திருக்குறள், திருவள்ளுவர் பற்றிப் பேசும் போது மிகையான உரிச்சொற்களில் எழுத வேண்டும் என்று எழுதப்படாத விதியிருக்கிறது. அத்துடன் மேல்நாட்டினரின் ஒப்புகை இருந்தால் இன்னும் நலம். எடுத்துக்காட்டாக இரண்டைத் தருகிறேன். திருவள்ளுவர் ‘வார்த்தைகளின் வாத்தி’, ‘அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளில் தெய்வீகமான இளவரசர்’. இவற்றைச் சொன்னவர் திருவாசகம் புகழ் ஜி.யூ. போப். இந்தக் கும்பிடும் மனப்பான்மை இல்லாமல் இரண்டு திருக்குறள் ஆங்கில திருப்புதல்கள் வந்திருக்கின்றன. வழமையை மீறி ஆங்கில விற்பன்னர்கள் அல்ல இரண்டு தமிழர்கள் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். ஒருவர் கவிஞர், புனைகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் மீனா கந்தசாமி, மற்றையவர் இளைப்பறிய கல்வியளாளர், ஆங்கிலப் பேராசிரியர் ச. தில்லைநாயகம் மீனா கந்தசாமியின் அட்டகாசமான அதே வேளையில் மரபுவாதிகளின் அமைதியை அல்லாட வைக்கும் திருப்புதலும் தில்லைநாயகத்தின் வாசகத் தோழமையான மொழிபெயர்ப்பும், சில மாத இடைவெளியில் வெளிவந்தவை.
திருக்குறளுக்கு நூற்றுக்கணக்கான ஆண் மொழிபெயர்ப்புகள், உரைகள் வெளியிடப்பட்டிருந்தாலும், மீனா கந்தசாமி தான் முதல் பெண் மொழிபெயர்ப்பாளரோ அல்லது உரை ஆசிரியரோ அல்ல. 20ஆம் நூற்றாண்டில் மருங்காபுரியின் (ஏதோ சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் வரும் ஊர் அல்ல திருச்சினாப்பள்ளி ஜில்லா குளித்தலை தாலுக்காவிலிருக்கும் பட்டணம்) பெண் ஜமீன்தாரணியாக இருந்த கே.எஸ்.வி.லட்சுமி அம்மாள் முதல் பெண் உரையாசிரியர். இவர் விளக்கம் எழுதிய ”திருக்குறள். தீபாலங்காரம்.'' 1929 இல் வெளிவந்தது. இவர் இந்துப் புராணங்களிலிருந்து அவருடைய காலத்துப் பாஷையில் சொன்னால் உபமான உபமேயமாக். கொண்டு குறளுக்கு வியக்கியானம் எழுதினார். மீனா கந்தசாமிக்கு முன் இரண்டு பெண்கள் குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்திருக்கிறார்கள். ஜோதிர்லதா கிரிஜாவும் வைதேஹி ஹெர்பர்ட்டும் முந்தைய உதாரணங்கள் என்று கேள்விப்பட்டேன். என் பார்வைக்கு இவை இரண்டும் கிட்டவில்லை.
இன்னுமொன்று. மீனா கந்தசாமியின் நூல் அட்டையில் திருவள்ளுவரின் பெயரோ அல்லது இந்த நூலின் பொருளடக்கம் திருக்குறளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்ற தகவலோ இல்லை. அவரின் பெயர்தான் சினிமா சுவரொட்டியில் நடிகர்களின் பெயர்களை பெரிய எழுத்துரு வடிவில் போடுவதுபோல இவரின் பெயர் காணப்படுகிறது. தெலுங்கு கவிஞராக முத்துப்பழனியின் (1730-1790) ‘ராதிகா சாந்தவனம்’ சித்தரித்த பெண்ணுடலின் தவிப்புகள், உணர்வுகள், இச்சைகளை மட்டும் தொகுத்து ‘தரம் கெட்டவர்’ என்று தலைப்பிட்டு முத்துப்பழனியின் பெயரில்லாமலே ஆணாதிக்கப் பார்வையில் ஒரு ஆண் அவரின் பெயரில் நூலைவெளியிட்டிருந்தால் இந்த வெளியீடு எப்படியான ஆட்சேபனைகள் உருவாக்கியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
குறளின் எளிய நேர்த்தியை உண்மையாகப் பாதுகாக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அரிதானவை. முன்னைய குறள் மொழிபெயர்ப்புகள் பல பழைய பாணியிலான ஆங்கில மொழியைப் பின்பற்றுவதன் மூலம் கவிதை விளைவுகளைப் பிரதிபலிக்க முயல்கின்றன. ஆனால் தில்லைநாயகம் முழு குறளையும் எளிய ஆங்கிலத்தில் தந்திருக்கிறார். குறளின் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் முடிந்தவரை பரவலாகவும் ஆழமாகவும் வாசித்து, அவற்றை வாசகரின் வாழ்க்கைக்கு நெருக்கமாகவும் பொருத்தமானதாகவும் ஆக்கியிருக்கிறார். இதனால் தில்லைநாயகம் மூலப் பிரதியின் வரம்புகளுக்கு மேல் உயர முடிகிறது.
