கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தேசத்துரோகம் குற்றம் சாட்டப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டதால், தேசத்தின் ஒட்டுமொத்த பார்வையையும் 2015-ஆம் ஆண்டில் தன்பக்கம் திருப்பியவர் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் தோழர். கன்னையாகுமார்.

பீகார் மாநிலத்தின் மிக பின்தங்கிய ஒரு கிராமத்தில், ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவராக உயர்ந்து, இந்த நாடு எமது, இந்த நாட்டுக்கு தியாகங்கள் செய்தவர்கள் நாங்கள். இந்த நாட்டின் பெரும்பான்மை ஏழைகளின் நல் வாழ்விற்கு போராடுபவர்கள் நாங்கள். எங்களுக்கு மக்கள் சேவையே வழிபாடு. நாங்கள் அரசியல் சாசனத்தை உருவாக்கிய பாபா சாகிப்பை மதிப் பவர்கள். அரசியல் சாசனத்தை மாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்ப்பவர்கள், மனு நீதி உழைக்கும் மக்களுக்கு எதிரான உயர்ஜாதி நீதி, மனு பாது காக்கும் சாதிய முறையை எதிர்ப்பவர்கள் நாங்கள் என்று பிரகடனபடுத்தி கொண்டே ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. மதவெறிக் கும்பலுக்கு எதிராக நாட்டின் புகழ்பெற்ற ஜே.என்.யு. கல்வி நிறுவனத்தில் துணிச்சலுடன் போராடியதால் தேசத் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தோழர். கன்னையாகுமார்.

kannaiah kumar 640பொய்வழக்கு தொடுத்து, சிறையில் அடைப் பதன் மூலம் கன்னையாகுமார் போன்றவர்களின் எதிர்ப்பு குரலை ஒடுக்கி விடலாம் என்று கனவுகண்ட பி.ஜே.பிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி யதுடன் பெரும் எதிர்ப்பலையையும் உருவாக்கியது.

நீதிமன்றம் ஜாமீன் அளிக்க முன்வரும்பொழுதும் தன் மீதும், பிற மாணவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்ளாவிட்டால் நான் பெயிலில் போவதை ஏற்கமாட்டேன் என்று துணிச்சலுடன் திகார் சிறைக்குச் சென்றவர்தான் கன்னையாகுமார்.

சிறைச்சாலையைக் கண்டு அஞ்சவில்லை சிறையே வீடாக, சிறையே ஒரு கதைப் பெட்டக மாக, சிறையே ஒரு கல்விக் கூடமாக தனக்கு இருந்தது என்று கன்னையாகுமார் குறிப்பிடுகின்ற வரிகளை படிக்கின்ற பொழுது

“மாங்குயில் கூவிடும்

பூஞ்சோலை - நமை

மாட்ட நினைக்கும்

சிறைச் சாலை”

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகள்தான் நினைவிற்கு வருகின்றது.

தனது சிறை அனுபவங்களை தினசரி டைரி எழுதத் தொடங்கியது. குறித்து எண்ணங்களை எழுத்துக்களாக வடிப்பது அத்தனை எளிதானதல்ல. இரண்டு வகை மாம்பழங்களின் சுவையை எப்படி எழுதிக் காட்ட முடியும்? எனினும் என் அனுபவங் களை எழுதுவது நல்லது எனக் கருதினேன்.

அந்தச் சிந்தனையின் விளைவாக உருவானது தான் இந்நூல். 36 தலைப்புகளில் 130 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலினை ஒரு சுய வரலாற்று நூல் என்று வரையறுத்துவிட முடியாது.

இருநூலில் கம்யூனிஸ்ட் இயக்கம், உலகமய தாக்கம், ஏழைகளின் வாழ்க்கை நிலை, அரசியல், சமூக அக்கறை, கல்வி நிலை எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து மிக நுட்பமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மொழிநடை, சொல் ஆளுமை, மேற்கோள்கள் போன்றவைகள் அவரது பரந்த வாசிப்பு அனுபவம், அரசியலறிவு, தெளிந்த அரசியல் பார்வை ஆகியவைகளை நமக்கு உணர்த்து வதுடன், புதிய பல விவாதங்களையும் சிந்தனை களையும் இந்த நூல் படிப்பவர்களுக்கு எழுப்புகிறது.

