1870 ஏப்ரல் 22 ஆம் நாள் ரஷ்யாவில் விளாதிமிர் இலியிச் லெனின் பிறந்தார். 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி ரஷ்ய நாட்டுக்கு மிகவும் கலவரமான காலக்கட்டம். கசாக்கிய விவசாயிகளின் கிளர்ச்சி. நாடு முழுவதும் நரோத்னிக்குகள் எனப்படும் வெகுமக்களியப் புரட்சியாளர்களின் சிறிய, பெரிய எழுச்சிகள். நரோத் என்ற சொல்லுக்கு மக்கள் என்று பொருள். உழைப்பாளி விவசாய மக்களை இச்சொல் குறிப்பாக அறிமுகப்படுத்தும். முடியாட்சியை வீழ்த்தி விவசாயிகள் நில உரிமைகளைப் பெறவேண்டும் என்று மக்கள் முனைந்து நின்ற காலம் அது.

lenin 1991887ல் லெனினது அண்ணன் அலெக்சாண்டர் உல்யானவுக்கு 21 வயது. அன்றைய மிகச்சூடான ரஷ்ய அரசியலை அலெக்சாண்டர் காத்திரமாகப் பிரதிபலித்தார். பீட்டர்ஸ்பெர்க் அரசு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பயின்று கொண்டிருந்தவர். பல்கலைக் கல்வியோடு ‘நரோத்னய வோல்யா’ (மக்கள் விருப்பம்) என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

அண்ணன் உல்யானவும் அவரது தோழர்களும் ஆட்சியிலிருந்த ஸார் அலெக்சாண்டர் III என்பவரை கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்று கைது செய்யப்பட்டார்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாகக் கொலை செய்யப்பட்ட அலெக்சாண்டர் II குறித்த குற்றத்திற்காகவும் லெனினது சகோதரர் கைது செய்யப்பட்டார். அவரும் அவரது நண்பர்கள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். அண்ணனை இழந்த லெனின் அதிர்ச்சியில் உறைந்து போனார். விளாதிமிர் லெனின் இளமையில் சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி இது. அண்ணனிலிருந்து நான்கு ஆண்டுகள் வயதில் குறைந்தவர் லெனின்.

அக்காலத்தில் ரஷ்யா முழுவதிலும் நிகழ்ந்து கொண்டிருந்த ஆயுதம் தாங்கிய எழுச்சிகள் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தார் லெனின். அண்ணனும் நண்பர்களும் இத்தனை தீவிரமான ஆயுத எழுச்சியில் ஈடுபட்டது குறித்து தொடர்ச்சியான சிந்தனையில் ஆழ்ந்தார் லெனின். அண்ணனைப் பற்றி மட்டுமல்ல, ரஷ்யா முழுவதிலும் பரவிக் கிடந்த மக்கள் போராட்டங்களை முன்னிறுத்தி லெனின் சிந்தித்தார். தொழிற்சாலைச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றி லெனின் சிந்தித்தார். ரஷ்யாவின் நிலமற்ற ஏழை விவசாயிகள், அவர்களது விடுதலைக்கான வழி என எல்லாத் திசைகளை நோக்கியும் லெனினது சிந்தனை பரவி ஓடியது.

மார்க்சும் ஏங்கெல்சும் லெனினது எண்ண ஓட்டங்களில் நீங்காத இடம் பெற்றனர். ரோசா லக்சம்பர்கின் வெகுமக்கள் திரள், வெகுமக்கள் திரளின் போராட்டம், வெகுமக்கள் திரளின் வன்மையான போராட்டம் என்ற கருத்து அவருக்கு வழிகாட்டியது. தனிமனித பயங்கரவாதமல்ல, மக்கள் திரளின் ஒன்றுபட்ட போராட்டம் என்ற வியூகம் அவர் கண் முன் தோன்றியது. ரஷ்ய சமூக சனநாயகத் தொழிலாளர் (RSDLP) கட்சியை வலுப்படுத்துவது ஒன்றே சரியான வழி என்பதைப் புரிந்து கொண்டார். இதுவே லெனின் தேர்ந்தெடுத்த ரஷ்யப் புரட்சிக்கான பாதை. இந்தத் தருணத்தில் தான், தனிமனித பயங்கரவாதம் என்ற நிலையிலிருந்து லெனின் வெகுமக்கள் அரசியல் என்ற போராட்ட உத்தியை எட்டுகிறார்.

இப்போது புரிகிறது, தாரிக் அலியின் லெனின் பற்றிய நூலின் முதல் இயல் ‘ஏன் பயங்கரவாதம்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளது. அது வெறுமனே லெனினது அண்ணன் உல்யானவ் பற்றியது மட்டுமல்ல. அது 19 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளைப் பற்றியது மட்டுமல்ல. அது இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் உலக அரசியலைப் பற்றியது. பெருந்தொற்றும், சோவியத் தலைமையை இழந்ததால் விளைந்த நெருக்கடிகளும் உலக மக்களைச் சிக்கல்களுக்குள் ஆழத்தும் போது நமக்குத் தேவையான அரசியலைச் சென்று சேர்வதற்கான சூசகமான வழிகளை தாரிக் அலி அவரது நூலின் முதல் இயலில் கட்டியெழுப்புகிறார். அன்று அண்ணனை இழந்த லெனினுக்குத் தோன்றிய மாற்று வழி, அது மக்கள் திரளின் போராட்ட வழி.

லெனின் அவரது ‘ஏப்பிரல் மாதத்து ஆய்வு முடிவுகள்’ என்ற சிந்தனைக் கொத்தில் “சோசலிசத்திற்கான போராட்டமும் சனநாயகத்திற்கான போராட்டமும்” என்ற ஒரு வியூகத்தை வகுத்தார். அதுவே ரஷ்யத் தொழிலாளிகளையும் விவசாயிகளையும் அக்டோபர் புரட்சியில் கொண்டு சேர்த்தது.

இன்று சதுக்கங்களில் திரளும் உழைப்பாளிகளும், “நாங்கள் 99 சதவீதம்” என குரல் கொடுக்கும் இளைஞர்களும், பெண்களின் பாதுகாப்புக்கும் சம உரிமைகளுக்கும் உறுதியளியுங்கள்! எனக் கூடி வரும் மகளிரும் ஒன்றுபடுங்கள் எனக் கூறும் போராட்டத் திரட்சி கூடி வருகிறது!

கறுப்பின மக்களின் உயிர்களும் அபூர்வமானவை தான் என்ற உணர்வு கூடி வருகிறது!

ஒற்றைப் பாலம் ஒன்றின் நடுவில் இன்றைய இந்திய ஸார் மன்னரை இருபுறமும் மறித்து மடக்கும் விவசாயிகளின் போர்க்குணத்தைக் கண்டு வருகிறோம்! கானகங்களை அழித்து கனிமங்களைக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்களை விரட்டியடிப்போம் என்ற குரல் எங்கும் ஒலித்து வருகிறது! உலகமெங்கும் பல நாடுகளில் நெருக்கடிகளின் வெடிப்புகளைக் கேட்க முடிகிறது. ஒன்றுபடுவோம்! போராடுவோம்! என்ற குரலின் எதிரொலிகளை எங்கும் கேட்க முடிகிறது!

- ந.முத்துமோகன், ஓய்வுபெற்ற பேராசிரியர், மார்க்சிய ஆய்வாளர்.

Pin It