மீனா கந்தசாமியின் கவனம் திருக்குறளின் மூன்றாவது பகுதியான காதலையும் அன்பையும் மையமாகக் கொண்டுள்ள காமத்துப்பால் மட்டுமே. இவர் இட்ட தலைப்பு ’ஆசையின் புத்தகம்' (The Book Of Desire). காமத்துப்பால் வரலாற்று ரீதியாக மிக அதிகமாக தணிக்கை செய்யப்பட்ட பகுதி. கலாச்சார நிராகரிப்பு நவீன தாராளவாதிகளின் சாத்தானிய வேலை அல்ல. அந்த நாட்களிலேயே இருந்திருக்கிறது. முதல் தணிக்கையாளர்களில் ஒருவர் வீரமாமுனிவர். காம விஷயங்களில் அகஸ்டியனின் பாலியல் பள்ளியைச் சேர்ந்தவர். 1100 வது குறள் அதுவும் மூலத்திற்குச் சம்பந்தமில்லாத கலைஞரின் இன்றைய அதிகப்படியாக அலங்கரிக்கப்பட்ட விளக்கவுரை இயேசு சபை துறவியை அவருடைய கல்லறையில் புரளச்செய்யும். கலைஞர் கருணாநிதியின் வரிகள்: ’மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிது புதிதாக அறிவதுபோல் இருக்கிறது.’ மாம்பழ மேனி குறளில் இல்லை.
மீனா கந்தசாமி பெண்ணாக எழுதுகிறார். தில்லைநாயகம் பெண்சார்பாக எழுதுகிறார். தீவிர பெண்ணியவாதிகள் ஒரு ஆணின் உரையை mansplaining என்று குற்றம் சொல்லக்கூடும். இச்சொற்கூற்றை Rebecca Solnit, த கார்டியன் பத்திரிகையின் பத்தியாளர் உருவாக்கினார். ஆண்கள் தங்களுக்குத்தான் எல்லாம் தெரிந்ததுபோல் பெண்கள் மந்தமானவர்கள் என்று நினைத்து விளக்கம் தருவதைத்தான் இந்த பதம் குறித்துக்காட்டுகிறது. இதை விளக்க ஒரு கேவலமான உதாரணம்: நீண்ட கால கிரிக்கட் ரசிகைக்கு lbw விதிகள் பற்றி ஆண் இவள் ஏதோ ஒரு சோப்ளாங்கி போல் குழந்தைத்தனமாக விளங்க வைப்பது.
மீனா கந்தசாமியின் திருப்புதல் மொழிபெயர்ப்பை ஒரு தலையீடு, ஒரு கட்டாய அவசியமாகப் பார்க்கிறது. தில்லைநாயகத்தின் பிரதி நவீன பண்பாட்டுத் தேவைகளுக்கு உரையைச் சீர்திருத்துகை செய்கிறது. மீனா கந்தசாமியின் எழுத்தில் ஒரு கடுமையான பெண்ணிய அரசியல் மற்றும் அழகியல் நிலைப்பாடு தெரிகிறது. அவரின் வெளிப்படையான, உரைநடையில் காலனித்துவ நீக்கத்தின் அவசரமும் தெரிகிறது. மீனா கந்தசாமியின் திருப்புதல் பெண்களின் வரலாற்று அழிப்புகளை நீக்குகிறது, இந்து தேசியவாதத்தையும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையும் சமாளித்து, மொழியின் அழகையும் காமத்தையும் உயிர்ப்புத்தன்மையின் வெளிப்பாடாக மீட்டெடுக்கிறது.
