ஏற்கனவே ‘தம்பிக்கு’ என்னும் தலைப்பில் ஒரு கடித இலக்கியத்தைப் படைத்தளித்த தோழர் சரவணகுமார் அவர்கள் அதன் தொடர்ச்சியாகத் தம்பிக்கு பாகம் 2 என்றதொரு நூலினைப் படைத்தளித்துள்ளார்.

நேரு தனது மூன்றாண்டு சிறைவாசத்தின் போது தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் தான் உலக வரலாற்றுப் பார்வை (Glimpses of World History) என்ற நூலாக வெளிவந்தது. அது உலகில் தோன்றிய நாடுகளின், மக்களின் வரலாறுகளைக் கூறியது. கிரேக்கம் போன்ற நாடுகளைப் பற்றி மட்டுமல்ல மங்கோலிய அரசுகள், செங்கிஸ்கான் போன்றோரையும் காட்சிப்படுத்தும் ஓர் நூல் அது. அண்ணாவின் ‘தம்பிக்கு...’ கலைஞரின் ‘உடன்பிறப்பே’ போன்ற கடித இலக்கியங்கள் தமிழக மக்களுக்கு மிகுந்த அறிமுகம் பெற்றவை .

saravanakumar book2007 ஆம் ஆண்டு நடந்த திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி மாநாட்டினை ஒட்டி நவம்பர் மாதம் ஏறத்தாழ 20 கடிதங்களை முரசொலி ஏட்டில் எழுதி இருந்தார் கலைஞர். அது உலக அரசியலைத் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யும் ஓர் முன்னெடுப்பு.

இவற்றைப் போலவே தான் நமது தோழர் சரவணகுமார் அவர்களின் இந்த முயற்சியும் ஆகும். மதத்தில் முன்வைக்கும் கருத்தாக்கங்கள் சில கருத்தியல் அடிப்படைகளைக் கொண்டே விளங்குகிறது.

அறநிலையத்துறை, ஆளுநரின் அடாவடிகள், ஆளுநர் பதவி, அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை, ஆகமங்கள், ஸ்மார்த்தர்களின் வேதநெறி மீறல்கள், பார்ப்பனர்கள் / தமிழர்கள் என்ற பெருந்தலைப்புகளுக்குள் நிகழ் கால நடப்புகளையும் உள்ளிணைத்தே அனைத்துக் கடிதங்களும் எழுதப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரத்தில் இருந்து சிறுமலை பற்றிய குறிப்புகள், கண்ணகி கோட்டத்தை 18 ஆண்டுகள் தேடிக் கண்டுபிடித்த தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரிப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் சந்திப்பு எனப் பல தகவல்களில் விரவிக் கிடக்கின்றன.

இலவசம் பற்றி குறை கூறிப் பேசுவோரை நோக்கி ஒரு கடிதம். தட்சணை, தானம், இலவசம், ஓசி என்பது கடிதத் தலைப்பு. சொற்கள் அனைத்தும் ஒரு பொருட் பன்மொழி வகைச் சொற்கள். பார்ப்பனருக்குக் கொடையாக அளிக்கப்பட்ட பிரமதேயம், மங்கலங்கள் என்பவற்றைப் பற்றியும், பல்வகை தட்சணைக் கொள்ளைகளைப் பற்றியும் கூறுகிறது இந்தக் கடிதம்.

அறநிலையத்துறை உருவான வரலாற்றை விளக்கும் மற்றொரு கடிதம். கடிதத்தின் தொடக்கப் பகுதியிலேயே தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்ரீ வைகுண்டம் கோயிலுக்குச் சென்ற போது “காசை உண்டியலில் போடாதீர்கள்! அர்ச்சகர் தட்டில் போடுங்கள்” என்று கூறிய செய்தியை நினைவு படுத்தித் தான் தொடங்குகிறார். பார்ப்பனக் கழுகுகள் உயர உயரப் பறந்தாலும் தட்சணை என்ற செத்த எலிகள் தான் கண்ணுக்குப் புலப்படும் போலும்! ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘இடைக்கால தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுகள்’ எனும் நூலில் இருந்து கி.பி. 900 முதற்கொண்டு நடந்த திருட்டுகளின் பட்டியலைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் பட்டியல் படுத்தியுள்ளதை எடுத்துக் காட்டுகிறார். அதன் பின்னர் தான் 1817 இல் கிழக்கின் கம்பெனி அரசு கோவில்களையும் மடங்களையும் ஒழுங்குபடுத்தும் சட்டம் Madras Regulation 18 17, Madras Endowment and Escheats Regulation 1817 இயற்றப்பட்டது என்பதைக் கூறுகிறார். (அதுவே 1969 இல் Tamilnadu Endowment and Escheats Regulation என்று பெயர் மாற்றப்பட்டது). தொடர்ச்சியாக நீதிக்கட்சி 1923இல் நிறைவேற்றிய ஆலய பரிபாலன மசோதா 1925 இல் அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலைய வாரியம் ஆகியவை உருவாக்கப்பட்டதையும், அதில் நீதிக்கட்சி முதலமைச்சர் பனகல் அரசரின் ராஜதந்திர நடவடிக்கையும் குறிப்பிடுகிறார். ஆலய பரிபாலன மசோதா நிறைவேற்றுகிற வேலையில் பனகல் அரசர், பின்னர் மத்திய அமைச்சராகவும் காஷ்மீர் ஆளுநராகவும் விளங்கிய என்.கோபாலசாமி அய்யங்கார் என்னும் ஐ.சி.எஸ். அதிகாரியைச் சிறப்பு உறுப்பினராக (Expert Member) என்று நியமித்ததோடு, அந்த வாரியத்திற்கும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி. சதாசிவம் ஐயரைத் தலைவராக நியமித்து எதிர்ப்புகளை மட்டுப்படுத்திய சிறப்பினையும் எடுத்துக் கூறுகிறார்.

செந்தமிழ்ச்செல்வியில் பேராசிரியர் கா.சு. பிள்ளை எழுதியுள்ள ‘சுமார்த்தக் கலப்பால் சிவாலயங்களில் நிகழும் இடையூறுகள்’ எனும் கட்டுரை தமிழக சமய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு ஆவணம். அது குறித்தும் அதன் செய்திகள் குறித்தும் விரிவாக அந்தக் கடிதத்தில் பதிவிட்டுள்ளார். அதுபோலவே 1940 இல் பேராசிரியர் கா.சு பிள்ளை அவர்களின் ‘தமிழர் சமயம்’ என்ற தலைப்பில் எழுதிய நூலில், குலபிறப்பு நூல் நம்பிக்கை வணக்கம் முறை கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு பெருந்தன நெறி தமிழர் சமயம். கலப்பு மணத்துக்கு இடையூறான விதிகளைச் சட்ட வாயிலாக ஒழித்தல் வேண்டும்.

 சீர்திருத்தங்களை எல்லாம் ஒருங்கு சேர்த்து ஜாதிக் குறைவு நீக்கும் சட்டம் ஒன்று இந்திய சட்டசபையில் நிறைவேற்றுவதற்குத் தக்க கிளர்ச்சி செய்து அதனை முற்றுப் பெறுவித்தல் வேண்டும், போன்ற செய்திகளை எடுத்து விளக்கி இருக்கிறது அந்தக் கட்டுரை.

அடுத்து தமிழ்நாடு பெயர் சூட்டலைப் பற்றிய விரிவான கடிதம் ஒன்று.

 அதில் 1956 ஜனவரியில் காங்கிரஸ் அல்லாத அனைத்துக் கட்சிகள் கூடி சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை நீக்கித் தமிழ்நாடு என்று இந்த நாட்டிற்குப் பெயர் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1956 ஜனவரியில் நிறைவேற்றியது -அதே கோரிக்கையோடு 1956 மார்ச் 27 அன்று சென்னை நேப்பியர் பூங்காவில் நடந்த சர்வ கட்சி கூட்டம் - அந்த கோரிக்கையை வலியுறுத்தி 1956 ஜூலை மாதம் 27 ஆம் நாள் முதல் விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொண்ட செய்திகள் - 21.10.1956 அன்று தமிழ்நாடு பெயர் சூட்டல் தொடர்பாக அண்ணா அவர்கள் எழுதிய தம்பிக்கு கடிதம் - இவை அனைத்திற்கும் முன்னால் 25 10 1955 அன்று தமிழ், தமிழ்நாடு என்கிற பெயர் கூட இந்த நாட்டிற்கு சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாத நிலை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடைய கழகத்தினுடைய பின்பற்றும் நண்பர்களுடைய வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்? என்ற கேள்வியோடு வெளிவந்த பெரியாரின் அறிக்கை - எனப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை நினைவூட்டுகிறது இந்தக் கடிதம்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை பற்றிய ஒரு கடிதம். அதில் அடிநாள் சுயமரியாதை வீரராகிய நாகர்கோயில் வழக்குரைஞர் பி. சிதம்பரம் பிள்ளை அவர்கள் எழுதிய நூலில் மேற்கோள் காட்டி இருக்கிற பி.டி. சீனிவாச ஐயங்காரின் கூற்றுகளையும் இந்தக் கடிதத்தில் எடுத்துரைக்கிறார்.

 “சுமிருதிகளின் உற்பத்தி வேதமாகும் ஆகமங்களின் உற்பத்தி திராவிடம் ஆகும் இந்த வேறுபாடு மிகவும் தலையானது. இரு பிறப்பாளர் (பார்ப்பனர்) மட்டுமே வேதங்களைப் பயிலலாம். ஆனால், அதாவது ஒருவன் தாழ்த்தப்பட்ட வகுப்பினனாக இருந்தாலும் சண்டாளனாக இருந்தாலும் ஆகமங்களைக் கற்றுக் கொள்ளும் உரிமை அவனுக்கு உண்டு. வேதங்களையும் சுமிருதிகளையும் பயில்வதில் இருப்பதைப் போன்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை” என்கிறார் பி.டி. சீனிவாசய்யங்கார்.

மேலும் இன்றைய இந்து சமயம் ஏறத்தாழ முற்றிலும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. வேதங்களைக் கொஞ்சம் கூட அடிப்படையாகக் கொண்டது அல்ல. மதத்தில் ஊறியது இந்தியா. அந்த மதம் ஆகம மதமே ஒழிய வேத மதம் அன்று .

ஆகமம் என்ற சொல்லின் பொருள் தொன்று தொட்டு வந்தது என்பதாகும். ஆகமம் என்பதற்கு முன்னோர் மொழி ஆப்த வசனம் என்றும் பொருள் உள்ளது.

வேத சடங்குகள் நெருப்போடு தொடர்புடைய அக்னிச் சடங்குகள். ஒவ்வொரு செயலுக்கும் தீயுண்டாக்கி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருள்கள் இறைவனைச் சென்றடைகின்றன என்பது நம்பிக்கை. ஆனால் ஆகம முறைகளில் தீக்கு வேலை இல்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டு பொருள்களைக் காட்டிவிட்டு எடுத்துக் கொள்ளலாம். வேத சடங்குகளில் கடவுளின் உருவத்திற்கு இடமில்லை. எல்லாக் கடவுளுக்கும் நெருப்பு தான் இடைத்தரகர். ஆனால் ஆகம வழிபாட்டில் உருவ வணக்கம் (அது குறியீடாகவோ படிமமாகவோ எப்படியும் இருக்கலாம்) கட்டாயமானது.

இன்னும் ஏராளமான ஆதாரங்களை முனைவர் க. நெடுஞ்செழியன், தொ. பரமசிவம் போன்றோரின் நூல்களில் இருந்தும் ஆதாரம் காட்டி விளக்குகிறது இந்தக் கடிதம்.

ஆளுநர் பதவி, கோவில் நுழைவுப் போராட்டங்கள், ‘தூய தமிழர்களான’ ம.பொ.சி, சீமான் போன்றோரின் உள்ளீடற்ற வாதங்களின் பொய்மை எனப் பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்தக் கடிதங்கள் - வடிவில் கடிதங்கள் ஆக இருந்தாலும் தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு மக்களின், தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை முன் வைத்து பல்வேறு வகையில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையன. தமிழர் நலனில், தமிழ்நாட்டு உரிமைகளில், தமிழ் மக்களின் உரிமைகளில் அக்கறையுள்ள அனைவரும் படித்தறிய வேண்டிய ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய ஆதாரக் களஞ்சியமே இந்த நூல். அனைவரும் வாங்குங்கள்!

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்