வரலாறு எப்போதுமே சுவாரஸ்யமானது. அதன் மர்ம முடிச்சுகள் அவிழும் போது சுவை கூட்ட வல்லது. அந்த வகையில், வரலாற்று நூல் எதுவாயினும் மர்ம முடிச்சுகள் அவிழும் போக்கில் அது வாசகனை ஈர்க்க வல்லது. வரலாற்று நூல்களைப் படிப்பதில் ஒரே ஒரு சிக்கல், அதை எழுதியவரின் அகச் சார்பு நீக்கி அந்த நூலைப் படித்து உண்மையைத் தேர்ந்து தெளிவது தான். பெரும்பான்மையான வரலாற்று நூல்கள் ஆசிரியரின் அகச் சார்பிலிருந்து எழுந்தவை தான் எனலாம். ஒரு பொருளை அல்லது தலைப்பைத் தேர்வு செய்யும் போதே, அதைத் தேர்வு செய்வது தற்செயலாக நிகழ்வதில்லை. தனக்கு முன் கிடைத்த தரவுகள், உள்ளெழுந்த சுய ஆர்வம், வழிகாட்டல்கள் சார்ந்து தான் நூல்கள் எழுகின்றன. தனக்கு முன் எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் பெரும்பான்மையும் தனி நபர் சார்ந்தோ அல்லது இனஞ் சார்ந்தோ புகழை மிகைப்படுத்திடும் உள் நோக்கத்தில் எழுதப்பட்டவை தான் என்பது மார்க்ஸியர்களின் முடிவு.

அண்மைக் காலத்தில், இந்தியாவில் எழுதப்படும் வரலாற்று நூல்களில் புளுகுகளும், புனை சுருட்டுகளும், யூகங்களும், வன்மமும், அரசியல் உள் நோக்கமும் அப்பட்டமாக வெளித் தெரிகின்றன. உள்ளதை உள்ளபடி வாசகனுக்கு விளம்பி, அவனே மெய்ப்பொருளை எத்தன்மைத்தாயினும் எப்பொருளாயினும் கண்டு தேற வாய்ப்பு நல்கும் நூல்கள் மிக அரிது. அந்த வகையில் ஓர் அரிதான நூலாக, ஆ.பத்மாவதி அவர்கள் எழுதி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் வெளியிட்டிருக்கும் நூல், “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற இந்த நூலாகும்.

padmavathi book on kalappirarஇந்த நூல், சுமார் இரு நூறு பக்கங்கள் கொண்டது. நல்ல வடிவமைப்பு; தரமான அட்டை; தாள்; அச்சு. அநேகமாக எழுத்துப் பிழைகளே இல்லாத நூல். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா கால நெருக்கடிக்கு இடையிலும் வெளியாகியுள்ள இந்த நூலுக்கு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் நல்லதோர் அணிந்துரை வழங்கியிருக்கிறார். முன்னுரை, முடிவுரை, நூற் பட்டியல், சொல்லடைவு, அருஞ்சொல் விளக்கம், பின்னிணைப்பு தவிர 14 கட்டுரைகள் அடங்கிய நூல் இது.

இனி நூலுக்குள் நுழையும் முன் சில செய்திகளை வாசகர்களாகிய கவனத்தில் இருத்திக் கொள்வது நலம் என எண்ணுகிறேன்.

முதலாவது தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு வரலாற்றைப் பதிவு செய்யும் உணர்வு மிக மிகக் குறைவு என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது நாம் பின்பற்றி வந்த அறுபதாண்டு சுழற்கணக்கு முறை: மேற்கில் கிறிஸ்தவம் ஒரு பொது ஆண்டுக் கணக்கு முறையை தொடக்கத்திலிருந்தே பெற்று வந்திருந்தமை வரலாற்றை நிரல்படுத்த மேற்கு உலகுக்கு வசதியாக இருந்தது. நமக்கு அந்த வாய்ப்பு அவர்களின் வருகை வரை அறவே இல்லை.

மூன்றாவது, நமக்குக் கிடைத்திருக்கும் பண்டைய இலக்கிய நூல்கள் அனைத்துமே தொகுப்பு நூல்கள் தாம். அதுவும் மதுரைப் பாண்டி நாட்டில் தான் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுத்தவர்(கள்) ஒதுக்கி நீக்கி விட்டவை பாடல்களாகவும் அல்லது வரிகளாகவும் கூட இருந்திருக்கலாம் என்ற ஐயப்பாட்டோடு தான் அனைத்து நூல்களையுமே நாம் அணுக வேண்டியிருக்கிறது. தேவார, திவ்யப்பிரபந்தங்களுக்கும் இதே நிலைமை தான். நம்பியாண்டார் நம்பிக்கும் நாதமுனிகளுக்குமே முழு வெளிச்சம். ஆக தொகுத்தவர்(களின்) சார்பற்ற நேர்மையை நம்பித்தான் நாம் தொன்மை இலக்கியங்களைப் படிக்க வேண்டியிருக்கிறது. தமிழின் மீதான மொழி இனப் பெருமித உணர்ச்சியைத் தள்ளி விட்டு யோசித்தால் பதினெண் மேல்க் கணக்கு நூல்களில் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி போன்றவை சங்க கால இலக்கிய நடையோடு ஒத்திசைவு கொண்டிருந்தாலும் அவை காலத்தில் மிகவும் பிற்பட்டவை என்ற ஐயப்பாட்டின் நேர்மையை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். யார் கண்டது? அவை களப்பிரர் காலம் என்று அழைக்கப்படும் காலத்தின் பிற்பகுதியில் கூட இயற்றப்பட்டவையாக இருக்கலாம். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் சம காலத்தவையாகவும் பிற்பட்டவையாகவும் கூட இருக்கலாம்.

