election notice2021 ஏப்ரல் 6 - அன்று தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் அரசியல், பொருளியல், பண்பாட்டு வாழ்வைத் தீர்மானிக்கும் சட்டங்களை இயற்றும் முழுமையான அதிகாரம் படைத்த அவையாக சட்டப்பேரவை இல்லை என்ற போதிலும், தமிழக மக்களின் விருப்பங்களை, கோரிக்கைகளைப் பிரதிபலிக்கக் கூடிய அவையாக சட்டப்பேரவை விளங்குகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டிற்கு விரோதமான கட்சிகளை அரசியலை மக்களிடம் அடையாளம் காட்டவும் அதற்கெதிரான கேள்விகளை மக்கள் எழுப்பவும் நமது அரசியலை கோரிக்கைகளை மக்களிடம் கொண்டுசெல்லும் வாய்ப்பாக இத்தேர்தலை மக்கள் இயக்கங்கள் கருதுகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் பணம், சாதி, சமய, வட்டார, பதவிக் கணக்குகளைக் கொண்டும் தேர்தல்முறை குறைபாடுகளோடும் தீர்மானிக்கப் படுகிறது. இதற்கு மாறாக தமிழ் மக்களின் நலன், தமிழ்நாட்டின் நலன், உண்மையான மக்களின் பங்கேற்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அணுகப்பட வேண்டும்.

தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டில் சொந்த விருப்பங்கள் குழு நலன் கட்சி நலன் அதிகார வேட்கை என்பதையெல்லாம் புறம்தள்ளி தமிழ்நாட்டு நலன் தமிழ்மக்களின் நலன் என்பதை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்கபட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான நிலைப்பாட்டை மக்கள் இயக்கங்கள் முன் வைக்கிறது.

2014 முதல் இப்பொழுது வரை நடுவணரசில் ஆட்சிப் நடத்தி வரும் பாரதிய சனதா கட்சி ஒரே தேசியம், ஒரே அரசு, ஒரே சந்தை, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒற்றையாட்சி என்ற ஒற்றைத் தன்மையில் நின்று கொண்டு இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப குடியுரிமைப் பறிப்புச் சட்டம், காசுமீர் உடைப்பு, இராமர் கோயிலுக்கு அடிக்கல், இஸ்லாமியர்களுக்கு எதிரான தில்லி கலவரம் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டே ஏகபோக ஒற்றைச் சந்தையை உருவாக்கும் பொருட்டு மாநிலங்களுடைய உரிமைகள் மக்களுடைய உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் நீட், ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டத்திருத்தங்கள், தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு, மின்சார திருத்தச் சட்ட வரைவு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீட், புதிய கல்விக் கொள்கை, தேசிய நுழைவுத் தேர்வு முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தனியார் மயமாக்கப்படும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றால் பெரும் பகுதி தமிழக மாணவர்கள் வடிகட்டப்படுகிறார்கள். அதேபோல், தமிழ்நாட்டின் வேலை, தொழில், வணிகம் கபளீகரம் செய்யப்படுவதால் தமிழக இளைஞர்கள் தாக்குதலுக்குள்ளாக்க பட்டுள்ளார்கள்.

ஜி.எஸ்.டி வரி வசூலால் தமிழ்நாடு தனது வரிவசூல் செய்யும் அதிகாரத்தை இழந்ததோடு பெரும் பகுதி செல்வத்தை வரியாக இழந்து வருவதோடு தமிழ்நாட்டு பொருளாதாரமும் சீர்குலைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் தனித்தமிழ், சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமைப் போராட்டம், இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்க மரபின் மீது அன்றாடம் புதுப்புது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றது. நிலவும் இந்த அமைப்பு முறையே மைய சர்வாதிகாரிகளையும் மாநில அடிமைகளையும் உருவாக்கும் முறையாக விளங்குவதை ஆர்.எஸ்.எஸ் - பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.

