பதினான்காம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த சம்புவராயர்கள் இயற்கையோடு இணைந்து ஆட்சியை நடத்தினர். நீண்ட மலைகளைப் பேரரண்களாகக் கொண்ட தொண்டை மண்டலம், அங்கு ஆட்சி செய்யும் மன்னர்களுக்கு கவசமாகவே இருந்துவந்தது. சம்புவராயர்கள் ஆரணியை அடுத்த படைவீட்டைத் தலைநகராகக்கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டனர். படைவீடு நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை அரண்களால் ஆனது. சம்புவராயர்களின் ஆட்சி எல்லை வடபெண்ணை முதல் காவிரி வரை பரவியிருந்தது. “சோழப் பேரரசு எனும் பெரும் மாளிகையைத் தாங்கும் வைரமணி தூண்களாக விளங்கியவர்கள் சம்புவராயர்கள்” வரலாற்றில் சோழர்களின் பல கல்வெட்டுகளில் சம்புவராயர்களின் பெருமை பொறிக்கப்பட்டுள்ளது. சுல்தானியர்கள் கி.பி.1310இல் மதுரையைக் கைப்பற்றி சுமார் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இந்த ஐம்பது ஆண்டுக் கால சுல்தானியர்களின் ஆட்சியில், அவர்கள் சம்புவராயர்களின் தொண்டை மண்டலத்தை நெருங்கவில்லை. இதற்குக் காரணம், தொண்டை மண்டலத்தின் நீண்ட பெரிய மலைத்தொடர்களும் அடர்ந்த காடுகளுமே. சம்புவராயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் நீர் மேலாண்மையைப் பெருக்குதல், நகரைச் சீர்திருத்துதல், மண்ணைப் பதப்படுத்தி மண்ணிற்கேற்ப விவசாயம் செய்தல், பருவ நிலைக்கேற்ற பயிர் செய்தல், கால நிலை மாற்றத்திற்கேற்ப தொழில்களை உருவாக்குதல், வேளாணில் புதுமைகளைக் கொண்டுவருதல் போன்ற எண்ணற்ற சிறப்புகளை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் செய்தனர். எனவேதான் சம்புவராயர்களின் ஆட்சி இயற்கையோடு இணைந்த ஆட்சியாகக் கருதப்பட்டது. (தொண்டை மண்டல சம்புவராயர்களின் வரலாறு பக்.6)

முன்னுரை:

தொல்காப்பியம் கூறும் நிலம், பொழுது ஆகிய இரண்டின் இயல்பு, இயற்கை எனப்படும். சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் தோன்றி வளர்ந்த ஒவ்வொரு காலச்சூழ்நிலையிலும், அவை பெரும்பாலும் இயற்கையோடு இணைந்து வாழ்வு கொண்ட மக்களைப் பற்றி பாடப்பட்டுள்ளன. மனித சக்தியில்லாமல் தானே தோன்றிய பொருள்கள் அனைத்தும் இயற்கை எனப்படும். இயற்கை என்பது இயல்பானது. இதனைத் தொல்காப்பியம்,

“நிலம்நீர் தீவளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம்; உலகம்” (தொல்.மரபு - 90)

இத்தகைய இயற்கை வளங்களைப் பாதுகாத்து, செழுமைப்படுத்தி வளம்பெறச் செய்வது அம்மண்ணை ஆளும் மன்னர்களின் கைகளில் இருந்தது.உலகம் தோன்றிய காலந்தொட்டு இன்று வரை இயற்கையின் சீற்றங்கள் பலவற்றைத் தாங்கிக் கொண்டு தொல்பழ நிலமாய்த் தொடர்ந்து காட்சியளிப்பது நம் தமிழ் பெரும் நிலமே. இப்பெரு நிலத்தின் ஒரு பகுதியாக விளங்குவது தொண்டை மண்டலம். தொண்டை மண்டலப் பகுதி மொழி அடிப்படையிலும், ஆட்சி அடிப்படையிலும் ஒரே முகமாக இயங்கி வந்தது. சேர, சோழ, பாண்டியர் என்ற முப்பெரு வேந்தர்களும், குறுநில மன்னர்களும், வள்ளல்களும் தனித்தனிப் பகுதிகளை ஆட்சி செய்த போதிலும் அவர்களில் சம்புவராய மன்னர்களின் ஆட்சியில் தொண்டை மண்டலம் சீரும் சிறப்புமாக இருந்தது. மொழி அளவிலும், ஆட்சி அளவிலும் தமிழகத்தின் தொண்டை மண்டலப்பகுதியை சம்புவராயர்கள் சிறப்பாக ஆட்சி செய்தனர். சம்புவராயர்களின் ஆட்சியில் தொண்டை மண்டலத்தின் இயற்கை அமைப்பை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.tn templeதொண்டை மண்டலத்தின் இயற்கை அமைப்பு:

இயற்கை என்பது தட்பவெப்பம், காற்று, மலை, மழை, ஆற்றுப்படுகை போன்ற அனைத்தையும் குறிக்கும். இவ்வியற்கையே மக்களின் வாழ்க்கை முறைகளைக் கட்டமைக்கின்றது. அவ்வகையில் தொண்டை மண்டலத்தின் இயற்கை அமைப்பு தனித்தன்மை வாய்ந்ததாகும்.

நெல் வயல்களும் வாழைத் தோப்புகளும் நிறைந்த மருத நிலங்களும், மரங்களும் புதர்களும் நிறைந்த முல்லை நிலமும், கற்களும் ஏற்ற இறக்கங்களும் வளைவு நெளிவுகளும் கொண்ட குறிஞ்சி நிலமும் சூழ்ந்த இயற்கை அரண்களைக் கொண்டதுதான் தொண்டை மண்டலம். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழப்பேரரசு தன் வலிமையை இழந்தபோது, ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் படைவீட்டைத் தலைநகராகக் கொண்டு தன்னாட்சியை நடத்தியவர்கள் சம்புவராயர்கள். சம்புவராயர்கள் காலத்தில் இயற்கை வளங்களும் அதனால் வேளாண்மைத் தொழிலும் சிறப்புற்று விளங்கின. வேளாண்மைத் தொழிலை மேம்படுத்துவதற்காக அகண்ட ஏரிகளை உருவாக்குதல், அவற்றிலிருந்து பாசனத்திற்குக் கால்வாய்களை அமைத்தல், உடைந்துப் போன மதகுகளைச் சரிசெய்தல், கால்வாய்களைத் தூர் வாருதல், மழையற்ற காலங்களில் ஏற்படும் நீர்த்தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்துவைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இயற்கைச் சூழலை அதன் தன்மை மாறாதவாறு காத்து வந்தனர்.

மனிதன் உயிர்வாழ உணவு அடிப்படைத் தேவையாகிறது. இந்த உணவை நீரும் நிலமும் தீர்மானிக்கின்றன. நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவன், உடம்போடு உயிரை இணைத்தவனுக்கு நிகர் என்கிறது சங்கப்பாடல் (புறம் 18). சம்புவராயர்களின் ஆட்சிக் காலத்தில் நெல், கரும்பு, கமுகு, வாழை, பயிர் வகைகளின் சாகுபடிகள் சிறந்திருந்தன.

“கரும்பு செங்கழுநீர் கமுகு கொடிப்பயிர், வாழை

உள்ளிட்ட பல பயிர்களுக்கு கடமை ஆயம்”

என வடமாதிமங்கலம் (போளூர்) மகாதேவீஸ்வரர் திருக்கோயிலில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் இவர்களின் விளைச்சல் திறன் விளக்கப்பட்டுள்ளது.(சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம் பக்.65)

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் எல்லைகள்:

வடக்கில் வேங்கடம், நெல்லூர் தொடங்கி தெற்கில் காவிரி வரை பரந்த நிலப்பரப்பில் சம்புவராயர்களின் ஆட்சி நிலைப் பெற்றிருந்தது. விழுப்புரம், கடலூர் மற்றும் ஆந்திராவின் வேங்கடம், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகள் இவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியது. 'வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' என்று போற்றப்பட்ட தமிழகத்தின் வரலாற்றில் பொற்காலமாகத் திகழ்ந்தது சம்புவராயர்களின் ஆட்சிக் காலம்.