நான்காவது, வடமேற்கு கைபர் போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் தொடங்கி நாதிர் ஷா வரை இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழையாத இனமே இல்லை; ஐரோப்பியர்கள் உட்பட; ஆப்பிரிக்கர்களைத் தவிர. ஆனால், இந்தியாவிற்குள் நிலை கொண்டிருந்தவர்கள் ஏன் பிற திசைகளை நோக்கி நகரவில்லை? தன் நிறைவுப் பெருமிதப் போதை கொண்ட சோம்பேறிகளா? இந்தியாவின் இந்த நிலைமையே தான் தமிழகத்திற்கும் பொருந்தும். கூட்டங் கூட்டமாக வந்து குடியேறிய வைதீகர்கள், கன்னடர்கள், கங்கர்கள்-சாளுக்கியர்கள் பிற்காலச் சோழர்கள், தெலுங்கர்கள், அராபியர்கள், போர்த்துகீசியர்கள் என்று பிற மொழி இனத்தவர் தமிழகத்திற்குள் வந்து நிலையாகக் குடி கொண்டு கலந்தும் விட்டார்கள். தமிழர்கள் இலங்கை, தென் கிழக்கு ஆசிய நாடுகள் எனப் பிற இடங்களுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் ஒரு சிலரே.

ஐந்தாவது, முற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் பெயர்கள் பெரும்பாலும் வடமொழிக் கலப்பற்ற தமிழ்ப் பெயர்களாகவே காணப்படுகின்றன. மாறாக பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் பெயர்கள் வடமொழிக் கலப்புப் பெயர்கள். இடையில் ஊடாக நாம் காண்பது களப்பிரர் காலமா அல்லது வைதீக எழுச்சி கொண்ட வடமொழிக் காலமா?

இனி நூலுக்குள் நுழைவோம்.

களப்பிரர் காலம், தமிழக வரலாற்றின் “இருண்ட காலமாக” அறிஞர்களால் கருதப் பெற்றது என தனது அணிந்துரையைத் தொடங்கியிருக்கிறார் பேராசிரியர். இரா.சந்திரசேகரன். இருண்ட காலம் என்று சாட்டுவோர்களில் இரு வகை உண்டு. அதிகம் ஆய்வுத் தரவுகள் நமக்குக் கிடைக்காததால் அதை இருண்ட காலம் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. ஆனால் வைதீகம் செல்வாக்கு இழந்திருந்த காலம் என்பதனால் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்ற வாதத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள இயலாது.

ஆசிரியர் ஆ.பத்மாவதி அவர்கள் தனது முன்னுரையில், “களப்பிரர் காலம் சங்க காலத்திற்குப் பின்னர் ஏறத்தாழ கி.பி.300 முதல் கி.பி.550 வரை நிலவியது எனலாம் எனத் தொடங்குகிறார். அனேகமாக, அனைத்து வரலாற்று ஆசிரியர்களின் ஏகோபித்த கருத்தும் இது தான்.

“களப்பிரர் குறித்து இதுவரை கிடைத்திருக்கின்ற சில இலக்கிய ஆதாரங்களையும் வரலாற்று, தமிழ் அறிஞர்களின் நூல்களையும் கருத்துக்களையும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் அகழாய்வு அறிக்கைகளையும் இன்ன பிற தகவல்களையும் முதன்மை ஆதாரங்களாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப் பெற்றது” எனவும்,

“இவ்வாய்வில் புதிய முயற்சியாக சில அணுகுமுறைகள் மேற்கொள்ளப் பெற்றிருக்கின்றன. களப்பிரர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பின்னர் ஆட்சியமைத்த பல்லவர் - பாண்டியர்களின் கல்வெட்டுக்கள், செப்பேடுகளின் ஆதாரங்களை முதன்மையாகக் கொண்டு களப்பிரர் ஆட்சி எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை அறியும் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது. அம்முயற்சியின் வழியே, அவர்கள் அமைத்திருந்த ஊராட்சி, ஊரமைப்பு, சமயம், அரசியல் கொள்கை, பொருளாதாரம், படை, கூட்டணி ஆட்சி போன்ற முக்கிய அங்கங்கள் தொடர்பாகத் தெரிய வந்த உண்மைகள் ஆய்வுலகின் முன் வைக்கப் பெறுகின்றன” எனவும்

"1979 இல் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையால் பொன்னமராவதி அருகே பூலாங்குறிச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கல்வெட்டுக்கள் களப்பிர மன்னர்களால் வெளியிடப்பட்ட கல்வெட்டுக்கள். ஆய்வறிஞர்கள் தற்போதும் முன்பும் எழுப்பிய ஐயங்களுக்கான பதில்கள் இக்கல்வெட்டில் புதைந்து கிடக்கின்றன” எனவும் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.

