பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் திருக்குறுங்குடி சாலையில் (பழைய பெயர் ராணி மங்கம்மாள் சாலை) இருக்கும் தனியார் தோட்டம் ஒன்றின் உள்பகுதியில் இருக்கும் குகையில் உள்ள வட்டெழுத்து கல்வெட்டைத் தேடி நானும் செந்தீ நடராசனும் சென்றபோது வீணாதி வீணனைப் பற்றிய புதிய செய்திகளைச் சேகரித்தேன்... வீணாதி வீணனின் சிற்பத்தைத் தற்செயலாகப் பார்த்தபோதுதான் மேலும் செய்திகளைத் தேட வேண்டும் என்ற ஆசை வந்தது
வள்ளியூர் சொக்கநாதர் கோவில் தெருவில் உள்ள அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு உட்பட்ட சொக்கநாதர் கோவில் வளாகத்தில் 30களின் ஆரம்பத்தில் வீணாதி வீணனுக்கு வழிபாடு இருந்திருக்கிறது. 1933 இல் இந்தக் கோவில் புனரமைக்கப்பட்டபோது ஏதோ காரணத்தால் வீணாதி வீணனின் சிற்பத்தைக் கோவில் கிணற்றில் யாரோ போட்டு விட்டாராம். எண்பதுகளின் இறுதியில் கிணறு தூர் வாங்கப்பட்டபோது இந்தச் சிலை கிடைத்தது. அக்கோவிலில் துணைத் தெய்வமாக வீணாதி வீணன் இருக்க வேண்டாம் என்று முடிவு கட்டியதால் இந்த சிற்பத்தைக் கோவில் வளாகத்தில் ஒதுக்குப்புறமாக வைத்திருக்கின்றார்கள்.வீணாதி வீணனின் இந்தச் சிற்பம் 70 சென்டிமீட்டர் உயரமுடையது. நின்ற கோலம், முகத்தில் முறுக்கிய மீசை, மார்பில் முத்துச்சரம்; வீரனுக்குரிய சன்ன வீரம், இடுப்பில் குத்துவாள், கால் சட்டை; காலில் கழல்; இந்தச் சிற்பத்தை 2010 இல் நான் பார்த்தபோது சிதைந்து போய் இருந்தது. வீணாதி வீணனின் ஜாதி அடையாளம் அவனைப் பற்றிய கதைகள் எல்லாம் அவனது வழிபாட்டிற்கு எதிர்ப்பு என்று கூறினார் ஒருவர்.
வீணாதி வீணன் நாட்டார் தெய்வமாக வேறு இடங்களில் வழிபடப்படுகிறான். அவனுக்கு மரியாதை இருந்தது என்பதை 90களில் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்தேன். பொதுவாக ஒரு நாட்டார் தெய்வம் கருவறையிலோ கோயில் வளாகத்திலோ சிலையாக நின்று கோவில் கொண்டு வாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ வழிபாடு பெற்றிருந்தால் அதைப் பற்றிய கதைகளும் செய்திகளும் தொடர்ந்து வரும். சில தெய்வங்களுக்கு விழாக் காலங்களில் (அது ஓர் ஆண்டோ மூன்று ஆண்டுகளோ 12 ஆண்டுகளோ இருக்கலாம்) பூடம் போட்டு வழிபாடு செய்வதாக இருந்தால் அது பற்றிய முழுமையான வரலாற்றையோ சடங்கு முறைகளையோ தோற்றச் செய்திகளையோ அறிவது சிரமமான காரியம். அப்படி வழிபாடு இருந்தால் அந்தத் தெய்வம் வாழும். வீணாதி வீணனின் வழிபாடு பரவலாக இல்லாததால் அவனது கதை அறியப்படாமல் போயிற்று.
தென் மாவட்டங்களில் குலசேகரத் தம்பிரான் கோவில்களில் விழாக் காலங்களில் வீணாதி வீணன் துணை தெய்வமாக வழிபாடு பெறுகிறான். வீணாதி வீணன் கதைப் பாடலை முதலில் பதிப்பித்த (1967) நா. வானமாமலை இவரது வழிபாடு பற்றி விரிவாக விவரிக்கவில்லை. அவரே மதுரை பல்கலைக்கழகம் வழி ஐவர் ராசாக்கள் கதையை வெளியிட்டபோது (1974) வீணாதி வீணன் கதையை பின் இணைப்பாக சேர்த்திருக்கிறார். இந்த நூலில் “வீணாதி வீரன் கதை வள்ளியூர் பகுதியில் பரவியுள்ளது. இது உண்மை நிகழ்ச்சி என்பதை புலப்படுத்த சில சான்றுகள் அகப்பட்டு உள்ளன. அதனால் இக்கதைப் பாடல் ஐவர் ராசாக்கள் கதைப் பிரதிகளில் காணப்படவில்லை. வள்ளியூரில் கிடைத்த ஐவர் ராசா கதையில் மட்டும்தான் வீணாதி வீணன் கதை காணப்படுகிறது” என்கிறார்.
