நாலடி கூறும் அறிவுடைமையானது வணிகவியலோடு தொடர்புடையது. கடற்கரையோர செல்வர்கள் கடல் கடந்து செல்வர் என்பதால் செல்வர் என்னும் சொல்லையே வினையாலணையும் பெயராகக் கொள்ள இடமிருக்கிறது.

இந்த அதிகாரத்திற்கு எழுதப்பட்டு வரும் உரைகள் அனைத்தும் கடற்கரைவணிக வாழ்வியல் உத்திகளைப் புறந்தள்ளிவிட்டு சமயம் சார்பான நல்லொழுக்க அறவுரைகளாக மட்டுமே வலிந்து எழுதப்பட்டு வந்துள்ளன.

1.

இந்த அதிகாரத்தில் உள்ள பாடல்கள் கடற்கரை நிலத்திற்கு உரியவை என்பதற்கு இப்பாக்களில் வரும் நளிகடல் தண் சேர்ப்ப (பாடல் 241), தெங்காகா - தென்னை இது கடற்கரையோர மணற்பாங்கான நிலத்தில் பயிரிடப்படுவது - ( பாடல் 242), கடல் சார்ந்தும் இன்னீர் பிறக்கும் (பாடல் 244), புன்னைப் படுகடல் தண் சேர்ப்ப (பாடல் 246), ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப (பாடல் 249), பட்டினம் பெற்ற கலம் (பாடல் 250) என்ற பாக்களில் வரும் நேரடிக் குறிப்புகளே சான்றுகள்

இத்தகைய குறிப்புகள் இதைத்தொடர்ந்து வரும் இரு அதிகாரங்களிலும் காணக் கிடைக்கின்றன என்பது கூடுதல் செய்தி..

2.

வறுமை வந்தால் அடக்கத்தோடிருக்க வேண்டும். பணிவற்ற சொற்கள் வாழுமூர் கோத்திரம் கூறப்படும். என்கிற குறிப்பில் அது வாழ்வதற்குச் சென்ற ஊர் என்பது தெளிவாகிறது. வணிகம் செய்யச் சென்ற ஊரில் இல்லாமை கருதி தோல்வி கருதி இன்னல்கள் கருதி அடங்காமல் இருந்தால் அது நற்பெயரைக்கெடுத்து பொருளீட்டும் அனைத்து வணிக முயற்சிகளுக்கும் தீங்காக அமையும்.

கோத்திரம் என்பதற்குப் பிறப்பு என்று பொருள் கொள்கின்றனர். வாழுமூரில் பிறந்தவர்களாகிய பூர்வீகக் குடிகளிடம் பகை ஏற்பட்டு பாதிப்பு நேரும் என்பதே இதன் பொருள்.

3.

 

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா

தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்

தன்னாற்றான் ஆகும் மறுமை வடதிசையும்

கொன்னாளர் சாலப் பலர்.

 ‘இயமன் இருக்குந் திசைக்கு அருகாமையான தென் திசையிலே பிறந்தவர் அந்த இயம லோகத்தைப் புகவேண்டுமன்றித் தூரத்திலேயான சுவர்க்கலோகம் புகுவது தன்மையோ? அதுவன்றிச் சுவர்க்க லோகத்துக்கு அருகாமையான வடதிசையிலே பிறந்தவர் கிட்டின உலகம் விட்டுத் தூரத்திலேயான இயம லோகத்துக்குப் போவது தன்மையோ? அல்லவே? ஆதலால் பிறந்த உலகத்தைக் கொண்டு காரியமில்லை. எந்தத் திசையிலே பிறந்தாலும் அறத்தைச் செய்வார்க்கு அன்றிச் சுவர்க்கம் எய்துதல் ஆகாது. அதனால் பல நூல்களையும் ஆராய்ந்து அந்நூலின் மொழிந்தபடி அறத்தின் முயலும்படிக்கு அறிவுடையனாகவேண்டும் என்பது கருத்து. நற்றிசையிலே பிறந்தாராயினும் அறம் செய்யாதார்க்கு மறுமை இல்லை என்பது தோன்றக் காஞ்சிரம் விதையை உவமையாக்கிக் கூறினார். ஆரியா வர்த்தப் புண்ணிய பூமி என்று வடமொழியாளரும் வடதிசையை வியந்து கூறினர். ’- தருமர்

‘என்றது எல்லா நல்ல நிலத்து வித்து இடினும் காஞ்சிரம் விதை தெங்காக முளையா; தென் திசைப் பிறந்தாரும் சிலர் நல் அறஞ் செய்து சொர்க்கம் புகுவர். வடதிசைப் பிறந்தாரும் தமக்கு நன்மை செய்து பயன் கொள்ளா(து போவர்)ரும் பலர் உளர். ஆதலால் தமது அறிவினது நெறியானே ஆம் அத்துணை (மறுமை) என்றவாறு.‘

 – பதுமனார் (நாலடியார் உரைவளம் இரண்டாம் பாகம் தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு நெ.59-b , பக்கம்89,90)

மேற்கண்டவற்றிலிருந்து, தென்னாட்டைச் சேர்ந்தவர்களே அறம் செய்து சுவர்க்கம் அடைகிறபொழுது சிறப்பான வடதிசையில் உள்ளவர்களில் பலர் மறுமைக்கான உறுதிப்பொருள்களைக் கைக்கொள்ளாமல் இருக்கின்றனர். நிலத்தால் என்ன பயன்? எட்டிக்காய் வடக்கில் முளைத்தாலும் தேங்காய் காய்க்குமா? என்பதாக இப்பாடலிற்குப் பொருள் கூறப்படுகிறது.