களப்பிரர் யார்? எந்நாட்டினர்? எச்சமயத்தினர்? எம்மொழி பேசுவோர் என்பன இக்கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வரும் என நம்பிக்கை கொள்கிறார் ஆசிரியர்.

களப்பிரர் என்பவர் பல தமிழர்களையும் சிறுபான்மை கருநாடகத்தினரையும் கொண்ட கூட்டணி என்றுரைக்கலாம் என எழுதியிருக்கிறார் ஆசிரியர். (இது சரியான சான்றுகள் இன்றி ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை). களப்பிரர் அருக சமயத்தினர் என பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. இது ஏற்புடையதே. களப்பிரர் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தியது தமிழ் மொழியே. (இதுவும் சரியான சான்றுகள் இன்றி ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று). களப்பிரர் நால்வகைப் படைகளும் கொண்டிருந்தனர். ஐம்பெருங்குழு என்னும் நிர்வாக அமைப்பு பற்றிக் களப்பிரர் காலத்தைய கரூர்க் கல்வெட்டு தெரிவிக்கின்றது என்றெல்லாம் எழுதுகிறார் ஆசிரியர்.

இனி முதல் கட்டுரைக்கு வருவோம்.

பௌத்த தேரர் எழுதிய ‘வினய வினிச்சயம்’ என்ற நூலும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளும் மூல ஆதாரங்கள்; அந்நூல் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுக் காலம் என்பதற்கு அந்த நூலிலேயே காலக்குறிப்பு உள்ளது எனக் குறிப்பிடுகிறார். பெரிய புராணத்தில் குறிப்பிடப்படுகின்ற மூர்த்தி நாயனார், கூற்றுவ நாயனார் இருவரும் களப்பிரர்; வேள்விக்குடிச் செப்பேடு, தளவாய்புரம் செப்பேடு, பல்லவர் செப்பேடுகள் முப்பது போன்றவையும் ஆதாரங்கள் தாம்.

“படை நான் குடன்று பஞ்சவற் றுரந்து

மதுரை வவ்விய கருநாடர் வேந்தன்

அருகர்ச் சார்ந்துநின் றான்பணி அடைப்ப”

என்று நால்வகைப் படைகளுடன் பஞ்சவராகிய பாண்டியரை அகற்றிவிட்டு மதுரையை வெற்றி கொண்ட கருநாடக வேந்தன் அருக மதத்தைச் சார்ந்திருந்த காரணத்தால் அரனாகிய சிவன் கோயில் வழிபாட்டை மறந்து விட்டான் என்று கல்லாடம் (57.12.14) கூறுகிறது.

சமண நூல் ஒன்று சிரவண பெலகொள என்னும் பிரதேசம் களபப்பு என்றழைக்கப்பட்டதாகக் கூறுகிறது. இந்தக் களபப்பு ராஜ்யம் மைசூர் நாட்டுக் கோலார் வரை பரவியிருந்ததால் அங்குள்ள நந்தி மலை களப்பிரரின் மலை என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்து வந்தவர்களே களப்பிரர்கள்.

யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்ட களப்பிரர் பற்றிய வாழ்த்துப்பாக்களைக் களப்பிரர் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் இணைப்பாகக் கொடுத்திருக்கின்றனர். அப்பாடல்களில் களப்பாளன் விஷ்ணுவின் பக்தனாக உள்ளதையும் பூம்பிண்டி மரத்தின் கீழ் அமரும் அருகக் கடவுளிடம் பக்தி கொண்டிருந்ததையும் அச்சுதன் என்ற பெயரிலேயே பொதுவாகக் களப்பிர மன்னர்கள் அழைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

இப்படி களப்பிரர் பற்றிய மூலச்சான்றுகளை எடுத்துரைக்கிறது முதல் கட்டுரை. இரண்டாம் கட்டுரை களப்பிரர் பற்றிய அறிஞர் கருத்துகளை எடுத்துச் சொல்கிறது. கே.ஜி.சங்கரன், நீலகண்ட சாஸ்திரி, மு.இராகவய்யங்கார், மயிலை சீனி.வேங்கடசாமி, கிருஷ்ணசாமி அய்யங்கார், அறிஞர் மு. அருணாசலம், க.ப.அறவாணன், பி.ஜி.எல்.சுவாமி, சி.மீனாட்சி, இரா.பன்னீர்செல்வம், மா.இராசமாணிக்கனார், கே.கே.பிள்ளை, பா.மாசிலாமணி, ந.சுப்பிரமணியன், கே.ஆர்.வெங்கட்ராமன், வே.இ.செல்வம், பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.சி.சர்க்கார், இரா. நாகசாமி, நடன.காசிநாதன், பொற்கோ போன்ற அறிஞர்களின் கருத்துகளை உரியவாறு பொருந்த நிரல்படுத்திக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

மூன்றாம் கட்டுரை, “சங்ககால சமூகச் சூழலும் சங்க அரசுகளின் வீழ்ச்சியும்” என்ற பொருளிலானது.

