கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகிய பாண்டியபுரம் ஊரில் வாழ்ந்து வந்த முதலியார் குடும்பம் பாதுகாத்து வைத்திருந்த 600 ஓலைச் சுவடிகளைத் திருவிதாங்கூர் அரசு கவிமணியின் உதவியுடன் விலை கொடுத்து வாங்கி ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வந்தது. ஆனால் அவற்றைப் பதிப்பிக்கும் முயற்சியை எடுக்கவில்லை. இந்த ஆவணங்கள் அனைத்தும் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் காணப்படுகின்றன.
அ.கா. பெருமாள் இந்த ஆவணங்களில் 89 ஆவணங்களை ‘முதலியார் ஆவணங்கள்’ என்றும், 66 ஆவணங்களை ‘முதலியார் ஓலைகள்’ என்றும் இரண்டு நூற்களைப் பதிப்பித்துள்ளார்.
நாஞ்சில் நாடு நிர்வாக வசதிக்காக 12 பிடாகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இச்செய்தி கி.பி 13 ம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றது. நாஞ்சில் நாட்டு பிடாகைகளின் நிர்வாகத் தலைமை இடமாக அழகியபாண்டியபுரம் இருந்தது. இங்கு வாழ்ந்த சைவ வேளாள மரபைச் சார்ந்தவர்கள், நாஞ்சில் நாட்டு நிர்வாகத்தில் முக்கிய இடம் வகித்து வந்ததால் திருவிதாங்கூர் அரசு அவர்களுக்கு ‘முதலியார்கள்’ என்ற பட்டத்தினைக் கொடுத்தது.
முதலியார்களின் மூதாதையர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து குடிபெயர்ந்து களக்காடு வந்ததாகவும், அங்கு ஆட்சி புரிந்த பாண்டிய குறுநில மன்னர்களிடம் பணியாற்றியதாகவும் பின்னர் அங்கிருந்து குடிபெயர்ந்து கருங்குளம் ஊர் வழியாக அழகியபாண்டியபுரத்திற்கு வந்ததாகவும் செய்திகள் கிடைக்கின்றன.
முதலியார்கள் மக்கள் வழி மரபினர்; ஆனால் இவர்கள் மருமக்கள் வழிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். மருமக்கள் தாய அரச பரம்பரையுடைய வேணாட்டு மன்னர்களுக்கும், திருவிதாங்கூர் மன்னர்களுக்கும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்துள்ளனர். ஏறத்தாழ 500 ஆண்டுகளாக நாஞ்சில் நாட்டில் பெருமையுடன் வாழ்ந்த முதலியார்களின் அதிகாரம் 1818 இல் திருவிதாங்கூரின் கிழக்கிந்திய கம்பெனி பிரதிநிதியாக இருந்த ‘கர்னல் மன்றோ’ என்பவரால் ஒடுக்கப்பட்டது. முதலியார் ஓலைகள் கூறும் செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.
ஒரு வயலை அல்லது நிலத்தை விலை பேசும் போது 4 முதல் 8 பேர் கூடி விலையை நிர்ணயித்துக் கொள்வதையும், அந்த நிலத்தின் புதிய பத்திரத்தை பழைய பத்திரத்துடன் இணைத்து வைக்கும் மரபினையும் 1601 ஆம் ஆண்டு ஆவணம் கூறுகிறது. ஒருவர் ஒரு வீட்டில் பல ஆண்டுகள் தொடர்ந்து வாடகைக்கு வசித்து வரும் போது அவரை மாற்றக் கூடாது என 1349 ஆம் ஆண்டு ஆவணம் கூறுகிறது.
