“பெர்காகிலியோ போப்பாகத் தேர்ந்தடுக்கப்ட்ட அன்று அந்த சதுக்கத்தில் கூடியிருந்தவர்களோடும் உலகம் முழுவதும் தங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந்து அதைக் கண்டு களித்தவர்களோடும் சேர்ந்து நான் ஆர்ப்பரிக்கவில்லை. தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காட்டியபோது அதைப் பார்த்திருக்கலாம்; அவ்வளவே. அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட என்னுள் எழவில்லை. அதுவும் ஒரு செய்தியாகத் தோன்றியதே தவிர, வேறு எந்தவித முக்கியத்துவத்தையும் அதற்கு நான் கொடுக்கவில்லை. சொல்லப் போனால் ஒரு போப்புக்குப் பிறகு இன்னொரு போப் வருகிறார் என்ற அளவில்தான் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்." (பக். IX-X)

‘போப் பிரான்சிஸ் நம்பிக்கையின் பரிமாணம்’ என்னும் நூலின் ஆசிரியர் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களைப் போன்ற மனநிலையில்தான் பலர் காலங்காலமாக இருந்திருப்பார்கள். கிறித்துவ மதம் மட்டுமல்லாமல் உலகிலுள்ள பிற மதங்களும் மக்களை உய்விக்க வேண்டும் என்ற கோட்பாட்டுடன் தோன்றி இருக்கலாம். ஆனால் காலங்காலமாக அவற்றின் நடைமுறைகள் எவ்வாறு இருக்கின்றன?

pope francisஒரு மதத்திற்குள் பிளவு ஏற்படுத்திக் கொண்டு குடுமிச் சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். வேறுவேறு மதங்கள் மோதிக் கொள்கின்றன. இந்தியாவில் சனாதன அடிப்படையில் மக்களை நான்கு வருணங்களாகவும் அவற்றுக்குக் கீழாகவும் பாகுபாடு செய்ததை எதிர்த்தவர் புத்தர் பெருமான். ஒரு குலத்துக்கு ஒரு நீதி கூறுவதால்தான் இந்தியாவில் தோன்றிய மதங்கள் வெளிநாடுகளில் பரவவில்லை என்பார்கள்.

உயிர்க் கொலையை வெறுத்தவர் புத்தர்; அவர் தோற்றுவித்த புத்த மதம் சீனா, மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வளர்ந்தது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழா¢கள் கொல்லப்பட்டார்கள்; மியான்மரில் முகமதியர்கள் அழித்து ஒழிக்கப்படுகின்றார்கள். சீனாவின் வளர்ச்சியைப் பாராட்ட வேண்டும்; அதே நேரத்தில் அண்டை நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டும் அச்சுறுத்திக் கொண்டும் இருக்கின்றது. புத்தர் பெருமானின் கோட்பாடு என்ன ஆயிற்று? இதே நிலைதான் கிறித்துவ சமயத்திலும் நிலவுகின்றது.

உலகம் முழுவதற்கும் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர் நாங்கள்தான் என்று கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் பீற்றிக் கொண்டாலும் எங்கும் சுரண்டலும் பிரிவினைவாதமும் தலைவிரித்து ஆடுவதற்கு அவர்களே காரணம். இருப்பினும் உலகம் முழுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் கொடுத்த கல்வியே காரணம் என்பதை நன்றியுடன் குறிப்பிட வேண்டும்.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று-எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்” என்று மகாகவி கூறும் விந்தை மனிதர்கள் இந்தியாவில் ஒரு குலத்துக்கு ஒரு நீதி கூறியவர்களே. சங்க காலத்தில் பல பெண்பாற் புலவர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்த பாடல்கள் காணப்படுகின்றன. இடைக் காலத்தில் தான் பெண்ணியச் சிந்தனை உட்பட எல்லாமே குழி தோண்டிப் புதைக்கப்பட்டு முள் நிறைந்த காடு பரவ ஆரம்பித்தது. சாதி, மதநீர் பாய்ந்து நாடு வளர்ந்தது.

கல்வி கற்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்தது. பிற்போக்கைப் பின்னுக்குத்தள்ளி முற்போக்குச் சிந்தனையை வளர்க்க இந்தியா முழுவதும் பல சீர்திருத்தவாதிகள் தோன்றினார்கள். குழந்தை மணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற மனித குலத்திற்கே இழிவைத் தந்த களைகள் எல்லாம் அந்நியர் ஆட்சியில் களைந்து எடுக்கப்பட்டன. நீதிக் கட்சி, அதனை வளர்த்தெடுத்த சான்றோர்கள் - குறிப்பாகத் தந்தை பெரியார் போன்றோரால் தமிழகத்தில் சமூக நீதி அனைவருக்கும் கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வளர்ந்தவரே ‘போப் பிரான்சிஸ்-நம்பிக்கையின் புதிய பரிமாணம்’ என்னும் நூலை எழுதிய முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை.