பல்லவப் பேரரசின் தலைமையிடமாக விளங்கிய தொண்டை மண்டலம், கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சோழ மன்னன் முதலாம் ஆதித்தனால் கைப்பற்றப்பட்ட சோழப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. அது ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்ற புதிய பெயரைப் பெற்றது. அச்செயங்கொண்ட சோழ மண்டலத்தின் ஒரு பிரிவான பல்குன்றக் கோட்டத்தின் ஆட்சித் தலைவராக நாடுகாவல் புரிந்தவர்கள் சம்புவராயர்கள் ஆவர்.

“பல்குன்றக் கோட்டம் பாலாற்றுக்கும் தென்பெண்ணையாற்றுக்கும் இடையில் பவள மலையை மேல் எல்லையாகக் கொண்டிருந்தது. பவளமலை இப்போது சவ்வாது மலையென்ற பெயருடன் வடாற்காடு மாவட்டத்தில் உள்ளது. பல்குன்றக் கோட்டத்துச் சம்புவராயருக்குப் படைவீடு தலைநகராக விளங்கிற்று” சம்புவராயர்களின் தலைநகராக முதலில் மரகத நகரம் என்று பெயர் பெற்ற விரிஞ்சிபுரமும் பின்னர் காஞ்சி மாநகரும் விளங்கின. அவர்களது கோட்டை நகராக விளங்கி வலிமை சேர்த்தது, இன்று படவேடு என்றழைக்கப்படும் படைவீடு நகரமாகும். (பண்பாட்டு அசைவுகள் பக்.32)

வடாற்காடு மாவட்டத்தில் போரிலிருந்து வேலூர் செல்லும் வழியில் சந்தைவாசல் என்னும் ஊர் உள்ளது. அதற்கு மேற்கில், மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ள இடைநிலத்தில் ஆரணியாற்றின் கரையில் படைவீடு அமைந்துள்ளது.

பவளமலை:

இராஜகம்பீர இராஜ்ஜியம், படைவீட்டு இராஜ்ஜியம், விரிஞ்சிபுரம் இராஜ்ஜியம், காஞ்சிபுர இராஜ்ஜியம் போன்ற பல்வேறு பெயர்களில் சம்புவராய மன்னர்கள் தங்களின் ஆட்சிப் பகுதிகளின் தலைநகரங்களுக்குப் பெயர்களை வைத்திருந்தனர். இதில் படைவீடு மகா இராஜ்ஜியமாகச் செயல்பட்டது. மேற்கண்ட இராஜ்ஜியங்கள் அனைத்தும் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் 24 கோட்டங்களில் ஒன்றான 'பல்குன்றக் கோட்டத்தில்' அமைந்திருந்தன. இக்கோட்டம் பாலாற்றுக்கும், தென்பெண்ணையாற்றுக்கும் இடையில் பவளமலையை மேற்கு எல்லையாகக் கொண்டிருந்தது. பவளமலையானது இன்றைக்கு 'ஜவ்வாது மலை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஜவ்வாதுமலை இயற்கை அரண்களால் சூழப்பட்ட மாபெரும் சுரங்கமாக இன்று காட்சியளிக்கிறது. பசுமையான ஆடைகளால் தன் உடலை மறைத்து பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு இருப்பிடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.தொண்டை மண்டலத்தின் இயற்கைக் களஞ்சியமாக ஜவ்வாது மலை திகழ்கிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் பேரரணாக ஜவ்வாதுமலை அமைந்துள்ளது. எனவேதான் ஜவ்வாதுமலை 'பவளமலை' என்றழைக்கப்பட்டது. இது பல நாடுகளையும், வளநாடுகளையும், சதுர்வேதி மங்கலங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.(மண்ணும் மாந்தரும் பக்.47)

மரகத நகரம்:

சம்புவராயர்களின் தலைநகரங்களில் ஒன்றான விரிஞ்சிபுரம், மரகத நகரம் என்று அழைக்கப்பட்டது. சம்புவராயர்களின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் போர்க் கருவிகளைத் தயாரிக்கும் ஆயுதப் பட்டறை ஒன்று மரகத நகரில் செயல்பட்டுவந்தது.