1445 ஆம் ஆண்டு ஆவணம் ஒன்று, நெல்லை கடனாகப் பெறும் வழக்கத்தை எடுத்துக் கூறுகின்றது. அதன்படி நெல்விலை அன்றைக்கு என்ன விலையில் இருந்ததோ அதனைக் கணக்கிட்டுக் கொடுத்தனர். ஒருவர் 10 கோட்டை நெல் கடன் வாங்கினால், ஒரு கோட்டை நெல்லுக்கு 5 பணம் வீதம் 10 கோட்டைக்கு 50 பணம் கடன் என பத்திரங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு இரண்டரை விழுக்காடு வட்டி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. 1446 ஆம் ஆண்டு ஆவணம் நெல் கடனாகப் பெற்றவர் அதற்குரிய கடனைக் கொடுக்க முடியாத நிலையில், கடன் வாங்கியவர் தன் சொந்த நிலத்தை கடன் கொடுத்தவருக்கு எழுதி வைத்துள்ள செய்தியைக் கூறுகின்றது.
நாயக்கர் படையெடுப்புகளினால் நிலமானது விவசாயம் செய்ய இயலாமல் தரிசாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படைகள் செய்த சீரழிவினால் மக்கள் பயிர் செய்ய விருப்பமில்லாமல் இருந்தனர். இந்த விரக்தியில் அரசுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று தீர்மானம் செய்ததை 1719 ஆம் ஆண்டு ஆவணம் குறிப்பிடுகிறது.
குளங்களையும் நீராதாரங்களையும் பேணுவதற்குக் கோவில் நிலங்களில் மேல்வாரத்தைப் பயன்படுத்துவதற்கு குத்தகையாளர்கள் முடிவு செய்ததை 1730 ஆம் ஆண்டு ஆவணம் கூறுகிறது.
கோவில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமில்லாத நிலங்களில் விளைந்த நெல்லின் விலையை நிர்ணயிப்பதில் பிரச்சனை இருந்துள்ளன. இதனால் நாஞ்சில் நாட்டின் நெல் விலை அதிகமாக இருந்துள்ளது. ஒரு கோட்டை நெல் விலை 5 பணமாகவும், ஒரு ஏக்கர் நிலம் தோராயமாக (உத்தேசமாக) 17 பணமாகவும் இருந்துள்ளதை 17 ஆம் நூற்றாண்டு ஆவணம் குறிப்பிடுகிறது. 1634, 1739 ஆம் ஆண்டு ஆவணங்களில் நெல் அளப்பது குறித்த தகராறில் அரசர் தலையிட்டது பற்றிய செய்திகள் உள்ளன.
1694 ஆம் ஆண்டு ஆவணம், ஒரு குறிப்பிட்ட நிலத்தை அல்லது கோவில் நிலத்தை பரம்பரையாக அனுபவிப்பவர்கள் அந்நிலத்தை தங்களுக்குச் சொந்தமானது என்று அதிகாரிகளிடம் வேண்டிக் கொண்டதைக் குறிப்பிடுகிறது. இதில் 16 பேர் சேர்ந்து அரசரை சந்திக்கச் சென்றதாகவும், அதற்குரிய செலவை 16 பங்கு வைத்தபோது ஒன்றரைப் பங்கு ஒரு பெண்ணுக்கு உரியது என்ற குறிப்பும் வருகிறது. இதன் மூலம் பெண்ணுக்கு சொத்துரிமை இருந்துள்ளதை அறிய முடிகிறது. 1521 ஆம் ஆண்டு ஆவணம் அம்மச்சி என்ற பெண் உழவுத்தொழில் செய்வதற்கு கடன் வாங்கியதையும் அதற்குரிய வட்டிக் கொடுப்பதையும் குறிப்பிடுவது பெண்ணுக்கு சொத்துரிமை இருந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.