போப் பிரான்சிஸ் பற்றி எழுதியவர் அவர் முன்னோர் கிறித்துவ மதத்தைத் தழுவாதவர்களாக இருந்தாலும் தென் தமிழகத்தில் குறிப்பிட்ட அளவில் மக்கள் மதம் மாறி இருந்தார்கள். மதம் மாறியோர் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களே. கோயில் பக்கம் போகக் கூடாது; மாராப்புப் போடக் கூடாது; படிக்கக் கூடாது என சனாதன மதம் கட்டுப்பாடு விதித்தபோது கிறித்துவ மதம் அவர்களுக்கு உதவியது.

இப்படித்தான் இந்து மதத்திற்குள் இருக்க வேண்டும் என்னும் நிலை இருந்த போது மக்களுக்கு உரிமையுடன் வாழ வாய்ப்பைக் கொடுத்தது. சிந்திக்க கல்வி, பிழைக்க வேலை வாய்ப்பு, குடியிருக்க வசதி வாய்ப்புள்ள வீடு, உடல் நலத்திற்கு மருத்துவ வசதி என அடிப்படை உரிமைகளைக் கொடுத்தால் மக்கள் ஏன் மதம் மாறப் போகின்றார்கள்? மதம் மாறக் கூடாது என்று ஏன் சட்டம் கொண்டு வர வேண்டும்? நாங்களும் சம உரிமை கொடுக்க மாட்டோம்; நீங்களும் சாக்கடையில்தான் உழல வேண்டும் என்று நினைக்கும் மனநோயாளிகளை எங்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது?

எழுபதுகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதும் ஆய்வு மேற்கொள்ளும் போதும் ஒரு புதுமையைக் காண முடிந்தது. அதே நேரத்தில் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் சோழநாட்டுப் பகுதிகளில் படிக்க வேண்டிய வயதுள்ள பெண்பிள்ளைகள் ஆடு, மாடு மேய்ப்பார்கள், முட வரப்பைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். நடவு, களைஎடுத்தல், அறுவடை போன்ற வேலைகளுக்குச் செல்லும் பெண்களை இப்படித்தான் கூறுவார்கள்.

தற்போது அந்த நிலை மாறிவிட்டது. பெண் பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளில் நிரம்பி வழிகின்றார்கள். வேலை வாய்ப்புக் குதிரைக் கொம்பாக இருந்தாலும் அடிப்படையான விழிப்புணர்விற்குக் கல்வி தேவைப்படுகின்றது. தற்போதைய தமிழகச் சூழலை எழுபதுகளிலேயே மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் காண முடிந்தது.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே தென்தமிழகத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறைந்திருந்தன. பல கிறித்துவ மதத்தால் தோற்றுவிக்கப்பட்டவை. என் நெறியாளரின் துணைவியார் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பதை அறிந்தபோது வியப்பாக இருந்தது. மதம் மாறியவர்களுக்கு முதலில் கிடைத்த வாய்ப்பே மதம் மாறாதவர்களுக்குப் பிறகு கிடைத்தது. காரணம் கிறித்துவ மதம் கொடுத்த விழிப்புணர்வு.

முதுகலை வகுப்புகளில் ஆண்களைவிட மகளிரே அதிகம் படிப்பார்கள். சில பாடப் பிரிவுகளில் சில ஆடவர்களே சேர்ந்திருப்பார்கள். வகுப்புத் தொடங்கும் போது துவார பாலகர் போலக் கதவு ஓரம் நிற்பார்கள்; பேராசிரியருடன் உள்ளே போவார்கள்; வகுப்பு முடிந்ததும் அவருடன் வெளியே வந்து விடுவார்கள். மத வேறுபாடு இல்லாமல் அனைத்துப் பிரிவினரும் படித்தார்கள். எல்லோரும் படிக்க வேண்டும் என்னும் விருப்பத்தைக் கிளர்ந்தெழச் செய்தவை கிறித்துவக் கல்வி நிறுவனங்களே என உரத்துக் கூறலாம்.

பிறர் காதாலும் கேட்கக் கூடாத வேதக் கல்வியை விரும்பியவர்கள் மெக்காலே கல்வித்திட்டத்தை எதிர்த்தார்கள். எழுத்தர்கள் மட்டுமே உருவாகுவார்கள் என்றார்கள். ஆனால் கிறித்துவக் கல்வி நிறுவனங்கள் தோன்றிக் கலை-அறிவியல் படிப்பைத் தொடங்கியபோது அவற்றில் நிரம்பியவர்கள் கிறித்துவத்தை வெறுத்து மெக்காலே கல்வித் திட்டத்தைப் பழித்தவர்களின் குழந்தைகள் தான். ‘நண்டில் வேண்டாம் சாற்றில் ஊற்று’ எனப் படிக்காத மக்கள் கூறும் சொலவச் சொல்தான் நினைவிற்கு வந்தது.