“ஆரியர் தாக்கத்தை விரும்பாமல் சங்ககால அரசுக்கு உதவிக் கொண்டிருந்த தலைவர்கள் வணிகத்திற்கும் வணிகத்தை ஆதரிக்கும் மத நிறுவனங்களுக்கும் ஆதரவளித்து சங்க கால மன்னர்களின் ஆட்சி அகலவும் மாற்று அரசான களப்பிர அரசு ஏற்படவும் வழி செய்திருக்கின்றனர் என்பது தெரிகிறது என முடிக்கிறார் ஆசிரியர்.

களப்பிரர் கால அரசமைப்பு பற்றிய நான்காம் கட்டுரையில் ஐம்பெருங்குழு களப்பிரர் காலத்திலும் அதன் பின்னரும் தொடர்ந்தும் இயங்கி வந்திருக்கின்றது என்று கரூர்க் கல்வெட்டு மற்றும் திருச்சிராப்பள்ளி நாகை நல்லூர்க் கல்வெட்டு மூலம் யூகிக்கிறார் ஆசிரியர். இந்த ஐம்பெருங்குழுவில் இடம் பெற்றிருந்தோர் அடியார்க்கு நல்லார் கூறும் அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் என்போரா? அல்லது அரும்பதவுரையாசிரியர் குறிப்பிடும் மாசனம், பார்ப்பார், மருத்தர், வான் நிமித்தர், அமைச்சர் என்போரா? எனக் கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர்.

ஐந்தாம் கட்டுரையான “களப்பிரர் கால ஊரமைப்பும் சில நடைமுறைகளும்” (மங்கலங்களின் பங்களிப்பு) என்ற கட்டுரை சுவாரஸ்யமானது. சாதவாகனர்கள் தங்கள் ஆட்சியில் சில பகுதிகளுக்குச் சில ஆமாத்யர்களைப் பொறுப்பாளர்களாகக் கொண்டு நிர்வகித்தது என நூலாசிரியர் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது நம் கவனத்தை ஈர்க்கிறது. இதே நூலில், பக்கம் 158-159 இல், மாத்ரர், கடிகையார், மூலப்பிரகிருதி என்ற சக்தி வாய்ந்த அமைப்பினர் ராஜ கிருதகர்கள் என அழைக்கப்பட்டனர் என நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மாத்ரர் என்பவர் மகாமாத்ரர் எனக் கூறப்படுகின்ற அமைச்சர் குழுவினர் ஆவர். கடிகையார் உயர் கல்வியாளர்கள் ஆவர். மூலப்பிரகிருதி படைத் தலைவர்கள் ஆவர் எனக் குறிப்பிடுகிறார்.

சிறுத்தொண்டராக பின்னர் அறியப்பட்ட பரஞ்சோதியை அறிமுகப்படுத்தும் போது “மாமாத்திரர்” என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். திருவாதவூர் ஆமாத்தியர்களில் ஒருவர் தாம் மாணிக்கவாசகர். இருவரும் ஒரே குலத்தினர் என்பது பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் முடிவு. நோபெல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இந்த மதிப்புரைக் கட்டுரையாசிரியரின் நினைவுக்கு வந்து செல்கிறார். எனினும், இந்த ஆமாத்தியர்கள் ஆரியர்களாத்தான் இருக்க வேண்டும் என யூகிக்க இடம் இருக்கிறது.

இக்கட்டுரையில் ஆய்வாளர் மங்கலம் என்ற சொல்லும் மங்கை என்ற சொல்லும் எப்படி மாறி மாறி வந்திருக்கின்றன என்று நிறுவுவது மிகவும் சுவாரஸ்யமான ஆய்வு எனலாம். புள்ள மங்கலம் – புள்ள மங்கை, விஜய மங்கலம்- விசய மங்கை, போதி மங்கலம் என்ற பூத மங்கலம் – போதி மங்கை என நிறுவுகிறார். இப்படி மங்கலம் என்று அழைக்கப்பட்ட ஊர்களின் நடுவில் பிடாரி போன்ற அம்மன் கோவில்கள் இருந்திருக்கின்றன என்றும் அந்த ஊர்கள் பின்னாளில் மங்கை என வழங்கப்பட்டிருக்கின்றன எனவும் குறிப்பிடுகிறார். பட்ட மங்கை இப்போது பட்ட மங்கலம் என்ற குரு ஸ்தலம் ஆக பாண்டி நாட்டில் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது. மங்கலம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மங்கை ஊர்கள் அனைத்தும் பௌத்தத் தலங்கள் என்கிறார் ஆய்வாளர். உத்தர கோச மங்கை என்ற பாண்டி நாட்டு திருவாசகத் தலம் நம் நினைவுக்கு வருகிறது. அங்கும் சிதிலமடைந்த நிலையில் பௌத்த விகாரம் இப்போதும் காணப்படுகிறது.