ஆர்.எஸ்.எஸ் - பாஜக நாடாளுமன்ற அமைப்பு முறைக்கு ஊடாகவே தன்னுடைய சமூக அடித்தளத்தை ஆழ அகலமாக விரிவாக்கி வருகின்றது. ஒவ்வொரு தேர்தல் வெற்றியையும் பாசிசத்திற்கான சமுதாய இயக்கமாக பரிணமிக்கச் செய்து இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கும் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை விரிவாக்குவதற்கும் கிடைத்துள்ள வாய்ப்பாக பாவிக்கின்றது.

இத்தகைய பாசிச சூழலை எதிர்கொள்வதே தமிழ்மக்களின் இன்றைய நிலையாக உள்ளதோடு தமிழ்மக்களின் அரசியல் முடிவுகளையும் வடிவமைக்கிறது. இதனடிப்படையிலேயே வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் களத்தையும் முதன்மைச் சிக்கலாக உள்ள பாசிச எதிர்ப்பு என்பதை அடிப்படையாக கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

ஒற்றையாதிக்க அகண்ட பாரதம், பார்ப்பனிய சமூக அமைப்பைக் கொண்ட அம்பானி அதானி ராஜ்யம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான சட்டவிரோத, சட்டப்பூர்வ அமைப்புகளின் தேர்தல் அமைப்பாக செயல்படும் பாஜக ஒரு தனிவகைப்பட்ட பாசிசக் கட்சி. எனவே, இக்கட்சி இன்றைக்கு ஆட்சி அதிகாரத்திலும் இருப்பதால் இதை மற்றுமொரு கட்சியாக பார்த்துவிட முடியாது.

இன்றைய பாஜகவை வேறெந்த கட்சியுடனும் சமப்படுத்தி கருதிப் பார்க்க முடியாது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகவும் எதிராகவும் விளங்கக் கூடிய பாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டம் தமிழ் மக்களின் உடனடி கடமையாகிறது. அதையே இந்தத் தேர்தலிலும் பாசிச பாஜகவை தோற்கடிப்போம் என்ற தேர்தல் முழக்கமாகவும் முன் வைக்கிறோம்.

பாசிச பாஜகவை தோற்கடிப்போம்...

பாசிச பாஜக எதிர்ப்பு என்பது வெறும் ஒற்றையாதிக்க சர்வாதிகார எதிர்ப்போடு முடிவதல்ல, அதற்கு மாறாக சனநாயகத்தை உறுதி செய்யக் கூடிய நிலைமைகளை உருவாக்குவது அவசியமாகும். தமிழ்நாட்டின் பல்வேறு மக்கள் போராட்டங்களில் இருந்தும் தேவைகளில் இருந்தும் எழுந்த கோரிக்கைகளை வகைப்படுத்தி முன்வைக்கிறோம்.

இவற்றை ஒற்றை ஆதிக்கத்திற்கு எதிரான தமிழ்நாட்டின் அதிகாரங்களை தமிழ்மக்களின் நலன்களை வலியுறுத்தக் கூடிய கோரிக்கைகளாக தமிழ் மக்கள் எழுப்ப வேண்டும் என்கின்ற அடிப்படையில் முன் வைக்கிறோம். தேர்தலில் பங்குபெறும் கட்சிகள், வேட்பாளர்களிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைப்பதோடு அது குறித்த அவர்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தக் கோருவதோடு அவற்றை நிறைவேற்றக் கோருவோம்.

• தமிழ்நாட்டில் தண்ணீர், உணவு, வீடு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையாக்கப்பட்டு அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

• தமிழ்நாட்டின் கல்வி, வேலை, தொழில், வணிக வாய்ப்புகள் அனைத்திலும் தமிழ்நாட்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

• தமிழே ஆட்சிமொழி, அலுவல்மொழி, கல்விமொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை ஏற்பட வேண்டும்.

• தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம், மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக தமிழாராய்ச்சி இருக்கைகளுக்கு போதிய நிதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டும்.

• தமிழ்நாட்டு வேளாண் விளைபொருட்களுக்கு நம் உழவர்களே விலையை நிர்ணயிக்க வழிவகை செய்யவும், சந்தையில் தமிழக விளைபொருட்களுக்கே முன்னுரிமை வழங்கவும் வேண்டும்.

• காவேரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் முழுமையான வேளாண் மண்டலமாக மாற்றியமைக்கப்பட்டு அவை வளர்த்தெடுக்கப் படவேண்டும்.

• உழவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிய கூலி, மற்றும் வேலை நேரத்தை வரையறை செய்து வழங்க வேண்டும்.

• நம் தமிழ்நாட்டுக் கடல்வளம் நம் தமிழ்நாட்டு மீனவருக்கே என்பதை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

• தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, பணி மற்றும் ஓய்வு கால பலன்களை உறுதிசெய்ய வேண்டும்.

• குறைந்தபட்ச ஊதியமாக நகர்ப்புறங்களில் 1000/ கிராமப்புறங்களில் 750 என்பதை உறுதி செய்ய வேண்டும்.

• உழைப்பின் ஊதியத்தில் ஆண்/பெண் பாகுபாட்டை ஒழிக்க வழிவகை செய்ய வேண்டும்.

• தமிழ்நாட்டின் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.

• தமிழ்நாட்டில் தற்சார்புத் தொழில் மண்டலங்களை உருவாக்க வேண்டும்.

• டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்து மூட வேண்டும். குடிநோயர்களுக்கு உரிய மறுவாழ்வு சிகிச்சை அளிக்க வேண்டும்.

• இஸ்லாமியர்கள் நிலை தொடர்பான சச்சார் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

• சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்(ஹிகிறிகி), அரச துரோகச் சட்டம் போன்ற கொடுஞ்சட்டங்களைப் தமிழக அரசு பயன்படுத்தக் கூடாது.

• தூத்துகுடிப் படுகொலை குறித்து நீதி விசாரணை செய்து கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

• கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகள் மூடப்பட வேண்டும்.

• ஈழத் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட இனவழிப்பு குற்றத்திற்காக இலங்கை அரசைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் அரசியல் தீர்வுக்குப் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும்.

• தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு விரும்பும் தமிழீழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவும் வேண்டும்.

• தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1% இடஒதுக்கீட்டை திரும்ப வழங்க வேண்டும்.

• தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு நிலம் மற்றும் வீட்டுமனை வழங்கவும் தனி நலவாரியம் அமைக்கப் பட வேண்டும்.

• வெளிமாநிலங்கள், நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் கல்வி, வேலையில் தனி இட ஒதுக்கீடு வழங்க பட வேண்டும்.

• புலம் பெயர்ந்த தமிழர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டு அவர்கள் நலன் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

• ஏழு தமிழரை விடுதலை செய்யக் கோரும் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

• தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

• சமூக நோக்கங்களுக்காகச் செயல்பட்டு சிறைபடுத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

• 10 ஆண்டு தண்டனை நிறைவு செய்த அனைத்து சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

• சிறை சிறையாளிகளை தண்டிக்கும் கூடங்களாக அல்லாமல் மாற்றியமைக்கும் சமூகப் பள்ளிகளாக நடத்த வேண்டும்.

• தமிழ்நாட்டில் உள்ள தனியார் மயமாக்கப்படும் தொடர் வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகம், ஆலைகள் உள்ளிட்ட நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

• தமிழ்நாட்டிற்குத் தேவையான எரிவாயு, பெட்ரோல், டீசல் எண்ணெய்களை தமிழ்நாடு அரசே நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய வழிவகுக்க வேண்டும்.