“சேலம், திருநெல்வேலியில் இருந்த பள்ளிகளில் கல்வி பெற்றவர்களின் சூத்திர சாதி மாணவர்களின் எண்ணிக்கை 70% தென் ஆற்காட்டில் அவர்களின் எண்ணிக்கை 84%க்கும் அதிகம்” (ப-15) தரம்பாலின் அழகிய மரம் (Dharampal, The Beautiful Tree) என்னும் நூலை மொழிபெயர்த்த B.R  மகாதேவன் மேற்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

தற்போது இல்லை; பதினெட்டாம் நூற்றாண்டில் சூத்திரரின் கல்வி நிலை இவ்வாறு இருந்ததாக ‘மறைக்கப்பட்ட உண்மைகள்’ எனத் தலைப்பிட்டுக் கூறுகின்றார். இந்த விழுக்காட்டு அளவு சூத்¢திரர் படித்திருக்க வாய்ப்போ, வசதியோ பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்ததில்லை. மதம் மாறிய சூத்திரர் சிலருக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்துச் சூத்திரர்களால் மேல் வருணத்தாருக்கு உழைக்க மட்டுமே உரிமை இருந்தது. மண் எடுத்துக் குடங்கள் செய்வீரே! - மரத்தை வெட்டி மனை செய்குவீரே! - உண்ணக் காய்கனி தந்திடுவீரே! - உழுது நன்செய்ப் பயிர¤டுவீரே! - எண்ணெய், பால், நெய் கொணர்ந்திடுவீரே! - இழையை நூற்று நல்லாடை செய்வீரே! - விண்ணின்று எமை வானவர் காப்பார்- மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே” (பார.கவி,ப.459) என்னும் மகாகவியின் பாடலே நினைவுக்கு வந்தது. அவரின் பாடலைப் பிறழ்ந்து பொருள் கொள்ள மனம் ஒப்பவில்லை என்றாலும் ஈற்றடி உழைப்போரின் கடமையையும் மேல் வருணத்தாரின் நிலைமையையும் உணர்த்துவது போல உள்ளது.

இப்படிப் புள்ளி விவரம் கொடுத்து மக்களை ஏமாற்றும் ஆளும் வர்க்க உத்தி உலகம் முழுவதிலும் உள்ளது. 9% விழுக்காடு, 8% விழுக்காடு வளர்ச்சி என்றெல்லாம் கூறுகிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் எண்ணிக்கைதான் வளர்கின்றது.

book on pope francis‘போப் பிரான்சிஸ் - நம்பிக்கையின் புதிய பரிமாணம்’ என்னும் நூலாசிரியரின் மதம் தொடர்பான மனநிலையே பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். ஆன்மீகவாதிகள், மத குருமார்கள், மடாதிபதிகள் எனக் கூறப்படும் அனைவருமே ஒருமையாகவே சிந்திப்பார்கள். கடவுளைப் பற்றிப் பேசுவார்கள்; கருணை மழை பொழிவார்கள். உயர்வு-தாழ்வை வளர்ப்பார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மக்களின் முன்னேற்றம் தவிர்த்து மற்றைய எல்லாவற்றையும் சிந்திப்பார்கள். மக்களைப் பற்றியும் சிந்திப்பார்கள்-தம் மக்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். அஃதாவது ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசுவார்கள். ஆனால் போப் பிரான்சிஸ் என உயர்ந்த அர்ஜென்டைனாவின் ஆர்ச் பிஷப் ஹோர்கே மரியோ பெர்காகிலியோ மானுடம் போற்றுதல், இயற்கையை நேசித்தல், எளிமை என எல்லாவற்றிலுமே மகுடமாகத் திகழ்கின்றார். நூலாசிரியர் நாகேஸ்வரி அண்ணாமலை மிகவும் எளிமையாக அதே வேளையில் ஆழமாகப் போப் பிரான்சிஸ் அவர்களை வெளிப்படுத்துகின்றார்.

உலகில் வாழ்ந்த - வாழும் எத்தனையோ மதத்தலைவர்களின் வரலாற்றைப் படிக்கின்றோம். அரசர் போலவும் ஆண்டியாகவும் வாழ்ந்துள்ளார்கள். இப்போது மத வேறுபாடு இல்லாமல் எல்லா மடாதிபதிகளுமே கடவுளின் மறு அவதாரமாகவே நினைத்துக்கொண்டு வாழ்கின்றார்கள். ஒன்றிரண்டு போல விரல்விட்டு எண்ணும் அளவில் விதி விலக்காக இருக்கலாம். போலிச் சாமியார்கள் புற்றீசலைப் போலத் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் விட்டில் பூச்சிபோல அவர்களைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். நூலாசிரியர் நாகேஸ்வரி அண்ணாமலை விளக்கும் போப் பிரான்சிஸ் மூக்கின் நுனியில் விரல் தொட்டு நோக்கும் அளவிற்குத் தனித்து நிற்கிறார்.

