இலக்கியங்கள் அவை உருவாக்கப்பட்ட காலத்தின் சமூக, பொருளியல், பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும். அதேநேரத்தில் அவை அக்காலத்தின் உற்பத்திப் பொருள்கள் என்பதனையும் மறக்கலாகாது. காலத்தின் உற்பத்தித் தன்மைக்கேற்ப இலக்கியத்தின் வடிவம், கட்டமைப்பு, அளவு (prosody, metre and length) மாறிவரும். தொடக்கத்தில் ஓசைகள், வாய்பேச்சு, தொடர்கள், பாடல், பிறகு இசை ஒவ்விய பாடல்கள் என்று அமைந்த இலக்கிய வடிவங்கள் சில சில, சிறு சிறு சம்பவங்களைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்திருக்கும்.
மனித வாழ்வில் தொழில்நுட்பமும், உற்பத்தியும் வளரும்போது மொழிவீச்சு, வாய்பேச்சு அதிகமாகையில் அதனைத் திறம்படப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை கூடி அவர்கள் அதனை நயமாகப் பயன்படுத்தும் குழுவினராக மாறுவர். தமிழகம் பொறுத்து அவர்கள் பாணர், புலவர். ஒரு தனித்த மொழியினைப் பின்பற்றும், தனித்த இனக்குழுவில் மொழியாளுமை மிக்க குழுவினர் எழும்போது வரையறுக்கப்பட்ட இலக்கியங்கள் தோன்றும். அவ்வாறு தோன்றும்போது பழம்நினைவுகள் புதுப்பொலிவுடன் கதையாக்கப்படும். அதில் இசை, பாடல், ஊடுகதை, கிளைக்கதை, நம்பிக்கை போன்றவையும் சேர்க்கப்படும். அதுபோன்ற கதைகள் தொடக்கத்தில் ஓரிரு வரிகளில் அல்லது நான்கைந்து வரிகளில் அடக்கப்படும். அவ்வாறு எழுந்த தமிழ் இலக்கியப் பாடல்கள் காலத்தால் முந்தியனவாக இருத்தல் வேண்டும். உற்பத்தி முறை வளர்ந்து உபரிஉற்பத்தி அதிகமாகும்போதும், ஓய்வு நேரமும் விவாத நேரமும் கூடும்போதும் நெடிய பாடல்கள், பெரிய இலக்கியங்கள் தோன்றும். இதனை இன்னொரு வகையில் புரிந்து கொள்ளலாம்.
பழந்தமிழ்க் கல்வெட்டுகள் பெரும்பாலும் நான்கைந்து வரிகளில் பொறிக்கப்பட்டவை. இவற்றின் காலம் கி.மு 600 முதல் கி.பி.300 வரை என்று கணிக்கப்பட்டுள்ளது.1 இக்காலக்கட்டத்தின் உற்பத்திமுறையின் விளைவாகவே இவற்றினைக் கணிக்கவேண்டியுள்ளது. கி.பி.300 தொடக்கம் தமிழகத்தில் சமூக, பொருளியல், அரசியல் மாற்றம் நிகழ்ந்தபோது உற்பத்தி உறவுகளும் மாறின. இக்காலக்கட்டத்திற்குப் பிறகு நெடிய பாடல்கள்/இலக்கியங்கள் தோன்றின. இவ்வகைக்குள் பத்துப்பாட்டு இலக்கியங்களை அடக்கலாம். இதன் தொடர்ச்சியாகவே சிலப்பதிகாரம் என்ற இலக்கியம் உருவாக்கப்பட்டதாகக் கருதலாம். இதே காலகட்டத்தில்தான் முற்காலப் பல்லவரின் பிராகிருதமொழி செப்புப் பட்டயங்கள் வெளியிடப்பட்டன. சற்று பிந்திய காலத்தினதாக பூலாங்குறிச்சி பாறைக்கல்வெட்டுகள் அமைகின்றன.2 தொடர்ந்து வந்த இதுபோன்ற சூழலில் எழுதப்பட்டதாக பொதுவாகக் கருதப்படும் சிலப்பதிகாரம் எனும் தமிழ் இலக்கியம் ஒரேநாளில் அச்சாக்கப்பட்ட நூலன்று.
தொடர்ச்சி
சிலப்பதிகாரம் சிறப்பதிகாரம் என்றும் அறியப்பட்டது.3 செம்மொழிப்பாத்தொகுப்பில் திருமாஉண்ணி பற்றிய பாடல்களும்,4 கேரளத்தின் வடக்கில் கூத்து வடிவிலும், தமிழகத்தில் காப்பிய வடிவிலும், நாடக வடிவிலும், பாட்டுடைச் செய்யுள் வடிவிலும் இருக்க இலங்கையில் சடங்குநிலையில் உள்ளது.5 சிலப்பதிகாரத்தின் அறுபடாத தொடர்ச்சியினை இவ்வாறு அறியலாம்
அச்சாக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் கூற்றில் மேலைநாட்டுக் கல்விமுறையில் பயிற்சிபெற்ற தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் தமிழ் பழம்இலக்கியங்களை அச்சேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 1812இல் திருக்குறளின் ஒருபகுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் சி.வை. தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்றோர் வருகை அச்சேற்றும் வேலையினை அறிவியல்பூர்வமாகத் துரிதப்படுத்தின. ராபர்ட் கால்ட்வெல்லின் வருகைக்குப் பிறகு ஆய்வுமுறை கருத்தியல்ரீதியாகப் புது உத்வேகம் பெற்றது. அதே காலக்கட்டத்தில் சமஸ்கிருதத்தினையும், ஆரியக் கோட்பாட்டினையும் உயர்த்திப்பிடித்த மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியருக்கு இணையாக ராபர்ட் கால்ட்வெல் திராவிட/தென்னிந்திய மொழிகள் வழியே தமிழின் சிறப்பினை வெளிக்கொணர்ந்தார்.6 இதன் தொடர்ச்சியினை பெ.சுந்தரம்பிள்ளை மேற்கொண்டார். இச்சூழலில் சிலப்பதிகாரம் என்ற காப்பியவகை நூல் அச்சேற்றப்பட்டது; தமிழ்ப்பண்பாட்டின் அழுத்தமான பண்பாட்டுக்கூறுகளை விளக்கும் காப்பியமாகப் போற்றப்பட்டது.