27 வயதிற்குட்பட்ட ஒரு மாணவன் எழுதியுள்ள முதல் நூல் இது என்று அறியும் பொழுது

“உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்

வாக்கினிலே ஒளி உண்டாகும்”

என்ற பாரதியின் கவிதைவரிகள் நினைவுக்கு வருகிறது.

இத்தகைய உண்மை ஒளி அவரது உள்ளத்தில் சுடர்விட்டு பிரகாசிக்கக் காரணம் எது? தூண்டுகோல் எது? என்ற கேள்விகளுக்கான விடை இதோ...

நான் பீகாரில் அடிக்கடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் செல்வேன். அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வாசகர் வட்டம் கூடும். ஏதாவது புத்தகம் குறித்து விவாதிப்பார்கள். நான் அமைதியாக இருந்து அவர்கள் பேசுவதைக் கேட்பேன். ஒருமுறை லெனினின் ஏகாதிபத்தியம் - முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்னும் நூலைப் பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. பின் ஒரு நண்பர் முதலில் இவை பற்றிக் கேட்டு புரிந்து கொள்ள முடியவில்லை என்று கவலைப்படாதே, சில அடிப் படையான எளிய நூல்களை. படிப் பின் இந்தத் தத்துவம் பற்றி உனக்குத் தெளிவு பிறக்கும். இவற்றை புரிந்துகொள்ளாமல். சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், மாற்றவும் முடியாது. நாம் சமூக மாற்றத்திற்கான புரட்சியாளர்கள் என்று கூறி உற்சாகமூட்டினார்.

இதனால் நாம் கைவிட்ட இலக்கியம் பற்றிய எனது ஆர்வம் மீண்டும் உண்டானது. சமூக விஞ்ஞானம் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் உண்டானது. எனவே புதிது புதிதாக நாவல், கவிதைகள், வரலாறு, அரசியல் பற்றிய நூல்களை தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.

ஆக, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்தான் பயிற்சிக் கூடமாக இருந்து பயிற்சியளித்துள்ளது என்ற செய்திகளைப் படிக்கின்ற பொழுது நாடு முழுவதும் ஏராளமாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் ஏன் இத்தகைய பயிற்சிக் கூடங் களாக மாறி எண்ணற்ற கன்னையாகுமார்களை உருவாக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்புகிறது. இக்கேள்வியை பரிசீலிப்பதும், மாற்றத்தை உருவாக்க வேண்டியதும் இன்றைய தேவை என்பதை கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்து செயல்வடிவம் கொடுப்பது உடனடி கடமையாகும் ஒன்று...

எதையும் கேள்விகேள்! என்று எனக்குச் சொல்லித்தந்தனர். கேள்வி கேட்ட நான் இடதுசாரி என அழைக்கப்பட்டேன். போராடுவதற்குப் படி, மாற்றங்கள் கொண்டுவரப்படி என்று மாணவர் பெருமன்றத்தில் கற்றுத்தந்தனர். மாணவர் மன்றத்தை பலப்படுத்துவதன் மூலமே சமூகத்திற்கு உதவ முடியும். பலவீனமானவர்களுக்கும் வலுவான அமைப்பு தேவை என்பதை உணர்ந்தேன் என்கிறார் கன்னையாகுமார்.

தான் சமூகத்திற்காகப் போராட வேண்டும் என்று முடிவு செய்தது குறித்து கன்னையாகுமார் சொல்வதைக் கேட்போம்.

“நான் படித்தவன் என்ற மமதையுடன் சமூக கடமைகளை ஒதுக்கிச் செல்வது எனக்கே ஆபத்தாக முடியும். நான் சமூகத்திற்கு எதைத் தருகிறேனோ, அதையே சமூகத்திடமிருந்து பெற முடியும். அநீதிகள் பிறருக்கு நடப்பதைக் கண்டு, எனக்கு நடக்கவில்லை என்று விலகிப் போகிறவன் பாதிக்கப்படும் போது சமூகம் அவனுக்கு துணை வராது. சமூகத்திற்கு உதவுபவனுக்கு சமூகம் உதவும். நான் சமூகப் போராளியாவதன் மூலமே நான் சமுதாயத்தில் வாழ முடியும் என்று முடிவு செய்தேன்”

எத்தகைய ஒரு தீர்க்க தரிசனமான சிந்தனை இது!