எளிய வாழ்க்கை

கோடிக் கணக்கான கிறித்தவர்கள் போப் பிரான்சிஸ் அவர்களின் அருளை வேண்டிக் காத்துக் கிடக்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் எனக்காகவும் இறைவனை ஜெபியுங்கள் என்கின்றார். “எனக்காக இறைவனை வேண்டுங்கள்” (ப.96). இப்படிக் கூறுகின்றவர் ஏசுநாதருக்கு அடுத்த நிலையில் வைக்கப்படும் போப்பாண்டவர். உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் தன்னை இயல்பான நிலையில் எண்ணும்போதுதான் இப்படிப்பட்ட வேண்டுகோள் வெளிப்படும்.

“உங்களிடம் நான் ஒரு உதவி கேட்கப்போகிறேன். நாம் எல்லோரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும். ஒருவர்க்கொருவர் நன்மை செய்து கொள்ள வேண்டும். ஒருவர் நலனில் மற்றவர் அக்கறை செலுத்த வேண்டும். யாருக்கும் தீமை விளைவிக்காதீர்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்; குடும்பத்தைக் காப்பாற்றுங்கள். இயற்கையைக் காப்பாற்றுங்கள். இளையவர்களையும், முதியோர்களையும் காப்பாற்றுங்கள். ஒருவரோடு ஒருவர் சண்டையிடாதீர்கள். வன்மம் பாராட்டாதீர்கள். பொறாமையை விட்டொழியுங்கள்” (ப.46).

இக்கருத்துகளை எல்லாம் போப் பிரான்சிஸ் கத்தோலிக்க மதம் சார்ந்த மக்களுக்காக மட்டும் குறிப்பிடவில்லை. போப்பின் மொழிகள் சாதி, மதம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து அனைவர்க்கும் பொதுவானவையாக உள்ளன. உபதேசம் மட்டும் செய்யவில்லை, “பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்” (திருக்.972) என்னும் திருவள்ளுவரின் வாக்கை நினைத்துப் பார்க்கும் வகையில் போப்பின் செயற்பாடுகள் வெளிப்படுகின்றன.

மதபோதகர் நிலையில் உச்சம் தொட்ட போப் பிரான்சிஸ் எளிமையாக வாழ்வதை விரும்பி ஏற்றுக் கொண்டவர். எளிமையான உணவு, உடை, உறையுள் அவருக்கு ஏற்றத்தைக் கொடுக்கின்றன. இக்குணமே எளிய மக்களுடன் நெருங்கிப் பழகவும் வாய்ப்பைக் கொடுக்கின்றது. சிலுவைப் போர்வழிக் கிறித்துவத்தைப் பரப்ப முடியாது; அன்பு வழியும் தொண்டு வழியாகவுமே பரப்பமுடியும் என்னும் பட்டறிவில் முழு நம்பிக்கை உடையவர் போப் பிரான்சிஸ்.

இந்தியாவிலுள்ள கோயில்கள், மடங்கள் போன்றவற்றுக்குக் கணக்கு வழக்கில்லா சொத்து இருப்பதைப் போன்று கத்தோலிக்க மதத்திற்கும் உலகம் முழுவதிலும் சொத்து உள்ளது. எல்லா மதச் சொத்துகளிலும் முறைகேடு நடக்கின்றது. “நான் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது எவ்வளவு குறைவாக விட்டுச் செல்ல முடியுமோ அவ்வளவு குறைவாக விட்டுச் செல்ல விரும்புகிறேன்” (ப. XI) எனக் கூறும் போப் பிரான்சிஸ் மத மறுப்பாளர்களின் இதயத்திலும் இடம் பிடிக்கக் கூடியவர். அவரின் நிலையை இந்திய நாட்டுச் சாமியார்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

எளியோருடன் வாழ்க்கை

இந்து சமயத் துறவிகள் முதல் வருணத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதைப் போன்றே போப்பாண்டவர்களும் பெரும்பாலும் இத்தாலியைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். பைபிளில் கூறப்பட்டவையே அவர்களுக்கு வேத வாக்கு. அதற்கு மாறுபட்ட கருத்துக் கூறுவோர் துரோகிகள். இந்தியாவில் தேசத்துரோகி எனக் கூறுவது போல ரோமில் உள்ளவர்கள் மதத்துரோகி எனக் கூறிவிடுவார்கள். பைபிளுக்கு எதிரான கருத்துகளைக் கூறினார்கள் எனப் பல விஞ்ஞானிகளும் தத்துவ அறிஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். மதம் ஆட்சி செய்தால் மடமைதான் மண்டும் என்பதற்கு உலகெங்கிலும் நிறையச் சான்றுகள் உள்ளன.

உழைக்கும் வர்க்கம், ஆதிக்க வர்க்கத்திற்கு உழைப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டது என்னும் வக்கிரப் புத்தி உள்ளவர்களால் ஏழைகளை அன்போடு அரவணைக்க முடியாது. “பூமியைச் சுற்றும் வெகுதூரத்தில் உள்ள கோள்களை இவர்கள் ஆராயும்போது நம் அருகிலேயே நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் தேவைகளுக்குத் தீர்வு கண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.!” (ப. V)

பூமி மையக்கோள் இல்லை; சூரியனைச் சுற்றியே பிற கோள்கள் இயங்குகின்றன எனக் கோபர்னிகஸ் குறிப்பிட்டார். இக்கருத்தைக் கலிலியோவும் ஏற்றுக்கொண்டார். இதற்காகக் கிறித்துவ மதத்திற்கு எதிரானவர்கள் எனத் தண்டிக்கப் பட்டார்கள். அவர்கள் கூறியவை ஏற்புடைய கருத்து என ஏற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ் அவர்கள் தண்டிக்கப்பட்டதற்காகச் சில நூற்றாண்டுகள் கழிந்திருந்தாலும் பெருந்தன்மையுடன் மன்னிப்புக் கோரினார். இருப்பினும் மதம் சார்ந்த கருத்தில் மாறுபடக் கூடாது என்பதற்காகப் பூமியைச் சுற்றியே பிற கோள்கள் இயங்குகின்றன எனக் கூறுகின்றார் போலும்.

பூமிப் பந்தில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல நாடுகளின் மக்கள் வறுமையில் வாடி மடிகின்றார்கள். வறுமையில் வாடும் சோமாலிய நாட்டுக் குழந்தைகளின் மண்டைகள் அறிவியலார் ஆராயும் கோள்களைப் போலக் காணப்படுகின்றன. அண்டத்தில் உள்ள சந்திரன், செவ்வாய் என இருக்கும் கோள்களை எல்லாம் ஆராயப் பல்லாயிரம் கோடிகளை செலவிடுகின்றார்கள். நடக்காத போருக்காக ஆயுதங்களை வாங்கிக் குவிக்கின்றார்கள். “சமூக முன்னேற்றத்துக்கான திட்டங்களைவிட, ராணுவப் பாதுகாப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கும் ஒரு நாடு, அதனுடைய தார்மீக மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.” கறுப்பு வெள்ளை, (பக்.109-110) என அமெரிக்காவின் வியத்நாம் ஆக்கிரமிப்பின்போது மார்ட்டின் லூதர் கிங் கூறியது போப்புடன் தொடர்புபடுத்தக் கூடியதாகும்.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம் (பார.கவி.ப.247) என்னும் உயரிய சிந்தனையை மட்டும் மறந்துவிடுகின்றார்கள். இப்படிப்பட்ட உலகம் தழுவிய மானுட நேயம் வேறு எந்த மதகுருமாரிடமாவது இருந்திருக்குமா? என்பது தெரியவில்லை.

ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்துப் பிற நாட்டிலிருந்து தெரிவு செய்யப் பெற்ற முதல் போப் பிரான்சிஸ் மட்டுமே. தென்னமரிக்காவின் அர்ஜென்டைனாவில் தோன்றிய ஹோர்கே மரியோ பெர்காகிலியோ வறுமையை நன்கு உணர்ந்தவர். இவரின் தாய் வழித் தாத்தாவைப் பார்க்க ஒருவர் அடிக்கடி வருவாராம். தச்சுத் தொழில் செய்த தாத்தாவிடம் மரத்திற்குப் பூசும் சாயத்தை விற்பாராம். “அர்ஜென்டைனாவின் துணை அதிபராக இருந்த எல்பிடியோ கன்ஸாலஸ்”! (ப.68). இந்தத் துணை அதிபரை நினைக்கும்போது காமராசர், கக்கன், இலால்பகதூர் சாஸ்திரி போன்ற ஏழைத் தாய்மார்களின் மகன்கள் நினைவுக்கு வருகின்றார்கள்!

விலை உயர்ந்த அங்கி, சிலுவை, காலணி, சிம்மாசனம் என அனைத்தையும் தவிர்த்துவிட்டார். தம்முடைய பழைய சிலுவையையே அணிந்து கொண்டார் “நீங்கள் என்னைப் போப்பாகத் தேர்ந்தெடுத்ததற்குக் கடவுள் உங்களை மன்னிக்கட்டும்” (ப.45) என்று கூறும் போப் உண்மையிலேயே ஏழைப் பங்காளர்.

வலதுசாரிச் சிந்தனை உடையவர்கள் மதம் சார்ந்து தான் இருக்க முடியும். இடதுசாரிச் சிந்தனையாளர்களால் மதம் சார்ந்த பிற்போக்குத் தனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தம் பதின்பருவத்தில் பொதுவுடைமைச் சித்தாந்தங்களை நன்கு படித்துள்ளார். இருந்தாலும் முழுமையாகப் பின்பற்ற மதம் இடம் கொடுக்கவில்லை. “பெர்காகிலியோவின் அறிவுத் தாகம் வளர வளர அவருக்குக் கம்யூனிசக் கோட்பாடுகளில் பிடிப்பு ஏற்பட்டது” (ப.68) என நூலாசிரியர் நாகேஸ்வரி அண்ணாமலை பதிவு செய்துள்ளார்.

உலகிலுள்ள பெரும்பான்மையான மதங்கள் உழைக்கும் ஏழை எளியோரிடம் அதிகம் இரக்கம் காட்டியதாகத் தெரியவில்லை. “ஏழைகளோடு நெருங்கி உறவாடியதால், அவர்கள் படும் துன்பங்களுக்குச் சமூக அமைப்புகளும் காரணம் என்பதையும் அவர்களுக்குச் சமூகநீதி கிடைக்கக் கத்தோலிக்க மதமும் அவர்களோடு சேர்ந்து போராட வேண்டும் என்பதையும் உணர்ந்தார். எப்போதுமே அவர் ஏழைகள்பால் மிகுந்த அனுதாபம் கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர். ஆனால் இப்போது ஏழைகளிடம் இரக்கம் காட்ட வேண்டும், அவர்களுக்குத் தான தர்மம் செய்ய வேண்டும் என்பதோடு அவர்களுக்குச் சமூக நீதி கிடைக்கச் சமூக அமைப்புகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் நினைத்தார்” (பக்.108.109).

நூலாசிரியரின் இந்தப் பதிவு படிப்போரை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும். அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனத் தமிழகஅரசு கொண்டு வந்த சமூக நீதிச் சட்டம் கூட நினைவிற்கு வருகின்றது. முறையாக மத போதகக் கல்வியை கற்றவர்கள் கிறித்துவத்தில் மதபோதகர் ஆகலாம்; ஆனால் இந்து மதத்தில் முறையாகப் படித்தாலும் அர்ச்சகர் ஆக முடியாது; பிறப்பின் அடிப்படையிலேயே அர்ச்சகர் ஆக முடியும் என்றார்கள். ஆகமவிதி என்னும் பூச்சாண்டியை வேறு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகமவிதிப்படி வைக்கப்பட்ட சிலைகளை எல்லாம் மாற்றிப் போலியானவை வைக்கப்படுகின்றன. களவாடப்படுகின்றன. நகைகளும் கொள்ளையடிக்கப்படுகின்றன. இடைக் காலத்தில் போரிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டவற்றுக்கு எந்த அளவிலும் குறையாத வகையில் நடந்துள்ளன. இவற்றைப்பற்றிப் பேசமாட்டார்கள். சமூக நீதி கிடைக்க அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பது போப் பிரான்சிஸ் அவர்களின் புரட்சிகரச் சிந்தனையாகும்.

இறைப்பணி வாழ்க்கையைத் தொடங்கிய காலம் முதல் பேருந்தில் செல்வார்; எளிய மக்கள் வாழும் இடங்களுக்குச் செல்வார்; அவர்கள் வாழப்படும் சிரமங்களை அறிவார். இப்படிப்பட்ட ஒரு போப்பை இதுவரை இந்த உலகம்-குறிப்பாகக் கத்தோலிக்க மதம் பார்த்ததில்லை என நூலாசிரியர் நாகேஸ்வரி அண்ணாமலை பல இடங்களில் பதிவு செய்கின்றார்.

நூலாசிரியர் மேலும் “எல்லோரும் கடவுளின் குழந்தைகள், கடவுளின் அன்பிற்கும் கருணைக்கும் பாத்திரமானவர்கள். எந்தக் கடவுள் என்று அவர் ஒருபோதும் குறிப்பிட்டுச் சொன்னதில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காணலாம்; காண வேண்டும் என்பது இவருடைய சித்தாந்தம். இப்படி எத்தனை மதத் தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள்?” (ப.199). நூலாசிரியர் கேள்விக்கு இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியவில்லை. சொன்னால் மாட்டிக் கொள்ள வேண்டும்.

காஞ்சிபுரத்தில் சங்கரராமன் கொலை வழக்கு, நீதிமன்றத் தீர்ப்பு போன்றவற்றை நூலாசிரியரே குறிப்பிடுகின்றார் (ப.18).

சமுதாயச் சீர்திருத்தம்

இந்தியா என்றில்லை, உலகம் முழுவதிலும் பிற்போக்குத்தனம் என்பது மக்களை அறியாமைச் சேற்றில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும். குறிப்பாகப் பெண்களை மையமிட்டே கட்டமைக்கப் பட்டிருக்கும்.

ஒரு நாட்டில் ஒரு மதத்¢தில் கட்டமைக்கப்பட்டுள்ள பிற்போக்குத் தனம் என்று கடந்து போய் விட முடியாது; இந்தியாவின் வட பகுதிகளில் பசுவைப் புனிதமாகப் போற்றுகின்றார்கள்; அவர்களின் உரிமை அதன் சிறுநீரைக் குடித்தால் கரோனா போகும் எனப் பொதுவெளியில் கூறுவது பொருந்தவில்லை. அப்படிக் குடித்தால் கரோனா போய்விடும் என்றால் மருந்து என்னும் அடிப்படையில் குடிக்கலாம்; தவறில்லை. உலகம் முழுவதற்கும் அறிவுரை கூறலாம். மருந்து கண்டு பிடிக்க மூளையைக் கசக்கிப் பிழிய வேண்டியதில்லை; உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடிகளைச் செலவு செய்ய வேண்டியதில்லை.

அந்நியர்கள் மதத்தாலும் சாதியாலும் உயர்வு-தாழ்வாலும் மொழியாலும் சிதறிக் கிடந்த மக்களை மதம் மாற்றினார்கள், வளங்களைச் சுரண்டிக் கொண்டு போனார்கள் இங்குள்ளவர்கள் மதம் மாறியதால் மாறியவர்களுக்குப் பெரிய நட்டமில்லை. மாறாக வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அந்நியர்களால்தான் குழந்தை மணம், உடன்கட்டை ஏற்றுதல், கைம்மை நடைமுறை, பல தார மணம் போன்ற மகளிரைச் சுற்றி இயங்கிய பிற்போக்குத்தனங்கள் ஒழிக்கப்பட்டன.

மூடநம்பிக்கை என்பது இந்தியாவிற்கு மட்டும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஒன்று அன்று; எங்குமே ஆட்சி செய்கின்றது. கத்தோலிக்கத்தில் நிலவும் பிற்போக்குத்தனங்கள் ஒழிய வேண்டும் என போப் பிரான்சிஸ் குரல் கொடுக்கின்றார். “தனக்குள்ளே, தனக்காக வாழும் மதம் ஒரு போதும் நிறைவு பெறுவதில்லை.” (ப.40) என்னும் நூலாசிரியர் கருத்துச் சிந்திக்கத்தக்கது. பேதங்களை வளர்த்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் மதங்கள் அந்நாட்டு மக்களாலேயே வெறுக்கப்படும். உலகம் முழுவதிலும் நூற்று இருபது கோடிக்கு மேற்பட்ட கத்தோலிக்க கிறித்துவர்கள் வாழ்கின்றார்கள். எண்ணிக்கை மேலும் விரிவடையும் ஏற்றத் தாழ்வின்றி வாழவும் போப் பிரான்சிஸ் பல சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும் என்கின்றார். “பழைய கொள்கைகளையே கடைப் பிடித்துக் கொண்டு பாமர மக்களை அணுகாமல் இருந்தால் மதம் நாளடைவில் நலிந்து விடும்" (பக்.51-52.) என்னும் போப்பின் கருத்து வருண பேதத்தைத் தாங்கிப் பிடிக்கும் இந்து தத்துவவாதிகளுக்கும் பொருந்தும்.

“விவாகரத்து செய்துகொண்டு மறுபடி திருமணம் செய்து கொண்டவர்களையும் திருச்சபைக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் (ப.118) என்பது போப்பின் கொள்கையாகும். இந்த மதம், அந்த மதம், என்றில்லாமல் எல்லா மதங்களிலும் பாலியல் தொடர்பான செய்திகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஓரினச் சேர்க்கை, பாதிரியார்-சகோதரியர் உறவு போன்றவை பற்றியும் சிந்தித்துள்ளார்.

வறியோரின் வாழ்வு வளம் பெறவும் அறியாமை ஒழியும் வரலாற்றில் இதுவரை அறியப்படும் போப்புகளில் பிரான்சிஸ் தனித்துவம் மிக்கவராக விளங்குகின்றார்.

சர்வதேசச் சிந்தனை

பழைய கோட்பாடுகளைப் பற்றிக் கொண்டு, பிற மதத்தினை வெறுப்பவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதி அற்றவர்களாக இருப்பார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலகம் தழுவிய பார்வை இருக்க வேண்டும்; தொழிற்புரட்சியில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு பூமி வெப்ப மண்டலமாக மாறி விட்டது. சுற்றுச் சூழல் பற்றிய சிந்தனையும் ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். வாடிக்கனுக்குத் தலைமை ஏற்ற போப்புகளில் பிரான்சிஸ் சர்வதேசச் சிந்தனையில் மிக்க ஈடுபாடு கொண்டுள்ளமையை அவரின் பணிகள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

அண்ட கோள்களைக் கண்டு தெளிவதில் தவறில்லை; பல்லாயிரம் கோடிகளைக் கரியாக்குகின்றார்கள். சொந்த மண்ணில் வாழ வழி இல்லாமல் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்கின்றார்கள்; பிறநாடுகளுக்கு மறைந்து, ஒளிந்து போகின்றார்கள். செல்லும்போது பல்வேறு இன்னல்களால் மரணம் நிகழ்கின்றது. பிடிபட்டால் சிறையில் தள்ளப்படுகின்றார்கள். அமெரிக்காவுக்குள் புலம்பெயர மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் இருந்து செல்வோர் கொத்துக் கொத்தாக மடிகின்றார்கள். ஒரு குழந்தையின் உடல் கரை ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்ததைப் பார்த்த போது இதயமே நொறுங்கி விடும் போலிருந்தது. புலம் பெயர்வோரைத் தடுக்கும் பெரும்பாலான ஆளும் வர்க்கங்கள் ஒரு காலத்தில் அந்த மண்ணுக்குள் புலம் பெயர்ந்தவர்களே! வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் புரியும்.