ஐவர் ராசாக்கள் கதையை விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் வானமாமலை வீணாதி வீணன் கதை மக்கள் கதையுடன் தொடர்புடையது என்ற முடிவுடன் தான் இதைப் பற்றிய கருத்துக்களை முன் வைக்கிறார். குலசேகரத் தம்பிரானின், காலம் கிபி 16ஆம் நூற்றாண்டு என்று நா.வா ஊகிக்கிறார். அப்படியானால் வீணாதி வீணனும் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கொள்ளலாம்.
ஆனந்த விகடனின் துணை இதழான சக்தி விகடனில் ஜனங்களின் சாமிகளின் கதை என்னும் தலைப்பில் சில கதைகளைத் தொடராக எழுதிய போது (2017) வீணாதி வீணன் கதை பற்றிய செய்திகளை மீண்டும் சேகரித்தேன். முக்கியமாக கன்னியாகுமரி பழைய திருநெல்வேலி மாவட்டங்களில் குலசேகர பாண்டியனுக்கு வழிபாடு உள்ளது என்பது தெரிந்தது. இந்தக் கோவில்களில் வீணாதி வீணன் துணைத் தெய்வமாக வழிபடப்படுகிறான் என்பதையும் அறிந்தேன்.
நாகர்கோவிலில் கலைநகர் பகுதியில் குலசேகரத் தம்பிரான் கோவில் விழாவில் இப்போதும் வீணாதி வீணன் கதையை வில்லிசை நிகழ்வில் பாடுகிறார்கள் (நான் வில்லிசைக் கலைஞர் தங்கமணியின், நிகழ்ச்சியைப் பதிவு செய்தேன்). கோவில் விழாவில் வீணனுக்கு வழிபாடு நடக்கிறது. 50களில் இந்த தெய்வத்திற்காக சாமி ஆடவும் செய்தார்கள். அப்போது கொடுக்கல் வாங்கல், நிலவரி கட்டுதல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வீணாதி வீணனிடம் மக்கள் நேர்ச்சையும் செய்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், மேலாங்கோடு ஊர் இசக்கியம்மன் கோவிலில் குலசேகரத் தம்பிரானுக்கும் வடிவீச்சு அம்மனுக்கும் வழிபாடு உண்டு. கோவில் வளாகத்தில் வீணாதி வீணனுக்கு விழாக் காலங்களில் பூடம் போட்டு வழிபாடு செய்த வழக்கம் இருந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டாரம், அச்சன்குளம், கட்டிமான்கோடு, மேலாங்கோடு, வெள்ளமடம் என சில இடங்களில் குலசேகரத் தம்பிரானுக்கு கோவில் உண்டு. இந்த ஊர் கோவில்களில் வீணாதி வீணன் துணைதெய்வமாக இருக்கின்றான். இங்கு விழாக் காலங்களில் ஐவர் ராசாக்கள் கதை பாடப்படும் வழக்கமும் உண்டு.
குலசேகர பாண்டியனுக்கும் குமரி மாவட்டப், பகுதிக்கும் உள்ள தொடர்புக்குரிய காரணத்தை எண்பதுகளில் பொத்தையடி (மருந்துவாழ் மலை அடிவாரம்,) பி.ஆர்.நாடார் சொன்னார். அவர், குலசேகர பாண்டியனின் மனைவி நாஞ்சில் நாட்டை சார்ந்தவர். பெயர் உலகம் முழுவதுடையாள் இவள் நாடார் சமூகத்தினர் என்பது குறித்த வாய்மொழிக் கதைகள் உண்டு என்று சொன்னார். இந்தக் காரணத்தை ஐவர் ராசாக்கள் கதைப் பதிப்பில் வானமாமலையும் சொல்லுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகர தம்பிரானுக்கு கோவில் உள்ள இடங்களில் இந்தச் செய்தி சொல்லப்படவில்லை. ஆனால் குலசேகரப் பாண்டியனின் வம்சாவளி வாரிசுகள் நாங்கள் என்று இவனை வழிபடுகின்றவர்கள் சொல்லுகிறார்கள். வீணாதி வீணனுக்கும் இங்கு வழிபாடு இருப்பதன் காரணமே குலசேகரனுடன் கொண்டிருந்த நெருக்கம் என்று சொல்லலாம்.
