ஐரோப்பியர் வருவதற்கு முன்னே இந்த விஞ்ஞான நூல்கள் (வானநூலைத் தவிர) தமிழ் மொழியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் இருந்தனவில்லை.

பாதிரிமார்கள் பாடசாலைகளை அமைத்து நமது நாட்டுச் சிறுவர் சிறுமிகளுக்கு ஐரோப்பிய வழக்கத்தைப் பின்பற்றிப் பாடங்களைப் போதிக்க முற்பட்ட பொழுது, எழுதுதல், படித்தல், கணக்குப் போடுதல் என்னும் மூன்றுடன் மட்டும் நில்லாமல் பூகோள நூல், வானநூல், இயற்கைப் பொருள் நூல், nக்ஷத்திரக் கணிதம், தேச சரித்திரம் முதலிய விஞ்ஞான நூல்களையும் கற்பிக்கத் தொடங் கினார்கள். பாடசாலைகளில் இத்தகைய விஞ்ஞான நூல்களைப் போதிக்கத் தொடங்கியபடியால் தமிழில் இந்நூல்கள் எழுதப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.”

இவ்வாறு அறிவியலைத் தமிழில் அறிமுகப் படுத்திய கிறித்தவர்கள் குறித்த செய்திகளை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் டாக்டர் சு.நரேந்திரன் இந்நூலை எழுதி யுள்ளார். நூலின் முன்னுரையில் தமிழ்ப்பணி குறித்த நூல்களில் அறிவியல் வளர்த்த கிறித்தவர் கள் பற்றிய தகவல்கள் மிகமிகக் குறைவாக இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மை தான். இக்குறையைப் போக்கும் வகையில் பல செய்திகளைத் தொகுத்து இந்நூலை எழுதி யுள்ளார்.

தமிழ்நாட்டில் நவீனக்கல்வி முறையை அறிமுகப் படுத்தியதுடன் அதை ஜனநாயகப்படுத்தி அடிமைத் தள மக்களிடம் கொண்டு சென்றதில் சீர்திருத்தக் கிறித்தவத்திற்குப் பெரும் பங்குண்டு. அதே நேரத்தில் அது காலனிய ஆதிக்கத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தது. இதையும் கணக்கில் எடுத்துக்கொள்வது தொடர்பாக த.வி.வெங்கடேஸ் வரன் கருத்தை, ஆசிரியர் மேற்கோளாகக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

கிறித்தவ சமயமானது இன்று பல உட்பிரிவு களைக் கொண்ட சமயமாகக் காட்சியளிக்கிறது. இவற்றுள், ரோமன் கத்தோலிக்கம், சீர்திருத்தக் கிறித்தவம் (பிராட்டஸ்டண்ட்) என்ற இரண்டும் பழமையானவை. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் முதலில் அறிமுகமான கிறித்தவ சமயப் பிரிவு ரோமன் கத்தோலிக்கம்தான். சனவெகுத் தன்மை கொண்டதாக இது ஆரம்பகாலத்தில் ஐரோப்பாவில் விளங்கியது. உலகம் உருண்டை யானது. அது தன்னைத்தானே சுற்றி வருகிறது என்ற உண்மையைக் கண்டறிந்த கலீலியோவை சிறையில் அடைத்தும், புருனோ என்ற விஞ்ஞானியை உயிருடன் கொளுத்தியும் அறிவியல் உண்மை களுக்கு எதிராகச் செயல்பட்டது.

16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களின் துணையுடன் தமிழ்நாட்டில் அறிமுகமான கத்தோலிக்கம், பண்பாடு ஏற்றலை மேற்கொண்டு சடங்காசாரங்களைக் கொண்ட சமயமாக விளங்க லாயிற்று. ஐரோப்பாவின் புத்தொளிக் காலச் சிந்தனைகளை உள்வாங்கிய சமயமாக அறிமுக மான சீர்திருத்தக் கிறித்தவம், தமிழ்நாட்டில் சமயத்தையும் கல்வியையும் இணைத்துச் செயல் படத் தொடங்கியது. விவிலிய வாசிப்புக்கு முக்கியத் துவம் கொடுத்தமையால், எழுத்தறிவை புதிய கிறித்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடப்பாடு அதற்கிருந்தது. இதன் அடிப்படையில் நவீனக் கல்வி கற்பிக்கும் கல்விக் கூடங்களை நிறுவியது. இவ்வுண்மையை “ஒரு கையில் விவிலியத்தையும் மறுகையில் அறிவியலையும் ஆரம்ப காலங்களி லேயே எடுத்துக்கொண்டவர்கள்” என்கிறார் இந்நூலாசிரியர்.

காலரா நோய் குறித்து 1818ஆம் ஆண்டில் ரேனியஸ் அய்யர் எழுதி வெளியிட்ட துண்டறிக்கை மேலை அறிவியலை அறிமுகப்படுத்தும் தொடக்க கால முயற்சியின் வெளிப்பாடு என்பது நூலாசிரி யரின் கருத்தாகும்.