பெண்ணியப் பதிப்பை உருவாக்கும் முயற்சியில், ஆங்கில மொழிபெயர்ப்பில் காணப்படும் ’கணவன்’, ’மனைவி’ என்ற வார்த்தைகளைத் தவிர்க்க முடிவெடுத்தேன் என்று முன்னுரையில் மீனா கந்தசாமி எழுதுகிறார். இந்த வார்தைகள் இந்த காதல் உரையில் சமகாலப் பொருள் கொண்ட சமூகப் பழக்க வழக்கங்களை சுமக்க வைக்கிறது. இந்தக் கருத்துக்கள் வள்ளுவரின் காலத்திற்குப் பொருந்தாதவை. அதற்கு பதிலாக நான் ஆணும் பெண்ணும் மற்றும் முடிந்த போதெல்லாம் பாலின நடுநிலை சொல்லான காதலரைப் பயன்படுத்தினேன் என்று கூறுகிறார். ஈன்றபொழுதின் பெரிதுஉவக்கும் தன் மகனை’ என்ற வரிகளுக்கு ‘ஒரு தாய் பிள்ளைகளைப் பெற்றபோது’ என்று தில்லைநாயகம் தெளிவுபடுத்துவது இன்றைய பாலுணர்வுத் தேவைகளுக்கு ஒரு பூரணமான எடுத்துக்காட்டு.
காமம் வரும் இடங்களில் மீனா கந்தசாமியின் திருப்புதலில் ஒரு பச்சையான நேரடித் தன்மை உண்டு. தில்லைநாயகத்தில் ஒரு விலகல் தன்மையும் மத்தியதர வர்க்கத்தின் தூய்மைத் தன்மையும் காணப்படுகிறது.
மீனா கந்தசாமி காமத்துப்பாலை தனித்து நிற்கும் பிரதியாகப் பார்க்கிறார். இது சிலப்பதிகாரத்தின் மையக் கதையம்சம் மதுரைக் காண்டத்திலும் மற்றும் புதிய ஏற்பாட்டில் பவுலின் நிருபங்களைத் தனித்து பிரிப்பது போன்றது. இந்த மாதிரியான திடுக்கிடும் வெளிப்பாடுகள் பாரம்பரியவாதிகளின் இதயத் துடிப்பு நிறுத்தத்தைத் துரிதப்படுத்தும்.
இவர் செய்த இன்னுமொரு பதிப்பித்தல் மாற்றம் இரண்டு அடிகள் கொண்ட குறள் வரிகளை ஆங்கிலத்தில் நாலுவரி வசனத்தில் சொன்னது. இது பதினான்கு வரிகள் கொண்ட செக்ஸ்பிரியரின் ஈரேழ்வரிப்பாவை 28 வரிகளில் எழுதுவது போன்றது. குறளில் கவர்ச்சியும் வலுவும் அதன் சுருக்கத்திலும் வரிகளின் கஞ்சத்தனத்தில்தான் இருக்கிறது. கந்தசாமியின் இந்த நீடித்தல் வள்ளுவரின் காதல் வாழ்வு தரும் மகிழ்ச்சியை மழுங்கடிக்கிறது.
ஆண் பெண் இருபாலரும் காதலர்களின் ஏக்கங்களை மறுபரிசீலனை செய்வதில், கந்தசாமி தமிழ்ப் பெண்ணை பல நூற்றாண்டுகளின் ஆண் நியமன பார்வையில் இருந்து மீட்டு, அவளுக்கு என்று உரையையும் மற்றும் வசன அதிகாரங்களையும் வழங்குகிறார். கந்தசாமியிண் கைகளில், ஆசை என்பது ஒருவித சௌக்கிய தப்பு, அதீத உடயிலான முழுநிறை ஒப்புக்கொடுப்பு. ஒருவிதத்தில் சரணாகதியாக மாறுகிறது; மீனா கந்தசாமி திருக்குறளின் பழங்கால காதலர்களுக்கு ஒரு வீரிய சக்தியை ஈர்க்கிறார்.