ஐவர் ராசாக்கள் கதை தொடர்பாக 15க்கு மேற்பட்ட கதைப் பாடல்கள் உள்ளன. இவற்றில் வாய்மொழி வடிவில் ஒன்றும், ஏட்டு வடிவில் ஏழும் கையெழுத்து வடிவில் இரண்டும் பிற அச்சு வடிவிலும் உள்ளன. இக்கதைகளின் பெயர்கள் பின்வருமாறு;
ஐவர் ராசாக்கள் கதை (1974), நா.வானமாமலை பதிப்பு
வீணாகிவீணன் கதை (1964)"
கன்னடியன் போர் (1987) நடராசன்
முத்துப்பிள்ளை கதை (1962)
மன்னன் மதிப்பெண் கதை (2017) ராம்
(மீனவனுக்கு ஒரு கோயில்)
இடைச்சி செல்லி கதை (ஏடு)
குலசேகர தம்புரான் கதை (ஏடு)
அஞ்சு முடி மன்னர் கதைலி (ஏடு)
வடுகச்சி ஏசல் (ஏடு)
உலகம் முழுவதுடையாள் கதை (ஏடு)
பொன்னுருவி தவநிலை (ஏடு)
மாரியம்மன் கதை ஏடு
வடுகச்சி அம்மன் கதை (கை எ பி)
மோம்புரி அம்மன் கதை (கை. எ பி)
வெட்டும் பெருமாள் கதை (வாய்மொழி)
குலசேகர பாண்டியன் மதுரையில் ஆட்சி செய்த போது வீணாதி வீணன் வள்ளியூர் கோட்டையைத் தன் அதிகாரத்தில் வைத்திருந்தான். பின்னர் மன்னரின் உத்திரவால் அதே கோட்டையில் மந்திரி ஆகிவிட்டான். இதனால்தான் ஐவர் ராசாக்கள் கதையின் ஒரு பகுதியாக வீணாதி வீணன் கதையைக் கொள்ளுகிறார் வானவ மலை.
பேராசிரியர் வானமாமலை பதிப்பித்த வீணாதி வீணன் கதை நூலிலும் (1967) ஐவர் ராசாக்கள் கதை நூலின் பின்னிணைப்பிலும் (1974) உள்ள வீணாதி வீணன் கதை பாடலில் 906 வரிகள் உள்ளன நாகர்கோவில் கலைநகர் குலசேகரத்தம்புரான் கோவிலில் உள்ள கையெழுத்துப் படியில் 1013 வரிகள் உள்ளன.
வானமாமலை பதிப்பில் உள்ள வீணாதி வீணன் கதைப்பாடல் பிற கதைப்பாடல்களைப் போலவே கணபதி காப்புடன் தொடங்குகிறது. இந்த நூலின் ஆசிரியர் பெயர் இதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஆசிரியர் தன் குருவாக நாஞ்சில் நாட்டு புதுவையூர் சுப்பிரமணியன் மகாராசன் பெயரை குறிப்பிடுகிறார். இதனால் இந்தக் கதைப் பாடல் உருவாக்கத்திற்கும் தென் திருவிதாங்கூருக்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் வில்லிசை புலவர் சுயம்புராசன் என்பவரின் கையில் உள்ள ஏட்டுப்பிரதியில் இது 1810 ல் பதிக்கப்பட்ட குறிப்பு உள்ளது. இதனால் இப்பகுதியில் மூலஏடுகள் வேறு இப்பகுதியில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கலாம்.
வானமலையின் ஐவர் ராசாக்கள் கதைப் பதிப்பிலும் நாஞ்சில் நாட்டில் உள்ள குலசேகரத் தம்பிரான் கதையின் கையெழுத்து பிரதிகளிலும் மூன்று முக நாச்சியார் என்னும் பெண் தெய்வம் குறிப்பிடப்படுகிறாள். இவள் மூன்று முகம் கொண்டாள் என்று பரவலாக அறியப்பட்ட தெய்வமே. இவளுக்கு தென்பாண்டி பகுதியில் வழிபாடு உண்டு. நாஞ்சில் நாட்டு தோவாளை வட்டம் தாழக்குடி ஊரில் மோம்புரி அம்மனுக்கு கோவில் உள்ளது. இதற்கு என்று ஒரு கதைப்பாடலும் உள்ளது. இப்பாடல் கையெழுத்து வடிவில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. இக் கோவிலின் கொடைவிழாவில் இக்கதை பாடப்படுகிறது.
தாழக்குடியில் மோம்புரி அம்மன் கோவில் உருவானதற்கு வாய்மொழியாக ஒரு கதை வழங்குகிறது. இந்த ஊரில் வாழ்ந்த தாணு பிள்ளை கரையாளர் என்பவர் 100 பசு மாடுகளை வளர்த்து வந்தார். அந்த பசுக்கள் தாடக மலைப் பகுதியிலே இருந்தன.
ஒருமுறை வள்ளியூரில் இருந்த மறவர்கள் கரையாளரின் பசுக்களை திருடிக் கொண்டு சென்று விட்டார்கள். இதை அறிந்த தாணுபிள்ளை கரையாளர் உறவினர்களோடு பசுக்கள் இருக்கும் இடத்தை அடைந்தார். அந்தப் பசுக்களை திருப்பிக் கொண்டு வந்தார். அப்போது வள்ளியூர் திருடர்கள் ஆயுதங்களோடு தாணு பிள்ளை கரையாளரின் ஆட்களை எதிர்த்தனர். இந்த சமயத்தில் மோம்புரிஅம்மன் கோவில் வாசல் திறந்தது. தாணுபிள்ளை அதன் உள்ளே தன் உறவினர்கள் பசுக்களுடன் நுழைந்துவிட்டார். கோவில் கதவு மூடிவிட்டது. மறவர்களுக்கு கண்களைத் திறக்க முடியவில்லை. தங்கள் வீட்டுக்குச் செல்வதற்கு கூட முடியாத நிலை.