தொடக்கத்தில் புகார்க் காண்டம் மூலப்பாடம் மட்டும் வெளியிடப்பட்டது. அடுத்து, அதனுடன் உரையும் சேர்த்து வெளியிடப்பட்டது. தொடர்ந்து வஞ்சிக்காண்டம் உரையுடன் வெளியிடப்பட்டது. அடுத்து, உ.வே.சா. முழுப்பாடத்தினையும் உரையுடன் வெளியிட்டார். பிறகு, அதன் திருத்திய பதிப்பினையும் வெளியிட்டார். ஆராய்ச்சிக்குறிப்புடன் வெளியிடப்பட்ட இப்பிரதி நூல்பதிப்பிற்கான ஒரு மாதிரி நூலாக (model text) அமைகிறது.7
உள்ளடக்கம்
எட்டுவகைப் பாக்கள் 59 நூல்கள், 24 புலவர்கள், 22 கடவுளர்கள், 11 நதிகள், 19 மலைகள், 36 ஊர்கள், 23நாடுகள், 41 அரசர்கள் பற்றிய குறிப்புகளை இந்நூல் கொண்டுள்ளது. 3 காண்டங்களில் 30 உள்பகுதிகளைக் கொண்டு கிளைக்கதைகள், மடல்கள், சாபங்கள், களவுகள், கனவுகள், பழம்பிறப்புக் கதைகள், பின்னோக்கிச்செல்லும் நிகழ்வு போன்றவற்றால் கதைநகர்வுகள் நிகழ்த்தப்படுவதால் அகிலன் குறிப்பிட்டதுபோல் சிலப்பதிகாரம் தமிழின் முதல் நாவல் எனலாம்.
மொழிபெயர்ப்பு
தொடர்ந்து இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக இலக்கியவாதிகளின் கவனத்தினை ஈர்த்தது. 1939 இல் இராமச்சந்திர தீக்ஷிதர் முழு இலக்கியத்தினையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கல்வெட்டுகள், நாட்டுப்புறக்கதைகள், மானிடவியல் செய்திகளின் அடிப்படையில் சில ஆய்வுக்குறிப்புகளையும் தந்திருந்தார். எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் ஒரு மொழிபெயர்ப்பினை வெளியிட்டார். Alain Danielou என்ற பிரஞ்ச் அறிஞர் ஒருவரும் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.8
இதற்கு முன்பே சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் பற்றிய ஆராய்ச்சிக்கு பல அறிஞரும் முயன்றனர். அவர்களும் கல்வெட்டு அறிஞர்கள் கே.வி.சுப்பிரமணிய அய்யர், Keilhorn போன்றோரும் இதன் காலம் பற்றி கருத்துத் தெரிவித்தனர். திவான்பகதூர் சாமிக்கண்ணுபிள்ளை என்பவர் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்ட வானியல் குறிப்புகளின் அடிப்படையில் அதன் காலத்தினை வரையறுத்தார். இந்நூலின் காலத்தினை வரையறுப்பதில் வாதம் தொடர்ந்துகொண்டுள்ளது. இந்நூலின் காலத்தினை எஸ்.வையாபுரிப்பிள்ளை உலக, இந்திய இலக்கியங்கள் தோன்றிய சமூக-பொருளியல் காலப் பின்னணியில் நிர்ணயித்தார்.9 இந்நூலினை ஆய்ந்தவர்கள் அதன் பெயரிலேயே சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், சிலம்பொலி செல்லப்பன், சிலம்பு நா.செல்வராசு என்று அறியப்படுவது இந்நூலின் புகழினைக் காட்டும்.
சிலப்பதிகாரமும் சினிமாவும்
சிலப்பதிகாரத்தின் வரலாற்று வரைவியலில் அந்நூலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தமிழ் சினிமாக்களையும் சேர்க்கவேண்டும். 1944 இல் பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா, எம்.எஸ்.சரோஜா நடித்த கண்ணகி என்ற படம் பி.எஸ்.இளங்கோவன் எழுதிய வசனத்திற்காக மிகவும் புகழ்பெற்றது. 1966 இல் எஸ்.எஸ்.இராசேந்திரன், விஜயகுமாரி, ராஜ்யஸ்ரீ நடித்த பூம்புகார் என்ற திரைப்படத்திற்கு மு.கருணாநிதி வசனம் எழுதினார். 1968 இல் கே.ஆர்.விஜயா, பிரேம்நசீர் இருவரும் சிலப்பதிகாரக் கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொடுங்கலூர் அம்மா என்ற திரைப்படத்தில் நடித்தனர். இதற்கிடையில் 1957 இல் வெளியிடப்பட்ட ராஜா ராணி என்ற படத்தில் சேரன் செங்குட்டுவன் என்ற ஓரங்கநாடகத்தில் சிலப்பதிகாரக் கதையினை மு.கருணாநிதி எழுதியிருப்பார். அண்மையில்(2016) இக்கதையினை மூலமாக வைத்து சுனில் ஆர்யரத்னா என்பவர் பத்தினி என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
திறனாய்வு
இது ஒருபுறமிருக்க, கல்வித்துறையில் தோய்ந்த புலமை பெற்ற அறிஞர்கள் திறனாய்வுமுறையில் இந்நூலினை ஆய்ந்தனர்; பல பின்னணிகளில் பார்த்தனர். இதனை குடிமக்கள் காப்பியம் என்றும் அது ஒரு சமணநூல் என்றும், முதல் தேசிய இலக்கியம் என்றும், முதல் நாடகக் காப்பியம் என்றும் வகைப்படுத்தினர். கல்விப்புலத்திற்கு வெளியே சிலர் சிலப்பதிகாரம் வர்க்கமுரண்பாட்டினை வெளிப்படுத்தும் இலக்கியம் என்றனர். இதற்கு மறுப்பும் வந்தது.10
இலக்கியத் திறனாய்வில் புதிய இஸங்கள் வந்தபின் அவற்றின் பின்னணியிலும் சிலம்பு ஆயப்பட்டது. இரஸனை என்ற கருத்தியலுடனும் ஆயப்பட்டது.11 சிலம்பினை ஆய்ந்த க.கைலாசபதி போன்றோர் அந்நூல் முன்மொழிந்த ஊழ் என்ற கருத்தினை மறுத்து அதற்கான இயங்கியல் தத்துவத்தினை முன்வைத்துள்ளார்.12
சிலப்பதிகாரமும் அரசுருவாக்கமும்
தமிழகத்தில் அரசுருவாக்கம் கிறித்தவ சகாப்தத்தினை ஒட்டியே நிகழ்ந்தது. அரசுருவாக்கத்திற்கு நிலப்பரப்பு, மக்கள், இயற்கைவளம் மட்டும் போதாது. இவற்றை சேதாரம் இல்லாமல் கட்டியமைப்பதற்கு ஒரு கருத்தியல் தேவை. மேற்சொல்லப்பட்ட காலம்வரை தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரமும் ஒவ்வொரு இனக்குழுவினரால் ஆளப்பட்டு வந்தது. இவற்றை முறியடித்து ஒன்றிணைந்த தமிழ்நாட்டினை உருவாக்க வம்பவேந்தர் என்ற புதிய மரபினர் தோன்றினர். இவர்கள் வெவ்வேறு இனக்குழுத்தலைவர்களையும் தம் அரசகட்டமைப்பிற்குள் இழுக்க முயன்றனர். அவர்களை வெல்வதற்கு போர்மட்டும் போதாது. கருத்தியலுடன் சேர்ந்த சடங்கும் தேவை. எனவே, வம்பவேந்தர் எனப்பட்ட சேர,சோழ, பாண்டியர்கள் யாகச்சடங்குகளை அறிமுகப்படுத்தினர். வேத இலக்கியங்களை உச்சாடனங்களாக முன்னிறுத்தினர். அவற்றை நடத்திக்கொடுக்க பிராமணர்களைப் போற்றினர். அவர்களுக்கு நிலங்களும், பொன்னும் கொடுத்துப் போற்றினர்.13 இது ஒரு அரசு உருவாகத் தோதானது. எனவே, தமிழகத்தில் அரசு உருவாகப்போகும் சூழலை அறிந்த புலவர்கள் தம் தம் பங்கிற்கு எதுமாதிரியான அரசு உருவாக வேண்டும், உருவாகக்கூடாது என்பதனை இலக்கியங்கள் வாயிலாகப் பரிந்துரைத்தனர். திருக்குறளில் அரசு தொடர்பாக சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தினையும் காணலாம்.
இந்நூலில் சுட்டப்பட்டுள்ள சொற்களைக்கொண்டு ஒரு மாதிரி அரசினை (model state) கருதுகோளாக இளங்கோவடிகள் முன்வைத்தார் எனலாம்.
கருதுகோள்
இளங்கோவடிகள் பரிந்துரைக்கும்
அரசு அதிகாரப்படிநிலை
மன்னர்
King
மண்ணாள் வேந்து முடிகெழுவேந்தர் மூவர்க்குரியது சீர்சால் வேந்தன்
இளவரசு
Co-ruler/prince
நாள்மகிழிருக்கை
Royal court
பெரும்படைத்தலைவன் தானைத்தலைவன்
Military chief
ஐம்பெருங்குழு,எண்பேராயம்
Advisory council
கரும வினைஞர்
Secretary/executive
கணக்கியல் வினைஞர்
Chief accountant
தரும வினைஞர்
Orbitrator/judicial officer
தந்திர வினைஞர்
Statesman
வினைபரி குதிரையர்
Horse guards
வெண்கோட்டியானையாளர்
Elephant guards
பகைபுலத்தரசர்
Ruler of enemy state
வரலாற்றுப் போக்குகள்
வரலாற்றுப் போக்குகளுக்கு ஏற்ப இலக்கியங்கள் உருவாக்கப்படும். பக்தி இயக்க காலகட்டத்தில் பாடல்பெற்ற ஒவ்வொரு தலமும் அங்கு அமைந்திருந்த வேளாணூரும் தனித்தனி உற்பத்தி அலகுகளாக (productive unit) கணிக்கப்படவேண்டியன. எனவே, ஒவ்வொரு பக்தித் தலத்திற்கும் ஓரளவு சமமான எண்ணிக்கையில் பாடல்கள் இயற்றப்பட்டன எனலாம். கி.பி.600 முதல் கி.பி.1371/1400வரை தமிழகத்தில் நிலவுடைமை நன்கு வளர்ந்திருந்த காலகட்டம். கூட்டுடைமையுடன் தனியுடைமையும் வளர்ந்தது. 14 வழிபாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் பெருமளவு நிலத்திற்கு உடைமையாளராய் இருந்தன. இச்சூழலில் பேரிலக்கியங்களான சீவகசிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம் போன்றன தோன்றின. இவற்றுள் பெரியபுராணமும், கம்பராமாயணமும் பக்தியின் வாயிலாக தமிழ் இனக்குழுக்களின் ஒருங்கிணைப்பினையும் கடவுள் தன்மை பொருந்திய அரசனையும் முன்னிறுத்தியது எனலாம்.15 இவை அரசு நன்கு வேரூன்றிய காலத்தில் இயற்றப்பட்டவையாகும்.
இளங்கோவடிகளும் சமயமும்
இங்கு சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. கோவலனும், கண்ணகியும் காடுகாண் காதையில் மதுரையினை அடையுமுன் மூன்று வழிபாட்டு இடங்களைக் காண்கின்றனர். அதில் சமணர் தலத்தினை மட்டும் விழுந்து வணங்கி நின்றனர் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே, அவர்களும் இளங்கோவடிகளும் சமணர் என்பார் ம.பொ.சிவஞானம்.16 அப்படியென்றால் இளங்கோவடிகள் திகம்பரரா? ஸ்வேதம்பரரா? என்ற கேள்வி எழுகிறது. துறவியாக இருந்திருப்பின் இசை, நாடகம், நாட்டியம், பெண்கள் அணியும் நகைநட்டுகள் போன்றவற்றை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இல்லற அனுபவம் பெற்று உலகவாழ்வினை உணர்ந்து சிலப்பதிகாரத்தினை இயற்றியிருக்க வேண்டும். இன்னொன்று, தமிழகத்தில் தந்தைகள் தம் தம் மகள்களை தாய்வடிவில் கண்டு மகிழ்வர். இதன் தொடர்ச்சிதான் இங்கு இளங்கோவடிகள் தம் மகவினை மகள் மணிமேகலையாகப் படைத்தார் போலும். இங்கு இன்னொன்றினைக் குறிப்பிடவேண்டும். துறவுபூண்ட சுத்தானந்த பாரதி காதல் பாடல்களை இயற்றவில்லை.
இளங்கோவடிகளும் இந்தியாவும்
தமிழ்நாடு, தென் தமிழ்நன்னாடு, இமிழ்கடல்வேலியைத் தமிழ்நாடாக்கி, குடதிசையாளுங் கொற்றவேந்தன், குணதிசை போன்ற தொடர்கள் இளங்கோவடிகளுக்கு நிலப்பரப்பியல் பற்றிய புரிதல் இருந்துள்ளது எனலாம். இதனை அரசுருவாகும் கருத்தோடு இணைத்துப் பார்க்கலாம். இந்நிலப்பரப்பு இந்தியப் பின்னணியில் பார்க்கப்படுகிறது என்பதனை மகதநன்னாடு, மகதநன்னாட்டு வாள்வாய்வேந்தன், அவந்திவேந்தன், கங்கை, இமையம் போன்ற குறிப்புகளோடு பொருத்திப் பார்க்கவேண்டும். கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்காளர், பல்வேற்கட்டியர் என்ற அரசகுலத்தினர் பற்றிய குறிப்புகள் இளங்கோவடிகளின் அரச-நிலப்பரப்பியலின் (political geography) அறிவினை வெளிப்படுத்துகிறது.காவிரிபுகும்பட்டினத்தின் நிலப்பகுதி ஊர், பாக்கம், இருக்கை என்று சுட்டப்படுவது ஒரு rural landscape னை விவரிப்பதாக உள்ளது. வேனிற்காதையில் ‘நால்வகை சாதியு நலம்பெறநோக்கி’ என்ற குறிப்பு சமூகத்தின் நான்கு அடுக்கினையும் காட்டுவதாயுள்ளது. கடல்சார் வாழ்வில் நான்கு வகையான இனக்குழுவினரை அடையாளம் காட்டும் இந்நூல் பிராமண இனத்திலுள்ள குழுப்பிரிவுகளையும் நால்வகை மறையோர், வேள்விபார்ப்பான், மாமறையாளர், வெவ்விய பார்ப்பான், வலவை பார்ப்பான், வண்டமிழ் மறையோன் என்ற தொடர்கள் மூலம் குறிக்கிறது. இசைக்குழாத்தில் யாழ்புலவர், யாழ்பாணர், பாடற்பாணர், பாடும்பரணர் என்ற கிடைநிலையமைப்பு இருந்துள்ளது. இவர்களுடன் இந்நகரின் பண்பாக இளங்கோவடிகள் சிலவற்றைக் குறித்துள்ளார்: பேசாப்பாத்திரமான கண்ணகி, கற்பின் மனையுறைமகளிர், மலவற் பெண்டிர், பொய்கரிமாக்கள், பிறன்மனை நயப்போர். இக்கூறுகள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும்.
இந்நகரின் சமூகக் கட்டமைப்பினைக் குறுக்காகவும், நெடுக்காகவும் பார்க்கலாம். அங்கு மக்கள் 26 தொழில்சார் குழுக்களாக (professional groups) அமைந்திருந்தனர். கல்வி புலமைத்துவமுடையோர், காவலர், பலவகை கைவினைஞர்கள், வணிகர், உழவர், கணிகையோர், பாணர், மறையோர், பார்ப்பனர், நம்பியர், புலம்பெயர் புதுவன், புலம்பெயர்மாக்கள் என்று பல தரப்பினராக வசித்துள்ளனர். இவர்களுள் மாதவி எழுத, படிக்கத் தெரிந்தவராக வாழ்ந்துள்ளார். இசை, நடனம், கூத்து, பாடல், ஆடல் போன்றன கல்வியோடு தொடர்புடையன. இந்நகரின் பேசாப்பெண்ணாக கண்ணகி இருப்பினும் அவர் பேசவைத்த நபர்கள் வரிசையில் கவுந்தி அடிகள், ஆய்ச்சியர், சாலினி, குன்றக்குறவர், மதுரைமக்கள், கதிரவன் இவர்களுடன் இளங்கோவடிகள்.
கடவுளர்கள்
இளங்கோவடிகள் 30க்கும் மேற்பட்ட பெயர்களில் கடவுளைச் சுட்டினாலும் விநாயகர், கணபதி பற்றிய குறிப்புகள் இல்லை. வழிபாட்டிடங்கள் பொதுவாக கோயில், கோட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருப்பினும் அறவோர்பள்ளி என்ற குறிப்பு வழிபாட்டு இடமாக இல்லாமல் கல்விநிலையமாகவும் இயங்கியிருக்கும் எனலாம். நிக்கந்தகோட்டம் என்பது தத்துவப்பள்ளியினைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். மன்னவன்பேரிசை கோயில் என்பது அரண்மனையாக அமைந்திருக்கலாம்.
பதிநான்கு பெண்கடவுளர்கள், பொதுவாக பாவை, செல்வி, தெய்வம் என்ற சொற்களில் சுட்டப்படுகின்றனர். இவர்களுடன் சேர்த்து கண்ணகி தென்தமிழ்ப்பாவை என்று அழைக்கப்படுகிறார். இவர் வடக்கில் வழிபடப்படும் தெய்வமன்று.
மானிடவியல் கூறுகள்
எயினர் கூட்டுண்ணும் நடுவர்மன்றம் என்ற தொடர் சிலப்பதிகாரக் காலம்வரை egaliterian society என்ற தன்மை தமிழகத்தில் இருந்ததனைச் சுட்டுகிறது எனலாம்.17 சாலினி, ஆயர்முதுமகள் போன்ற சொற்கள் சிலப்பதிகாரக் காலம் வரை shamanistic features வழக்கில் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன. தமர், கொடி, சுற்றம், கிளை, குடிமுதற்சுற்றம் போன்ற சொற்கள் இந்நூலினை மானிடவியல் பின்னணியில் ஆய்வதற்கு அனுமதிக்கின்றன. கடல்சார் வாழ்வில் நான்கு வகையான இனக்குழுவினரை அடையாளம் காட்டும்.
ஊழ்
சிலப்பதிகாரம் முன்வைக்கும் கருத்தியலாக ஊழ்வினை/விதியினைச் சொல்லலாம்.18 இது காரணம் அறியப்படாத செயலுக்கு ஊழினை வழிமொழிந்து, காரணத்தினைக் கண்டுபிடிக்க இயலாமல் தடுக்கும் கருத்தினை முன்வைக்கிறது. இங்கு ஊழ் என்பது சாவு என்று அறியப்படுகிறது. அப்படி சிலப்பதிகாரத்தில் இறந்தவர்கள் 2 ஆண்கள், 2 பெண்கள், ஒரு கொலை, 3 தற்கொலைகள். இவையனைத்தினையும் ஊழ் நியாயப்படுத்துகிறது. என்றால், ஊழ் என்று சொல்லி ஒரு கொலையினை நியாயப்படுத்த முடியும். வள்ளுவர் தந்த ஊழ் என்ற சொல் அதே பொருளில் கம்பராமாயணத்தில் விதி என்று மாறுகிறது என்பார் க.கைலாசபதி. ஊழ், பால், இரண்டும் ஒருபொருள் தரும் சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு இவற்றுள் பால் எனும் சொல் தொடக்கத்தில் மனிதசமத்துவம் (social equality) பற்றிப் பொருள்தரும் என்றும் அதுவே பிற்காலத்தில் அசமத்துவத்தினை (inequality) நியாயப்படுத்தும் சொல்லாக மாறுகிறது என்றும் சொல்வார்.19
இதில் மாதவி செய்த புரட்சி என்னவெனில் விதியால் அவள் சாகவில்லை. கோவலன் பிரிதலுக்கான காரணத்தினை அறிய முயல்கிறாள்.மடல் மேல் மடல் எழுதுகிறாள். தமிழர் இலக்கிய வரலாற்றில் படிக்கப்படாத இரு கடிதங்கள் மாதவி எனும் பெண் எழுதியவை.
நன்கு கட்டமைக்கப்படாத அரசு, எழுதாச்சட்டங்கள் கொண்ட அரசன், உயர்குடியினரின் வேதவாக்குச்சொற்கள், தனிமனிதப் பாதுகாப்பற்ற சூழல் கோவலனின் இறப்பிற்குக் காரணமாகலாம். இதனை விமர்சிக்காமல் அறிஞர்கள் ஊழின்மேல் பழிபோடுவது சமூகப்பொறுப்பிலிருந்து தப்பிப்பதாகும். அரசுருவாகும் சூழலில் எதுபோன்ற அரசு உருவாகக்கூடாது என்பதனை இளங்கோவடிகள் முன்னுணர்ந்து உரைக்கிறார் என்று கருதவேண்டியுள்ளது.
காலமும் கருத்தும்
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் கருத்தினை ஏற்றால் அதாவது சிலப்பதிகாரம் 8-9 ஆம் நூற்றாண்டினது என்ற கருத்தினை ஏற்றால் அதேகாலத்தில் கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தினை முன்வைக்கிறது; சிலப்பதிகாரம் எதிர்நிலை எடுக்கிறது. இராமாயணத்தின் கதைத்தலைவன் வாழ்த்தப்படுகிறான்; கோவலன் வீழ்த்தப்படுகிறான். பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடக்கம் சிலப்பதிகாரத்திற்கு காலம் வகுத்த அறிஞர்களின் கருத்துகளை மீளாய்வு செய்யும் பேராசிரியர்.இராம.சுந்தரம் மொழி வளர்ச்சியில் நிகழ்ந்த தன்மை ஒருமையாக நான் என்ற சொல்லின் அடிப்படையிலும் அந்த எந்த எனும் சுட்டுச் சொற்கள் அடிப்படையிலும் இளங்கோவடிகள் கண்ணகியினை கொற்றவையல்லள் என்பதாலும் கி.பி.800-900 களில் கொற்றவை சக்திவடிவமாக மாறுவதாலும் சிலப்பதிகாரம் கி.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இயற்றப்பட்டிருக்கலாம் என்று முடிப்பார்.20
இங்கு கங்கை, இமையம், கருநாடர், கலிங்கம், மகதம் பற்றியெல்லாம் பேசிய இளங்கோவடிகள் பவுத்தமும், சமணமும் செழித்தோங்கிய காஞ்சி பற்றி குறிப்பு தரவில்லையே என்ற கேள்வி எழுகிறது. அங்கு வந்த யுவான்சுவாங் (602-664)பற்றியும் குறிப்பு இல்லை. வடக்கிருந்து விஞ்சையன் தம்பதியினர் இந்திரவிழாவிற்கு வருகை தந்த குறிப்பு உண்டு. ஆனால், வடக்கிற்கு வந்த இட்சிங்(635-713) பற்றியும் பாகியான்(399-412) பற்றியும் குறிப்பு இல்லை. எனவே, நான்காம் நூற்றாண்டிற்கு முன்னதாக இந்நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கு வரலாமா? அதாவது, சீனப்பயணிகள் பற்றிய குறிப்பு இல்லை என்பதால் இந்நூல் குப்தர் காலத்திற்கு முன்பு அல்லது அதனையட்டி எழுதப்பட்டதாகக் கொள்ளலாமா?
சிலப்பதிகாரத்தினைப் போற்றும் தமிழ் சமூகத்தில் தமிழ் ஆர்வலர்கள் இளங்கோ, மாதவி, கண்ணகி என்று பெயரிட்டுக்கொள்ள கோவலன் என்ற பெயரினை ஏன் தவிர்த்தனரோ?
குறிப்புகள்:
1. Iravatham Mahadevan, Early Tamil Epigraphy:from the Earliest times to the sixth Century CE.2003. பழந்தமிழ்க் கல்வெட்டுக்களின் காலத்தினை மூன்றாகப்பிரிக்கும் இவரது நூல் இந்தியக் கல்வெட்டியல் ஆய்வில் ஒரு மைல்கல். என்றாலும், இந்நூலின் குறைகளைத் தர்க்கமுறையில் பேரா.எ.சுப்பராயலு அணுகியிருந்தார். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புள்ளிமான்கோம்பை நடுகல் கல்வெட்டின் எழுத்து அமைதியின் அடிப்படையில் தமிழ்க்கல்வெட்டின் தொடக்ககாலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்பார் கல்வெட்டறிஞர் சு.இராஜவேலு (தொலைபேசி செய்திபகிர்வு:27-11-2019).
2. இக்கல்வெட்டுப் பாடத்துடன் வெளியிடப்பட்டு அதன் சமூக, அரசியல் கூறுகள் விளக்கப்பட்டவுடன் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், தமிழக அரசமரபு வரலாற்றிலும் ஒரு தெளிவு கிடைத்தது. தேசியவாத வரலாற்றாசிரியர்களால் முன்வைக்கப்பட்ட களப்பிரர் காலம் (கி.பி.300 முதல் கி.பி.600 வரை) இருண்டகாலம் என்ற கருதுகோள் திருத்தப்பட்டு அக்காலக்கட்டத்தின் வரலாற்றுப்போக்கு நிறுவப்பட்டது. பார்க்க:எ.சுப்பராயலு, எம்.ஆர்.ராகவாச்சாரியார், பூலாங்குறிச்சி கல்வெட்டுகள், ஆவணம், இதழ் 1,1991.பக்.57-66.
3. க.கைலாசபதி, சிலப்பதிகாரச் சிந்தனைகள் என்ற கட்டுரையில் உ.வே.சா அவர்கள் சுவடிகளைத் தேடும் பணியில் ஒரு வித்வானிடம் சிலப்பதிகாரம் பற்றி விசாரித்தபோது அதனை வித்வான் சிறப்பதிகாரம் என்று பதில் இறுத்ததாகக் குறிப்பிடுகிறார் என்கிறார். க.கைலாசபதி, அடியும் முடியும், பாரிநிலையம்,சென்னை, ப.200.
4. புறம்:144;நற்றிணை:216.
5. Gananath Obeyesekere, The Cult of the Goddess Pattini, The University of Chicago Press, Chicago,1984. இந்நூலில் மானிடவியல் கோட்பாட்டுப் பரிச்சயத்துடன் தென்கிழக்காசியப் பின்னணியில் பலவகைச் சான்றுகளுடன் கண்ணகி ஆராய்ச்சிப் பொருளாகியுள்ளார்.
6. Robert Caldwell, A Comparative Grammar of South Indian Languages, 1856. இந்நூல் தென்னிந்திய மொழிகளிடையேயான ஒத்த ஓசை, இலக்கணக்கூறுகளை மட்டும் வெளிப்படுத்தவில்லை. உலக மொழிகளின் அரங்கில் தமிழிற்கு ஒரு தனி அந்தஸ்தினை உருவாக்கியது. தமிழர்களின் அரசியல்வாழ்வில் ஒரு புதிய திருப்பத்தினை ஏற்படுத்தியது. ஆனால், இந்நூல் வெளியிடப்பட்ட காலத்தில் திருக்குறளைத் தவிர தமிழில் வேறு செம்மொழி இலக்கியங்கள் வெளியிடப்படவில்லை.
7. 1872 இல் முதன்முதலில் தி.ஈ.ஸ்ரீநிவாசராகவாச்சாரியார் என்பவர் சிலப்பதிகாரத்தின் முதல் எட்டு காதைகளை வெளியிட்டார். தொடர்ந்து, 1876 இல் கானல்வரி முதலான நான்கு காதைகளையும் சேர்த்து வெளியிட்டார். அடுத்து, புகார் காண்டத்தினையும் அச்சேற்றினார். 1880 இல் தி.க.சுப்பராய செட்டியார் அடியார்க்கு நல்லார் உரையுடன் புகார் காண்டத்தினை மட்டும் அவருடைய உரையுடன் வெளியிட்டார். 1892 இல் உ.வே.சாமிநாதையர் முழுநூலினையும் அரும்பதவுரையுடன், அடியார்க்குநல்லார் உரையுடன் சேர்த்து வெளியிட்டார். இதற்கிடையில் 1891 இல் பெ.சுந்தரம்பிள்ளை தம் மனோன்மணியம் நாடகத்தில் இடையிடையே சில சிலப்பதிகார வரிகளை எடுத்தாண்டுள்ளார் என்கிறார் க.கைலாசபதி. 1942 இல் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உ.வே.சா.பதிப்பித்த நூல்படியின் அடிப்படையில் இசைக்குறிப்புகளுடன் எளியநடையில் உரையெழுதி வெளியிட்டார். சிலப்பதிகாரத்தின் வரலாற்றியலை அறிவதற்கு க.பஞ்சாங்கம் எழுதிய சிலப்பதிகாரத் திறனாய்வுகள் (2002) என்ற நூல் பெரிதும் துணை நிற்கும். இப்பத்திக்கு அந்நூலே பெரிதும் பயன்பட்டது.