வடதிசையை உயர்த்தியும் தென்திசையைத் தாழ்த்தியும் கூறப்படும் இவ்வுரையை ஓரமாக வைத்துவிட்டு பாடல் கூறும் பொருளை அறிய முனைவோம். தென்னாட்டவரும் சுவர்க்கம் புகுதலால் தன்னாற்றான் ஆகும் மறுமை என்று இழிவுபடுத்தி எவரிடம் கூறப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வடக்கைச் சார்ந்தவனிடத்தில் பேசினால்தான் இவ்வாறு சொல்ல முடியும்.

 வடக்குத் திசையில் இருப்பவர்கள் பலர் வீணாக காலங்கழிப்பவர்கள். பலர் என்று சொல்லப்படுவதால் சிலர் மட்டுமே சுவர்க்கம் புகுகின்றனர் என்பதை அறியமுடிகிறது. ஆனால் தென்னாட்டவரில் பலர் சிலர் என்றில்லை. பெரும்பான்மை சுவர்க்கம் புகுகின்றனர் என்று கருத்துமுதல்வாத உரைகளின் வாயிலாக அறியமுடிகிறது.

தென்னாட்டவர் சுவர்க்கம்தான் புகுந்தார் என்று அறுதியிட்டுச் யார் சொல்ல முடியும்? இந்தக் கணக்கெல்லாம் எடுக்க இப்பாடல் எழுதியவர் இல்லாத சுவர்க்கத்தில் சித்திரகுப்த பதவி வகித்தாரா என்ன?! சுவர்க்கம் என்பது மேலுலகம் எனப் பொருள் கொள்ளப்பட்டதன் விளைவுதான் இத்தகைய குழப்பம்.

ஆக எட்டிக்காய் எந்த இடத்தில் முளைக்கவைத்தாலும் தேங்காயைப் போல் சுவையானதாக மாறிப் பயன் தராததுபோல் வடக்கில் உள்ளவர்கள் இருக்கும் இடத்திலேயே பயனின்றி வாழ்கின்றனர். தென்னாட்டவர் மட்டுமே சுவர்க்கம் எனும் பிற நகரப்பட்டினங்களை கடல் வழியில் அடைகின்றனர். அவர்கள் நல்ல முறையில் மீண்டு வருவது அவர்களின் திறமையான செயல்களால் மட்டுமே . செல்கின்ற நகரில் நற்செயல்கள் செய்து பகை இன்றி செல்வம் திரட்டி பாதுகாப்பாக சொந்த ஊர் வருக என்று பாடல் தெளிவான கருத்தைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.

சுவர்க்கம் என்பது செல்வச் செழிப்பு மிக்க வேற்று நகரம் என்பதையும் தன்னாற்றான் ஆகும் மறுமை என்பது அந்நகரிலிருந்து தன் செயல்களால் வெற்றியோடு மீண்டும் தன் ஊரை அடைவது என்பதாகக் கொள்வதே பொருத்தமுடையது.

4.

உப்புத்தன்மையுள்ள பெருங் கடலுக்கு அருகில் தோண்டினால் நன்னீர் கிடைக்கும். ஆறுகள் பாயும் மலைக்கருகில் தோண்டும்போது சிலநேரங்களில் உப்புநீரும் கிடைக்கும்.. பெரும்பான்மையாகக் காணப்படும் இனத்தின் தன்மையை அல்லாமல் மனத்தால் சிறந்தவர்களும் இருப்பார்கள். ஆகவே எல்லா இடத்திலும் நல்லவர்களும் தீயவர்களும் கலந்திருப்பார்கள் என்பதை அறிந்து அனைவரையும் ஒரே கண் கொண்டு பார்க்காமல் வணிகம் மேற்கொள்ள வேண்டும் என்கிற பொருள்தான் 244 ஆம் பாடலில் இருக்கிறது.

வேப்பமரங்களுக்கிடையில் வளர்ந்துள்ள வாழையின் கனி தன் குணத்தில் மாறுபடாமல் இனிப்பதைப் போல தீயவர்களின் இனத்தில் பழகிக்கொண்டு இருக்கும்போதும் அவர்களை விட்டு அகலக்கூடாது என்கிறது இன்னொருபாடல். இது வணிகத் தந்திரமன்றி வேறென்ன?