அடுத்த நாள் காலை அம்மனின் கோவில் கதவு திறந்தது. தாணுபிள்ளைக் கரையாளர் தன் உறவினர்களுடன் பசுக்களை பற்றிக் கொண்டு தாழக்குடி வந்து விட்டார் அப்போது மூன்று முகம் உடையாள் தன் பரிவாரங்களுடன் தாழக்குடிக்கு வந்து விட்டாள். அவளுடன் குலசேகர தம்புரான் வேர்வை புத்திரன், பூதத்தான், பத்திரகாளி, வீணாதி வீணன் ஆகிய தெய்வங்களும் வந்தன. எண்ணிறந்த பேய் படையும் 21 தெய்வங்களும் கூடவே வந்தன. இவர்களுக்கெல்லாம் தனி கோவில் எடுத்தார் பிள்ளை.
மோம்புரி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டு மலையாள ஆண்டு 511 மாசி 9ஆம் தேதி பணி நடந்ததாகக் குறிப்பிடுகிறது. இதன்படி கிபி 1336 ஆண்டு ஆகிறது. இந்த கோவிலைக் கட்டியவர்கள் சிலரின் பெயர்களும் அர்த்தமண்டபச் சுவர் கல்வெட்டில் உள்ளது. மோம்புரி அம்மன் வில்லுப்பாட்டின் பின்னிணைப்பாக வீணாதி வீணன் கதை உள்ளது. இந்தக் கதையின் காப்பு பாடல்
நாணா வண்ணம் தொழில் பூண்டு
நகையே புரிந்து வடியுண்டு
வாழ்நாள் மயங்கி தள்ளாடி
மறையோர் தெருவதிலே இலங்குண்டு
கோணா முதல் கார் எடுக்க ஒன்னாக பின்
குடத்துக்காசு உடனே எடுப்பித்த
வீணாதி வீரன் கதை பாட
வேழமுகத்தவன் காப்பு தாமே
தாழக்குடி மோம்புரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் விழாவில் வீணாதி வீணன் கதையை 50களில் கூட பாடினார்கள். இங்கு வீணாதி வீணன் கதை ஏடு தனியாகவும் இருந்தது. இங்கு உள்ள வீணாதி வீணன் கதைப்பாடலில் திருவிதாங்கூர் அரசியான கவுரி லட்சுமி பாய் (1810 - 1815) திருவிதாங்கூரின் கர்னல் மன்றோ (1810 - 1819) ஆகிய இருவரும் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வில்லுப்பாட்டு 19 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்திருக்கிறது என்றும் வீணாதி வீணன் கதையும் இதே காலகட்டத்தில் பாடப்பட்டு இருக்கிறது என்றும் தெரிகிறது.
மோம்புரி அம்மன் கதைப் பாடலின் ஏட்டுப் பிரதியை 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கண்டெடுத்திருக்கிறார். இந்த ஏட்டின் அடிப்படையில் Tradition from Valliyur என்ற கட்டுரையை Kerala Society papers இதழில் (series 6 1930 P316 - 318) எழுதி இருக்கிறார். இந்தக் கட்டுரையில் ஐவர் ராசாக்கள் கதையைச் சுருக்கமாக தருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ஊருக்கு வட மேற்கு 12 கல் தொலைவிலுள்ள மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் புதுமையில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை குலசேகர பாண்டியன் வழிபட்டான் என்று கூறுகின்றனர் இந்தக் கோவில் தொடர்பான வில்லுப்பாட்டில் பின்னனிணைப்பாக மூன்று முகம் கொண்டாள் கதை வருகிறது. இது ஐவர் ராசாக்கள் கதையின் சுருக்கம் தான். இந்தச் சுருக்கத்தில் வீணாதி வீணன் கதை பேசப்படுகிறது.
மூன்று முகம் கொண்ட அம்மன் வழிபடப்படும் இடங்களில் குலசேகரத் தம்புரான் வடுகச்சி அம்மன் வீணாதி வீணன் ஆகியோர் துணை தெய்வமாக உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், கோட்டையடி, பாம்பன் குளம், நம்பி பத்து, வடலிவிளை ஆகிய இடங்களில் மூன்று முகம் கொண்டாளுக்கு கோவில் உள்ளது.
இதே மாவட்டம் களக்காடு சப்த கன்னியர் கோவில் வடுகச்சி மதில், சீனி முத்தம்மன் (வடுகச்சி அம்மன்) குதிரை மொழி, தேரி குடியிருப்பு, கருக்குவேல் அய்யனார் கோவில், தாண்டவன் காடு ஆதிநாராயண சுவாமி கோவில், ஞானியார் குடியிருப்பு ஸ்ரீ பரமசிவன் கோவில், சிறு நாடார் குடியிருப்பு, பெரிய வரம் என்னும் கிராமங்களிலும் உள்ள நாட்டார் கோவில்களிலும் பாளையங் கோட்டை ஜெயந்தி மங்கலம் கிராமத்திலும் குலசேகர ராஜாவுக்கு தனி கோவில் உள்ளது. இந்தக் கோவில்கள் சிலவற்றில் வீணாதி வீணனுக்கு வழிபாடு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தண்டப்பத்து, எள்ளு விளை என சில கிராமங்களிலும் குலசேகரனுக்கு வழிபாடு உள்ளது. இங்கும் வீணாதி வீணன் துணை தெய்வமாக இருக்கிறான்.