கம்யூனிஸ்ட் கட்சியுடன் எனது தொடர்பு நாளுக்குநாள் வளர்ந்து வந்தது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உறவு வளர்ந்தது. இந்தியாவில் கம்யூனிசம் எப்படி வெற்றி பெறமுடியும் என்பது பற்றி விவாதித்தோம். நான் மாணவர் பெரு மன்றத்தில் தீவிரமாக பங்கேற்று பணியாற்றத் தொடங்கினேன். இந்திய அரசியல் பற்றியும் கற்றுக்கொள்ளத் துவங்கினேன் என்கிறார்.

“அரசியல்” குறித்து அவரது புரிதல்களையும், கருத்துக்களையும் காண்போம்!

அரசியல் என்பது எளிதானதல்ல. சவால் களையும் துயரங்களையும் ஏற்றுத்தான் முன்னேற முடியும். நிழலின் அருமை வெய்யிலில் தெரியு மென்பார் ப்ரேம்சந்த். பசியை அறியாதவன் உணவின் சுவையை ரசிக்க முடியாது. எதையும் சிரமப்பட்டு அடையும் போதே அதன் அருமை புரியும் என்பார்.

பலர் குறிப்பாக படித்த, மத்தியதர வர்க்கத்தினர் தாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அரசியல் தங்களுக்கு தேவையில்லை என்று சொல்வார்கள். அதுவும் ஒருவிதமான அரசியல் தான். அத்தகையப் போக்குகளுக்கான விடை இதோ.

அரசியல் எதிலும் உள்ளது. அரசியலின்றி எதுவும் இல்லை நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். எனக்கு அரசியல் தேவையில்லை என்று எவரும் தப்பிவிட முடியாது. உலகில் அரசியல் சாராதது எதுவுமில்லை. எவரும் அரசியலிருந்து தப்பிவிட முடியாது என்று அரசியலின் வலிமையைக் குறிப்பிடுகின்றார்.

அரசியல் வியாபாரமாகிவிட்டது என்பது இன்றைக்கு பொதுவான குற்றச்சாட்டு. வியாபாரத் திற்கும் அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்வியை எழுப்பி பொருட்களைக் கொடுத்து லாபம் சம்பாதித்தால் வியாபாரம்: எதையும் தராமல் கோடிக்கணக்கில் சேர்த்தால் அது அரசியல் என்று பதிலளித்து சிந்தனையைத் தூண்டுகின்ற கருத்தினை பதிவு செய்துள்ளார்.

ஏழைகள் குறித்து

ஏழை மக்களின் துயரங்கள் தீர்க்கப்பட வேண்டும். வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் சமூக மாற்றத்தை விரும்புகின்ற ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். ஏழைகள் குறித்த அவரது ஏக்கம் நிறைந்த சில வரிகள் இதோ...

*             ஏழைகளுக்கு ஆசையும், கனவும் ஒரு கரை. நடைமுறை வாழ்க்கை எட்டமுடியாத மறுகரை.

*             ஏழைகள் தமது சொந்த சமூகத்தில் கூட அன்னியர்கள்தான்.

*             மதம் கூட ஏழைகளை ஏற்பதில்லை. மதம் பணக்காரர்களுக்கானது. எனவே நான் மதத்தை வெறுக்கத் துவங்கினேன்.

*             “ஏழைகளையெல்லாம் திருடர்கள் போல் சந்தேகப்படும் மனநிலை நம் சமூகத்தில் உள்ளது. வறுமை ஏன் உண்டானது? யாரோ திருடுவதால் ஏமாற்றுவதால் பலர் ஏழைகளாக்கப்படுகின்றனர். உழைப்பின் பலன் உழைப்பவர்களுக்குக் கிடைக்காத தாலே ஏழைகள் உருவாகிறார்கள். சுரண்டி யவர்கள் ஏழைகளை குற்றவாளிகள் போல் பார்ப்பது ஈயத்தைப் பார்த்து பித்தளை சிரிப்பது போல் உள்ளது” என்கிறார்.

தோழர் கன்னையாகுமாரின் இந்த வரிகளைப் படிக்கின்ற பொழுது

“மாடா உழைச்சவன் வீட்டினிலே - பசி

வந்திடக் காரணம் என்ன மச்சான்?