திருமணத்தில் மணமகளுக்கு ஸ்ரீதனம் கொடுப்பது இன்றைய காலகட்டத்திலும் நடைமுறையில் இருந்து வருகின்றது. ஸ்ரீதனம் பற்றிய குறிப்புகள் ஐந்து ஆவணங்களில் காணப்படுகின்றன. இவற்றில் 1458 ஆம் ஆண்டு ஆவணம் மணமகளுக்கு கொடுத்த ஸ்ரீ தனங்களை பட்டியலிட்டுக் காட்டுகிறது. இப்பட்டியலில் நிலம், பாத்திரங்கள், வீடு போன்றவை மட்டுமல்லாமல் தான் பரம்பரையாக அனுபவித்து வந்த அடிமைகளையும் ஸ்ரீதனமாக கொடுக்கப்பட்டதை இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
நாஞ்சில் நாட்டில் அடிமைமுறை குறித்த 19 ஆவணங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் செய்திகளை உற்று நோக்கும்போது ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல; வேறு சாதியினரும் அடிமைகளாக குறிப்பிட்ட செயல்களைச் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட செய்தியையும் அறிய முடிகின்றது.
கோவில் விழாவில் வேளாளர்கள் தேரைச் செப்பனிட வேண்டும்; பறையர்கள் தெப்பம் கட்ட உதவ வேண்டும் என்று 19 ஆம் நூற்றாண்டு ஆவணம் குறிப்பிடுகின்றது. இவ்வாவணம் அவர்களுக்கான பணி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அதற்கான சம்பளம் கொடுக்கப்படாததையும் எடுத்துரைக்கின்றது.
வெள்ளாட்டி என்பதற்கு பணிப்பெண், அடிமை என்று தமிழ் லெக்சிகன் (ஸ்ஷீறீ.6, ப.3702) கூறுவதையும், கல்வெட்டுகளில் வீட்டு உள் வேலைகளைச் செய்யும் பெண் என்று குறிப்பிடப்படுவதாகவும் ஆசிரியர் பதிவிட்டுள்ளார். பறையர்கள் மட்டும் அடிமைகளாக காணப்படவில்லை. சாதிபிரஷ்டம் செய்யப்பட்ட பிற சாதியினரும் அடிமைகளாக இருந்துள்ளனர். நாஞ்சில் நாட்டு அடிமை ஆவணங்களில் பறையர் அடிமைகளைப் பற்றியும், வெள்ளாட்டி அடிமையைப் பற்றியும் தனித்தனியாக செய்திகள் உள்ளன. கல்வெட்டுகளில் ‘வீட்டு வேலை செய்யும் பெண் ’ என்றே குறிப்பிடப்படுகிறது. எனவே வெள்ளாட்டி என்பது வீட்டு உள் வேலைகளைச் செய்த பெண் என்று கருதலாம். இல்லற ஒழுக்க நெறியிலிருந்து தவறிய உயர்சாதிப் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளாட்டி அல்லாத அடிமைகளும் இருந்துள்ளதாக அடிமை ஆவணங்கள் கூறியுள்ளன. கடன் வறுமையால் தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை 1459 ஆம் ஆண்டு ஆவணம் கூறுகிறது.
நாஞ்சில் நாட்டு ஆவணங்களில் ஆளூர், ஆரல்வாய்மொழி, தாழக்குடி, இராஜாக்கமங்கலம் ஆகிய நான்கு ஊர்களில் அடிமை சந்தைகள் இருந்ததாகச் செய்தி உள்ளது. சந்தையில் ஒரு பொருளை விற்கும்போது எவ்வாறு கூவி விற்பார்களோ அதே போன்று அடிமையை சந்தையின் நடுவில் நிறுத்தி, ‘இவர்களை யாராவது வாங்குகின்றீர்களா?’ என கூவுகின்றனர். வாங்குபவர் பதிலுக்கு வாங்குகிறோம் என்று கூவுகின்றனர். இதன் மூலம் அன்றைய காலகட்டத்தில் மனித மாண்புகள் சிதைக்கப்பட்டிருந்ததை அறியலாம்.