காஞ்சிபுரம், அழிபடைதாங்கி போன்ற இடங்களிலும் சம்புவராயர்கள் தலைநகரங்களை அமைத்திருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் இன்றைக்குள்ள 'படைவீடு' இவர்களின் முக்கியப் படைநகரமாகவும், தலைநகரமாகவும் விளங்கியது. தற்போதுவரை அவர்களின் கோட்டை, அரண்மனை போன்றவற்றைச் சுமந்து நிற்கும் பூமியாகவும் இன்றளவிலும் இஃது திகழ்கிறது. வளம் வாய்ந்த பகுதியாகவும் செழிப்பு மிக்க பகுதியாகவும் திகழ்ந்ததால் படைவீடு சம்புவராயர்களின் முக்கியத் தலைநகரமாக விளங்கியது. சம்புவராயர்கள் தங்களுடைய தலைநகரங்களை நிலைநிறுத்தும் பொழுது எடுத்துக்கொண்ட முதற்காரணம் இயற்கை வனப்பு. வனப்புமிக்க பாலாற்றங்கரையில் மற்றொரு தலைநகரமான விரிஞ்சிபுரத்தை நிலைநிறுத்தினர். “சுழியிட்டுக் கொண்டு ஓடுகின்ற நீரின் ஓட்டத்தால் அதன் கரையிலிருந்த மரங்களின் வேர்களும் கிளைகளும் ஆட்டம் காணும் அளவிற்கு நீர் வளப்பம் கொண்ட பாலாற்றின் கரையில் அமைந்திருந்த விரிஞ்சிபுரத்தைத் தம் படைவீரர்களுடன் சென்றடைந்தார் வீரகம்பண்ணர்” என்று விரிஞ்சிபுரத்தை முற்றுகையிட்ட நிகழ்ச்சியை கங்காதேவி தான் எழுதிய 'மதுராவிஜயம்' என்ற காப்பியத்தில் குறிப்பிடுவதின் மூலம் சம்புவராயர்களின் தலைநகரங்களான படைவீடும் விரிஞ்சிபுரமும் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை அறிய முடிகிறது. (நந்தா விளக்கு. பக்.60)

நிலவியல் அமைப்பு:

காடு படந்து பசுந்தழை போர்த்து நிற்கும் குன்றுகள் சூழ்ந்தபடி, மணல் பரந்த ஆற்றங்கரையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது தொண்டை மண்டலம். நாற்புரமும் உயர்ந்து நிற்கும் மலைகளும், காடுகளும் தொண்டை மண்டலத்தைப் பாதுகாக்கும் காவலரண்களாகத் திகழ்கின்றன. 'இராஜகம்பீரன் மலை' என்றழைக்கப்படும் ஜவ்வாது மலையிலிருந்து ஓடிவரும் கமண்டல நதி, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது. இங்குள்ள மலைகளே மக்களைக் காக்கும் காவலரண்களாகத் திகழ்ந்தன. அதனால், இந்த மலைகளைத் தாண்டி நாட்டின் உள்ளே எதிரிகள் வருவது அரிதான செயலாகவே இருந்தது. (தமிழ்நாட்டு வரலாறு பக்.62)

தொண்டை மண்டலத்தின் சிறப்புகள்:

தமிழகத்தின் நிலப்பிரிவுகள் பலவற்றில் பழங் காலம் தொட்டு பல சிறப்புகளையும் முதன்மைகளையும் கொண்ட ஒரு பகுதி, தொண்டை மண்டலமாகும். தமிழகத்தின் வரலாற்றில் தொன்மைக் காலம் தொட்டு இன்று வரை தொண்டை மண்டலம் பல வரலாற்றுத் திறப்புமுனை நிகழ்ச்சிகளின் களமாக இருந்துள்ளது. இப்படி பல சிறப்புகளைக் கொண்ட தொண்டை மண்டலத்தின் எல்லைகளாக “கிழக்கே வங்கக் கடலும், மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கட மலையும், தெற்கே பிநாகி ஆறும்” இருந்துள்ளன என்பதை,

“மேற்குப் பவளமலை வேங்கடம் நேர் வடக்கால்

ஆர்க்க முவரியனி கிழக்குப் - பார்க்குளுயர்

தெற்குப் பினாகி திகழிருப தன் காதம்

நற்றொண்டை நாடெனவே நாட்டு”

என்று படிக்காசுப் புலவர் எழுதிய “தொண்டை மண்டல சதகம்” கூறுகிறது.

தொண்டை மண்டலம் அருவா நாடு, அருவா வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது. பிற்காலச் சோழர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பிறகு, தொண்டை மண்டலம் ஜெயங்கொண்ட சோழ மண்டலம் எனப் பெயர் பெற்றது. பிற்காலத்தில் இது ‘வளநாடு’ என்று அழைக்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில் காடுகள் மிகுதியாக இருந்ததால், ஆர்க்காடு, வேற்காடு, ஆலங்காடு, மாங்காடு என்று ஊர்ப் பெயர்கள் உருவாகின. தொண்டை நாட்டில் பொன்முகலி, பாலாறு, தென் பெண்ணை போன்ற நதிகள் பாய்கின்றன. அதே போல் தொண்டை மண்டலத்தில் ஏரிகளும் மிகுதியாக காணப்படுகின்றன. தொண்டை நாடு முழுவதும் மலைகளையும், காடுகளையும், ஆறுகளையும் காணலாம். பல்லவ அரசர்கள் தொண்டை நாட்டை ஆட்சி செய்யும்பொழுது தொண்டை நாட்டை நன்னாடு ஆக்கினர். பல்லவர்களுக்குப் பிறகு சோழர்கள் ஆட்சிக்கு வந்தபோது தொண்டை நாட்டில் பெரிய கோவில்களையும், வைத்திய சாலைகளையும் கட்டினர். இராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் முதலியவர் காலங்களில் தொண்டை நாட்டில் இயற்கை வளங்கள் செழித்தோங்கி இருந்தது. குடிகள் வாழ்வும் சிறந்தோங்கி இருந்தது. இந்தத் தொண்டை மண்டலத்தில் ஆரணியை அடுத்த படைவீட்டைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்தவர்கள்தான் சம்புவராயர்கள்.

முடிவுரை:

ஒரு நாட்டின் வளத்துக்கும், செழுமைக்கும் அந்த நாட்டை ஆட்சி செய்யும் மன்னர்களும் காரணமாவார்கள். மன்னர்களின் ஆட்சிச் சிறப்பே குடிமக்களின் நன்மைக்கு வித்திடுகிறது. அந்தக் கூற்றின்படி, பதினான்காம் நூற்றாண்டில் படைவீட்டைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சம்புவராயர்களும் குடிகளுக்கு ஏற்ப இயற்கையை பேணிப் பாதுகாத்துப் பண்படுத்தி நல்லாட்சியை வழங்கினர். இயற்கையைச் சேதப்படுத்தாமல், பண்படுத்தி பயன்படுத்தினாலே அதன் பயன் மக்களுக்கு முழுமையாகச் கிடைக்கும். ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு இவற்றின் துணை இல்லாமல் உலகம் இயங்காது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஐம்பூதங்களைச் சார்ந்தே வாழ்கின்றன. சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை அனைத்து இலக்கியங்களிலும் பாடல்கள் இயற்கையோடு இணைந்தே காணப்படுகிறது. நாடகம், புதினம், கவிதை, சிறுகதை என எத்தகைய இலக்கியமாக இருந்தாலும், அவற்றில் இயற்கையின் சாராம்சம் பொதிந்தே காணப்படும். தமிழர் வாழ்விலும், மரபிலும் இயற்கை, பண்பாடு, கலாச்சாரம் போன்றன வேர் போல ஊன்றி இருக்கும். அத்தகைய இயற்கையோடு இணைந்து நல்லாட்சியை வழங்கிய சம்புவராயர்களின் ஆட்சி தொண்டை மண்டலத்தில் பொற்காலமாகவே அமைந்தது.

