கல்வி, அறிவியல், கலை, பண்பாடு ஆகிய அனைத்து பரிணாமங்களிலும் அற்புதமான வளர்ச்சி கண்டிருந்த ஜெர்மனியில் 1930 ஆம் ஆண்டுகளில் நாஜி இன அழிப்பும் கொடூரங்களும் நிகழ்ந்தன. நாஜி அரசு இரண்டாம் உலகப் போருக்கு முதன்மையான காரணமாக இருந்து 8 கோடிக்கும் மேலான மானுட உயிர்களைப் பலி கொண்டது. சுமார் 300 ஆண்டுகாலத்தில் ஐரோப்பா கட்டி எழுப்பியிருந்த தொழிற்சாலைகள், உள்கட்டுமானங்கள், நிறுவனங்கள் எல்லாம் தவிடுபொடியாயின. இத்தகைய மானுடப் பேரழிவை நிகழ்த்திய ஒரு குறுங்குழு உருவாகி வலுப்பெற்றது எப்படி என்ற வினா கோடிகளின் பெறுமதி கொண்டது. அதற்கு இந்தப் பத்தியின் சிறு எண்ணிக்கை சொற்களின் வரம்பு போதாது.fascismஆனால் இதனையெல்லாம் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்ட ஜெர்மானிய மக்கட் பகுதி என்ன செய்தது? இந்தக் கேள்விக்கான பதிலையே மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள தோழரின் அட்டை கூறுகின்றது. அதனை காசா படுகொலைக்கு எதிராக ஐரிஷ் இடதுசாரிகள் நடத்திய பேரணியில் இருந்து எடுத்து அனுப்பினார் ஒரு தோழர். இந்த நிலையில்தான் உலகின் பல பகுதியிலும் எழும்பி வரும் ஃபாசிசம் குறித்த கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்ற நடுத்தர வர்க்கத்தினரின் அணுகுமுறை அலட்சியமாக, கண்டும் காணாமல் உள்ளது. இன்னும் இதனைத் தாண்டி ஃபாசிசத்தின் தீ நோக்கம் தெரியாதவர்கள் போல, ‘எல்லாம் சகஜமாக்கும்’ என்பது போல அதன் நடவடிக்கைகளை விதந்தோதுபவர்களாகவும் அவர்களில் பலர் இருப்பதையும் சமீப காலங்களில் கண்டோம். அவர்களில் சிலரை பரந்துபட்ட மக்களின் நண்பர்கள், ஜனநாயகத்தின் தோழர்கள், இடதுசாரிகளின் சக பயணிகள் என்றெல்லாம் கூட நாம் அப்பாவியாக நம்பியிருந்திருக்கின்றோம்.

மரபார்ந்த தாராளவாத முதலாளித்துவம் தன் உள்ளார்ந்த முரண்பாடுகள் காரணமாக நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றது. சர்வதேச அளவில் முதலாளித்துவத்தின் சிக்கல்தான் என்றாலும் முதல் பலியாவது உலகெங்கும் இருக்கின்ற உழைப்பாளி மக்கள்தாம். அவர்களது வாழ்வின் பிரச்சினைகளும் துயரங்களும் மேலும் மேலும் அதிகமாகி அவர்களது வாழ்க்கையையே பெரும் தண்டனையாக ஆக்கிக் கொண்டிருக்கின்றது.

பிரச்சினையின் காரனங்களை அறிந்து உணர்ந்துகொண்ட மக்கட் பகுதியினரின் போராட்டங்களும் எதிர்வினைகளும் உலகெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆதிக்க சக்திகள் இதற்கு எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், ’கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்’ என்று பாரதி சொல்வதற்கிணங்க பிரச்சினைகளின் மூலவேர் எதுவெனத் தெரியாதோரே பெரும்பான்மை. தங்கள் வர்க்கம், இனம், சாதி, தேசத்தின் ஆதிக்கத்தினை காப்பாற்றிக் கொள்ள, இல்லாதார் மத்தியிலேயே ஒரு பகுதியை மற்றோருக்கு எதிரியாக சித்தரிக்கும் ஃபாசிச பயிற்சிப் புத்தகத்தின் பக்கங்களையே உலகெங்கும் ஃபாசிசம் நடைமுறைப்படுத்துகின்றது.