அடிமைகளுக்கு விலையும் இருந்துள்ளது. பறையர் சாதி ஆண் அடிமைக்கு 20 பணம் முதல் 60 பணம் வரையிலும் விலை இருந்துள்ளது. பறையர் சாதிப் பெண் அடிமைக்கு இதனைக் காட்டிலும் விலை குறைவு. வேட்டுவப் பெண் அடிமைக்கு விலை மிகக் குறைவு என்று கே.கே.குஷ்மன் கூறியுள்ளதையும் ஆசிரியர் முன்வைத்துள்ளார். “வறட்சிக் காலங்களில் குழந்தைகளைக் கூட அடிமைகளாக விற்றனர். அவர்களுடைய விலை இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஓர் அடிமையின் விலை ஆறு முதல் எண்பது ரூபாய் வரை இருந்தது. சில இடங்களில் ஓர் அடிமையின் விலை பதினெட்டு ரூபாய் வரை இருந்தது.” 6 அடிமை விலை பற்றிய தகவல்கள் 1439 ஆம் ஆண்டிலிருந்து 1832 ஆம் ஆண்டு வரை உள்ள 7 ஆவணங்கள் கூறுகின்றது.
முதலியார் ஓலைகள் குறித்த பதிவுகள் ஆசிரியருடைய கள ஆய்வுச் செய்திகளின் வழி திரட்டப்பட்டவையாகும். கி.பி 15, 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் நாஞ்சில் நாட்டு சமூகம், விவசாயம், பொருளாதாரம், பண்பாடு சார்ந்த செய்திகளை வெளிக்காட்டுகின்ற வகையில் ‘முதலியார் ஆவணங்கள்’ விளங்குகின்றது. ஆசிரியருடைய பதிவுகளின் வாயிலாக 14 ஆம் நூற்றாண்டில் நாஞ்சில் நாட்டில் நெல்லின் விலை அதிகமாக இருந்துள்ள செய்தியையும், மக்கள் நெல்லை கடனாகப் பெறும் வழக்கத்தினையும், நெல்லிற்காக நிலங்கள், வீடு, காளை ஆகியவை ஒத்திக்கு விடப்பட்டுள்ள செய்தியினையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதன்வழி 14 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவினை உய்த்துணர முடிகிறது.
பெண் சொத்துரிமை, ஸ்ரீதனம் ஆகியவை அக்காலத்திலேயே மரபாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மரபினைப் பின்பற்றுவதில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு மக்கள் உறுதியாக இருந்துள்ளதை ஆசிரியருடைய பதிவுகளின் வழி அறிய முடிகிறது.
நாஞ்சில் நாட்டில் வெள்ளாட்டி அல்லாத அடிமைகளும் கடன் வறுமையால் தங்களையும் தங்கள் சார்ந்தவர்களையும் அடிமைகளாக விற்றுக் கொண்ட செய்திகளும் காணப்படுகின்றன. உயர்சாதி வர்க்கப் பெண்கள் ஒழுக்க முறைகேடு காரணமாக சாதியிலிருந்து விலக்கப்பட்டு அடிமைகளாக்கப் பட்டுள்ளனர். இது சமூகத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தண்டனையாகவே கருதப்பட்டது. பறையர், புலையர் இன மக்கள் மட்டுமன்றி சமூகத்தில் உயர்ந்த குலமாக கருதப்படுகின்ற வேளாளர், நாயர் இன மக்களும் அடிமைகளாகக் கையாளப்பட்டுள்ளனர். உதாரணமாக, தாணுமாலையன் கோவில் கட்டுமானப் பணிக்காக கோவிலின் உள்ளே கல்லைக் கொண்டு செல்வதற்கு, கோவிலின் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அனுப்பப்பட்டுள்ளனர். அடிமைகள் குறித்தும் அதற்கான விலை, சந்தை குறித்த பதிவுகள் சமூகத்தில் பெண்களின் நிலையினையும் அக்காலத்தில் மனித மாண்புகள் சிதைந்துள்ள நிலையினையும் எடுத்துக் காட்டுகின்றன..
முதலியார் ஓலைகள் | அ. கா. பெருமாள்
காலச்சுவடு, நாகர்கோவில்.
விலை - ரூ.225/-
- பா.தாமரைச்செல்வி