தொகுப்புரை:

சம்புவராயர்கள் வட தமிழ்நாட்டை ஆண்ட சிற்றரச மரபினர். இவர்கள் பிற்காலச் சோழ அரசாங்கத்தின் கீழ் சிற்றரசர்களாக இருந்தவர்கள். சோழர்களின் அழிவுக்குப்பின் தொண்டை மண்டலத்தில் படைவீட்டை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். தொண்டை மண்டலத்தின் இயற்கை அமைப்பை அடிப்படையாகக் கொண்டே இவர்களின் ஆட்சி முறை இருந்தது. நாட்டை எதிரிகளிடம் பாதுகாத்தல், புதிய போர்க் கருவிகளை உருவாக்குதல், அந்நிய நாடுகளுடனான நட்புறவு, நாட்டில் புதுமைகளைப் புகுத்தல் போன்ற இத்தகைய செயல்பாட்டினூடே இயற்கையோடு இணைந்த ஆட்சியாக சம்புவராயர்களின் ஆட்சி அமைந்திருந்தது. பவளமலை எனப் பெயர் பெற்ற ஜவ்வாது மலை, தொண்டை நாட்டின் மிகப்பெரிய மதில் சுவராகவே அமைந்தது. சம்புவராயர்கள் இரண்டு தலைநகரங்களைக் கொண்டிருந்தனர். ஒன்று கோட்டை நகரமான 'படைவீடு'. மற்றொன்று வனப்பு மிக்க பாலாற்றங்கரையில் அமைந்த விரிஞ்சிபுரம். பாலாற்றங்கரையின் பட்டொளியில் வீற்றிருப்பதால் விரிஞ்சிபுரம் 'மரகத நகரம்' என்றழைக்கப்படுகிறது. அடர்ந்த காடுகளால் படர்ந்து பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு தொண்டை மண்டலத்தின் காவலரணாக 'இராஜகம்பீரன் மலை' விளங்கியதால் எதிரிகளுக்கு நாட்டின் உள்ளே நுழைவது என்பது அரிய செயலாகவே இருந்தது. தமிழகத்தின் நிலப்பிரிவுகள் பலவற்றில் பழமையும், முதன்மையும் கொண்டது தொண்டை மண்டலம். ஆட்சி செய்யும் மன்னனுக்கு மக்களின் துணை எந்த அளவிற்குத் தேவைப்படுகிறதோ அந்தளவிற்கு, அவன் அரசாட்சி செய்யும் பூமியும் அமைய வேண்டும். போர்க்களத்தில் எதிரியை வெற்றி காணும் அளவிற்கு மக்களின் அடிப்படைத் தேவையாக விளங்கும் இயற்கையைப் பேணிக் காப்பதிலும் மன்னனின் முழுக் கவனம் இருக்க வேண்டும். அந்த வகையில் சம்புவராயர்கள் மலைகளையே காவலரண்களாகப் பயன்படுத்தி, இயற்கை வளங்களைப் பண்படுத்தி மக்களுக்கு நல்லாட்சியைத் தந்தனர்.

துணைநூற் பட்டியல்:

1.            மண்ணும் மாந்தரும் - நடனகாசிநாதன். பக். 47, முதற் பதிப்பு டிசம்பர், 2014. மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

2.            தொண்டை மண்டலச் சம்புவராயர்களின் வரலாறு - ல.கு.சிவநேசன் பக்.6 முதற்பதிப்பு, டிசம்பர், 1989. சிவ.பிருந்தாவதி பதிப்பகம், முத்துக்காமாட்சி அம்மன் தோட்டம், சிதம்பரம்.

3.            சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம் - மாதையன் பெ. பக்.65 இரண்டாம் பதிப்பு, மார்ச் 2010. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

4.            பண்பாட்டு அசைவுகள் - பரமசிவன் தொ.பக்.32, 2003 காலச்சுவடு பதிப்பகம்.

5.            பண்பாட்டு மானிடவியல் - பக்தவச்சல பாரதி பக்.41, முதற்பதிப்பு, 2011 அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம்.

6.            நந்தா விளக்கு – துரைசாமிப் பிள்ளை. சு.ஔவை பக்.60, 1956 பதிப்பு எ.டி.என். நாகலிங்கம் அண்டு கம்பெனி புது மண்டபம், மதுரை.

7.            சம்புவராயர் வரலாறு – தங்கவேலு கோ.டாக்டர் தியாகராசன். இல. பக். 52, 1990 முதல் பதிப்பு கோபால் நாராயணன் நினைவு கல்வி அறக்கட்டளை, கொரட்டூர்.

8.            தமிழ்நாட்டு வரலாறு – பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வளர்ச்சி இயக்கம் பக.62, முதற்பதிப்பு, 2000.

- முனைவர் ம.வித்யாமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Pin It