பரம்பரையாக வசதியுடன் வாழ்ந்த வீணாதி வீணன் பெற்றோரை இழந்தபின் உறவினரால் துரத்தப்பட்டான். வள்ளியூருக்கு பிழைக்கச் சென்றான். அங்கே உழைத்து வாழ முடியாத நிலை ஏற்பட்டது. பின்பு மக்களை பயமுறுத்தி ஏமாத்தி பொருள் சம்பாதித்தான். மதுரை பாண்டியன் இதை அறிந்து வீணாதி வீணனை விசாரித்தான். உண்மையை அறிந்த பாண்டியன் வீணாதி வீணனை வள்ளியூரின் மந்திரி ஆக்கினான். பேராசிரியர் வானமாமலை கணக்குப் படி குலசேகரன் காலமே (கி.பி 16 ஆம் நூற்) வீணாதி வீணனின் காலம்.
ஐவர் ராசாக்கள் கதையில் வரும் குலசேகரன் பாண்டிய மரபினன். இவரது மந்திரியாக இருந்த வீணாதி வீணனின் இயற்பெயர் தெரியாது. இவனுடைய கதை குலசேகரனின் கதையுடன் தொடர்புடையது என்பதற்கு சில காரணங்களைச் சொல்ல முடியும்
குலசேகரன் நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் கோவில்களில் பெரும்பாலும் வீணாதி வீணன் துணை தெய்வமாக இருக்கிறான். குலசேகரன் தொடர்பான வில்லிசைப் பாடல்கள் சிலவற்றின் பின்னிணைப்பிலும் குலசேகரன் வழிபட்ட மூன்று முகமுடையாள் கதைப் பாடலின் பின்னிணைப்பிலும் வீணாதி வீணன் கதை உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி ஊர் மோம்புரி அம்மன் கோவில் வில்லுப் பாட்டில் வீணாதி வீணன் கதை பாடப்படுகிறது. இந்தக் கதையில் ஐவர் ராசாக்களின் கதையும் சுருக்கமாக சொல்லப்படுகிறது. இக்கதையில் வீணாதி வீணன் தெய்வமாகவே குறிப்பிடப்படுகிறான். வள்ளியூர் கோட்டையடி பகுதியிலும் சுற்று வட்டார இடங்களிலும் வீணாதி வீணனைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இவை குலசேகர பாண்டியனுடன் தொடர்புடையன.
வீணாதி வீணன் கதைப்பாடலின் படி அவன் தேவேந்திரகுல வேளாளரின் உள் பிரிவினரான கங்கை குல வேளாளர் வம்சத்தில் வந்தவன். இவனது சொந்த ஊர் பணகுடியின் அருகே உள்ள வேப்பலாம் குளம் கதைப் பாடல் இந்த ஊரை வேம்பனூர் என்கிறது. இந்த ஊரில் இப்போதும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் வாழ்கின்றனர். இவர்களிடம் வீணாதி வீணனைப் பற்றிய செய்திகளை எண்பதுகளிலும் கேட்க முடிந்தது. நான் சேகரித்த இன்னொரு தகவலின் படி வீணாதி வீணன் பாண்டி நாட்டு வாணாதிராயன் பரம்பரையைச் சார்ந்தவன்.
வீணாதி வீரன் வள்ளியூரில் சொக்கநாதர் கோவில் தெருவில் உள்ள சொக்கநாதர் கோயிலையும் இதே ஊரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெய்வ பாண்டிய சாமி கோவிலையும் கட்டினான் என்று ஒரு செய்தி உண்டு. இந்தக் கோவில்களை இவனே பராமரித்தான் என்றும் சொல்லுகின்றனர். இச்செய்தியை இப்போதும் கேட்க முடியும்.
வள்ளியூர் சொக்கநாதர் கோவில் இப்போது அறநிலைய பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ளது. இங்கே சொக்கநாதர்க்கும் மீனாட்சிக்கும் தனித்தனியே சன்னதி உள்ளது. சொக்கநாதர் கோவில் கருவறை அர்த்தமண்டபம் முகமண்டபம் என அமைந்தது. மீனாட்சி கோவிலும் இது போன்ற அமைப்புடையது. மீனாட்சி கோவில் அர்த்தமண்டபம் முன்பு உள்ள மண்டபத்தில் சில சிற்பங்கள் உள்ளன.