• தமிழ்நாட்டு மீனவர்களை பழங்குடிப் பட்டியலில் இணைத்து தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

• தமிழ்நாட்டில் உள்ள 364 சமூக்க குழுக்களும் ஒரு பொதுச் சமநிலையை எட்டத் தேவையான சமூக நீதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

• கல்வி, சமயம், வழிபாடு, பண்பாட்டுத் தளங்களில் சமஸ்கிருதமயமாக்கம்/காலனியாதிக்க நிலைகள் நீக்கப்பட்டு அவற்றை சனநாயகத் தன்மை உள்ள வகையில் தமிழ்ப்படுத்த வேண்டும்.

• வடமொழியால் மறைக்கப்படும் திருக்கோயில்களின் உண்மையான வரலாற்றுப் பெயர்கள் மீட்டெடுக்கப் படவேண்டும்.

• ஆரம்பக் கல்வியில் இருந்து சித்தமருத்துவத்தை கற்பதற்கும், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்கவும், மாவட்டம் தோறும் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவப் பிரிவுகளை உருவாக்கவும், அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவமுறைகள் இணைந்த கூட்டு சிகிச்சை முறையை அளிக்கும் மருத்துவமனைகளை உருவாக்கவும், தனிச்செயலர் தலைமையிலான தனி சித்தமருத்துவத் துறையை உருவாக்கி அதன் வழியாகத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தமிழ் மக்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் நிலைப்பாடுகள் எடுக்க வலியுறுத்துவதோடு அவற்றிற்காக சட்டம் இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் அதிகாரமும் நிதியும் தமிழக அரசுக்கு இல்லாத இனங்களில் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு பின்வரும் அரசியல் அதிகாரம் தொடர்பான கோரிக்கைகளையும் வென்றெடுக்க வலியுறுத்துவோம்.

• கல்வி, கல்விமுறை, கல்வி நிறுவனங்கள் குறித்த அனைத்து அதிகாரமும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே வேண்டும்.

• வேலை, தொழில், வணிகம் குறித்த அனைத்து அதிகாரமும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே வேண்டும்.

• தமிழ்நாட்டின் வரி, வருவாய், வளம் குறித்த அதிகாரங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே வேண்டும்.

• தமிழ்நாட்டின் ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி, கல்வி மொழி என மொழிக் குறித்த அனைத்து அதிகாரமும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே வேண்டும்.

• தமிழ்நாட்டின் நீர், நிலம், கடல், வனம் குறித்த அதிகாரங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே வேண்டும்.

• தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடிகள், பட்டியல் பிரிவினர், இனங்களின் அடையாளம் மற்றும் இட ஒதுக்கீடு குறித்த அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே வேண்டும்.

• தமிழ்நாட்டில் சமயம், பண்பாடு, கலை, இலக்கியம், தொல்லியல், வரலாறு, மருத்துவம் குறித்த அனைத்து அதிகாரமும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே வேண்டும்.

• தமிழ்நாட்டின் குடியுரிமை, குடியகல்வு, குடிவருகை குறித்தான அனைத்து அதிகாரங்களும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கே வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கானவை என்று அறிந்தேற்று அதை இந்த தேர்தல் களத்தில் வலியுறுத்துமாறு தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக்கொள்வதோடு தேர்தலில் பங்குகொள்ளும் அரசில் கட்சிகள் தமிழ் மக்களின் இக்கோரிக்கைகள் குறித்து தங்கள் நிலையை மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்துகிறோம்.

பாசிச பாஜகவின் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒற்றையாட்சி சர்வாதிகாரத்தை எதிர்ப்போம்! பாசிச பாஜகவை தோற்கடிப்போம்! தமிழ்நாட்டை அதிகாரப் படுத்துவோம்!

தமிழ்நாடாக ஒன்றுபட்டு எழுவோம்...
பாசிச பாஜகவைத் தோற்கடிப்போம்...
தமிழ்நாட்டு நலன்களைப் பாதுகாப்போம்...

- மக்கள் இயக்கங்கள்

Pin It