தந்திர வழிபாட்டு முறையைப் பின்பற்றுகிற வழிபாட்டு முறைகளில் குமரி பூஜை பின்பற்றப்பட்டது. பருவமடையாத கன்னிப்பெண்களைத் தெய்வமாகப் பாவித்து அவர்களுக்குள் இருக்கும் ஆக்க சக்தியைத் தாங்களும் பெற இப்பூஜை நடத்தப்பட்டது. பைரவ பத்மாவதி கல்பம், தைத்ரீய ஆரண்யகம், மகா நிர்வாண தந்த்ரம் போன்ற நூல்கள் இத்தகைய வழிபாடுகளைக் குறித்துக் குறிப்பிடுகின்றன. இது போன்ற மதச்சடங்குகளோடு போட்டி போட்டுக் கொண்டு வளர வேண்டிய சூழலில், அசங்கர் என்ற பௌத்தரால் கி.பி,3 ஆம் நூற்றாண்டளவில் மகாயான பௌத்த மதத்தில் யோகம் பின்பற்றப்பட்ட போது தாராதேவி வழிபாடும் புகுத்தப்பட்டிருக்கிறது. குமரி, கன்னி, மங்கை என்பதெல்லாம் பெண்களின் ஒரே பருவத்தைக் குறிக்கும் சொற்களாம்.

ஆட்சி மாற்றம் நடக்கும் போது தோற்ற அரசு ஆதரித்த மதத்தை எதிர்க்க, புதிய ஆட்சியினர் தாங்கள் ஆதரிக்கும் மதத்தின் உக்கிரமான கடவுள் வடிவங்களை அமைப்பது வழக்கம். (வைணவர்கள் நரசிம்ம வழிபாட்டைத் தொடங்குவர் – அழகர் கோயில் - தொ.பரமசிவம்) மங்கலம் என்றால் மகிழ்ச்சி- கொண்டாட்டம், போரில் வெற்றி போன்ற பொருள்களை சமஸ்கிருத ஆங்கில அகராதி தருகிறது. எனவே, வெற்றி பெற்று தாம் கைக் கொண்ட ஊர்களை முக்கிய அரசியல் தளங்களாகப் பயன்படுத்த நினைத்து மங்கலம் என்ற பெயருடன் ஊர் நடுவில் மங்கைக்கு கோட்டம் எழுப்பி வழிபட்டிருக்கின்றனர் எனலாம் என்கிறார் நூலாசிரியர்.

நேபாளத்தில் கிடைத்த சுவடி ஒன்று ஒட்டியாணம் என்ற ஊரிலுள்ள மங்கா கோஷ்டத்தில் வஜ்ரபாணியின் உருவம் இருந்ததைக் குறிப்பிடுகிறது என்ற தகவலை லோகேஷ் சந்திரா என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கச்சி வளைக் கைச்சி காமக்கோட்டங் காவல்

மெச்சியினிதிருக்கும் மெய் சாத்தன் கைச்செண்டு

கம்பக் களிற்று கரிகாற் பெருவளத்தான்

செம்பொற் கிரி திரிந்த செண்டு

சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லாரின் இந்த மேற்கோள் பாடல் ஒன்று ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது.

மங்காகோஷ்டம் – காமக் கோட்டம்: வஜ்ரம் – செண்டு; வஜ்ரபாணி – சாத்தன்; ஒட்டியாணம் – காஞ்சி நகர்.

மங்கலம் என்ற சொல் வடமொழியில் கிராமம் என்று வழங்கப்பட்டிருக்கிறது. கூற்ற மங்கலம் – கால கிராமம் என மாறியிருப்பதை உதாரணமாகக் கொள்ளலாம். இந்தப் பின்புலத்தில் சாத்தமங்கலம் கல்வெட்டுக்கள் மற்றும் இராஜராஜன் கல்வெட்டுச் செய்திகளை இந்தக் கட்டுரையில் ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலாசிரியர் ஆ.பத்மாவதி அவர்களின் முறையே 6 முதல் 12 வரையிலான களப்பிரர் கால ஊராட்சி முறை, மங்கைக்கோட்டத்து மன்றங்கள், களப்பிரர் கால படைத்தளமும், நிர்வாக மையமும், களப்பிரரின் நிலவுடைமைக் கொள்கை, பாண்டியருக்கு ஆதரவளித்த தலைவர்கள், களப்பிரர் கால மொழி, எழுத்து, கலை, சமயம், களப்பிரர் கால நடுகற்கள் போன்றவை நேர்த்தியான நிரல் முறையில் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. சங்க காலச் சான்றுகள் மற்றும் களப்பிரர் காலத்திற்குப் பிந்தைய பல்லவ அரசுக் காலச் சான்றுகளோடு ஒப்பிட்டு இடைக்கால களப்பிரர் காலம் இப்படி இருந்திருக்கலாம் என ஆசிரியர் திறம்பட யூகிக்கிறார்.