இந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டின் படி இது பன்னிரண்டாம் நூற்றாண்டினது. “அரண்மனைத் தெருவிலும் அதிகாரிகள் வாழ்ந்த தெருவிலும் செல்கின்ற சாதாரண மக்கள் இரண்டு கைகளையும் வீசிக்கொண்டே நடந்தால் அவர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டதாம். இந்த அபராதத் தொகை கைவீசு பணம் எனப்பட்டது. அந்தத் தொகையால் இந்த கோவில் பராமரிக்கப்பட்டது” என்று செய்தி வழங்குகிறது.
வள்ளியூரில் உள்ள தெய்வபாண்டியன் கோவிலில் சிவன் அம்மன் பூதத்தானுக்கு தனி கருவறை உள்ளது. இங்கே மகிஷாசுரவதனி உட்பட சில பரிவார தெய்வங்கள் உள்ளன. உண்மையில் இந்தக்கோவிலையே வீணாதி வீரன் கட்டினான் என்று சொல்லுகின்றனர். இக்கோவிலில் உள்ள பாம்பு புற்றருகே முனிவர் ஒருவர் குடியிருந்ததாகவும் அவரே வீணாதி வீணனின் குரு என்றும் வழங்கும் செய்தியை எண்பதுகளில் கூட கேட்டேன்.
வீணாதி வீணன் இக்கோவிலுக்கு தினமும் வந்து வழிபடுவது வழக்கம் என்றும் இங்கே அவனது சிற்பம் இருந்தது என்றும் கூறுகின்றனர். இப்போது இந்தக் கோவில் ஸ்ரீ வத்ஸ கோத்திர பிராமணர்களின் நிர்வாகத்தில் உள்ளது. இவர்கள் 140 குடும்பத்தினர் என்றும் வெளியூரில் வாழ்கின்றனர் என்றும் சொல்லுகின்றனர்.
வீணாதி வீணனின் கதைப்பாடலின் படி பாண்டியன் அவனைப் பிடித்து விசாரித்த போது வீணாதி வீணன் தன் சொத்துக்களை அரசரிடம் கொடுத்து விடுவதாகவும் தனக்கு தண்டனை தரும்படி கேட்டுக் கொண்டதாகவும் அரசன் வீணாதி வீணனை மந்திரியாக ஆக்கியதாகவும் ஆன செய்திகள் உள்ளன. இவரைப் பற்றிய வாய்மொழிச் செய்திகள் இவனை நல்ல நிர்வாகியாக நேர்மையான மந்திரியாக வாழ்ந்தவன் என்று கூறுகின்றன.
நாஞ்சில் நாட்டு ராஜாக்கமங்கலம் சுயம்பு ராஜன் கையில் இருந்த வீணாதி வீணன் கதைப் பாடல் வானமாமலை பதிப்பில் இருந்து சற்று வேறுபட்டது. சுயம்பு ராஜன் ஏட்டில் பாண்டியனிடம் வீணாதி வீணன் தான் ஏன் மக்களை ஏமாற்றினேன் என்று கூறும் பகுதி விரிவாக வருகிறது. அதில் உண்மையாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களை அரசு அதிகாரிகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவேதான் ஒருவன் ஏமாற்றுக்காரனாக மாறுகிறான் என்ற செய்தி வெளிப்படையாகவே பேசப்படுகிறது.
வீணாதி வீணன் கதைப் பாடல் கூறும் கதை பின்வருமாறு.
வேம்பனூர் என்ற ஊரில் வேளாளர் ஜாதியில் அத்தி குட்டி என்ற செல்வந்தர் இருந்தார் அவரது மனைவி பூமாலை இவர்கள் தவமிருந்து ஒரு ஆண் குழந்தை பெற்றனர். சிறுவயதில் பெற்றோரை இழந்தான். உறவினர்களால் வளர்க்கப்பட்டான். பெரியவன் ஆனதும் தந்தையின் எல்லா சொத்துக்கும் உரிமை கொண்டாடினான். இதனால் அவனது உறவினர்கள் அவனை ஊரை விட்டு விரட்டி விட்டார்கள்.
இவன் சொந்த ஊரிலிருந்து வள்ளியூருக்கு வந்தான். வழியில் பசிக்காக யாசகம் பெற்று நாளைக் கடத்தினான். வள்ளியூரில் ஆண்டியை போல் அலைந்தான். அவனுக்கு பிச்சை எடுக்க விருப்பமில்லை. சலவைத் தொழிலாளி ஒருவரிடம் "ஐயா நான் பட்டினி கிடக்கிறேன் உன் ஜாதிக்கு நான் மாறி விடுகிறேன் வேலை கொடுப்பாயா" என்று கேட்டான். அவன் "இளைஞனே நீ சமர்த்தனாய் உயர்ந்த நிலைக்கு நீ வருவாய். உன்னை என் ஜாதியில் சேர்த்துக் கொண்டால் எனக்கு பழி வந்துவிடும்” என்று சொல்லி அவனைத் திருப்பிவிட்டான்.