கூட்டமான பெருநகரப் பேருந்தில் அருகருகே நிற்பவர்கள் இடையேதானே சண்டையும் சச்சரவும் எரிச்சலும் கோபமும் எழுவது எதார்த்தமாக நிகழ்வது? பேருந்தின் முன்பகுதியில் ஓட்டுனர் அருகே நிற்பவரும் பின்பகுதியில் நடத்துனர் அருகே நிற்பவரும் கெழுதகை நண்பர்கள்தானே? இந்த உளவியலை உலகெங்கும் உள்ள ஃபாசிச ஆதிக்க சக்திகள் திறனுடன் பயன்படுத்துகின்றன. சீனாதான் அமெரிக்காவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்; சீனர்களும் இந்தியர்களும்தான் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளையெல்லாம் பறித்துக் கொள்கின்றனர்; இஸ்லாமியர்கள்தான் உலகெங்கும் தலைவிரித்தாடும் பயங்கரவாதத்திற்குக் காரணம்; ஆப்பிரிக்கக் கருப்பினக் குடியேறிகளும் இஸ்லாமிய ஏதிலிகளும்தான் ஐரோப்பாவின் பிரச்சினைகளுக்குக் காரணம்; இஸ்லாமியர்கள்தான் இந்துக்களின் இழிநிலைக்குக் காரணம்; நமது வஹாபிய இமாம்களின் கருத்துகளுக்கு மாறான நவீனத்துவ சிந்தனைகளும் ஆண் பெண் சமத்துவப் பேச்சுகளும்தாம் இஸ்லாமியர்களின் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று உலகெங்கும் மக்கள் கூறுபோடப் படுகின்றனர்.

உண்மையான பிரச்சினைகளின் காரணங்களை அறிவியல் பூர்வமாக விளக்கி அதற்கு ஜனநாயக பூர்வமான தீர்வை முன்வைப்பவர்கள் எங்கெல்லாம் தோல்வியுறுகின்றார்களோ அங்கெல்லாம் ஃபாசிச சக்திகள் வலுப் பெருகின்றார்கள். ஒரு புறம், இந்தப் பணியை காலங்காலமாக இடையறாது செய்து கொண்டிருக்கும் இடதுசாரிகள் வலு குறைந்து போயிருப்பது ஏன் என்ற வினாவிற்கு விடை தேடுவது தேவை. இதனை எந்தவித மனத்தடையுமின்றி எந்தவித புனித வழிபாடுமின்றி நடத்துவது காலம் இடதுசாரிகளுக்கு இட்டுள்ள கட்டளை. மறு புறம் கடந்தகால பேராசான்கள், செயல்பாட்டாளர்கள் ஆற்றிய கடும்பணியின் காரணமாக இடதுசாரிகளும் ஜனநாயக சக்திகளும் பெற்றுள்ள கல்வி மற்றும் தெளிவின் வெளிச்சத்தை பரவலாகக் கொண்டு செல்லும் கடமையை காலம் அவர்களுக்கு அளித்துள்ளது.

இந்தக் கருத்த இரவை
விரிந்து பரந்த பாலையை
உயர்ந்து ஓங்கிய மலையை
இருண்ட ஆழம்காணாப் பெருங்கடலை
நீங்கள் கடக்க வேண்டும்
ஜாக்கிரதை விழிப்புடன் இருங்கள்

தள்ளாடுது படகு
பெருக்கெடுக்கிறது வெள்ளம்
கிழிந்துபோனது பாய்மரம்
வழியைத் தொலைத்தார் படகோட்டி
இப்போது யார் தலைமையேற்று எம்மை
வழிநடத்திச் செல்வது?
யாருக்குள்ளது ஆற்றலும் துணிச்சலும்
எதிர்காலம் உம்மைக் கூவி அழைக்கிறது
உண்மையும் திண்மையும் கொண்டோரே முன்னே வாருங்கள்.

- கவி நஸ்ருல் இஸ்லாம்

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு