பொதுவாக தமிழ்நாடு அரசின் நூல்கள் என்றாலே அனைவருக்கும் பாடப் புத்தகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் பாடப் புத்தகங்களைத் தாண்டி மிகப் பெரிய புத்தக உலகம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் சென்னை புத்தகக் காட்சியின் சிறப்பிதழுக்காகவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநர் தே.சங்கர சரவணன் (மொழி பெயர்ப்பு) அவர்களை 'உங்கள் நூலக'த்திற்காகச் சந்தித்தோம்.

sankara saravananதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பாடப்புத்தகத்தை தவிர, பிற வெளியீடுகள் பற்றி அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வருகிறதே... அது பற்றி...

ப : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 1970 களில் தொடங்கப்பட்டபோது கல்லூரிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்காக, பாடநூல்களை வெளியிடுவதைத்தான் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. அப்போது 37 துறைகளில் மிகச் சிறந்த 900 நூல்கள் வெளியிடப்பட்டது. பிறகு திரு.உதயச்சந்திரன் IAS அவர்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்குப் பொறுப்பு வகித்தபோது, 875 நூல்கள் மின்மயமாக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் 2017இல் திரு. உதயசந்திரன் கல்வித்துறைச் செயலாளராகப் பணியாற்றியபோது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டிருந்த நூல்களை ஆவணப் பதிப்பாகவும், மறுபதிப்பாகவும் வெளியிடும் பணி துவங்கியது. அந்தப் புத்தகங்கள் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள். அரிய நூல்களைத் தேடித்தேடிப் படிக்கும் வாசகர்கள் போன்றோரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவை தவிர, இலக்கிய மொழிபெயர்ப்புத் திட்டத்தையும், உயர்கல்வி நூல்கள் மொழிபெயர்ப்புத் திட்டத்தையும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட 14 அறிவிப்புகளில் ஒன்று, வ.உ.சி.யின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில் அவரது நூல்களை வெளியீட்டு, மலிவு விலையில் விற்பனை செய்வது என்பதாகும். வ.உ.சி. நினைவு நாளான 2021 நவம்பர் 19ஆம் தேதி அன்று, வ.உ.சி. எழுதிய பன்னூல் திரட்டும், திருக்குறள் உரையும் வெளியிடப்பட்டன. இந்நூலை வீ. அரசு தொகுத்திருந்தார். ஓவியர் மருது அட்டைப்படத்தை வடிவமைத்திருந்தார்.

புதிய அரசு பதவியேற்ற பிறகு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், திசை தோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞர் மொழி பெயர்ப்புத் திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் என்று முத்தான மூன்று திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இத்திட்டங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநர், உறுப்பினர் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். பள்ளிக்கல்வி ஆணையர், பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் செயலாளர் ஆகியோர் இத்திட்டம் குறித்துக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மேல் ஆய்வு செய்து வருகின்றனர்.

இத்திட்டங்களின் நோக்கங்கள் என்ன?

முதல் திட்டமான ‘திசைதோறும் திராவிடம்’ என்பது தமிழில் உள்ள படைப்புகளை உலக மொழியான ஆங்கிலத்திலும் பிற திராவிட மொழிகளில் மொழி பெயர்ப்பது மற்றும் பிற திராவிட மொழிகளிலும், சிறந்த படைப்புகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பதாகும்.

தமிழ்ப் பண்பாட்டையும் சிறப்பையும் விளக்கும் வகையில் திராவிட மொழியின் மூத்த மொழியான தமிழ் மொழியில் உள்ள திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற செவ்வியல் இலக்கியங்களை பிரபல ஆங்கிலப் பதிப்பகங்களோடு இணைந்து கூட்டு வெளியீடாகக் கொண்டு வந்துள்ளோம். தற்போது உ.வே.சா. கட்டுரைகள், தலித் சிறுகதைகள், தோப்பில் முகமது மீரானின் கதைகள் ஆகியவை ஆங்கிலத்தில் வெளிவர உள்ளன. ஐம்பது தமிழ் சிறுகதை எழுத்தாளர்களை தம்முடைய அனுபவத்தோடு இணைத்து அறிமுகப்படுத்தும் எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் ஆங்கிலத்தில் வெளிவர உள்ளது. கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் கி.ராஜநாராயணனின் கரிசல் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு பியர்சன் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் Along with the son என்ற பெயரில் வெளியிட்டது, அதற்கு வாசகர்களிடம் பெரும் வரவேற்பும் கிடைத்தது. இதேபோல் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நூல் ஆக்ஸ்போர்டு மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிறுவனங்களின் கூட்டு வெளியீடாகும்.

கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் ‘கீழடி’ நூலின் விற்பனை பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்தக் கீழடி நூல் 2019ஆம் ஆண்டு 24 மொழிகளில் வெளியிடப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்த ஆண்டு புத்தகக்காட்சிக்கு ‘பொருநை நாகரிகம்’ என்ற நூலைத் தொல்லியல் துறையோடு இணைந்து கூட்டு வெளியீடாகத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிடுகிறது.

முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், கலை, அறிவியல் சார்ந்த 200 நூல்கள் மொழிபெயர்க்க அடையாளம் காணப்பட்டு மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து சிறார்களுக்காக இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின்கீழ் நூல்கள் வெளிவர உள்ளன. இந்தச் சிறார் நூல்கள் வயதுக் கேற்றவாறு மூன்று விதமான முறைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அறிஞர்களின் நாட்டுடமை நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கல்வியியல் பணிகள் கழக வெளியீட்டில் அதிக விற்பனையான நூல்கள் பற்றிக் கூற முடியுமா?

வாசகர்கள் விருப்பத்திற்கேற்பத்தான் மறுபதிப்பு செய்யத் தொடங்கினோம். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த நூல்கள் பெரிதும் பயன்படுகிறது. குறிப்பாக மிகிஷி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்திய வரலாறு, மஜூம்தார் குழுவினர் எழுதிய இந்திய வரலாறு, மாணிக்கவேல் எழுதிய இந்திய தேசிய இயக்க வரலாறு போன்ற நூல்கள் பெரிதும் விரும்பி வாங்கப்படுகின்றன. கே.கே.பிள்ளை எழுதிய தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் வரலாறு என்ற நூல், டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வுப் பாடத்திட்டத்தில் 8 - ஆவது அலகுக்கு இன்றியமையாத நூலாக உள்ளது.

Pin It