 யார் மாட்டும் தங்கும் மனத்தார் என்கிற குறிப்பிலிருந்தும் எந்தவகையான வேற்றுப்பண்பாட்டுடையாரிடத்தும் தங்குபவர்கள் என்பதை அறியலாம். வணிகர் எங்கு சென்று தங்கினாலும் மனமொப்பி இருக்கவேண்டும். அதோடு அவர்களுடன் நட்புறவை மட்டுமே தொடர வேண்டும். அறிவுடையவர்களின் பிரிவு துயர் தரும் ஆகையால் நெருங்கிப் பழகாமையே நன்று. அதாவது வணிகர்கள் எவ்விடத்திலிருந்தும் எவரைப் பிரிவதற்கும் அஞ்சக்கூடாது என்பதை சொல்கிறது பாடல் 246.

வேற்று நகரங்களில் செல்லும்போது கூட அவர்களில் உணர்வு ஒன்றியவருடன் வாழ்ந்திருத்தலே இன்பம் தரும். உணர்வின்றி இணைந்திருப்பவர்களால் தீங்குகளே மிகுதி என்னும் 247 ஆம் பாடலுக்கு இன்னொரு விதமாகவும் கூட தோன்றுகிறது. உணர்வால் ஒன்றிய காதல் பெண்டுடன் இணைந்திருப்பது இன்பம் தரும். அதைவிடுத்து காமக் களியாட்டத்தில் விலைமகளிருடன் தொடர்பு கொண்டால் அது பகை நோய் முதலான வணிகத்தைப் பாதிக்கும் பல்வேறு தீங்கைத் தரும்.

5.

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை

நிலைகலக்கிக் கீழிடுவானும் நிலையினும்

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத்

தலையாகச் செய்வானும் தான்

என்னும்248 ஆவது பாடல் பலராலும் விரும்பி மேற்கோள் காட்டப்படும் ஒன்று.

இப்பாடலில் நன்னிலைக்கண் தன்னை நிறுத்துதல் நிலைகலங்கிக் கீழ் செல்லுதல் என்பவற்றை மரக்கலம் செலுத்தும் நோக்கில் காணலாம். நல்ல துறைமுகங்களில் நிறுத்தி வணிகம் செய்யாவிடின் இழப்பாகும். பருவக் காற்றறிந்து கலத்தை செலுத்தாவிடில் கடலில் நிலைகுலைந்து கலம் மூழ்கும். சிறந்த பொருளீட்டும் வணிகனாக இருப்பவன் சூழலறிந்து வணிகம் வளர்க்கும் தலைமைப் பண்புகளோடு இருக்க வேண்டும். இம்மூன்றில் எது தவறினாலும் இழப்பு உறுதி. இவ்வாறு வணிகநோக்கிலும் இதற்குப் பொருள் காண முடியும்.

கல்லாதவரிடமும் சேர்ந்து இருந்து பயன்பெறுதல் அறிவு என்று தன் வியாபார நோக்கத்தை வெளிப்படையாக 249 ஆம் பாடல் காட்டுகிறது.

இன்றைய காலத்திலும் கூட நிறுவனங்கள் அரசுகளுடன் கைகோத்து நிற்பதையும் அவர்களுக்கு அதிகாரம் கைக்குவர உதவி செய்து, அதன் மூலம் கொள்ளை லாபம் பெறுவதும் நடைமுறையில் உள்ளதை அறிவோம். பல்வேறு நலப்பணிகளுக்கு விளம்பரங்களுக்காக உதவுவதும் இவ்வியாபார சூழ்ச்சிதான்.

பொருளீட்டச் செல்பவர்கள் தான் சென்ற இடத்தில் அங்கிருக்கும் பலரையும் கவர்ந்து அவர்களுக்கு தக்க பொருளுதவி செய்து அவர்களின் உதவியுடன் பொருளீட்டி நன்கு வாழத் தொடங்கினால் அவர் வெற்றி பெற்ற வணிகர்.

 சிறப்பான முறையில் வணிகம் செய்வது என்பது புயல் முதலான பாதிப்புகளில் தப்பி கப்பல் ஒன்று பாதுகாப்பாக நகரின் கரையைச் சேர்வது போன்றது என்கிறது 250 ஆம் பாடல். அதிலும் பட்டினம் சேர்ந்த கலம் என்பதன் நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். கப்பல் ஆளரவமற்ற தீவுகளில் மாட்டிக்கொண்டாலோ வளமில்லாத சிறு தீவுகளில் மாட்டிக் கொண்டாலோ எந்த வணிகப் பயனும் இல்லை ; அதே நேரத்தில் பட்டினம் சேர்ந்தால் வணிகப்பயன் உண்டு என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று..

 பாமர மக்களிடமும்கூட கரைசேர்த்தல் கரை ஏற்றுதல் என்ற தொடர்கள் வழங்குவதைக் காணலாம். இங்குக் காட்டப்பட்டவை அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பாக்களைக் கொண்டு மட்டுமே. இவ் அதிகாரத்தைத் தொடர்ந்து வரும் அறிவின்மை மற்றும் நன்றியில் செல்வம் என்னும் இரு அதிகாரங்களிலும் இது தொடர்பான செய்திகள் மீதமிருக்கின்றன. இவை நெய்தல் நில வணிகருக்கான பாடல்கள்.

- பொ.முத்துவேல்

Pin It