பாரம்பரியமான இலக்கியச் செல்வங்களைக் கொண்ட நாடு தமிழ்நாடு. கூலவாணிகர், கொல்லர், கணக்கர், பொன்வணிகர், மன்னர் எனப் பல்வேறு வாழ்க்கைப் படிநிலைகளில் உள்ளோர் பாடிய கவிதைகளின் தொகுப்பாக சங்க இலக்கியம் விளங்குகின்றன. கல்வி பரவலாக்கப்பட்டிருந்ததன் வெளிப்பாடாக இதைக் கொள்ளலாம். ஆனால் இடைக்காலத்தில் கல்வி குறிப்பிட்ட சில வகுப் பாரின் உரிமையாய்ப் போனது; மடங்களுக்குள்ளும், கோவில்களுக்குள்ளும் முடங்கிப் போனது.

இத்தகைய சமூகச் சூழலில் கிறித்தவம் கல்வியை அனைவருக்கும் வழங்கி ஜனநாயகப் படுத்தியது. இது குறித்து “பனை மரம் ஏறியவர் பனை ஓலை படிக்க ஆரம்பித்தனர். வேதம் சொல்லிக் கொடுத்த திண்ணைப் பள்ளியானது அறிவியலைப் போதித்தது” என்கிறார் நூலாசிரியர்.

அதே நேரத்தில் தமிழர்களுக்கு அறிவியல் பாரம்பரியம் இல்லை என்ற முடிவுக்கு ஆசிரியர் வரவில்லை. அறிவியல் தமிழ் அறிஞர் இராம. சுந்தரத்தின் கருத்தை மேற்கோளாகக் காட்டி, நம் பாரம்பரிய அறிவியல் தொடர்பான உண்மை களை நினைவூட்டுகிறார். மெக்காலே கல்வி முறை குறித்த ஆசிரியர் கருத்து விவாதத்திற்குரியது. அதன் எதிர்மறைக் கூறுகளை ஆசிரியர் கணக்கி லெடுத்துக்கொள்ளவில்லை என்று கருத இட முள்ளது.

‘நூல் உள்ளே நுழையுமுன்’ என்ற தலைப் பிலான நூலாசிரியரின் முன்னுரையும், ‘அறிவியல் புத்துயிர் பெற்றது’, ‘17, 18 ஆம் நூற்றாண்டின் தமிழகக் கல்வி நிலை’, ‘மேலை நாட்டு கிறித்தவர் வருகையும் தமிழருக்கான வரவுகளும்’ என்ற தலைப்புகளில் அமைந்துள்ள முதல் மூன்று இயல் களும் வரலாற்றுப் பின்புலத்தில், சமூகவியல் அணுகு முறையில் எழுதப்பட்ட ஆய்வுரையாக அமைந்து உள்ளன. அத்துடன் இந்நூலின் தேவையையும் உணர்த்தி நிற்கின்றன.

இதனையடுத்து அறிவியலின் பல்வேறு பிரிவு களான மருத்துவம், வானியல், தாவரவியல், கணித வியல், நூலகவியல், மனையியல், இதழியல் ஆகியன வற்றைத் தமிழ்மொழியில் அறிமுகப்படுத்திய கிறித்த வர்கள் குறித்தும், அவர்களது பணி குறித்தும் குறிப் பிடும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவர் களில் ஐரோப்பாவில் இருந்துவந்த சமயப் பணி யாளர்கள், அரசு அலுவலர்கள் வேறு பணிகளில் இருந்தோர் எனப் பலதரத்தினர் உள்ளனர். இலங் கையில் பணியாற்றிய மறை போதகர்களையும், இலங்கைத் தமிழ்க் கிறித்தவ அறிஞர்களையும் இணைத்துள்ளார்.

16ஆம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் மேற்கொள்ளப் பட்ட பணிகளை இந்நூலில் ஆசிரியர் தொகுத் தளித்துள்ளமை பாராட்டுதலுக்குரியது. சீகன் பால்கு, ரேனியஸ் அய்யர், கால்டுவெல் எனப் பரவலாக அறிமுகமானவர்களை மட்டுமின்றி, ஆய்வாளர்கள் மட்டுமே அறிந்திருந்த சில ஆளுமை களையும் இந்நூல் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. வாசகனை வியப்படையச் செய்யும் பல அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சான்றாக, சில செய்திகள் வருமாறு:

* கிரண்ட்லர் என்ற ஜெர்மானிய மதபோதகர் தமிழக மருந்து மூலிகைகள், அவற்றின் மருத்துவப் பயன்பாடு குறித்து 1711ஆம் ஆண்டில் ‘மலபார் மருந்துகள்’ என்ற தலைப்பில் ஜெர்மானிய மொழியில் குறிப்புகள் எழுதியுள்ளார். இதன் தாக்கத்தில் 1712ஆம் ஆண்டில் கோப்பன் ஹோமில் தமிழ் மருத்துவம் கற்பிக்கப்பட்டது.

