தமிழர் பண்பாடு சமூக அக்கறை நிறைந்த வாழ்வியல் கொள்கைகளால் கட்டமைக்கப்பட்டது.தொல்காப்பியம் தொடங்கி,செவ்விலக்கியங்கள் தொடர்ந்து, நவீன இலக்கியங்கள் முழுவதும் சமூக அக்கறையும் அறக்கருத்துக்களும் நிறைந்திருப்பதை காணலாம். இன்றைய உலகில் ஐக்கிய நாடுகளின் சபை உருவாக்கிய உலகளாவிய வளர்ச்சிக் குவித்திடும்,'நிலையான வளர்ச்சி இலக்குகள்' (Sustainable Development Goals SDG) அன்றே நம் தமிழ்ச் சான்றோர்களால் முன் உரைக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டுள்ளதை இக்கட்டுரையின் முதல்பாகம் பதிவு செய்கிறது. தமிழ் செவ்விலக்கியங்களில் காணப்படும் சமூக தத்துவங்களை (Social Philosophy) மையப்படுத்துவதும், அதனை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்படும் வாழ்வியல் கேள்விகளுக்கு விடை காண முற்படுவதும். அனைவரையும் உள்ளடக்கிய பாகுபாடற்ற சமூக அக்கறை (Inclusive social concern) செவ்விலக்கிய காலங்களில் நடைமுறையில் இருந்ததை சுட்டிக்காட்டுவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வளம் குன்றா வளர்ச்சி (Sustainable Development)

சமூகம் என்பது மக்களும் மக்களின் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளையும் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. சமூக அக்கறையே தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக இருந்தமையால் வளம் குன்றாதநிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பான அணுகுமுறை செவ்விலக்கிய காலங்களில் இருந்தமையை பின்வரும் குறிப்புகளில் இருந்து அறியலாம்

புகழ் நிலைஇய மொழிவளர

அறம் நிலை இய அகல் அட்டில்

சோறு வாக்கிய கொழுக்கஞ்சி (பட்டினப்பாலை 43-45)

பசியால் வருந்தி வரும் மக்களின் பசியைப் போக்க பெரிய சமையல் கூடங்கள் கட்டி அதில் சமைத்த சோற்றை வடித்த கஞ்சி ஆறு போல பெருகி ஓடின என்ற இச்செய்தியின் மூலம் இல்லங்களின் செல்வச் செழிப்பும், வருந்தி வந்தவருக்கு உணவளித்து பசி போக்கும் அறச்செயலும் புலப்படுகிறது.வளம் குன்றா வளர்ச்சிகளில் முதல் இரண்டு குறிக்கோள்களை பசியின்மை மற்றும் வறுமை ஒழிப்பு No Poverty (SDG 1) and Zero hunger(SDG 2) அன்றே போற்றப்பட்டு வந்தமைக்கு சான்றாக அமைகின்றது.

காடுகளை அழித்து மக்களுக்கான நாடாக மாற்றி அமைத்த வளம் பெருக்கிய வளவன் என்பதை 'காடு கொண்டு நாடு ஆக்கி' என்னும் பட்டினப் பாலை பாடல் 285 மூலம் அறியலாம். வளம் குன்றா வளர்ச்சிகளில் மூன்றாம் குறிக்கோளான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு Health and well-being (SDG 3) சான்றாக அமைகின்றது. தூய்மையான நீர் மற்றும் சுகாதாரமான வாழ்க்கை Sustainable Clean water and Sanitation (SDG 6) குறித்து பல சான்றுகள் செவ்விலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. நில வளங்களை நீர் வளங்கள் பாதுகாத்தல் Life on land (SDG 15) and Life below water(SDG 14) எண்ணற்ற குறிப்புகள் சங்க கால இலக்கியங்களில் குவிந்து கிடக்கின்றன. அறம் கூறும் அவையங்களும் காவிதி மக்களும் (மதுரைக்காஞ்சி 490) அமைதி மற்றும் நீதிக்கான Peace, justice, and strong institutions (SDG 16) வலுவான அமைப்புகளாக திகழ்ந்துள்ளன.

வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்ப (முல்லைப்பாட்டு 37-38) என்னும் வரிகள் படிப்பறிவில்லாத இளைஞர் யானைக்கு கவளம் ஊட்டும் பணியில் இருந்தனர் என்றும் வடமொழி பேசுபவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக தமிழ் மண்ணில் இருந்தமைக்குச் சான்றாகுகின்றது. வளம் குன்றா வளர்ச்சி குறிக்கோள்களான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி Decent work and economic growth (SDG 8) போற்றப்பட்டு வந்தமைக்கு சான்றாக அமைகின்றது. மதுரைக்காஞ்சி(510) இடம்பெற்றுள்ள நான் மொழி கோசர் என்னும் குறிப்பில் இருந்து மதுரை மாநகர் நான்கு மொழி பேசக்கூடிய மக்கள் வாழ்ந்த இடம் என நிரூபணம் ஆகின்றது. இந்த நான்கு மொழி பேசுபவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் மன்னனின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல பன்மொழி பேசும் பிரதிநிதிகள் மன்னர் அவையில் இருந்துள்ளனர் என்பதன் மூலம் சமமின்மையை குறைக்க Reduced inequalities (SDG )10 கவனத்துடன் செயல்பட்டமை வருகிறது.

நந் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக (மதுரைக்காஞ்சி 540) கூற்றின் படி பிற நாட்டு வணிகர்கள் வணிகம் ஈட்ட வந்த செய்தியும், வலிப்புணர் யாக்கை வன்கண் யவனர். படம் புகு மிலேச்சர் உழையர் ஆக (முல்லைப்பாட்டு 60-65) அரசனின் போர் பாசறையில் மெய்க் காப்பாளராக யவன தேசத்து மக்களும் ரகசிய காப்பாளர்களாக மிலேச்சியர் (பலுசிஸ்தானம்) தேசத்தவரையும் வைத்திருந்த செய்தி விளக்கப்படுகிறது.

கால்கலத் தாறசேர் பொருளுங் கண்ணாற்றார் தோபொருளு நாலிரண்டாற கூடு நலப் பொருளுங் (இன்னிலை17) நிலத்தின் மீது செல்கின்ற வண்டி முதலியவற்றாலும் நீரின் மீது செல்கின்ற கப்பல் முதலியவற்றாலும் கூடும் சுங்கப்பொருளும் அறமில்லாதர் அடையும் பொருட்களும் குடிகளின் வருவாயில் ஆறில் ஒன்றாகக் கொள்வதால் வரும் வருவாயும் எனும் இக்குறிப்பில் இருந்து நான்கு வகை வரி விதிப்பு செவ்விலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறியலாம். மேலும் அருங்கடி பெருங்காப்பின் ( பட்டினப்பாலை 133) பண்டகக்காப்பு சாலை அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது ஏற்றுமதி இறக்குமதி கொள்கை வகுத்து செயல்பட்டமைக்கு இவை சான்றாகின்றன.

பொறுப்பான நுகர்வு உற்பத்தி Responsible consumption and production (SDG 12) நடைபெறவும் வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்தவும் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகள், சுங்கவரி முதலியன விதிக்கப்படுகின்றன. எந்த வரி பண்டகக்காப்பு வரிவிதிப்பு சமூகத்தில் இலக்குகளை அடைவதற்கான கட்டமைப்புகள் அல்லது நிலையான அபிவிருத்திகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றனவோ அச்சமூகத்தில் கண்டிப்பாக பொருளாதார வளர்ச்சி, தொழில் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்கட்ட அமைப்பு Industry, innovation and infrastructure (SDG 9), நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள் Sustainable cities and communities (SDG II) முதலானவளம் குன்றா வளர்ச்சிக்கான சிறந்த அடையாளங்கள் பெற்று திகழும் இதுவே வளர்ச்சி பெற்ற நாகரீகமயமான சமுதாயத்தின் அடையாளம்.

பாகுபாடற்ற சமூக அடுக்கு (Social strata with zero discrimination)

1. சிறுகுடிப் பெருந்தொழுவர்; குடிகெழீஇயநால்நிலவேராடு (மதுரைக்காஞ்சி122- 123) உழவும் வணிகமும் இருவகையான தொழிற்சார்சமூகப் பிரிவுகளாக நால்வகை நிலத்தவரும் கொண்டிருந்தமை விளங்குகின்றது. தேவரே கற்றவர்; கல்லாதார் தேருங்கால் பூதமே (சிறுபஞ்சமூலம் 18) சமூகத்தில் மேலும் ஒரு அங்கமாக கற்றவர் மற்றும் கல்லாதார் என இரு பிரிவுகள் மக்களால் உணரப்பட்டமை இங்கு தெளிவாகிறது- அறிவு மடம் படுதலும் அறிவு நன்கு(சிறுபாண் ஆற்றுப்படை 216) பாமரன் அறிஞன் எனஇருவகையான அறிவுசார் சமூக பிரிவை எடுத்துக் காட்டுகின்றது. மனைவாழ்க்கை மாதவ மென்றிரண்டு (ஏலாதி 73) மனை வாழ்க்கை என்பது பற்றுதல் உடையது என்றும் தவவாழ்க்கை பற்றற்றது என்றும் மக்களின் வாழ்க்கை தத்துவம்சார் இருவகையானதாகத் தத்துவவாதிகளால் விளக்கப்படுகிறது.