அதே நேரத்தில் மீனா கந்தசாமியின் மொழிபெயர்ப்பில் பெண்ணின் உடல் ஒரு இன்பப் பொருளாகக் கருதப்படும் விதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பெண் ஆசைப் பொருள் வர்ணிப்பு எதிர்ப்பை வாழ் நாள் வேலையாக கொண்டவர். இப்போது, பெண்ணை ஆசைப் பொருளாக மறுவடிவம் செய்துள்ளார். உதாரணத்திற்கு 1101 குறளை எடுத்துக் கொள்ளுங்கள்:
To look, to hear, to taste,
to smell, to touch:
all my five senses enjoy
the presence of this bangled beauty.
இது மீனா கந்தசாமியின் திருப்புதல். இங்கு, ஆணின் புலன்கள் ஒரு பெண்ணை ரசிக்கின்றன என்பதே இதன் உட்பொருள். அதே இந்தக் குறளை திலைநாயகம் இப்படி வழங்கியிருக்கிறார்: All five sensual pleasures of seeing, listening, tasting, smelling and touching are combined well in this maiden wearing shining
braclet. இங்கே ஒரு ஆண் பெண்னை அனுபவிப்பை விட ஆண்-பெண் இருவரின் புணர்ச்சி ஐக்கியத்தைக் குறிக்கிறது. அது மட்டுமல்ல தில்லைநாயகம் மூலப்பிரதியில் வைத்திருக்கும் நேசமும், அவரின் திருப்புதலில் நேரிடையான பார்வையும், நேர்மையும் தெரிகிறது.
பிறப்பு அடிப்படையிலான சமத்துவமின்மை என்ற கருத்தை நிலைநிறுத்துகிற பிராமனிய சமஸ்கிருத நூல்களுக்கு திருக்குறள் எதிரான எழுத்தாக மீனா கந்தசாமி வாதாடுகிறார், நிரூபிக்கிறார். அதுமட்டுமல்ல பெண் ஆசையைக் கொண்டாடுவதன் மூலம் வள்ளுவரின் பிரதி சமஸ்கிருத நூல்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. ஆணாதிக்க பெண் விரோதிய களைகளையெடுப்பதுதான் என் வேலை என்கிறார் மீனா கந்தசாமி. தில்லைநாயகத்தின் எண்ணமும் இதுதான். ஆணால் அவரின் முயற்சியில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது.
கந்தசாமி, அவருடைய திருப்புதலில் ஒரு ஆக்கிரமிப்புத்தனமான துணிச்சல் காணப்படுகிறது. அவருடைய மொழி பெயர்ப்பை நாளிதுவரைக்கும் கொண்டு வந்திருக்கிறார். சமீப பாலின அடையாளங்கள், தேவைகளுக்குத் திருவள்ளுவரை ஒத்துப்போக வைக்கிறார். இச் செய்கை வீரமாமுனிவர் கல்லறையில் இன்னும் உருளச் செய்யும். பண்டைய நூல்கள் எல்லாம் ஆதிக்க பாலீர்ப்பு வழமையை (Heteronormativity)யின் பின்புலத்தில்தான் எழுதப்பட்டவை. திருக்குறள் மட்டுமல்ல எல்லா மறைகளும் இந்த எண்ணயியலைப் பிரதிபலிக்கின்றன. கிறிஸ்தவ திருமறையில் இது தெளிவாக உண்டு. ஆதியில் கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் என்ற வாசகம் பாலின ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர்களுக்குச் (Nonbinary) சுகம் தரும் செய்தி அல்ல. கந்தசாமி இன்றைய பாலியல் புகார்களுக்கான தடயங்கள் குறளில் இருப்பதாக உணர்கிறார்.
