குருமூர்த்தியின் நூலுக்கு ஒரு விமர்சனம்

சென்னை, “கிழக்கு” பதிப்பகம் சமீபத்தில் “மறைந்து போன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் மார்க்சிய எதிர்ப்பையும் இந்துத்துவ பிரச்சாரத்தையும் பொருளாதாரத் தொழில்நுட்ப விவரங்களோடு செய்துவருபவர் எஸ்.குருமூர்த்தி என்பார். ஏராளமான ஆசைகளோடு ஆரம்பிக்கப்பட்ட கிழக்குப் பதிப்பகம் நட்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. எனவே, மார்க்சிய எதிர்ப்பு என்ற “சமூகப் பணியை”ச் செவ்வனே செய்துகொண்டிருப்பதாகத் தனது எஜமானர்களிடம் மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் அப்பதிப்பகத்திற்கு உள்ளது. அப்பணியைச் செய் வதற்குப் பொருத்தமான ஆசிரியரைத்தான் அந் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. மார்க்சியம் மறைந்து போய்விட்டதென்று அது தோன்றிய காலத்திலிருந்தே எழுதிவருபவர்கள் ஏராளம். ஆனால்... அது என்னவோ மறைந்து போக மறுத்துக் கொண்டே வருகிறது. மார்க் சியத்தைத் தோற்றுவித்த சமூகக் காரணங்கள் மறையும் வரை மார்க்சியமும் மறையப்போவதில்லை என ஓர் ஐரோப்பியத் தத்துவ அறிஞர் எழுதினார். இருந்தாலும் நம் உள்ளூர் அறிஞர் அப்படி ஒரு புத்தகத்தை முயன்று எழுதியிருப்பதால் அவரது கருத்துக்கள் என்னவென்று பரிசீலிப்போம்.

குருமூர்த்தி இந்த நூலில் என்னென்ன வாதங்களை முன்னிறுத்துகிறார்? ஒவ்வொன்றாகப் பேசுவோம்.

மார்க்சியமும் யூத கிறிஸ்தவ மரபணுக்களும்

“மார்க்சியம், யூத-கிறிஸ்தவ மரபணுக்களை உள்ளடக்கி யூத-கிறிஸ்தவ உலகில் பிறந்தது. எனவே அது யூத-கிறிஸ்தவ முன்மாதிரிகளைப் பின்பற்றியது... மார்க்ஸ் தன் சித்தாந்தத்தை ஹெகலிடமிருந்தும் புரட்சிக்கான முன்மாதிரியை அனாபாப்டிஸ்டுகளிட மிருந்தும் பெற்றுக் கொண்டார்... [எனவே] மார்க் சியத்தின் தத்துவ நிலைப்பாடு, முதலாளித்துவத்தின் உலகாயதக் கருத்துக்கு எதிர்ப்பாக இருந்ததே அன்றி, மாற்றாக அல்ல” (பக். 12,22, 10).

குருமூர்த்தியின் நூலின் முதல் வரியே “மேற்கத்திய கிறிஸ்தவ உலகினுள்...” என்ற சொற்களுடன்தான் தொடங்குகிறது. இந்த நூல் உலக நாடுகளில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் மத அடிப்படையில்தான் பார்க்கப்போகிறது என்பதற்கு முன் அறிவிப்பாக நூலின் முதற்சொற்களே அமைகின்றன. இந்த நூலினுள் பின்னால் அவர் எடுத்துப்பேசும் சாமுவெல் ஹன்றிங்க்டன் என்ற அமெரிக்கரும் உலக அரசியலை மதங்களின் மோதல், நாகரிகங்களின் மோதல் என்ற நோக்கிலிருந்துதான் அணுகுவார். அமெரிக்க ராணுவம் அதன் வெளி நாட்டுக் கொள்கைக்கு ஹன்றிங்க்டனின் முன்மாதிரியை அமோகமாக ஆதரித்து எடுத்துப் பயன்படுத்தி வருகிறது. இந்தியச் சுதேசியவாதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் குருமூர்த்தியும் ஹன்றிங்க்டனும் எந்த மரபணுக்களின் அடிப்படையில் ஒரே விதமாகச் சிந்திக்க முடிந்திருக்கிறது? என்பது நமக்குப் புரியவில்லை. இருப்பினும் யூத-கிறிஸ்தவ மரபணுக்கள் குருமூர்த்தியிடம் கலந்திருப்பதாக நாம் சந்தேகப்படப் போவதில்லை. ஆனால், ஏகாதிபத்திய உணர்வு (ஹன்றிங்க்டனுக்கு அது அமெரிக்க ஏகாதிபத்திய உணர்வு, குருமூர்த்திக்கு அது இந்துத்துவ ஏகாதிபத்திய உணர்வு) என்ற ஒருவகை மரபணுக்கள் ஹன்றிங்க்டனையும் குருமூர்த்தியையும் ஒன்றுபடுத்துகின்றன என்று நம்மால் உறுதியாகச் சொல்லமுடியும்.

இனி மார்க்சின் மரபணுக்களைப் பற்றிப் பேசு வோம். மார்க்சின் மரபணுக்கள் ஐரோப்பிய மரபணுக்கள் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. மார்க்ஸ் ஒரு ஜெர்மானியர். ஐரோப்பியர். ஐரோப்பிய வரலாற்றின் தத்துவ, பண்பாட்டு வேர்களைக் கொண்டவர். லெனின் மார்க்சியச் சிந்தனையின் “மூன்று பகுதிகளும் அவற்றின் தோற்றுவாய்களும்” என்று ஒரு கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில், மார்க்சியத்தின் தத்துவம் அவருக்கு முந்திய ஜெர்மானிய தத்துவ அறிஞர்களான ஹெகல், ஃபியர்பாக் என்ற இரண்டு மாபெரும் சிந்தனையாளர் களோடு மார்க்ஸ் நடத்திய உரையாடலின் விளைவு என்று தெளிவுபட எழுதுவார். இதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது. மார்க்சுக்கும் அவருக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவங்களுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றி நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் எந்த ஒரு நூலும் மார்க்ஸ், ஹெகல், ஃபியர்பாக் என்ற மூன்று சிந்தனையாளர்களுக்கும் இடையிலான உறவுகளைப் பற்றிப் பேசாமல் போனது கிடையாது. மிகச் சுருக்கமாக அந்த உறவுகளைப் பேசும் நூல்கள் கூட மார்க்ஸ், ஹெகலின் கருத்துமுதல்வாதத்தை நிராகரித்தார், அவரது இயங்கியலை எடுத்துக்கொண்டார், அதேபோல ஃபியர் பாக்கின் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக்கொண்டார், அவரது இயக்கமறுப்பியலைத் தாண்டிச் சென்றார் என்று விளக்குவதுண்டு. இந்த எளிமையான சித்திரத்தை விளக்கிப் பேசமுனைந்தால் அது பல நூல்களாக விரிவடையும்.

மார்க்ஸ், ஹெகலையும் ஃபியர்பாக்கையும் தாண்டி தனது சொந்தத் தத்துவத்தை எவ்வாறு உருவாக்கினார்? என்பதை அணுகி ஆராய்ந்த லூயி அல்த்தூசர் என்ற பிரெஞ்சுக்காரர், மார்க்சுக்கும் அவருக்கு முந்திய ஹெகல், ஃபியர்பாக் ஆகியோருக்குமிடையில் அறிவுத் தளத்திலான ஒரு தீவிர முறிவு உள்ளது என்று அழகாக எடுத்துரைப்பார். கிட்டத்தட்ட 1845 ஆம் ஆண்டையட்டி மார்க்ஸ் இந்த அடிப்படை யானதொரு முறிவைச் சாதித்து, முந்தியவர்களிடமிருந்து விலகிச் சென்று, தனது சொந்தத்தத்துவத்தை உருவாக்கிக் கொண்டார் என்று அல்த்தூசர் விளக்குவார். குறிப்பிட்ட இக்காலத்தில் நாங்கள் எங்களின் பழைய முன்னோடி களோடு கணக்கு முடித்துக்கொண்டு, புதிய எல்லை களுக்குள் நுழைந்தோம் என்று ஏங்கெல்ஸ் எழுதுவார். 1845-இல் தொடங்கிய இந்த மார்க்சிய உருவாக்கப் பயணம் அவரது ஆயுள் முழுவதிலும் புதிய புதிய கண்டு பிடிப்புகளுடன் தொடர்ந்தது. அது தத்துவமாகவும் வரலாற்றுப் பார்வையாகவும் அரசியல் பொருளாதார மாகவும் பெருகி விரிந்தது.

மார்க்சுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவங்கள் தமது சிந்தனையின் மையப்புள்ளியாக மனிதனைக் கொண் டிருந்தன. மனிதன், மனித மனம், மனித ஆன்மா, மனித உணர்ச்சிகள், மனித அறிவு, மனித விடுதலை என்றே அவை பெரும்பாலும் சிந்தித்தன. இப்படி மனிதரை மையப்படுத்துவதில் தவறேதும் கிடையாது. மனிதப் பிரச்சினைகளுக்குத்தான் நாம் தீர்வுகளைத் தேடு கிறோம். ஆயின் மனிதன் என்னும் ஒற்றைப்புள்ளியை அவை மையப்படுத்தும்போது, வரலாற்றுரீதியாக அவன் தனிமனிதனாக இருக்கிறான் என்ற அடிப்படைத் தகவல் விரலிடுக்குகளின் வழியாக ஒழுகிப்போய் விடுகிறது. மனிதன் அவனது வரலாற்றில் ஏன் இப்படித் தனி மனிதனாகிப் போய்விட்டான்? என்ற கேள்வியை முன்வைக்க மறந்துவிடும்போது, மார்க்சுக்கு முந்திய தத்துவங்கள் எல்லாமே மீண்டுவரமுடியாத ஒரு சிக்கலுக்குள் மாட்டிக் கொள்கின்றன. மிக ஆழமாக, மிக அடிப்படையாகத் தனிமனிதனாக இருந்துகொண் டிருப்பதால், மனிதப் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாமல் போய்விடுகிறது. தனிமனிதம், தனிக்குடும்பம், தனியரு சாதி என்ற எல்லைகள் காலுக்குள் சிக்கிய கொடியாக மனிதரை இழுத்து அமுக்கிவிடுகின்றன. மார்க்ஸ், ஹெகலிலிருந்தும் ஃபியர்பாக்கிலிருந்தும் இங்குதான் விலகிச் செல்லுகிறார்.

மார்க்சும் மனிதத் துயரங்களுக்கான விடிவையே சிந்தித்தார். ஆனால் தனிமனிதன் என்று குண்டுச் சட்டிக்குள்ளேயே அவர் குதிரையோட்டிக் கொண்டு இருக்கவில்லை. சமூகம், சமூக அமைப்பு, சமூக உறவுகள், உற்பத்தி உறவுகள் என்ற ஒரு புதிய சட்டகத்தில் வைத்து அவர் மானுடப் பிரச்சினைகளைச் சிந்திக்கத் தொடங்குகிறார். சுரண்டலும் அடக்குமுறையும் ஆதிக்கங்களும் ஒற்றை மனிதர்களின் பிரச்சினையல்ல. ஒவ்வொரு தனிமனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றும் பிரச்சினையல்ல இது. ஆன்ம விடுதலைகளைத் தாண்டிய, அறிவின் சாமர்த்தியங்களைத் தாண்டிய, அவற்றையெல்லாம்விட மிகச் சிக்கலான சமூகம் தழுவிய பிரச்சினை அது. சமூகத்தினுள் தொழில்படும் சக்திகளின் இயங்கியல் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்பது மார்க்சின் புதிய அணுகுமுறை. இதைத்தான் லூயி அல்த்தூசர், மார்க்ஸ் ஏற்படுத்திய அறிதல் முறையில் நிகழ்ந்த புரட்சி என்கிறார். மார்க்சுக்கு முந்தி இந்த அணுகு முறையை எந்த ஒரு தத்துவவாதியும் எட்டியதில்லை என்று அல்த்தூசர் வாதிடுவார்.

குருமூர்த்தி ஐரோப்பாவின் சிந்தனை முறை என்பதே யூத-கிறிஸ்தவ சிந்தனை முறை என்று மிகக் கஞ்சத்தனமாகப் புரிந்து கொள்கிறார். இவரது நூல்களை வாசிக்கும் இந்துக்களின் மத உணர்வைத் தூண்டிவிட வேண்டும் என்ற வேலைத்திட்டம் மட்டுமே இவரது எழுத்து முறையில் உள்ளது. கொஞ்சம் கூடுதலாக மூளையை அவர் பயன்படுத்தியிருந்தால், ஐரோப்பாவில் ஆதிக்கச் சிந்தனைகளும் உண்டு, விடுதலைச் சிந்தனையும் உண்டு என்று புரிந்துகொண்டிருக்க முடியும். ஐரோப்பாவில் பழமைச் சக்திகளை ஆதரிக்கும் சிந்தனை மரபு உண்டு, அவற்றை விமர்சிக்கும் மரபும் உண்டு. மார்க்சே ஓரிடத்தில் எழுதுவார்: இதுவரையிலான தத்துவவாதிகள் உலகம் இப்படிப்பட்டதென வியாக்கியானங்களை மட்டும் வழங்கினார்கள், உண்மையில் அதனை எப்படி மாற்றுவது என்பதே இப்போதைய பிரச்சினை. மார்க்ஸ் மிக வெளிப் படையாகத் தன்னை ஐரோப்பாவின் விமர்சன மரபுடன் இணைத்துக் கொண்டார். ஆக, ஐரோப்பாவின் மரபணுக்கள் ஒற்றைப்படையானவை அல்ல. உள்ளுக்குள் முரண் பட்டவை. மார்க்ஸ் ஐரோப்பாவினுள் தொழில் பட்ட ஒரு மாற்று மரபைச் சேர்ந்தவர்.

மார்க்ஸ் அவரது இயங்கியல் சிந்தனையை ஹெகல் என்ற கிறித்தவரிடமிருந்து வரித்துக் கொண்டார் என்று குருமூர்த்தி மிகவும் வருத்தப்படுகிறார். ஆனால் இயங்கியல் என்பது ஹெகல் கண்டுபிடித்ததே அல்ல. ஹெகலுக்கு முந்தி, கிறிஸ்தவத்திற்கு முந்தி, யூதச் சிந்தனைக்கும் வெளியில், பண்டைய கிரேக்கத்திலேயே இயங்கியல் என்ற சிந்தனை மரபு இருந்தது. ஏசு கிறிஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஹெராக்ளிட்டஸ் என்ற சிந்தனையாளனிடம் அது இருந்தது. கிட்டத்தட்ட அவரை அடுத்துவந்த சாக்ரட்டீஸ் என்ற மிகப்பெரிய சிந்தனையாளன் இயங்கியலை மிக நுட்பமாகப் பயன்படுத்தினான். இவர்களெல்லாம் கிறித்தவத்திற்கு வெகுவாக முந்தியவர்கள். ஏன், இந்தியத் தத்துவத்தில் மிகப் பழமையான காலத்திலேயே கௌதம புத்தன் அற்புதமான இயங்கியல் வித்தையைத் தெரிந்திருந்தான். சகலமும் மாற்றத்திற்கு உள்ளாகின்றன, மாற்றத்தின் ஊற்றுக்கால்களாக முரண்பாடுகள் விளங்குகின்றன, முரண்பாட்டின் எதிரெதிர்ப் பக்கங்களைக் கடந்து மூன்றாவதான நிலைக்குச் செல்லமுடியும், அதுவே மத்திம மார்க்கம் என்று புத்தரும் கூறினார்.

இயங்கியலுக்கு உலக நாடுகளின் வரலாற்றில் ஏராளமான வடிவங்கள் உண்டு. அமெரிக்க மார்க்சியரான பிரடெரிக் ஜேம்சன் “இயங்கியலின் வரலாற்று வடிவங்கள்” என்றொரு நூல் எழுதியுள்ளார். இயங்கியலின் ஒரே மூலகர்த்தா ஹெகல் அல்ல, அதற்கு எண்ணற்ற வடிவங்கள் உண்டு என அவர் எழுதுகிறார். இயங்கியலின் வட்டார வடிவங்களில் பல இன்னும் அறியப்படாதனவாக இருக்கின்றன எனவும் அவர் எழுதுகிறார். இயங்கியல் பற்றிய ஆர்வங்கள் சமீபகாலங்களில் கூடிவருகின்றன என்று அவர் சொல்லிச் செல்கிறார். அமைப்பியலாளர்கள், பின்னை நவீனத்துவர்கள் ஏராளமாகப் பயன்படுத்திய இருமை எதிர்வுகள் என்ற கருத்தாக்கத்திற்கும் இயங்கியலுக்கும் என்ன உறவு? என்று தத்துவ அறிஞர்கள் பேசி விவாதித்து வருகின்றனர்.

“சண்டைகளையும் போராட்டங்களையும் கடந்த பிறகு முரண்பாடுகள் இறுதியாக ஒத்திசைவு காணும் என்று ஹெகல் உறுதியாக நம்பினார்” (பக்.19) என்று குருமூர்த்தி எழுதுகிறார். இது ஓரளவுக்கு உண்மைதான். ஹெகல் அவரது இயங்கியல் முறைமையை அவரது கருத்து முதல்வாதத் தத்துவ நோக்கங்களுக்கு ஆட்படுத்தினார். எனவே வரலாற்றின் ஊடாகத் தொழில்பட்டுள்ள முரண் பாடுகள் நவீன முதலாளியத்தின் அரசு எந்திரம் என்னும் அறிவுபூர்வமான பொது அமைப்பால் சமரசப்படுத்தப் பட்டு அவை “இறுதியில் ஒத்திசைவு காணும்” என ஹெகல் நம்பினார். ஹெகல் அப்படி நம்பினார் என்பதைவிட, அவர் அப்படி ஆசைப்பட்டார் என்று சொல்ல வேண்டும். மார்க்ஸ் இந்தக் கதையை நம்பத் தயாராக இல்லை. மட்டுமல்ல, “அறிவுபூர்வமான அரசின்” கரங்களில், சமூக ஒத்திசைவை மார்க்ஸ் எப்போதுமே ஒப்படைக்கத் தயாராக இருந்தது கிடையாது.

அரசு என்பதே சமூக முரண்பாடுகளின் நிரூபணம் என்பதே மார்க்சின் தீர்மானமான முடிவு. ஒரு வரலாற்றுக் கட்டத்தின் இயங்கியல் முரண்பாடுகள் சமூகத்தளத்தில் தம்மளவில் தீர்வினை எட்டினாலும், அடுத்த வரலாற்றுக் கட்டத்தின் நகர்வுகளின் ஊடேயும் முரண்பாடுகள் தோன்றும். இப்படி அடுத்தடுத்து உருவெடுக்கும் முரண்பாடுகளே சமூக வரலாற்றைத் தொடர்ந்து நகர்த்துகின்றன என்பதுதான் மார்க்சின் நிலைப்பாடு. முரண்பாடுகளை சமூக இயக்கத்தின் படைப்பாற்றல் கொண்ட ஊற்றுக்காலாக மார்க்சின் தத்துவம் காணும். இயங்கியலைக் கருத்து முதல்வாதத்துக்குக் காவு கொடுக்கும் வேலையை மார்க்ஸ் செய்யவில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் இயங்கியல் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும் என்பதை மார்க்ஸ் ஒத்துக்கொள்ளமாட்டார்.

ஏதோ ஓர் இலக்கை எட்டியவுடன் “சமாதி” நிலையை அடைந்துவிட்டோம் என மார்க்சை அத்தனை எளிதாகத் திருப்திப்படுத்த முடியாது. இதைத்தான் அல்த்தூசர், ஹெகலிடமிருந்து மார்க்ஸ் தன்னை முறித்துக் கொண்டார் எனச் சொல்லு கிறார். ஒன்றுபடுதல், வேறுபடுதல் என்ற இரண்டு அம்சங்கள் இயங்கியலில் உண்டு, ஆயின் அவை இரண்டில் ஒன்றுபடுதல் தற்காலிகமானது, வேறுபடுதல் முதன்மையானது என்று லெனின் கூறுவார். வேறு படுதலின் வழியாகத்தான் வரலாற்று நகர்வு நிகழ்கிறது. வேறுபடுதலுக்கு இடமில்லாமல் ஒன்றுபட்டால் தேங்கிப் போய்விடுவோம். முதலாளியத்திலிருந்து சோசலிசம் என்ற சமூகம் தோன்றினாலும் கூட முரண்பாடுகள் இல்லாமல் போய்விடாது. தனது காலத்தில், முதலாளியச் சூழல்களிலேயே உருவாகி வந்த விஞ்ஞான தொழில்நுட்ப வேகத்தின் விளைவுகளை மார்க்ஸ் முன்னுணர்ந்தார், எனவே அடுத்த கட்டத்தில், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண் பாடுகள் தீவிரமடையலாம் என மார்க்ஸ் குறிப்பிட்டார். மார்க்சின் முன்னுணர்வு இப்போது நிகழ்ந்து வருகிறது.

ஹெகலின் ஒத்திசைவு பற்றிய சிந்தனைக்கு இந்தியச் சூழல்களில் கணிசமான இடம் உண்டு. இந்தியாவில் அதிதூரிய ஆன்மிகம் பேசிய தத்துவங்களுக்கு முரண் பாடுகள், பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து எப்போதுமே ஓர் அலர்ஜி, ஒவ்வாமை உண்டு. முதலில், சமூக முரண் பாடுகளை அகவயப்படுத்தி மன முரண்பாடுகளாக அவை சித்திரிக்கும், பின்னர் அந்த மன முரண்பாடுகளை, மனச் சஞ்சலங்களை யோகம், தியானம், பக்தி ஆகியவற்றின் வழியாக அவரவர் நிலையில் மறக்கடிக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடும். ஹெகலின் கருத்துமுதல்வாத ஒத்திசைவு கனகச்சிதமாக இந்திய ஆன்மிகங்களின் நுண்தளங்களில் தொழில்படும். குருமூர்த்தியே அவரது நூலின் முற்பகுதியில் எழுதியதை மறந்து, நூலின் பிற் பகுதியில் இந்த ஒத்திசைவு பற்றி சிலாகித்து எழுதுகிறார்.

அறிவார்ந்த அரசு ஏற்படுத்தும் ஒத்திசைவு என ஹெகல் சொல்லுவதை குருமூர்த்தி, பாரம்பரிய இந்திய சமூகத்தில் சாதிகளின் ஒத்திசைவு என்ற சொற்களால் ஆதரித்துப் பேசுகிறார். “சாதிய சமூக அடிப்படையிலான அரசியல் கூட ஒரு வகையில் ஒத்திசைந்து போகக்கூடிய ஒரு வழிமுறைதான்... உயிர்த்துடிப்போடு இயங்கும் இந்திய சமூகத்தின் அங்கங்களான சாதி, சமூகம், மொழி மற்றும் வட்டாரப் பிணைப்புகள்...” (பக்.61, 62). மனமுரண்பாடுகளைப் பூசி மெழுகி இல்லாமலாக்கும் இந்திய ஆன்மிகத்திற்கும் சமூக முரண்பாடுகளை மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் சாதிச்சமூகத்திற்கும் இடையிலான அந்தரங்க உறவுகள் இங்கு அம்மணப்பட்டு நிற்கின்றன. குருமூர்த்தி எங்கே வந்து சேருகிறார் என்பது புரிகிறதா? மார்க்ஸ் ஹெகலை அப்படியே வரித்துக் கொண்டார், இருவரும் ஒரே யூத கிறிஸ்தவ மரபணுக்களை உடை யவர்கள் என்று கூறிய குருமூர்த்தி, இப்போது அதே ஒத்திசைவை இந்தியச் சாதிச் சமூகத்தில் கண்டு சந்தோஷப்படுகிறார். பாராட்டுகிறார். அதுதான் இந்தியத் தனித்தன்மை என்கிறார். யாருடைய மரபணு யாருக்குள் பாய்ந்திருக்கிறது? என்ற கேள்வி இங்கு பலமாகவே எழுகிறது. சரி, மரபணுப் பிரச்சினையை விடுங்கள். உலகம் முழுதும் ஆளும் வர்க்கங்களின் தத்துவங்கள் ஒரேவிதமாகத்தான் சிந்தித்திருக்கின்றன என்பது புரிகிறதா? உண்மை இப்படியிருக்க யூதம், கிறிஸ்தவம், ஐரோப்பா என வெறுப்பை உமிழ்வதால் என்ன பயன்?

மார்க்சியம் ஐரோப்பாவினுள்ளேயே முடங்கிவிட்டதா?

மார்க்சியச் சிந்தனை, “ஐரோப்பாவைச் சுற்றியே நிகழ்ந்தது. மேலும் அதன் வரலாற்றுத் தொடர்பு என்பது ஐரோப்பியச் சரித்திரத்தின் அறிவாற்றல் சார்ந்த கலாச்சார வளங்களுக்கு உள்ளேயே முடங்கிவிட்டது” (பக். 18) என்று குருமூர்த்தி எழுதுகிறார்.

மார்க்ஸ் ஐரோப்பியச் சரித்திரத்தின் கலாச்சார வளங்களை முன்னிறுத்திச் சிந்தித்தார் என்பது உண்மை. ஆயின் ஐரோப்பியக் கலாச்சார வளங்களுக்குள் அவர் அதன் விமர்சன மரபின் பிரதிநிதி என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பிய கலாச்சார வளங்களுக்குள் எங் கெல்லாம் சிறிய பெரிய மாற்று வாய்ப்புகளை முன்னிறுத்தி சமூக இயக்கங்கள் எழுந்தனவோ அவற்றையெல்லாம் அவர் உள்வாங்கிச் சிந்தித்தார் என்பது அவரது சிறப்புத் தன்மை ஆகும். அன்று ஐரோப்பா என்பதே தொழில்வளர்ச்சியில் மிக முன்னேறிய மேற்கு ஐரோப்பா என்று கொள்ளப் பட்டது. இந்த எல்லையை மார்க்ஸ் மீறிச் சென்றார். கிழக்கு ஐரோப்பிய நாடான போலந்தில் தேசிய விடுதலை இயக்கம் சீறி எழுந்தபோது மார்க்ஸ் அதனை அமோகமாக ஆதரித்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த அயர்லாந்து விடுதலைக்காகப் போராடியபோது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி அயர்லாந்து விவசாயிகளிடமிருந்து தொடங்கமுடியும் என முன்னறிவித்தவர் மார்க்ஸ். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்மாநிலங்களில் கறுப்பின அடிமைகளின் போராட்டங்கள் எழுச்சி பெற்றபோது மார்க்ஸ், வட மாநிலங்களின் அரசுகள் கறுப்பின மக்களை ஆயுத பாணிகளாக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். சீனாவில் தைபெங் விவசாயிகளின் எழுச்சி வீறுகொண்ட போது, பிரெஞ்சுப் புரட்சியின் இலக்குகளைத் தவற விட்டுவிட்ட ஐரோப்பியப் புரட்சியாளர்கள், சீன நெடுஞ்சுவரில் அதே இலக்குகள் இப்போது எழுதப் பட்டிருப்பதைக் கண்திறந்து பாருங்கள் என்றார். தம்மை மெத்தப்படித்த மேதாவிகளெனக் கருதிக் கொண்ட மேற்கு நாட்டவர் கீழை நாட்டவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

1853-60ஆம் ஆண்டுகளில் நியூயார்க் டெய்லி ட்ரிபூன் பத்திரிகையில் மார்க்ஸ் எழுதியுள்ள 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மார்க்சின் கீழைநாடுகள் பற்றிய அக்கறையைக் காட்டுகின்றன. கிறிஸ்தவ மிஷனரிகள் எழுதிய இந்தியா பற்றிய கட்டுரைகளை மட்டுமே மார்க்ஸ் படித்திருந்தார் என குருமூர்த்தி மார்க்சைக் கொச்சைப்படுத்த முனைகிறார். கிறிஸ்தவ மிஷனரிகள், ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள், காலனிய ஆட்சி குறித்த ஆங்கிலேய அரசு ஆவணங்கள் ஆகியவற்றை மார்க்ஸ் படித்தறிந்தார் என்பது உண்மைதான். இந்தி யர்கள் பசுவையும் குரங்கையும் கடவுளராகக் கொண் டாடுகிறார்கள் என்று அவர் எழுதியிருப்பது உண்மை தான். ஆயின் மார்க்சின் தத்துவக் கூர்மை அவரை இந்திய சமூகத்தின் ஆழ் அமைப்புகளை ஊடுருவி நோக்கவும் வைத்தது.

மார்க்ஸ் இந்திய சமூக அமைப்பு குறித்து மிக அடிப்படையாக முன்வைத்துள்ள சில கருத்தாக்கங்கள் இன்று வரை சமூகவியலில் தாண்ட முடியாத கோட்பாட்டு நிலைப்பாடுகளாக நின்று நிலைத்து விட்டன. ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தாக்கம் அப்படிப்பட்ட ஒன்று. ஐரோப்பிய வரலாற்றுத் தகவல்களிலிருந்து மார்க்ஸ் உருவாக்கிய வரலாற்றுப் பார்வையை (இதுவே வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என அறியப்படுகிறது) மறுபரிசீலனை செய்து, அதன் நேர்க்கோட்டு வரிசையை (புராதன இனக்குழு சமூகம், அடிமைச் சமூகம், நில உடைமை, முதலாளியம் என்ற வரிசையை) மீறிய ஒரு பண்பு இந்திய வரலாற்றுக்கு இருக்கிறது என்று சொல்ல மார்க்ஸ் தயங்கவில்லை. மிகக் குறைந்த அளவே இந்தியா பற்றிய தகவல்கள் கிடைத்தபோதும், இத்தனை நேர்மையாகச் சிந்தித்து, தனது சொந்தக் கோட்பாட்டை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கி எழுதிய ஒரு சிந்தனையாளனை கொச்சைப் படுத்தும் குருமூர்த்தியை எப்படி மதிப்பிடுவது?

இன்றுவரை மார்க்ஸ் இந்திய சமூக அமைப்பு பற்றி உருவாக்கிய கருத்தாக்கங்கள் காலாவதி ஆகிவிடவில்லை. அதைவிட புத்திசாலித்தனமான கருத்தாக்கங்கள் எதுவும் உண்டாக்கப்பட்டுவிடவும் இல்லை. இப்படிப்பட்ட சூழல்களில், மார்க்ஸ் அவரது ஐரோப்பிய எல்லைகளைத் தாண்டவில்லை என்று ஒருவர் எழுதுகிறார் என்றால் அவரது நேர்மை மிக அடிப்படையாகச் சந்தேகத்திற் குரியது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. தனது சொந்த வாசகர்களிடமிருந்து குருமூர்த்தி சமகால ஆய்வு உண்மைகளைத் திட்டமிட்டு மறைக்கிறார் என்பதே இதன் பொருள்.

சரி, மார்க்சிய சிந்தனை ஐரோப்பாவிற்குள்ளேயே முடங்கி விட்டதா, என்ன? அது மார்க்சின் காலத்திலேயே கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பரவியதல்லவா! மார்க்சின் வாழ்க்கைக் காலத்திலேயே அது ரஷ்யா விற்குள் நுழைந்தது. மெக்சிகோவில் அறியப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குத் தெரியவந்தது. விரைவில் அது சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் பரவியது. 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் அது ஆப்பிரிக்க நாடுகளால் எடுத்தாளப்பட்டது. உலக மெங்குமிருந்த உழைப்பாளிகளின் சிந்தனையாகவும் தேசிய இனங்களின் விடுதலையை ஆதர்சித்த சிந்தனை யாகவும், கறுப்பின மக்களின் புரட்சிக் கோட்பாடாகவும் அது பரிணமித்ததல்லவா! இன்றைய மார்க்சியம் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கக் கண்டங்களின் பன்மீயச் சமூகக் கட்டமைப்புச் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டதாக உருவெடுத்து வருகிறது. ஐரோப்பா விற்குள்ளேயே அது முடங்கிப் போயிருந்தால், மார்க்சியத்துக்கு எதிராகப் பொய்யையும் புனை சுருட்டையும் குருமூர்த்தி எழுதித்தள்ளுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? வெட்டியாக இன்னொருவர் பணத்தை முதலீடு செய்து கிழக்குப் பதிப்பகம் இந்த நூலை வெளியிடவேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது?

மார்க்சியம் நுகர்வுவாதமா?

குருமூர்த்தி எழுதுகிறார்: மார்க்சின் பொருள் முதல் வாதத் தத்துவம் ஐரோப்பிய முதலாளியப் பொருள்முதல் வாதத்திலிருந்து எந்த வகையிலும் வேறுபடவில்லை. உலகாயத இன்ப நுகர்வு, கட்டற்ற நுகர்வு என்பனவே அவை இரண்டின் நோக்கம். நுகர்வின் மூலம் வாழ்க் கையை அனுபவிப்பது என்பதே இருவர்க்கும் பொது வானது (பக். 39).

இதைவிட மிகப் பெரிய அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. மார்க்சியத் தத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட அறியாமல் குருமூர்த்தி மார்க்சியத்தை விமர்சிக்க முன்வந்திருக்கிறார் என்பதை இந்த வாதம் வெளிப் படுத்துகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் சார் வாகர்கள் என்ற இந்தியப் பொருள்முதல்வாதிகளைக் (சார்வாகர்கள் பச்சையான இந்தியர்கள், சுதேசிகள், அவர்கள் ஐரோப்பிய மரபணுக் குழப்படிகள் இல்லாதவர்கள்) கொச்சைப்படுத்த வைதீகர்கள் பயன்படுத்திய அதே அறுதப்பழசான வாதத்தை குரு மூர்த்தி இப்போது மார்க்சியத்துக்கு எதிராகப் பயன் படுத்தியுள்ளார், அது நுகர்வுவாதம் என்று. ஏதாவது புதுசாக யோசிக்கக் கூடாதா? என்று கேட்கத் தோன்றுகிறது. தோளுக்கு மேலே தலை இருப்பது புதுசாக யோசிப்பதற்குத்தானே!

மார்க்சின் தத்துவம் உழைப்பின் தத்துவம். அது உழைப்பாளிகளின் தத்துவம். ஆன்மாவையும் அறிவையும் காமத்தையும் வைத்துத் தத்துவம் செய்துகொண்டிருந்தவர் களுக்கிடையில் உழைப்பை இழுத்துவந்து நடுவில் நிறுத்தியவர் மார்க்ஸ். இயற்கையைப் புனரமைக்கும் படைப்புத்தன்மை கொண்ட மனிதச் செயல்பாட்டைத் தத்துவமாக்கியவர் கார்ல் மார்க்ஸ். இயற்கையைப் புனரமைக்கும் மனிதச் செயல்பாட்டின் பெயர் உழைப்பு; சமூக உறவுகளைப் புனரமைக்கும் மானுடச் செயல்பாட்டின் பெயர் வர்க்கப் போராட்டம். அதுவும் ஒரு படைப்புச் செயல். உழைப்பும் வர்க்கப் போராட்டமும் மார்க்சியத் தத்துவத்தின் இரண்டு மாபெரும் அடிப் படைகள். உழைப்பு நடவடிக்கையின்போது, வர்க்கப் போராட்ட நடைமுறையின் போது, மனிதர்கள் உலகை மாற்றியமைக்கின்றனர், தம்மைத்தாமே கூட மாற்றி யமைக்கின்றனர். அகம்புறமாக மாறுகிறது, புறம் அகமாக மாறுகிறது என மார்க்ஸ் அழகாகஎழுதுவார். தத்துவரீதியாக, அவை இரண்டும் மார்க்சியனுக்கு ஒன்றேதான்.

உழைப்பு, வர்க்கப் போராட்டம் என்ற இரண்டு விஷயங்களை அணுகிப் பார்த்தால், அவற்றி லிருந்து மார்க்சியத்தினுடைய இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் எல்லாக் கோட்பாடுகளையும் வருவிக்க முடியும். அப்படிப்பட்ட தத்துவத்தை நுகர்வு வாதம் என்று சொல்லுவதற்கு அறியாமைதான் அடிப் படையாக இருக்க முடியும். வேதாந்தத்தில் அறியாமைக்கு அவித்யா என்று பெயர். அது ஏதோ ஒரு மாயையினுள் சிக்கிக்கொண்டிருப்பவனின் கெட்டபுத்தி. எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு: அதிகாலையிலேயே கலப்பையைத் தோளில் போட்டுக் கொண்டு வயலுக்குப் போகிறவனைப் பார்த்து, வேலிக்கரையில் “வெளிக்கிருந்து” கொண்டிருந்தவன் சத்தமாகக் கேட்டானாம், ஏ, வேலை யத்தவனே! எங்கே போகிறாய்? என்று. குருமூர்த்தி மார்க்சியத்தை நுகர்வுவாதம் எனச் சொல்லுவதும் அப்படிப்பட்டதுதான்.  

பொருள்முதல்வாதத்திற்கும் வரலாற்றில் எண்ணற்ற வடிவங்கள் உண்டு. இயற்கையே எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்பது பொருள்முதல்வாதம்தான். ஐம்பூதங் களிலிருந்து உலகம் தோன்றுகிறது என்பது பொருள் முதல்வாதம்தான். உலகின் எல்லாப் பொருட்களுக்கும் முதல் அடிப்படையாக அணுக்கள் விளங்குகின்றன என்பதும் பொருள்முதல்வாதம்தான். தேகமே முதன்மையானது என்று கூறும்போது அதுவும் பொருள்முதல்வாதம்தான். அறிவை ஈட்டுவதில் புலனுணர்வுகளே முதலிடம் வகிக் கின்றன என்று கூறுவதும் பொருள்முதல்வாதம்தான். மனித சிந்தனையின் அடிப்படையாக மூளையும் நரம்பு மண்டலமும் உள்ளன என்று கூறுவதும் ஒரு பொருள் முதல்வாத நிலைப்பாடுதான். சமூகச் சூழல்களே மனிதரை நிர்ணயிக்கின்றன என்று சொல்லுவதும் கூட பொருள்முதல்வாதம்தான். இந்தப் பொருள்முதல் வாதங்களில் எந்த ஒன்றும் நுகர்வுவாதம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட பல பொருள்முதல்வாதங்களுக்குப் பிறகு, அவற்றின் மரபார்ந்த ஆற்றல்களை உள்வாங்கி, மானுடச் செயல் பாடு (உழைப்பு, வர்க்கப் போராட்டம்) என்ற பொருள் வகை இயங்கியல் உறவுகளை முன்னிலைப்படுத்தியதுவே மார்க்சியப் பொருள்முதல்வாதம்.

இயற்கை, ஐம்பூதங்கள், அணுக்கள், தேகம், புலனுணர்வுகள், மூளை, நரம்பு மண்டலம், புறச்சூழல்கள் என்ற முந்திய பொருள்முதல் வாதத்தின் வரலாற்றுத் தடங்களைத் தன்னில் சுவீகரித்துக் கொண்டு எம்பி எழுந்தது மார்க்சியப் பொருள்முதல் வாதம். அதனால் தான் மார்க்சியம் என்பது தத்துவ வரலாற்றில் ஒரு புதிய சொல் என்கிறோம். நிலைமை இப்படியிருக்க, 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சார் வாகனைத் தீயிலிட்டு எரிக்கப் பயன்படுத்திய அதே வாதத்தை குருமூர்த்தி மீட்டெடுக்கிறாரே! யாரை எரிக்க அவர் இப்போது தீயேந்துகிறார்? இந்திய அனுபூதித் தத்துவங்கள், எமது இறுதியிலக்கு “ஆனந்தம், பேரானந்தம், பரமானந்தம்” என்று அறிவிக்கின்றனவே, அந்தத் தத்துவங்களில் நுகர்வுவாதத்தின் எச்சம் இல்லை என்று குருமூர்த்தி வாதிடத்தயாரா?

சாதி முதலாளியம்: குருமூர்த்தி முன்வைக்கும் மாற்று

தனது நூலின் இறுதிப் பகுதியில், குருமூர்த்தி மார்க்சியத்துக்கும் முதலாளியச் சந்தைப் பொருளா தாரத்துக்கும் மாற்றாக இந்திய முன்மாதிரி ஒன்றை முன்வைக்கிறார்.

“உறவுமுறைகளின் அடிப்படையிலான சந்தை முன்மாதிரியே நீடித்து நிலைக்கக்கூடிய சமூக, பொருளாதார, அரசியல் முன்மாதிரியாக விளங்க முடியும்... யதார்த்தத்தில் உலகத்துக்கான இத்தகைய உறவுமுறை அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்மாதிரி இந்தியாவிடம் இருக்கிறது” (பக். 56).

குருமூர்த்தியும் அவரது மொழிபெயர்ப்பாளரும் மிக எச்சரிக்கையாகச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். “உறவுமுறை அடிப்படையிலான சந்தை” என்பன அப்படிப் பட்ட சொற்கள். எந்த உறவுமுறையைப் பற்றி குரு மூர்த்தி பேசுகிறார்? இப்படி மொட்டையாக “உறவு முறை” என்ற சொல்லைப் பயன்படுத்தினால் யாருக்குப் புரியும்? ஆனால் இந்த இடத்தில் குருமூர்த்தி தடுமாறுவதற்கு ஓர் அவசியம் இருக்கவேண்டும். நூலின் இறுதிப்பகுதி முழுவதும் குருமூர்த்தி இப்படி ஒரு தடுமாற்றத் துடனேயே அவரது “உறவுமுறை சார்ந்த சந்தை”யை விளக்குகிறார். பக்கம் 66-இல் இதே விஷயத்தைப் பேசும்போது “சமூகம் சார்ந்த தொழிற் சந்தைகள்” என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். எந்த சமூகம்? இங்கும் அவர் வெளிப்படப் பேசத் தயங்குகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் வெளியில் வருகிறார். பக்கம் 64-இல் “இந்தியாவில் குடும்பத் தொழில்களும் குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படுகிற தொழில்களும் இருக்கின்றன. இவை எல்லாம் தொழில் சமூகங்களோடு தொடர்பு கொண்டவை” என்று எழுதுகிறார்.

“குடும்பத் தொழில்கள், குடும்பத் தாரால் நிர்வகிக்கப்படுகிற தொழில்கள்” என்று எழுதும் போது பாதிதூரம் அவர் வெளியே வந்துவிட்டார். “இவை எல்லாம் தொழில் சமூகங்களோடு தொடர்பு கொண்டவை” என்ற அடுத்த வரியைப் படிக்கும்போது, இவர் “சமூகம்” என்ற சொல்லை “சாதி” என்ற சொல்லை மறைப்பதற்காகப் பயன்படுத்தியுள்ளார் என்பது புரிய வருகிறது. இதை நேரடியாக எழுதித் தொலைக்க வேண்டியதுதானே! இவரிடம் வேறு எதனை நாம் எதிர்பார்த்துவிடப் போகிறோம்! இப்போது “உறவு முறை அடிப்படையிலான சந்தை” என்று முதலில் எழுதி யிருப்பதன் பொருளும் விளங்குகிறது, அவர் “சாதி உறவு முறையிலான சந்தை” என்பதையே “சாதி” என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு மொட்டையாக “உறவுமுறை” என்று குறிப்பிட்டுள்ளார். மடியில் கனம் இருக்கும்போது வழியில் எவ்வளவு பயமாக இருக்கிறது, பாருங்கள்!

இந்த நூலின் பின்புற அட்டையில், நூலின் ஆசிரியரை “எஸ்.குருமூர்த்தி, அரசியல், பொருளாதார விமர்சகர்” என்று கிழக்குப் பதிப்பகம் அச்சடித்துள்ளது. இதே நூலின் ஆங்கிலப் பதிப்பில், பின்புற அட்டையில் கார்ப்பொரேட் கம்பெனிகளின் ஆலோசகர் என்று அச்சடித்துள்ளார்கள். நூலின் ஆசிரியரை அறிமுகப்படுத்துவதிலேயே மொழிக்கு மொழி எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார்கள், பாருங்கள். தமிழில் அச்சிடும்போது கார்பொரேட் ஆலோசகர் என அச்சிடத் தயங்குவதிலிருந்தே, மார்க்சியம் மறைந்து போகவில்லை, அதைக் கண்டு நீ பயப்படுகிறாய், உன்னைக் கார்பொரேட் ஆலோசகர் என்று அறிமுகப்படுத்த உனது பதிப்பகத்துக்காரனே வெட்கப்படுகிறான், இருந்தாலும் மத உணர்வுகளை, சாதி உணர்வுகளைத் தூண்டிவிட்டு மார்க்சியத்தைத் திட்டித் தொலைப்பதற்கு நீ அவனுக்குத் தேவைப் படுகிறாய், என்பதெல்லாம் எமக்குப் புரியவருகிறது.

ஆக, முதலாளியத்துக்கு மாற்றாக சாதி சார்ந்த தொழில் சந்தை என்னும் முன்மாதிரி குறித்து குருமூர்த்தி பேசுகிறார். இந்த அமைப்புதான் இந்திய எதார்த்தமாக இருக்கிறது என்று குருமூர்த்தி சொல்லுவதையும் கவனிக்க வேண்டும். தனது கருத்தை வலியுறுத்த அவர் எடுத்துக்காட்டும் தரவுகளும் கவனத்திற்கு உரியன. 98 சதவீத இந்தியத் தொழில்கள் குடும்பங்களுக்குச் சொந்த மானதாக உள்ளன என்கிறார். செட்டியார்கள், மார் வாரிகள் என்னும் பனியாக்கள், நாடார்கள், கவுண்டர்கள், நாயுடுகள், குஜராத்தின் பட்டேல்கள், பஞ்சாபின் ராம் கடியாக்கள், ஆக்ரா, கான்பூர் பகுதிகளில் ஜாதவ்கள் போன்ற சாதிகள் தாம் இந்தியாவின் பொருளாதாரத்தைக் கைகளில் வைத்துள்ளார்கள் என்று குருமூர்த்தி கூறுகிறார். இந்தியப் பொருளாதாரத்திலும் அதன் அரசியலிலும் சாதிகள் சிறிதளவு கூட அகலவில்லை, சாதி அமைப்பு இந்தியாவில் ஜாம் ஜாம்மென வாழ்ந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சாதிப் பொருளாதாரம்தான், சாதி முதலாளித்துவம்தான் இந்தியாவை “ஒளிரச்” (மிஸீபீவீணீ ஷிலீவீஸீமீs) செய்திருக்கிறது. சமீபகாலங்களில் மேற்கு உலகில் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள வெற்றிகளுக்கு இந்திய சாதி முதலாளியமே காரணம் என்கிறார் குருமூர்த்தி. மேற்குநாடுகளெல்லாம் சமீபத்திய பொருளாதார நெருக்கடியில் ஆடிப்போன வேளையில், இந்தியாவை அந்த நெருக்கடி பாதிக்காமல் காப்பாற்றி யிருப்பது பாரம்பர்யமான சாதிப் பொருளாதாரமே என்கிறார் குருமூர்த்தி.

சாதி அமைப்பின் அடிப்படைகளிலேயே உருவாகி யுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளியச் சாதிகளை குருமூர்த்தி வரிசைப்படுத்துகிறார். முதலாளிய அளவைகளின்படி வெற்றி பெற்ற சாதிகள் அவை. இது தான் இந்தியா என்கிறார் மகாத்மா காந்தி. ராட்டையைத் தனது சுதேசி சின்னமாக கையிலெடுத்த போது குஜராத்தில் அழிந்துகொண்டிருந்த நெசவாளர்கள் மீது தனது அனுதாபத்தை வெளிப்படுத்தினார். குரு மூர்த்தியின் சுதேசியம் முதலாளிய சுதேசியம். டாக்டர் பாரத் பட்டங்கர் என்ற மகாராஷ்டிர சிந்தனையாளர் முன்வைக்கும் சில புள்ளிவிவரங்களை இங்கு எடுத்துக் காட்டுவோம். மகாராஷ்டிரத்தில், துப்புரவுத் தொழிலாளர்களாக உள்ளவர்கள் நூறு சதவீதம் தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து வந்தவர்கள் என்கிறார் அவர். கழிவுப் பொருட்கள், உடைந்த பாட்டில்கள், கண்ணாடிகள், கழிவுத்தாள் ஆகியற்றைச் சேகரிக்கும் நான்காவது நிலைத் தொழிலாளர்களாகவும் அவர்களே உள்ளனர் என்ற தகவலையும் அவர் தெரிவிக்கின்றார்.

நகரங்களில் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என்ற பிரிவினுள் வருகின்ற கடின உடலுழைப்பாளிகள், ரயில்வே போர்ட்டர்கள், நகரங்களின் பிறபகுதிகளில் சுமை தூக்குவோர் ஆகியோரும் முன்னாள் விவசாயத் தொழில்களைச் செய்துவந்த சாதிகளிலிருந்து உருவாகி யுள்ளனர். கிராமப்புறங்களில் சிறுவிவசாயிகளிடையி லிருந்து, சுமார் 3-4 சதவீதத்தினர் மட்டுமே முதலாளிய விவசாயிகளாகவும், சிறுதொழில் அதிபர்களாகவும் மாறியுள்ளனர் என்றும் டாக்டர் பாரத் பட்டங்கர் தெரி விக்கிறார். இன்னொருபுறம், இந்திய முதலாளி வர்க்கம் பிராமணர், பனியா, சத்திரியர் எனப்படும் மேட்டுச் சாதிகளிலிருந்தே உருவாகியுள்ளது என அவர் கூறுகிறார். இந்திய முதலாளிகளுள் வெறும் 1-1.5% மட்டுமே விவசாயிகள் மற்றும் கைவினைஞர் சாதிகளிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லுகிறார். மேட்டுச் சாதிகள் அறிவுத்துறை, கணினி மென்பொருள் துறை, அரசு நிர்வாகம், தனியார் கம்பெனி நிர்வாகம், நிதி நிர்வாகத் துறை ஆகிய வற்றில் அறுதிப் பெரும்பான்மை வகிப்பதையும் அவர் எடுத்துக்காட்டுகிறார். பிராமணர், பனியா, சத்திரியர் அல்லாத உழைக்கும் சாதிகளிடையில் இருந்து 2-5 சதவீதத்தினர் மட்டுமே முதலாளிகள், பணக்கார விவசாயிகள், உயர் நிர்வாகிகள் என்ற எல்லைகளுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்ற கணக்கையும் அவர் தருகிறார்.

முதலாளியப் படிநிலையில் முன்னேறியுள்ள சாதிகளுக்குப் பின்னால், அதே சாதிகளைச் சேர்ந்த, பிற சாதிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் உண்டு. சாதிகளின் மூலதனக் குவியலுக்குப் பின்னால் சுயசாதிச் சுரண்டல் என்ற ஒரு நிகழ்வு உண்டு. சாதி அபிமானத்தை ஆதாயமாகப் பயன்படுத்திக் கொள்ளும் உத்தி சுயசாதிச் சுரண்டலில் உண்டு. சாதித் தொழில் சந்தைகளை இந்தியப் பாரம்பர்யத்தின் விளைவு என சிலாகிக்கும் குருமூர்த்தி, பாரம்பர்ய இந்தியாவின் விவசாயம் அழிந்து போய்க்கொண்டிருப்பது குறித்து இந்நூலில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளால் அடித்து விரட்டப்படும் கடற்கரை மற்றும் மலைப் பிரதேசப் பழங்குடிகள் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

கார்ப்பரேட் இந்தியாவின் எழுச்சியின் குறியீடாக 1998, போக்ரான் அணுகுண்டு வெடிப்பை குருமூர்த்தி முன்வைக்கிறார். “இந்தியாவின் இந்த ஒரு செய்கை யினால் இந்தியாவின் ஆன்மா தட்டி எழுப்பப்பட்டது.. போக்ரான் குண்டுச் சப்தம் கேட்ட, வெளிநாட்டில் குடியேறியுள்ள செல்வ வசதி படைத்த என்.ஆர்.ஐ இந்தியர்களின் உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடின” (பக்.59). மீண்டும் காந்தியின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர் போக்ரான் குண்டு வெடிப்பை ஆதரித்திருப்பாரா? அதனை இந்திய ஆன்மா என்று மதிப்பிட்டிருப்பாரா? வெளிநாட்டில் குடியேறி யுள்ள செல்வவசதி படைத்த என்.ஆர்.ஐ இந்தியர்களை முன்வைத்துப் பேசியிருப்பாரா? காந்தியின் சுதேசியமும் குருமூர்த்தியின் சுதேசியமும் நேர் எதிரெதிர் திசைகளில் பயணிப்பதைக் காணமுடிகிறது. இதே நூலின் முன் பக்கங்களில், மேற்கத்திய கிறிஸ்தவ கலாச்சாரம் வன் முறை நிறைந்ததென்றும், உள்ளுறை இறுக்கங்களையும் வலியையும் வெளிப்படுத்திக் காட்டும் கலாச்சாரம் என்றும் (பக்.26-27) குருமூர்த்தி தூற்றியிருக்கிறார். இப் போது அதையெல்லாம் மறந்துபோய், போக்ரான் குண்டு வெடிப்பு என்னும் ஆகப் பெரிய வன்முறைக் குறியீட்டை இந்திய ஆன்மாவின் உயிர்த்தெழுதலுக்கு அடையாளமாக்குகிறார். இதைத்தான் நாங்களும் கூறுகிறோம். இந்தியச் சாதிச் சமூகம் நாம் நினைப்பது போல் அப்பாவித்தனமானதோ சாதுவானதோ அல்ல, அது மிக ஆழமாக வன்முறையைப் பதுக்கி வைத்திருப்பது. அது குறித்த ஒப்புதல் வாக்குமூலமே குருமூர்த்தியின் நூல்.

மார்க்ஸ் அவருடைய மூலதனம் நூலில், கூலி என்பதைப்பற்றிப் பேசும்போது, உழைப்பின் சமூக ரீதியான சராசரி விலை என்று விளக்குவார். அதாவது, தொழிலாளி ஒரு நாளைய உழைப்புக்குப் பெறும் கூலி என்பது, குறிப் பிட்ட அந்த ஊரில், குறிப்பிட்ட அந்த நாளில், குறிப் பிட்ட அந்தவகையான உழைப்புக்கான சராசரி விலை யாக அமையும் என்பார். கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலான தொழிற்சங்க இயக்கங்களும் மார்க்சியத்தின் பரவலும் மேற்கு நாடுகளில் மனித உழைப்புச் சக்தியின் விலையை உயர்த்தி உத்தரவாதப்படுத்தியுள்ளன. தொழிலாளர் வேலைப் பாதுகாப்பும் தொழிலாளர் நல உரிமைச் சட்டங்களும் அங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைமைகளை குருமூர்த்தி கொண்டாடும் இந்தியச் சாதி முதலாளியச் சூழல்களுடன் ஒப்பிட வேண்டும். பாரம்பர்ய சாதிச் சமூகம் உழைப்பின் சமூகரீதியான சராசரி விலையை மிக மிகக் குறைந்த நிலையில் வைத்துப் பாதுகாத்து வருகிறது.

சாதி முதலாளியம் சமீபத்திய ஆண்டுகளில் காட்டிவரும் உற்பத்தி வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்கள் உண்மையில் மிகக் குறைந்த சம்பளம் வழங்கப்பட்டு, மிகக் கடுமையாகச் சுரண்டப் படும் சாதிவகைப்பட்ட அடிமை உழைப்பின் விளைச்சல் ஆகும். மரபுரீதியான இந்திய சமூகத்தில், பகல்-இரவு என நேரம் பார்க்காமல், சொந்த விவசாயத்திலும் அடிமை உழைப்பிலும் ஈடுபட்டுப் பழக்கப்பட்டுப்போன விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும்தான் இந்திய கார்ப்பரேட்டுகளின் மூலதனக் குவியலுக்கு உரமாகிக் கொண்டிருக்கிறார்கள். சமூக அடித்தளங்களைச் சேர்ந்த அந்தப் பிள்ளைகளை அப்படிச் சுரண்டுவதற்குத் தமக்கு உரிமை இருப்பதாகக் கூட இந்திய மேட்டுக்குடி முதலாளிகள் நம்புகிறார்கள். இவை தவிர, சுற்றுச் சூழல் அழிவு, கழிவுப் பொருட் களால் ஏற்படும் நாசம் ஆகியவையும் சாதிய கார்ப்பரேட் முதலாளியத்தின் உடன் விளைவுகள் ஆகும். அதனை உலகுக்கே முன்மாதிரியாக குருமூர்த்தி முன்மொழிகிறார்.

சாதி அமைப்பை உலகம் முழுவதற்கும் பரப்ப வேண்டும். அது மட்டுமே நெருக்கடி இல்லாத பொருளாதாரத்தையும் அரசியலையும் உருவாக்கும் என்பது குருமூர்த்தியின் கணிப்பு. குருமூர்த்தி எந்த வகையிலும் முதலாளியத்துக்கு ஒரு மாற்றைத் தேடவில்லை, அதன் இந்திய வடிவத்தையே அவர் முன்வைக்கிறார். மேற்கிலும் கிழக்கிலும் உழைக்கும் மக்கள் தமது நீண்ட நெடிய போராட்டங்களால் சாதித் திருக்கக்கூடிய தொழிலாளர் நல உரிமைச் சட்டங்களை உடைத்தெறிந்துவிட்டு சாதிமுறையின் எழுதப்படாத கெடுபிடிச் சட்டங்களைக்கொண்டு முதலாளியத்தை உருவாக்க வேண்டுமே என்பதே குருமூர்த்தியின் வேலைத் திட்டம்.

Pin It