நிறைவாக, 13 மற்றும் 14 ஆம் கட்டுரைகளில் பாண்டிய பல்லவ அரசர்களின் வைதீக – சமண ஆதரவு மற்றும் களப்பிரர்களின் போராட்டமும் வெற்றியும் என்ற இரண்டு கட்டுரைகளின் சாரத்தை இணைத்துக் காண்போம். கடுங்கோன் முதல் ஆட்சி செய்த முற்காலப் பாண்டியர்களில் ஏழாம் மன்னன் மாறவர்மன் இராஜசிம்மன் (கி.பி 725-768) காலத்தில் வைணவக் கோயில்கள் மற்றும் சிவன் கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டன. கடுங்கோனும் கழுதூரில் சித்தி செய்த பாண்டியனும் அந்தணர்களுக்கு திருமங்கலம், சோமாசிகுறிச்சி போன்ற பிரம்ம தேயங்களை வழங்கினர். சேந்தன் செழியன் சிவனுக்கு குடைவரைக் கோயில் தோற்றுவித்தான். மாறவர்மன் அரிகேசரி ஹிரண்ய கர்ப்பம், துலாபாரம், பள்ளிச்சந்தம் அக்ரஹாரம் போன்ற செயல்களில் ஈடுபட்டான். ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன் வேள்விக்குடிச் செப்பேட்டின் மூலம் பிரம்ம தேயத்தைப் புதுப்பித்தான். சின்னமனூர்ச் சிறிய செப்பேடு, வரகுண மங்கைச் செப்பேடுகளின் மூலம் பிரம்ம தேயங்கள் வழங்கியதும், நம்மாழ்வாரை ஆதரித்ததும் தெரிய வருகின்றன. பல்லவர்கள் அக்னிஷ்டோமம், அஸ்வமேதம், வாஜபேயம் போன்ற பல ஹோமங்கள் செய்துள்ளனர். கோசகஸ்ரம் போன்ற சடங்குகளையும் செய்துள்ளனர். (இன்றைக்கும் முன்னாள் திராவிட முதல்வர்கள் சத்ரு சம்ஹார யாகம் செய்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோமே).

களப்பிரர் ஆட்சியில் வைதீகர்களது பிரம்ம தேய நிலங்கள் இறக்கப்பட்டது போல வைதீக ஆதரவு அரசர்கள் ஆட்சியேற்ற பின்னர் பௌத்தப் பள்ளிச்சந்த நிலங்கள் இறக்கப்பட்டு சைவ, வைணவக் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக நடந்திருக்கின்றன. பின்னர் சமணமும் இத்தகைய பேரழிவுக்கு உட்படலாயிற்று. திண்டுக்கல், கரூர், கோவை பகுதிகள் சோழர், பாண்டியர், பல்லவர் நாடுகளின் புறப்பகுதியாகவே அமைந்திருந்ததால், களப்பிரர் ஆதரவுத் தலைவர்களும், மதங்களும் தங்கள் பிடி தளராமல், சுயேச்சையாக ஆட்சி செய்தும் வணிகம் செய்தும் வந்திருக்கின்றனர்.

வேள்விக்குடிச் செப்பேடு வேதியர் ஒருவருக்குப் பிரம்ம தேயமாகக் கொடுக்கப்பட்ட நிலம் பறிக்கப்பட்டது என்ற செய்தியைக் குறிப்பிடுகிறது. பின்னர், பல்லவர் பாண்டியர் செப்பேடுகளில் பிரம்ம தேயம் இறங்கல் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. சத்தியமங்கலம் அருகே இறங்கல் மீட்ட ராமன் நல்லூர் என்ற ஊர் இன்றும் காணப்படுகின்றது.

நிறைவாக நூலாசிரியரின் முடிவுரைக்கு வருகிறோம். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறையையும், அறிவார்ந்த தத்துவ நோக்கங்களையும், விருந்தோம்பல் போன்ற சிறந்த பழக்க வழக்கங்களையும் அறம் செய்தல் வீடு பேற்றைத் தரும் என்ற நம்பிக்கையைப் பின்பற்றுவதிலும் மிகவும் தெளிவான சிந்தனையையுடைய தமிழ் வேந்தர்களை வைதீகர்கள் மூட நம்பிக்கைகளிலும் சடங்குகளில் ஈடுபட வைப்பதில் வெற்றி பெற்றனர். பிரம்ம தேயங்களும் தேவ தானங்களும் உள்ளூர் நிலவுடைமையாளர்களின் நலன்களுக்கு எதிராக அமைந்தன. அதனால் மூவேந்தர்கள் மெல்ல மெல்ல வலுவிழந்தனர்.

கருநாடகத்திலிருந்து வந்தேறிகளான போர்த்திறம் மிக்க வைதீக எதிர்ப்பு சமணப் பின்புலம் கொண்ட களப்பிரர்களுக்கு உள்ளூர் நிலவுடைமையாளர்கள் ஆதரவளித்தனர். ஐம்பெருங்குழு போன்ற குழுக்கள் அமைத்து சிறந்த படை திரட்டி முறையாக நாட்டை வழி நடத்திச் செல்வதற்கு தேவையான அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளையும் செய்து களப்பிரர்கள் ஆட்சியமைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டிற்குப் பின் நிலைமை தலை கீழாக மாறியது. பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் தோன்றின. களப்பிரர்கள் தமிழ் மொழி, இலக்கணம், இலக்கியம், எழுத்து, கலைகள், பண்பாடு போன்றவற்றை அழித்தவர்கள் அல்லர்.

