இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு துணைப்பகுதியாக விளங்கிய தமிழ்நாடு தனக்கென சீரிய வரலாற்று விழுமியங்களைக்கொண்ட தொன்மையான நிலப்பகுதியாகும்.

அண்மைக்காலத்தில் தமிழ் நிலப் பகுதியில் நிகழ்ந்த பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் தமிழக வரலாற்றின் தொன்மையை கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு நகர்த்தியுள்ளன. வரலாற்றறிஞர் கா.ராஜனின் கருத்துப்படி கி.மு. 2500 என்று கணக்கிடப்பட்ட சிந்துச் சமவெளி நாகரிகக் காலத்திற்கு அருகில் தமிழர் நாகரிகம் வந்துள்ளது. தமிழரின் பண்டைக்கால வரலாற்றாய்வானது அய்ரோப்பிய அறிஞர்களின் பார்வையைக் கடந்து இந்திய, தமிழக, உலக வரலாற்றறிஞர்களின் பார்வைக்கு ஆட்பட்டுள்ளது. அமர்நாத் ராமகிருட்டிணா, பாலகிருஷ்ணன், ஐராவதம் மகாதேவன், அதியமான், கா.ராஜன், சுப்பராயலு, பூங்குன்றன், வேதாச்சலம், ராசவேலு, செல்வகுமார் ஆகிய நம் கால தமிழக அறிஞர்களின் நுணுக்கமான ஆய்வுகள், நொபுரு கரோஷிமோ, பெர்ட்ரண்ட்ப்ன் ஆகிய பிற நாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் அய்ந்திணைச் சமூகம் குறித்த வரலாற்றாய்வுகளும் இடைக்காலத் தமிழக வரலாற்றாய்விலும் புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளன.

ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொற்கை, பூம்புகார் ஆகிய ஊர்ப்பெயர்களே தொல்லியல் ஆய்வுக்களங்களாக விளித்து வந்த நிலையில் இன்று கொடுமணல், அழகன்குளம், பொருந்தல், புலிமான்கோம்பை, கீழடி, பழனிமலைக் குன்றுகள், சிவகளை என்று புதிய ஆய்வுக்களங்களின் பெயர்கள் பரவலாக இன்று அறிமுகமாகியுள்ளன.jayaseela stephen booksஇங்குக் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் புதிய வரவாக அமைந்துவிட்டன. ஆறு பாயும் மருதநிலப்பகுதி மட்டுமின்றி ஆறு பாயாத சரளைக்கல் பகுதிகளும் நாகரிகத்தின் இருப்பிடமாக விளங்கிய உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் நம் வரலாற்றாய்வு வளர்ச்சியில் புதிய அடையாளங்கள்.

ஆனால் மற்றொரு பக்கம் தமிழகத்தின் காலனியக் கால வரலாறானது ஆங்கிலேயர், பிரெஞ்சியர், ராபர்ட் கிளைவ், டியூப்ளே, ஆர்க்காடு நவாப், பாளையக்காரர்கள் எழுச்சி என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே இன்றுவரை சுழன்று கொண்டிருக்கிறது.

கி.பி. மூன்று அல்லது கி.பி நான்காவது நூற்றாண்டுகளையே சங்க காலம் எனும் கூற்றை மாற்றியமைக்கும் தொல்லியல் சான்றுகளைக் கண்டறிந்த நம்மால் கி.பி.16, 17, 18ஆவது நூற்றாண்டுகளில் அறிமுகமான தொடக்ககாலக் காலனிய காலத் தமிழகத்தின் சமூக நிலையை அறிந்துகொள்ள முடியாமல் போனது விந்தையே.

விஜயநகரப் பேரரசின் படையெடுப்பையடுத்து அவர்களால் உருவாக்கப்பட்ட மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் ஆகிய நாயக்கர் ஆட்சிப் பகுதிகளில் மதுரை நாயக்கர் வரலாறு மட்டுமே துலக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் காலத்தில்தான் தொடக்ககாலக் காலனியம் தமிழ்நாட்டில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றைக் கடந்து தொடக்காலக் காலனிய வரலாற்றுக்குள் நாம் நுழையமுடியவில்லை. இங்கு தொடக்ககாலக் காலனியவாதிகள் என்போர் போர்ச்சுக்கீசியர், டச்சு நாட்டினர், டேனிஷியர் ஆகியோரைக் குறிக்கும். இவர்களைக் குறித்து விரிவான வரலாற்றுச் செய்திகள் எதுவும் சராசரித் தமிழர்களிடம் அறிமுகமாகவில்லை. அவர்கள் விட்டுச் சென்ற கல்லறைகளும் கட்டடங்களும் தேவாலயங்களும் மட்டுமே அவர்கள் இருந்தமைக்கு சாட்சிகளாக இடம்பெற்றுள்ளன. இதிலும்கூட கிருத்தவத் திருச்சபைகளின் வரலாற்றுப் புரிதலின்மையால் பழமையான தேவாலயங்களும் கல்லறைகளும் இடிபட்டு அழிந்து போயுள்ளன. நம் கல்விப்புல வரலாற்றறிஞர்களின் காலனியம் குறித்த ஆய்வில் பிரெஞ்ச், பிரிட்டிஷ் காலனியமே அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. மேற்கூறிய மூன்று தொடக்ககாலக் காலனியம் குறித்த வரலாற்றுத் தேடல் தமிழில் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை.