8. V.R.Ramachandra Dikshitar, Cilappatikaram, 1939. இம்மொழிபெயர்ப்பிற்கு Jules Bloch என்ற மொழியியல் வல்லுநர் முன்னுரை எழுதியிருந்தார். இதன் இரண்டாம் பதிப்பிற்கு (1978) K.R.Srinivasa Iyengar முன்னுரை எழுதினார். தீக்ஷிதர் இம்மொழிபெயர்ப்பிற்கு உ.வே.சாவின் பதிப்பினையே பயன்படுத்தினார். இந்நூலின் பின்னிணைப்பு (ப.404) ஒன்றில் (அந்திமாலைச் சிறப்புச்செய்காதை) இடம்பெற்றுள்ள சமஸ்கிருத சொற்களின் விகிதாசார அடிப்படையில் சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்பார். Alian Danielou, Ilango Adikal Shilappatikaram: The Ankle Bracelet (first published:1965), Aleph Book Company,2016. இந்திய இலக்கியத்தில் இசை கொள்கை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்தபோது இந்நூலினை மொழிபெயர்க்க வேண்டுமென்று ஆவல்கொண்டதாகக் கூறுவார். சிலப்பதிகாரத்தில் பல்லவர், குப்தர் பற்றி குறிப்பு இல்லை என்பதால் இதனை அதற்கு முந்திய காலகட்டத்தினைச் சார்ந்தது எனலாம் என்று முன்னுரையில் குறித்துள்ளார் (p.ix).
9. கல்வெட்டு ஆராய்ச்சியாளர், வானியலாளர், தமிழறிஞர் போன்றோர் வகுத்தளித்த இந்நூலிற்கான காலத்தினை தருக்கமுறையில் ஏற்றும், மறுத்தும் தம் முடிவுகளை வெளியிட்டார். அவருடைய கருத்துகள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனினும் புறக்கணிக்கப்பட முடியவில்லை. பார்க்க: காவிய காலம், எஸ்.வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், தொகுதி,3, பாரிநிலையம், சென்னை, 1991,பக்.79-139.
10. தொ.மு.சிதம்பர ரகுநாதன், இளங்கோவடிகள் யார்?: சிலப்பதிகாரம் பற்றிய ஒரு சமூகவியல் பார்வை, மீனாட்சி புத்தகநிலையம், சென்னை, 1984. இடைக்காலத் தமிழகத்தின் வணிக வர்க்கத்தினருக்கும், அரசவர்க்கத்தினருக்கும் இடையிலான முரண்பாட்டினை விளக்கும் புரட்சிக்காப்பியமே சிலப்பதிகாரம் என்பது இந்நூலாசிரியரின் கருத்தாகும். இதனை எம்.ஏ.நுஹ்மான் தம் மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும் (அன்னம், (பி) லிட். 1987) என்ற நூலில் மார்க்சிய கோட்பாடுகளைக்கொண்டே தர்க்கரீதியாக மாற்றுக்கருத்தினை வைத்துள்ளார். சிலப்பதிகாரம் வணிகச்சார்பான நூல்தான் என்பதை ஏற்கும் எம்.ஏ.நுஹ்மான் தொ.மு.சிதம்பர ரகுநாதனின் முடிவுகளில் வேறுபடுகிறார். சிலப்பதிகாரம், வணிகவர்க்கம் புரட்சி செய்வதற்காக எழுதப்பட்ட இலக்கியம் என்பதனை ஏற்க இயலாது என்பார்.
11. மார்க்கபந்து சர்மா, சிலப்பதிகாரம் (இரஸனை), என்.சி.பி.எச்.சென்னை,2015. வ.வே.சு. அய்யரவர்களுடைய கம்பராமாயண ரஸனை என்ற நூல் வாசிப்பினால் தூண்டப்பட்டு மேனாட்டு இலக்கியங்களில் சிறந்தவற்றைப் படித்து இந்நூலினை இயற்றியதாகச் சொல்கிறார். கோவலன் நிலையில் நாம் இருந்திருந்தால் நாமும் அவன் செய்ததையே செய்திருப்போம் என்று கோவலன் கன்ணகியினைப் பிரிந்ததனை நியாயப்படுத்துகிறார். இங்கு, இரஸனை கோவலனை வென்று மாதவியிடம் துரத்திற்று என்று சொல்ல வருகிறார். ப.131. இளங்கோவடிகள் மும்முறை ஊழினை வற்புறுத்துகிறார் என்றும் அது கோவலன், கண்ணகி, மாதவி இம்மூவருடன் சூழ்ச்சி செய்கிறது என்றும், இரசிக்கிறார். பக்.20-21. ஆனால், கோவலன் கண்ணகியிடம் இல்லாத ஒன்றினை மாதவியிடம் கண்டான். அதுதான் கலை: எண்ணும், எழுத்தும் என்றார் வ.ஐ.சுப்ரமண்யம். வ.ஐ.சுப்ரமண்யம், காப்பியக் கட்டுரைகள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை(முதல் பதிப்பு:1952),1987.ப.70.
12. க.கைலாசபதி, அடியும் முடியும்: இலக்கியக் கருத்துக்கள், பாரி நிலையம், சென்னை, 1996. See :fn.no.18 in Concept of Destiny in Early Tamil Literature in On Art and Literature,NCBH,1986. ஊழ் என்ற சொல்லின் பிற பொருள்களான பால், முறை, உண்மை, தெய்வம், விதி போன்றவற்றைப் பட்டியலிட்டு காலந்தோறும் இவற்றின் பொருள்கள் மாறுவதனை விளக்குகிறார். ஒத்த பொருள் கொண்ட இச்சொற்கள் தொடக்கத்தில் மனித சமூகத்தின் சமத்துவத்தினைச் சொல்லி இறுதியில் அசமத்துவத்தினை நியாயப்படுத்துகின்றன என்பார். இப்படி, மனித சமூகத்தின் அசமத்துவத்திற்குக் காரணம் ஊழ், விதி கற்பிக்கப்படுகிறது என்பார். தொடக்க காலத்தின் egalitarian society என்ற கருத்தினை முறியடிக்க ஊழ் என்ற சொல் ஒரு anchor ஆகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கணிக்கலாம்.