அவன் வள்ளியூர் வீதி வழி போனான். பசி வாட்டியது. வேறு வழி இல்லை. பிச்சை கேட்டான். ஆனால் மக்களோ அவனை ஓட ஓட விரட்டினார்கள். தடியனே போ வேலை செய் என்றார்கள். ஒரு பெண், வீணாதி வீணனே என்று சொல்லி அவனைப் பரிகசித்தாள். வீணனுக்கு புத்தி உரைத்தது. காட்டுக்குச் சென்று காய்கறிகள் பறித்து விற்றுப் பிழைக்கலாம் என்ற யோசனை வந்தது.
வீணாதி வீணன் காட்டுக்குச் சென்றான். பசுமையான கீரைகளையும் பழங்களையும் பறித்து தின்றான். தண்ணீர் குடித்தான். கொஞ்சம் தெம்பு வந்தது. முருங்கைக்காய், சுண்டைக்காய் என சில காய் கறிகளைப் பறித்துக் கொண்டான். வள்ளியூர் கோட்டை வாசலுக்கு வந்தான். அங்கு நின்ற காவலர்கள் அவனிடம் இரண்டு முருங்கைக் காய்களை எடுத்துக் கொண்டனர். அவன் வீதி வழி காய்கறிகளை கூவி விற்ற போது ஆயம் வசூலிப்பவன் வந்தான். வீணனிடம் கேட்காமலே ஆயத்திற்காக என்று சொல்லிவிட்டு காய்களை எடுத்துக் கொண்டான்.
அவன் அடுத்த தெருவிற்கு வந்தான். காய்கறிகள் வேண்டுமா எனக் கேட்டான். ஒரு பெண் வந்தாள். அவனிடம் கேட்காமலே நிறைய காய்கறிகளை எடுத்துக் கொண்டாள். அவன் அவளிடம் அம்மா உன் விருப்பப்படி காசு கொடு என்றான். அவள் நான் இந்த நகரத்தின் தலைவனின் வீட்டு சமையல்காரி என்றாள். அவனோ யாராய் இருந்தாலும் சரி காசு தந்து விட்டு போ, எனக்கு வயிறு இருக்கிறது என்றான். அவ்வளவுதான் அவள் “ஐயோ இவன் என் மார்பை பிடித்து விட்டானே” என்று சப்தமிட்டாள்.
அந்தப் பெண்ணின் குரல் கேட்டு ஓடி வந்த சிலர் அவனை அடித்தார்கள். ஓடு இங்கிருந்து என்று எச்சரித்தார்கள். அவனுக்கு மீண்டும் பிச்சை எடுக்க விருப்பமில்லை. காட்டிலே சென்று விறகை வெட்டி விற்றுப் பிழைக்கலாம் என்று நினைத்தான். மலைக்குச் சென்றான். காட்டுப் பழங்களையும் காய்களையும் தின்று பசி ஆறினான். இற்று பட்டுப் போன விறகுகளை சேகரித்து வள்ளியூர் கோட்டைக்கு சுமந்து வந்தான்.
கோட்டையின் முன்னே நின்ற கோட்டை காவலன் “காட்டு விறகு உனக்கா சொந்தம் விறகை விற்றால் கொஞ்சம் தொகை எனக்குத் தர வேண்டும்” என்றான். இவனோ விறகு விற்கவே இல்லையே எப்படி தர முடியும் என்று கேட்டான். காவலன் சரி அப்படியானால் கொஞ்சம் விறகை இங்கே போடு என்றான். அவன் காவலனுக்கு கொஞ்சம் விறகைச் கொடுத்தான்.
வீணாதி வீணன் வீதி வழியே விறகை சுமந்து கொண்டு வந்தான். விறகு வேண்டுமா என்று கூவினான். நடுத்தரப் பெண் ஒருத்தி விறகுக்காரா என்னுடன் வா என்றாள். அவன் போனான். விறகு முழுவதையும் என் பின் கட்டிலே போடு என்றாள். போட்டான். அவளிடம் வந்தான். அம்மா விறகுக்கு காசு என்றான். அவனோ நான் இந்த நகரத்து நீதிபதியின் மனைவி என்னிடம் காசு கேட்கிறாயா என்றாள். அவளோ எனக்குப் பசி அம்மா. அதனால் கேட்கிறேன் என்றான். அவள் சப்தமிட்டு ஊரைக் கூட்டினாள். இவன் என்னை அவமானப்படுத்திப் பேசுகிறான் என்றாள். பொதுமக்கள் அவனைப் பிடித்து கட்டி வைத்து அடித்தார்கள்.
வீணாதி வீணன் மனம் நொந்து போனான். மீண்டும் காட்டுக்குச் சென்றான். பழங்களைத் தின்றான். ஊரின் எல்லைப் புறம் வந்தான். ஒரு ஓலை வீட்டுத் திண்ணையிலே அமர்ந்தான். புலம்பினான். புலம்பிக் கொண்டே இருந்தான். அந்த வீட்டிலிருந்து ஒரு முதிய பெண் வெளியே வந்தாள். அவனிடம் யாரப்பா நீ இப்படி புலம்புகிறாய் என்று கேட்டாள். அவன் அவளிடம் தன் வரலாற்றை சொன்னான். முதிய பெண் அவனுக்கு வயிறு நிறைய பழைய சாதம் போட்டாள். அவன் முழுவதையும் தின்றான். அவனுக்கு தெம்பு வந்தது.