2. சமூகம் தொழில் ரீதியாக உழவர் மற்றும் வணிகர் கல்வி ரீதியாக பாமரன் மற்றும் அறிஞன், தந்துவம் ரீதியாக மனை வாழ்க்கை மற்றும் மாதவம் என இருவகை பிரிவுகளே இருந்துள்ளன. தொடலை வளர தொடுதோல் அடியர் (மதுரை காஞ்சி 636) செருப்பு அணிந்த காலோடு தொடையிலே கூர்நுனியும் குறுகிய பிடியும் கொண்ட உடைவாள் ஏந்திய ஊர் பாதுகாப்பு வீரர்கள் என்ற குறிப்பும், தொடுதோல் அடியர் துடிபட குழீ (பட்டினப்பாலை 265) செருப்பு அணிந்த பாதங்களை உடைய கொடிய வில்லேந்திய வேடர்கள் என்னும் செவ்விலக்கியக் கால செய்திகளால், கடந்த நூற்றாண்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் செருப்பு அணிவதை தடை செய்தது எவ்வளவு பெரிய சமூகப்பிழை என்பதைச் சிந்திக்க வைக்கிறது.

3. ஓங்கு நடைப் பெருமூ தாளர்ஏமம் சூழ (முல்லைப்பாட்டு 50) நல்லொழுக்கமுடைய வயதில் மூத்த காவலர் எனும் குறிப்பு காவலர் பணியில் வயது முதிர்ந்த குடிமக்கள் ஈடுபட்டிருந்தமையைத் தெரியப்படுத்துகின்றது. இன்று நாம் காணும் நவீன உலகின் (watchman / Security guard) செவ்விலக்கிய காலத்திலும் இருந்துள்ளனர் என்பது நோக்கத்தக்கது. வாழ்வாதாரத்திற்காக பணி செய்தாலும் அதில் சமூக அக்கறையுடன் செய்துள்ளனர் மூத்த குடிமக்கள். குறிப்பாக நல்லொழுக்கம் உடையவரே பாதுகாப்பு பணிக்குப் பொருத்தமானவர் என்பதே இதன் செய்தியாகும்.

4. நவீன காலத்தில் தீர்வு காண முடியாத சில பிரச்சனைகளான புலம் பெயர்ந்த மக்களை பாதுகாத்தல் (diaspora), உலக சந்தையில் காலூன்றுதல் (Global market). உலகமயமாக்கல் (Globalization) முதலியன தமிழர்களுக்கு புதிதன்று தொன்று தொட்டு எதிர்நோக்கி தீர்வு கண்ட சமூகம் என்பதில் பெருமை கொள்ளலாம்.

5. ஒரு கற்றறிவாளர் பார்வையில் செவ்விலக்கியங்களை அணுகும் போது தமிழ் மரப்பானது அடைக்கலம் தேடி வந்தவர்களை வாழ வைக்கவும், அலை கடல் தாண்டி காலடி எடுத்து வைத்து வேரூன்றி வளரவும், வழிவழியாக பக்குவப்பட்டு தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட மரபு தமிழ் மரபு என்பதும் ஆணித்தரமாக புலப்படுகிறது.

இவற்றிற்கெல்லாம் காரணம் தமிழ் மொழியும் அதில் உள்ள செழுமையான அறிவு ஆதாரங்களும் அதை உருவாக்க துணையாய் நின்ற தமிழ்க் கற்றறிவாளர்கள் மற்றும் சான்றோர்கள். இவர்களுடைய கல்வியியல் மெய் மதிப்பீடுகளுமே Quality education (SDG 4) ஆகும்.

துணைநூல் பட்டியல்

1. இன்னிலை. உ.சிதம்பரப்பிள்ளை ஸ்ரீசெண்பகா பதிப்பகம் சென்னை 2021

2. கடையூர் உத்திரக் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை உரையாசிரியர் நா. அருள்முருகன் தமிழ் வளர்ச்சி கழகம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 2022

3. ஏலாதி உரையாசிரியர் ஆர்.சி.சம்பத் ஸ்ரீ செண்பகா பதிப்பகம் சென்னை 2023

4. தொல்காப்பியம் தெளிவுரை புலியூர்க் கேசிகன் கொற்றவை வெளியீடு சென்னை 2022

5.மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சி உரையாசிரியர் பா. சரவணன் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழகம் 2022

6. இரணிய முட்டத்து பெருருளன்றூர்ப் பெருங்கௌசிகளார் பாடிய மலைபடுகடம் உரையாசிரியர் பா. சரவணன் தமிழ் வளர்ச்சி துறை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் 2022

7. காவேரிப்பூம் பட்டணத்து பொன்வாணிகர் மகனார் நம்பூதனார் பாடி முல்லைப்பாட்டு உரையாசிரியர் க.பலராமன் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 2022

8. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாண் ஆற்றுப்படை ஆசிரியர் ரா. முருகன் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 2022

9. நான்மணிக்கடிகை சிறுபஞ்சமூலம் தொகுப்பு இராசகோபாலப்பிள்ளை மற்றும் கா.ராமசாமி நாயுடு ஸ்ரீ செண்பகா பதிப்பகம் சென்னை 20-21

- முனைவர் மு.யூஜின் ரோசிட்டா, உதவிப் பேராசிரியை, கல்வியாளர் புலம், சென்னைப் பல்கலைக்கழகம்

Pin It