இங்கு ஃபிரடெரிக் எங்கெல்ஸ் குறிப்பிடும், “படைத்திறம் மிக்க இனக்குழு தன்னை விட நாகரிகத்தில் உயர்ந்த இனக்குழுவை வெற்றி கொண்டாலும், நாளடைவில் தோற்ற இனத்தின் நாகரிகம் வென்றவர்களை வெற்றி கொள்ளும்” என்ற ஒரு வாக்கியம் மதிப்புரையாளர் நினைவுக்கு வருகிறது. இதுவே களப்பிரர்களுக்கும் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அச்சுதக் களப்பாளன் ஒருவன் தனக்கு தில்லையில் முடிசூட்ட தில்லை வாழ் அந்தணர்களை அண்டி நின்றது அந்த வகை சார்ந்தது தான்.

குடைவரைக் கோயில்களுக்கு தமிழகத்தில் பல்லவர்களே வழிகாட்டிகள் எனக் கூறுவதுண்டு. ஆனால், பாண்டிய நாட்டு பிள்ளையார்பட்டி விநாயகர் மற்றும் அங்குள்ள கல்வெட்டு, விழுப்புரம் மாவட்டம் மேலைச்சேரி குடைவரைக் கோயில் போன்றவை களப்பிரர் காலத்தவை என்பது நினைவு கூரத் தக்கது. சங்க கால நடுகற்கள் மரபை களப்பிரரும் பின்பற்றியிருப்பதை ஈரெட்டி மலை மற்றும் தாமரைக்கரை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.

களப்பிர மன்னர்களில் ஒரு பிரிவினர் தோல்வியைத் தழுவிய பின்னரும் வென்ற மன்னர்களுடன் போரிட்டுக் கொண்டே வந்துள்ளனர். சில பகுதிகளில் சுயாட்சியுடன் தங்கள் ஆதிக்கத்தை வலியுறுத்தி வந்துள்ளனர். கி.பி.10 ஆம் நூற்றாண்டு வரை வணிகர்கள் ஆதரவுடன் நீடித்து வந்தனர். களப்பிரர் கால ஊர்ப் பெயர்களை மாற்றினாலும், பல்லவர்களும் பாண்டியரும் களப்பிரர் உள்ளடக்கத்தை உள்வாங்கிக் கொண்டு ஆட்சிமுறையை தங்கள் கொள்கைக்கு ஏற்றாற் போல் மாற்றியமைத்திருக்கின்றனர்.

சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை முறையையும் அரசியல் சமூகம் பொருளாதாரம், பண்பாடு தொடர்பான முக்கியக் கூறுகளையும் உள்ளடக்கிக் கொண்டு தான் களப்பிரர் ஆட்சி அமைந்திருக்கிறது. களப்பிரர் ஆட்சியில் பங்கு பெற்றிருந்த சிற்றரசர்கள் வைதீகக் கலாச்சாரத்தை பின்னாளில் ஏற்று பாண்டிய பல்லவராட்சி அமைய உதவியதோடு புதிய பண்பாட்டையும் நம்பிக்கைகளையும் உருவாக்கி வளர்த்தெடுத்தனர்.

தமிழ்- தமிழர் – தமிழ் நாடு என்பதை களப்பிரர் போற்றி வளர்த்து முன்னெடுத்துச் சென்றவர்கள் என்பதை மறுக்க இயலாது.

இந்த நூலுக்குப் பின்னால் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்ட நூற்பட்டியல் மிக நீண்டதாக அமைகிறது. இதுவே நூலாசிரியரின் விரிந்த கல்வியறிவினை பாராட்டும் வண்ணம் சுட்டி நிற்கிறது. அதனைத் தொடர்ந்து சொல்லடைவு வழங்கப்பட்டிருக்கிறது. அருஞ்சொல் விளக்கம், பின்னிணைப்புகளாக கல்வெட்டுப் படங்கள், குறிப்புகள் எழுத தனித் தாள்கள் என இந்த நூல் எப்படி ஓர் ஆய்வு நூல் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.

ஆய்வாளர் மிகவும் பாராட்டிற்குரியவர். அகச்சார்பற்ற அவர் தம் நேர்மை வியப்புக்குரியது. எனினும், சில கருதுகோள்கள் ஏற்புடையன அல்ல. களப்பிரர் பெரும்பான்மையும் தமிழர்கள் என்பது நிறுவப்படவில்லை எனவே எண்ணுகிறேன். விரிந்த நோக்கில் திராவிடர்கள் என ஏற்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்ய நேர்ந்த போது மொழி விரோதப் போக்கு இல்லாதவர்களாய் இருந்திருக்கிறார்கள் எனக் கருதலாம். வைதீகர்கள் முன் வைத்த வடமொழி மேலாதிக்க உணர்வு இவர்களிடம் இல்லை என்பது தெளிவு. உள்ளூர் தமிழ் நிலவுடைமையாளர்களிடம் இணக்கம் காட்டி இருக்கலாம். கொள்வன கொடுப்பன நேர்ந்திருக்கலாம் என்பதால் அவர்கள் பெரும்பான்மையும் தமிழர்கள் என்ற முடிவை நோக்கி நகர்வது விருப்பத்தின் பாற்பட்டதாக மட்டுமே அமையும்.

மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, சுயச்சார்புடைய உலக வெளிச்சம் தன் மீது படராத கிராமிய சமூக அமைப்பு அப்போதே தமிழகத்தில் நிலை பெற்றிருந்திருக்கலாம். மேலே ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவர்கள் இந்த அமைப்புகளுக்கு இடையூறு விளைவிக்கவில்லை. சாமர்த்தியமான சமரசத்தால் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டனர் என யூகிக்கலாம்.

களப்பிரர்கள் பௌத்தர்கள் என நூலின் இறுதிப்பகுதியில் நூலாசிரியர் முடிவுக்கு வருவதும் தெளிவற்றதாகவே அமைகிறது. வைதீகத்தோடான சமரச நெகிழ்வுப் போக்கு சமணத்தை விட பௌத்தத்திலேயே காண்கிறோம். மகாயானம் வைதீகக் கலப்புடைய பௌத்தம். இறை வழிபாட்டில் உயிர்ப்பலி என்பதை சங்க இலக்கியங்களிலேயே நாம் காண்கிறோம். சமணம் உயிர்ப்பலியையும் புலால் மறுப்பையும் உறுதியாக மறுத்து வந்திருக்கிறது. பௌத்தம்: “கொன்றால் பாவம்; தின்றால் போச்சு” என சமரசம் பூண்ட மதமாகும். அண்ணல் அம்பேத்கர் சமணத்தை விட்டு விட்டு பௌத்தத்திற்கு தன் தொண்டர்களோடு மதம் மாறுவதற்கு ஏதுவாக அதுவே அமைந்தது. எனவே, பௌத்தம் ஓரளவு வெகு மக்களுக்கு அணுக்கமானது. சமணம் தூரமானது. தவிரவும், பௌத்தத்தில் பிக்குணிகளுக்கு இடமுண்டு. சமணம் பெண்கள் அடுத்து ஆண்களாகப் பிறந்தால் மட்டுமே வீடு பேறு கிடைக்கும் எனக் கூறிய சமயம். இதுவும் வெகு மக்களின் விருப்பத்திற்கு அன்னியமானது.

கடுமையான தனித்திருத்த தவ வாழ்வை சமணம் போதித்தது. இல்லறத்தாரிடம் கலந்து கை ஏந்தி பிட்சை ஏற்கும் பிட்சுக்களை உடையது பௌத்தம். பௌத்தத்தில் திகம்பரர்கள் இல்லை என்பதால் ஊருக்குள் நுழைய ஏதுவாக இருந்தது. தவிரவும், சமணம் வினைக் கொள்கையில் மிக உறுதியானது. தேவ கதி, மனித கதி, விலங்கு கதி, அசுர கதி என மறு பிறப்புக் கொள்கையை வலியுறுத்தியது. அது வைதீகர்களுக்கு பிராமணர்கள் தேவ கதி இடத்தில் தாங்கள் இருப்பதாக கற்பிக்க வசதியாக இருந்தது. பௌத்தம் தாந்தீரிக முறையையும் யோக சாத்திரக் கருத்துக்களையும் கொண்டிருந்தது. இது வைதீகர்களில் சாக்தர்கள்/ அதர்வண வேதத்தினர்க்கு உடன் பாடானவையே. பௌத்தம் உருவ வழிபாட்டில் வைதீகர்களை விடவும் முன்னுக்கு நின்றது. கௌதம புத்தர் நின்றும் கிடந்தும் படுத்தும் கிடந்த விக்ரஹங்கள் வைணவத்திற்கு பௌத்த விகாரங்கள் மாற்றியமைக்க ஏதுவாக அமைந்தது. இன்றும் கூட புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக உட்கொள்ளும் முயற்சி தொடர்கிறது. மகாவீரரை அப்படிச் சொல்ல ஏதும் கிடைக்கவில்லை. எனவே, வைதீகர்களைப் பொருத்த மட்டில், சமணமே அவர்களுக்கு சமரசங் கொள்ள இயலா நேர் எதிரானது. களப்பிரர்கள் சமணர்கள் என்பதால் தான் வைதீகர்கள் ஆட்சி அதிகாரத்தை மன்னர்கள் மூலம் கைக்கொள்ள முற்பட்டனர் என்பதே சரியாக இருக்கும்.

எவ்வாறெனினும், நம் சிந்தனையைத் தூண்ட அமைந்த உருவத்திலும் உள்ளடக்கத்திலும் உயர்ந்த நூலை நமக்கு ஆக்கித் தந்திருக்கிற ஆசிரியர் ஆ. பத்மாவதி அவர்கள் மிகுந்த பாராட்டிற்குரியவர் எனலாம்.

புதியநோக்கில் களப்பிரர் வரலாறு | ஆ.பத்மாவதி

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.

விலை.ரூ.250/-

- சண்முக.ஞானசம்பந்தன், கட்டுரையாளர், இலக்கியத் திறனாய்வாளர்; மதுரை அகில இந்திய வானொலியின் ஓய்வுபெற்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்