தொடக்காலக் காலனியவாதிகளின் ஆட்சியில் அவர்களின் கடல் வல்லாதிக்கம், கிறித்தவ மதப்பரப்பல், அடிமை வாணிகம், முத்து, சங்கு ஆகிய கடல்படு பொருள்களின் வாணிபத்தில் அவர்களின் மேலாதிக்கம், உள்நாட்டுப் பகுதியில் அவர்கள் நிகழ்த்திய தானியக் கொள்முதல், நெசவாளர்கள் உள்ளிட்ட கைவினைஞர்களை ஒன்றுதிரட்டி பட்டறைத் தொழிலாளர்களாக மாற்றியமை எனப் பல சமூக நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. மொத்தத்தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய கட்டமான வாணிப முதலாளித்துவம் (mercantile capitalism) இவர்களின் வரவால் உருவாகியுள்ளது. இவையெல்லாம் விரிவாக ஆராய வேண்டிய முக்கிய வரலாற்றுக் களங்கள்.

கி.பி 1799இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கெதிராகப் போராடிய கட்டபொம்மன் நடத்திய முதலாம் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் அவருக்கு வெடிமருந்துகள் கொடுத்து உதவியவர் போர்ச்சுக்கீசியர்களின் ஆதரவு பெற்ற பரதவர்களின் சாதித் தலைவர்தான்.

1801இல் இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போரை ஊமைத்துரை நடத்தியபோது தூத்துக்குடியில் இருந்த டச்சு நாட்டினர் அவருக்கு உதவி புரிந்துள்ளனர்.

பெரியதம்பி மரைக்காயர் என்ற பெருவணிகர் ராமநாதபுரம் ஜமீன்தாரின் ஆதரவுடன் டச்சுக்காரர்களுடன் போரிட்டு அவர்களுடைய பண்டகசாலைகளையும் தேவாலயங்களையும் அழித்துள்ளார்.

தூத்துக்குடி நகருக்கு மேற்கே பல கி.மீ தொலைவிலுள்ள நெல் விளையும் வளமான பகுதிகளில் நெல் கொள்முதல் செய்து இலங்கைக்கு டச்சுக்காரர்கள் ஏற்றுமதி செய்துள்ளனர்.

மதுப்பிரியர்களான சங்குகுளித் தொழிலாளர்களுக்கு தம் நாட்டு மதுவை வழங்கி குறைந்த கூலி கொடுத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டியுள்ளனர்.

நவீன மருத்துவமனை, அச்சுக்கூடம் என்பன தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் என்ற கடற்கரைச் சிற்றூரில் போர்ச்சுக்கீசியர்களால் அமைக்கப்பட்டுள்ளன.

நம்மவர்களை விலைபடுபொருளாக்கி டச்சுக்காரர்கள் அடிமை வாணிபம் செய்துள்ளனர்.

டேனிஷியர் ஆட்சியில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் ஆறு கடற்கரை ஊர்களையும் 16 உள்நாட்டு ஊர்களையும் தஞ்சை நாயக்க மன்னரிடமிருந்து குத்தகைக்கு எடுத்த டேனிஷியர்கள் அங்கு முறையான சிவில் ஆட்சியையும் நீதிமன்றம், பண்டகசாலை, கோட்டை, நாணயச்சாலை என்பனவற்றையும் நிறுவியுள்ளார்கள்.

வரலாற்றின் பிற்காலத்தில் ‘கிறித்தவத்தின் நுழைவாயில்‘ என்ற பெயரை தரங்கம்பாடி பெற்றதற்கான சூழலை இங்கு உருவாக்கியுள்ளார்கள்.

மேற்கூறிய மேலோட்டமான செய்திகள் தவிர நாம் அறிய வேண்டிய ஆழமான சமூக வரலாற்றுச் செய்திகள் பலவும் உண்டு. ஆனால் இவற்றில் நாம் பின்தங்கியிருப்பதற்கு முக்கியக் காரணம் போர்ச்சுக்கீஸ், டச்சு, டேனிஷ் ஆகிய மூன்று மொழிகளில் பயிற்சி இல்லாமைதான். இத்தகைய சூழலில் இம்மூன்று மொழிகளையும் கற்றறிந்த பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் தன் மொழியறிவின் துணையால் இந்நாடுகளின் ஆவணக் காப்பகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் நூலகங்களிலும் நுழைந்து ஆவணங்களையும் அக்கால ஓவியங்களையும் திரட்டி ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து நூல்களை எழுதி வருகிறார்.

இவரது நூல்களில் இடம்பெறும் சிறுசிறு செய்திகள்கூட அக்காலச் சமூக ஆய்வுக்கான தரவுகளாக விளங்குகின்றன.

இவரது நூல்களின் உள்ளடக்கத்தினால் பெரிய அளவிலான வாசகர் தளம் இவருக்கு அமைந்துள்ளது. காலனியத் தொடக்கக் காலம் தொடங்கி இதுவரை 17 நூல்கள் என்சிபிஎச் வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. ஒரு நூலாசிரியரான இவரைப் பாராட்டும் அதே நேரத்தில் இவரது ஆற்றல் அடுத்த இளந்தலைமுறையினருக்கு கிடைக்க வழி வகுக்க வேண்டும். இதன் முதற்படியாக ஆற்றல் வாய்ந்த இளம் வரலாற்று மாணவர்களைத் தேர்வுசெய்து மேற்கூறிய மூன்று மொழிகளையும் கற்கச்செய்து, மூல ஆவணங்களைக் கண்டறிந்து தமிழில் மொழிபெயர்க்க தமிழ்நாடு அரசு ஒரு ஆய்வு நிறுவனத்தை அவரது வழிகாட்டுதலில் நிறுவ வேண்டும்.

- ஆ.சிவசுப்பிரமணியன்