13. இடைக்காலத் தமிழகத்தின் வரலாற்றுப்போக்கில் வேந்தர்களின் எழுச்சி, அரசுருவாக்கம் பற்றி பல அறிஞரும் தம் தம் ஆய்வில் பரக்கப் பேசியுள்ளனர். ஒரு நெடிய பட்டியலைத் தயாரிக்க முடியும். இவ்வரிசையில் பேராசிரியர் K.A.Nilakanta Sastri முதல் Whitney Cox வரை இப்பட்டியல் நீளும்.
14. தமிழக வரலாற்றில் இக்காலக்கட்டத்தினை ஒரே கால அலகாக (unit of time) எடுத்துக்கொள்ளவேண்டும் என்பார் கார்த்திகேசு சிவத்தம்பி, Karthigesu Sivathamby, Literary History in Tamil, Tamil University, Thanjavur, 1986,p.118. சோழர் காலகட்டத்தினை மொத்தமாக இணைக்கும் இக்கால அலகில் சோழர்காலத்தின் சமூக-வரலாற்றுப்போக்கு புள்ளியியல் முறையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பேரரசும் பெருஇலக்கியங்களும் இக்காலக்கட்டத்திலேயே உருவாயின. பார்க்க: Noboru Karashima, South Indian History and Society: Studies form the Inscriptions from C.800 to 1800 AD,OUP,1984; Y.Subbarayalu, South India Under the Cholas, OUP,2011.
15. இவ்விரு பெரிய இலக்கியங்களில் பெரியபுராணம் பேரரசு உருவாவதற்கான ஏதுநிலை கருத்தியலை உருவாக்குவதற்கு துணைநின்றது என்பதனை க.கைலாசபதி தம் நாடும் நாயன்மாரும், பேரரசும் பெருந்தத்துவமும் என்ற கட்டுரைகளில் விவரித்துள்ளார். பார்க்க: க.கைலாசபதி, பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், (முதல்பதிப்பு, 1966), என்.சி.பி.எச்.சென்னை,1991.
16. 19-05-1976 முதல்04-05-2017 வரை ம.பொ.சிவஞானம், பாரதிய வித்யாபவன் சென்னையில் ஆற்றிய சிலப்பதிகாரம் பற்றிய 13 தொடர் சொற்பொழிவுகள் சிலப்பதிகார ஆய்வுரை என்ற தலைப்பில் 1978 இல் நூலாக வெளியிடப்பட்டது. இதில் இளங்கோவடிகளை, முதல் தேசியகவி என்று மதிப்பிடுகிறார். காடுகாண் காதையில் கண்ணகியும் கோவலனும் சமணர் தலத்தினைத் தொழுது வலம் வந்து சென்றதால் அவர்களை சமணர் என்று அடையாளப்படுத்துகிறார்.
17. வேட்டுவவரியில் 10 ஆம் வரியில் கூட்டுண்ணும் எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இது கூட்டாக உண்ணும் இனக்குழுப் பண்பாடும், பழங்குடித்தன்மையுமாகும். இது உலகம் முழுவதும் வழக்கில் இருந்த ஒன்று. இது பற்றி ஜார்ஜ் தாம்சன் போன்ற அறிஞர்கள் ஆய்ந்துள்ளனர். இவருடைய கருத்தினையட்டி தமிழறிஞரும் இச்சொல்லை ஆய்ந்தனர். K.Kailasapathy, On Art and Literature, NCBH, 1986, Madras, p.146.fn.no.8ff.
18. ஊழ் வகுத்த பாதையில் சிலப்பதிகாரக் கதை நகர்ந்தாலும், தம் ஒப்பாய்வில் கா.செல்லப்பன் கதைச் சம்பவங்களுக்குத் தீது என்கிற உலகஇயல்புதான் காரணம் என்பார். ஊழ் என்ற மைய இழையில் தம் ஆய்வினை நகர்த்திப்போகும் அவர் சிலப்பதிகாரத்தினை உலக இலக்கியப்பட்டியலில் வைக்கிறார். கண்ணகி கதாபாத்திரம் உருபெற்று முதிர்ந்து முடிவுறுவதற்கு ஊழ் / கர்மாவே காரணம் என்பார். K.Chellappan, Shakespeare and Ilango as Tragedians:A Comparative Study, Tamil University, Thanjavur, 1985.p.128;136-148.
19. அடிக்குறிப்புகள் 17, 18 களில் உள்ள செய்திகள் இங்குப் பொருந்தும்.
20. பிறமொழி இலக்கியத்தின் பின்புலத்திலும், இந்தோ-ஆர்ய இலக்கியங்களின் ஒப்பீட்டுப் பார்வையிலும் சிலப்பதிகாரத்தின் காலத்தினை கி.பி.இரண்டிலிருந்து தள்ளித் தள்ளி கி.பி.1150 க்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை கொண்டு வருவார். இவரின் மாணவரான வ.ஐ.சுப்ரமண்யம் உலகின் பிறமொழி காப்பிய இலக்கியங்களுக்கு மாறாக சிலப்பதிகாரத்தின் காப்பியத்தலைவன் கொலையுறுவது தமிழ் இலக்கியத்தின் புதியஉத்தி என்பார். வ.ஐ.சுப்ரமண்யம், காப்பியக் கட்டுரைகள், (முதல் பதிப்பு:1952),ப.54. இவர்களிடமிருந்து வேறுபடும் இராம.சுந்தரம், (சொல்புதிது சுவை புதிது, தமிழ்நூலகம்,சென்னை, 1978.ப.79;89) சிலப்பதிகாரத்திற்கு வேறொரு காலத்தினை மொழியியல் அடிப்படையில் உறுதிப்படுத்துகிறார்.
(12-11-2019 அன்று தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் டிஜிடல் பூம்புகார் என்ற தலைப்பில் நடத்திய பணிப்பட்டறையில் அளிக்கப்பட்ட கட்டுரை).