* 1832இல் ‘பூமி சாஸ்திரம்’ என்ற நூலை ரேனியஸ் அய்யர் வெளியிட்டார். இதுதான் முதல் தமிழ் அறிவியல் நூலாகும்.

* இலங்கையில் பணியாற்றி டாக்டர் சாமிவேல் ஃபிஷ்கிறீன் என்ற அமெரிக்க மதபோதகர் மருத்துவக் கல்வியைத் தமிழில் கற்பித்து உள்ளார். மொழிபெயர்ப்பாகவும் சுயமாகவும் மருத்துவ நூல்களை 19ஆம் நூற்றாண்டில் வெளியிட்டுள்ளார்.

* கிறித்தவராதல் என்பது தேசியத்தை இழப்ப தல்ல என்பது டாக்டர் கிறீனின் கருத்தாக இருந்தது. அவரது மருத்துவ மாணவர்கள் ‘அக்காலத்தைய வேட்டி, சால்வை, தலைப் பாகையுடன்’ பழைய புகைப்படங்களில் காட்சி தருவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

* ஆங்கில நூல்களுக்கு ஈடாக படங்களுடன் அவர் வெளியிட்ட நூல்களின் பக்க எண்ணிக்கை 4500 பக்கங்கள் ஆகும். மருந்தியல், பெண்கள், குழந்தைகள் வைத்தியம், உடற்கூறு இயல், அறுவை சிகிச்சை, வேதியியல் என பத்தொன் பதாம் நூற்றாண்டிலேயே மொழிபெயர்ப் பாகவும், சுயமாகவும் மருத்துவ நூல்களை எழுதி வெளியிட்டதுடன் ‘கண், காது, கை, வாய், உடல்’ ஆகியன குறித்துப் பல அரிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

* மூன்றாண்டுப் பாடத்திட்டத்தில் முப்பத்து மூன்று மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை தமிழ்மொழி வாயிலாகக் கற்பித்த கிறீன், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பணியாற்ற அவர்களை அனுப்பியுள்ளார். இச் செய்திகளுடன் தன் கருத்தாக, “இன்றைக்குக் கூட நாம் செய்ய முடியாத செயலைத் தனி மனிதனாக ஓர் அமெரிக்கர் செய்து காட்டியது நம்மை வியக்க வைப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பல்கலைக்கழகம் முதல் மருத்துவப் பல்கலைக் கழகங்கள் வரை தமிழகத்தில் இருந்தும், இது இன்றுவரை நடைபெறாதது தமிழர்களாகிய நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கும் செயல் ஆகும்” என்று வருந்துகிறார். 1908ஆம் ஆண்டில் ‘மானுட மர்ம சாஸ்திரம்’ என்ற தலைப்பில் பாலியல் மற்றும் மகளிர் மருத்து வத்தைக் கற்பிக்கும் நூல் பர்மாவில் (மியான்மர்) அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. இதன் ஆசிரியர் சாமுவேல் என்பவர் மருத்துவ மனைத் தலைவராக ரங்கூனில் இருந்துள்ளார்.

கிறித்தவர் நடத்திய அறிவியல் இதழ்கள், பதிப்பகங்கள் தொடர்பான செய்திகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. ஜெர்மானியர்களான சீகன் பால்கும், கிரண்ட்லரும், இத்தாலியரான வீரமா முனிவரும் தமிழ் மூலிகை மருத்துவத்தில் காட்டிய ஈடுபாடு குறித்து ஆசிரியர் கூறும் செய்திகள் நம்மை வியக்க வைக்கின்றன.

பல அரிய செய்திகள் கருவூலமாக அமைந் துள்ள இந்நூலின் ஆசிரியர் கிறித்தவர் அல்லர். கிறித்தவ அமைப்பு எதனிடமும் நிதி நல்கை பெறாது இந்நூலை எழுதியுள்ளார். தமிழ் மொழியின் மீது அவர் கொண்டுள்ள உண்மையான பற்றே இந் நூலை எழுதும்படி தூண்டியுள்ளது. மருத்துவ நூல்களையும் வெகுஜன வாசிப்பிற்கான மருத்துவ மற்றும் உடல்நல நூல்களையும் தொடர்ந்து எழுதி வருபவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிகமாகக் கண்டுகொள்ளப்படாத ஒரு பகுதியை இந்நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஆர்வமும் உழைப்பும் பாராட்டுதலுக்குரியன என்பதோடு வழிகாட்டியாகவும் அமையும் தன்மையன.

கிறித்தவமும் அறிவியலும்

ஆசிரியர்: டாக்டர் சு.நரேந்திரன்

வெளியீடு: கொற்றவை

4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்)

தியாகராய நகர்,

சென்னை - 600 017

விலை- 170/-

Pin It