புலம் பெயரும் மக்களின் துயர் துடைக்க போப் பிரான்சிஸ் முயலும் செய்தியை அறியும்போது நெஞ்சம் நெகிழ்கின்றது. இவ்வகையான இரக்கக் குணம் வருவதற்குக் காரணம் இவரது குடும்பமும் இத்தாலியில் இருந்து தென் அமெரிக்காவின் அர்ஜென்டைனாவுக்குக் குடிபெயர்ந்ததே ஆகும். பின் வருமாறும் வெளிப்படுத்துகின்றார்.

“இந்த அமெரிக்கக் கண்டத்தில் உள்ளவர்கள் மக்கள் குடிபெயர்ந்ததைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. ஏனெனில் நம்மில் பலர் இந்தக் கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்கள்தான் (ப.140). அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து வந்து அதிகாரம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்து வந்து அதிகாரம் செய்பவர்களுக்கும் போப்பின் கருத்து பொருந்தும்.

தொழிற்சாலைக் கழிவுகளாலும் பயன்படுத்தித் தூக்கி வீசப்படும் கழிவுப்பொருள்களாலும் உலகம் பன்றிகள் உழலும் சாக்கடை போலாகி விட்டது. போப் பிரான்சிஸ் அவர்களுக்குச் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை இருந்ததை நூலாசிரியர் நாகேஸ்வரி அண்ணாமலை பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “சுற்றுப்புறச் சூழலைப் பற்றிப் போப் பிரான்சிஸிற்கு இருக்கும் அக்கறை வேறு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை-சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுற்றுச் சூழலைப் பற்றி எல்லோருக்கும் அறிவுரை கூறாமல் இருப்பதில்லை. இந்தப் பூமி இறைவன் நமக்குக் கொடுத்தது; அதை மாசுபடுத்தினால் கடவுளை அவமதிப்பதாகும்; பூமியை நலியாமல் வைத்திருப்பது நாம் கடவுளுக்குச் செய்யும் தொண்டு”(ப.203).

கத்தோலிக்க மதத்தின் தலைவராக இருந்தாலும் அனைத்து மதத்தினரும் திரும்பிப் பார்க்கும் வகையில் போப் பிரான்சிஸ் அவர்களின் வாழ்வும் வாக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளன. “தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு அவற்றிற்காகப் பிராயச்சித்தம் தேடுவது இந்த உலகில் பிரான்சிஸ் ஒருவராகத் தான் இருக்க முடியும்” (ப.111).

மூலவர்களால் மதம் உயர்ந்த குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்; கூட அல்லது குறைவாக இருக்கலாம். எல்லா மதங்களுமே மதம் பிடித்துத்தான் அலைகின்றன. அரசியல் மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் ஆன்மீகம் மக்களை நல்வழிப் படுத்துவதற்கும் இருந்தால் இரண்டு பக்கத் தண்டவாளங்களால் உலகம் இயல்பாக இயங்கும். ஆன்மீகம் அரசியலில் புகுந்து குட்டையைக் குழப்புவதால் பெரும்பான்மை மக்கள் எரிச்சல் அடைகின்றார்கள். கடவுள் அதை வைத்துத் தோன்றிய மதங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன.

கடவுள், மதம் போன்றவற்றை மறுத்துச் சமநீதிக்காகப் பாடுபட்டவர்களைப் பற்றியே படித்துக் கொண்டிருந்த சூழலில் ‘போப் பிரான்சிஸ்-நம்பிக்கையின் புதிய பரிமாணம்’ என்னும் நூலை எழுதிய நாகேஸ்வரி அண்ணாமலை அப்படியே மடை மாற்றம் செய்து விட்டார். இந்த நூலைப் படித்ததால் மதம் பற்றிய கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை; இப்படிப்பட்டவர்களும் அத்திப் பூத்தாற்போல இருக்கின்றார்களே என்று எண்ணத் தோன்றியது. நூலாசிரியரையும் வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்தையும் மனம் நிறைய வாழ்த்துவோம்.

போப் பிரான்சிஸ் (நம்பிக்கையின் புதிய பரிமாணம்)

நாகேஸ்வரி அண்ணாமலை

அடையாளம் பதிப்பகம்

- ச.சுபாஷ் சந்திரபோஸ்

Pin It