அவன் காட்டுக்கும் போனான். விறகு வெட்டினான். கிழவியின் வீட்டிற்கு பின்பகுதியில் இருந்த இடத்தில் கொண்டு விறகைப் போட்டான். அம்மா நீ இதை எடுத்துக்கொள். எனக்கு நீ ஒரு நேரம் பழைய சாதம் தந்தால் போதும் என்றான். அவள் அவனுக்கு சாப்பாடு கொடுத்தாள். ஆடை கொடுத்தாள். அவனுக்கு தெம்பு வந்தது. நம்பிக்கையும் வந்தது. தன் ஆண்டிக் கோலத்தை மாற்றிக் கொண்டான்.
வீணாதி வீணன் காட்டு மரத்திலிருந்து நீண்ட தடியைத் தயார் செய்து கொண்டான். கொல்லனைப் பார்த்து அதற்குப் பூண் கட்டிக் கொண்டான். கிழவி அவனுக்கு தன் மகனின் ஆடையை கொடுத்தாள். இப்போது அவன் கம்பீரமாக இருந்தான். வள்ளியூர் தெருவழி வந்தான். மக்களை வழி மறித்தான். குலசேகர பாண்டியனின் தாயாதி நான் சுங்கத் தீர்வை வாங்கும் படி அதிகாரம் எனக்கு கொடுத்திருக்கிறான் என்றான்.
ஒரு நாள் அவன் கிணத்தங்கரையில் தண்ணீர் முகுந்த பெண்களிடம் குடக்காசு வேண்டும் என்று கேட்டான். ஒருத்தி தண்ணீருக்கு வரியா என்ன அநியாயம் இது என்று கேட்டாள். எல்லாப் பெண்களும் ஊர்த் தலைவனிடம் முறையிட்டனர். அந்த தலைவன் வீணாதி வீணனை விசாரித்தான். வீணனோ நான் அரசரிடம் சலுகை பெற்றவன். உறவினன். ஆனால் இந்த ஆயத்தில் உனக்குப் பங்கு தருகிறேன். பெற்றுக் கொண்டு பேசாமல் போ என்றான். ஊர்த் தலைவனும் சரி என்றான். இதன் பிறகு வீணாதி வீணன் வள்ளியூரில் தலை நிமிர்ந்து நடந்தான்.
வீணாதி வீரனின் பெயர் மக்களிடம் பயத்தை உருவாக்கியது. திருமணம், பிறப்பு, இறப்பு என எல்லா நிகழ்ச்சிகளிலும் தனக்கு வரி தர வேண்டும் என்றான். வீணன் பெரும் பணக்காரனான். தனக்கென்று அரண்மனை கட்டிக் கொண்டான். காவலுக்காக வீரர்களை வைத்துக் கொண்டான். அடியாட்களை வைத்துக் கொண்டான்.
ஒருமுறை மதுரை குலசேகர பாண்டியன் வள்ளியூருக்கு வந்தான். அநியாயமாய் வரி பிடிக்கும் வீணாதி வீணனைப் பற்றி கேள்விப்பட்டான். அவனைப் பிடித்து வருவதற்கு தன் படை வீரர்களை அனுப்பினான். வீரர்கள் வீணனை அரசன் முன்னே கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் உன்னை இப்படியாக வரிக்கு வரி பிடிக்கும்படி யார் பணித்தார்கள் என்று கேட்டான்.
வீணாதி வீணன் "அரசனே என்னை யாரும் அப்படிச் சொல்லவில்லை. நான் இந்த ஊருக்கு அனாதையாக வந்தேன். பிச்சை எடுத்தேன். அவமானப்பட்டேன். உழைத்து தொழில் செய்ய முயற்சி செய்தேன். உன் அதிகாரிகள், காவலர்கள் என்னை தொழில் செய்ய விடவில்லை. வேறு வழியில்லை. ஏமாற்றிப் பிழைத்தேன். அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்தேன். நிறைய சம்பாதித்தேன். உன் நாட்டில் வாழ்வதற்கு இதுதான் நல்ல வழி என்று கண்டுபிடித்தேன்.
அரசே இப்போது நான் செல்வந்தன். என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. என்னை முதலில் பாதுகாத்த கிழவிக்கு உதவி செய்தேன். நான் சம்பாதித்த செல்வத்தை எல்லாம் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு தண்டனை கொடுத்துவிடு என்றான்.
அரசன் அவன் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டான் “வீணனே இன்று முதல் நீ என் மந்திரி. இந்த வள்ளியூருக்குத் தலைவன் உன் சொத்துக்களை நீயே வைத்துக்கொள்” என்றான். வீணன் பாண்டிய அரசரிடம் பல ஆண்டுகள் பணி செய்தான். வயதாகி இறந்த பின்னர் மூன்று முகம் கொண்டவளிடம் வரம் வாங்கிக் கொண்டு தெய்வமானான்.
- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.