அவன் தேடியச் செல்வங்கள் சீமான் வீட்டினிலேயே

சேர்ந்ததினால் வந்த தொல்லையடி”

என்ற பட்டுக்கோட்டையின் பாடல்வரிகள் எதிரொலிப்பதை உணர முடியும்.

முதலில் தாஜ்மகாலினைப் பார்த்த நான் அதன் அழகை பிரமாண்டத்தைப் பார்த்து வியந்து பாராட்டினேன். ஆனால் இப்போது அதன் உருவாக்கத்திற்கு உழைத்தவர்களின் வியர்வையும், செத்தவர்களின் குடும்பத்தின் துயரமும்தான் தெரிகின்றது என்ற வரிகள் எவ்வளவு ஆழமான பொருள் பதிந்தது.

கம்யூனிஸ்ட் கட்சி குறித்து

கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கத்தால் எங்கள் கிராமம் முற்போக்குச் சிந்தனை கொண்டதாக மாறியிருந்தது. கிராம இளைஞர்கள் விளையாட்டு, உடல்நலம் குறித்து மிகுந்த அக்கறைகொண்டு இருந்தனர். நூலகத்தில் வாசிப்போர் கூட்டம் இருந்தது. கிராமத்தின் பழமைவாதம் கேள்விக் குள்ளானது. முற்போக்கு இளைஞர்கள் சாதி மறுப்பு எண்ணிக்கை கொண்டவர்களாக கலப்புமணம், விதவைமணம் போன்றவற்றை ஏற்க முன்வந்தனர். மூடநம்பிக்கைகள், அறிவியல் பார்வையால் எதிர் கொள்ளப்பட்டன. சாதி வேறுபாடுகளை, தீண்டா மையை எதிர்த்தனர் என்று பெருமிதத்துடன் பதிவு செய்கின்றார்.

உலகமய கொள்கைகளின் தாக்கத்தால் 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து உலகமயத்தின் அசுர அலைகள் இடதுசாரி இலக்கங்களை சிதைத்தன. கடந்த காலத்தின் தொன்மை மரபுச் சின்னங்களைத் தகர்த்தன. பழைய தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிற்சங்கங்கள் வலுவிழந்து நொறுங்கின. கட்சியின் கிராம அமைப்புகள் செயலற்றுப் போயின. புதிய அரசியல் உருவானது. பணமும், வலிமையும் முதன்மை பெற்றன. இந்தச் சாக்கடை ஓட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓரம் கட்டப்பட்டது என்கிறார்.

கம்யூனிசத்திற்கும், உலகமயத்திற்கும் இடை யிலான வேறுபாட்டினை எப்படி நயம்பட எடுத் துரைக்கின்றார் என்பதைப் பார்ப்போம்.

“தினசரி புத்தகங்களையும், நாளிதழ்களையும் படிப்பதற்காக பீகாரில் எனது அறை நண்பர் மணி பூஷன் என்பவர் என்னை ஒரு வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அது ஒரு சிறிய சந்தில் உள்ளது. பிறர் வீட்டிற்கு தினசரி சென்று எப்படிப் படிப்பது என்று கூச்சப்பட்டேன். மணிபூஷன் அது வீடல்ல கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அங்கு நிறைய செய்தித்தாள்கள், புத்தகங்கள் இருக்கும் யாரும் போய் படிக்கலாம் தடையில்லை என்றார்.”

இதன் மூலம் கம்யூனிசம் என்பது அனைவருக்கு மானது தேவையானவர்கள் தேவையானதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்ற புரிதலோடு அடுத்து வரும் வரிகளைக் காண்போம்.

ஒருமுறை கோடை நாளில் சாலையில் நடந்து கொண்டே இருந்தேன். தாகமெடுத்தது, வழியில் ஒரு வங்கியைப் பார்த்தேன். உள்ளே போய் பீப்பாயி லிருந்து தண்ணீர் எடுத்து குடித்தபொழுது, காவலாளி வந்து இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் என்று விரட்டினார். இதுதான் உலகமயம். பயனற்ற எவருக்கும் உதவாதே.

கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து அவர் முன் வைத்துள்ள விமர்சனத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவு என்பது, தனிநபர்களின் விருப்பு, வெறுப்பு காரணமாக நிகழ்வது வேதனை தருவதாக இருந்தது. கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியால் கட்சி பிளவு படுவது நாட்டுக்கே பெரும் இழப்பாகின்றது நாம் ஜனநாயகம் பற்றிப் பெரிதாகப் பேசினாலும். நாம் கட்சிக்குள் முடிவெடுக்கும் போது ஜனநாயக நெறிகளை மதிப்பதில்லை என்பது வேதனை தருகிறது.

மதவெறி பாசிசத்திற்கு எதிரான உரிமைக்குரல்

நாம் மனுவாத, பிராமணிய, சாதி, மத, பண் பாட்டு வேறுபாடுகளை அழிக்கவே பாடுபடு கின்றோம். அவர்களின் பண்பாடு பற்றிய விளக்கம் நம்மை ஒதுக்கியது. அவர்கள் ஹிட்லரின் பக்தர்கள். நாம் மார்க்சின் வழிநடப்பவர்கள். நாம் அம்பேத்காரை போற்றுகின்றோம். அவர்கள் கோல்வால்கரைத் துதிக்கின்றார்கள். அவர்கள் மத நல்லிணக்கத்தை விரும்பவில்லை. மத மோதலே அவர்கள் இருப்புக் காக முக்கியத் தேவை. அவர்கள் பிரிட்டிஷ் கைக் கூலிகளாக வாழ்ந்தவர்கள்.

இந்த நாடு எப்போதும் மேல் சாதியினருடை யதாக இருந்ததில்லை. இனி எப்போதும் அப்படி மாறாது. பட்டினியில் வாடும் ஏழைகள் பற்றிக் கவலைப்படாத நாடு எமதல்ல. எமது நாடு ஏழைகளின் நாடு. உழைப்பவரின் நாடு.

பாசிசம் வெல்லுமானால் இந்த நாட்டில் ஜன நாயகம் கொல்லப்படும். சுதந்திரம் ஊடகங்களின் வாயடைக்கப்படும். செய்தித்தாள்கள் சென்சார் செய்யப்பட்டே அச்சிடப்படும். அவசரக்கால தற்காலிக, கொடுமைகள் மீண்டும் நிகழ அனுமதிக்க மாட்டோம். மதவாதம், சாதிவாதம் மக்களைப் பிரிப்பன. அவற்றை வளரவிட மாட்டோம். நம் வேறுபாடுகளை விஞ்சி நாம் ஒன்றுபடுவதன் மூலமே நமது உரிமைகளை அரசியலமைப்பு சாசன உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

இதுவே தோழர். கன்னையாகுமார் இந்நூலின் மூலமாக மதவெறி பாசிசத்திற்கு எதிராக எழுப்பு கின்ற உரிமைக் குரல். அந்த உரிமைக் குரலை ஓங்கி ஒலித்து பாசிசத்தை வேரறுப்பது நமது கடமையாகும்.

இதுவே இந்நூல் நமக்கு கற்பிக்கும் பாடம்.

மொழி பெயர்ப்பாளருக்கு பாராட்டு

கன்னையாகுமார் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இந்த நூலினை ஈரோடு மருத்துவர் வெ. ஜீவானந்தம் அதே உணர்ச்சிப் பெருக்குடன் மொழி பெயர்த் துள்ளார். பல நூல்களை மொழிபெயர்த்துள்ள இவருக்கு இந்நூல் மேலும் பெருமை சேர்க்கிறது.

உன் பெயர் என்ன? கன்னையாகுமார் என்ற முதல்வரியில் தொடங்கி போலிகளின் முக மூடிகள் கிழித்தெறியப்படும் வரை, புதிய இந்தியா உருவாகும் வரை இக்குரல்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை யிலும் தொடர்ந்து ஒலிக்கும் என்ற வரிகளுடன் முடிகின்ற இரு நூலினை வாசிக்கின்ற பொழுது கன்னையாகுமார் நம் அருகிலிருந்து நம்முடன் உரையாடுவது போன்ற உணர்வினை ஏற்படுத்து கின்றது. ஆம் இதுதான் இருநூலின் மகத்துவம். இந்த நூலினை வெளியிட்ட என்.சி.பி.எச் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.

பீகாரிலிருந்து திகார் வரை - 

கன்னையா குமார்

தமிழில் : வெ.ஜீவானந்தம்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

விலை : 110/-