பெண்நிறைந்த நீர்மை பெரிது என்ற குறளின் அடிகளுக்கு ஆண் விரிவுரையாளர்கள் நீர்மையை இயல்புநிலையான பெண்ணின் உள்ளார்ந்த அத்யாவசியமான குணங்களாக அவர்களுடைய உரையில் புகுத்தி விடுகிறார்கள். ஆனால் கந்தசாமி நீர்மையை அதன் சொற்பிறப்பை ஆராய்ந்து, நீருடன் இணைந்து, நீர்த்தன்மையுள்ள கெட்டிமையற்ற, உறுதித் தன்மையற்றது என்று விளக்கம் தருகிறார். இந்த வியாக்கியானம் கொஞ்சம் இட்டுக்கட்டப்பட்ட, முன்னமே தீர்மானிக்கப்பட்ட வாசிப்புப் போல் தெரிகிறது. இது பாலுணர்வு பண்புகளை உரிமை கோரக்கூடிய ஒன்றாகப் பார்க்கிறது. மீனா கந்தசாமியின் வாசிப்பில் பாலின வெளிப்பாடு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அல்லது திடமாக்கப்பட்டதாகக் கணக்கிடுகை செய்வதில்லை.
மீனா கந்தசாமியின் முன்னுரையில் அதிகம் முன் நிறுத்தப்பட்டவர் பெரியார். அதே வேளையில் அதிக தூரம் வைக்கப்பட்டவர் பரிமேலழகர். அவர் பிராமண சமூக ஒழுக்கங்களின் பல கருத்துக்களை அவரின் உரையில் செருக்கியுள்ளார். ஆனால் அவர் ஆணாதிக்கக் கண்ணோட்டம் வளர உதவியதை ஒருவரும் தனிப்படுத்தி ஆண் விமசகர்கள் அவரை குற்றம் காணவில்லை என்று மீனா கந்தசாமி கண்டிக்கிறார்.
மீனா கந்தசாமி குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர். பார்க்க அவரின் When I Hit You Or, A Portrait of the Writer as a Young Wife, Atlantic Books, 2017. மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்வு நச்சுத் தன்மையானது என்பதை உடன்பாடு இல்லாதவர் வாழ்க்கை ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது என்ற குறளில் தன் வாழ்கையின் அடையாளங்களைக் காண்கிறார், ஆறுதலும் அடைகிறார்: உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று (குறள் 890). திருமனங்கள் என்றும் நிரந்தரமானவை என்ற சனாதன தர்மக் கொள்கைக்கு திருக்குறள் முற்றிலும் மாறுபட்டது என்கிறார்.
ஆனால் குறள் ஒரு ஆட்சார்பற்ற (impersonal) படைப்பு. வள்ளுவரின் தனிப்பட்ட உணர்வுகளைப் பற்றிக் குறளில் இல்லை. அடிப்படையில் அதன் பகட்டான சொல் உணர்ச்சி தமிழ் செவ்வியல் இலக்கிய மரபின் அகம் அல்லது அகம் பற்றிய வடிவமைப்புடன் பொருந்துதிறது, பொதிந்திருக்கிறது.
தில்லைநாயகத்தின் கையில் திருக்குறளை நேரிய பொருளோடும் வாசக நட்புடைய பிரதியாகத் தெரிகிறது. மீனா கந்தசாமியின் வாசிப்பில் அவருடைய கருத்துநிலைதான் அதிக அதிகாரம் செய்கிறது.
விக்டோரியன் ஒழுக்கம், பிராமண ஆணாதிக்கம், ஆண்-பெண் மதிப்பு முறை பற்றிய கடுமையான கருத்து ஆகியவை மொழிபெயர்ப்பாளர்களை ஊற வைத்துள்ளன நிலையில் மீனா கந்தசாமியின் மொழிபெயர்ப்பு தனித்து நிற்கிறது. மனைவியின் சொற்படி நடப்பவர் பயனடைய மாற்றர் என்ற பொதுவான உரைமாற்றி இல்லறத்தில் அளவுமீறி ஈடுபடுவோர் புகழ்பெறார் போன்ற தில்லைநாயகத்தின் திருத்திய கருத்துரைகள் பெண்ணின் கௌரவத்தை, மாட்சியைக் காக்க வைக்கிறது.
திருமறைகளின் சிறப்புத் தன்மைகளில் ஒன்று அவற்றில் பொதிந்திருக்கும் சில சொற்தொடர்களை கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் மேற்கோள் காட்ட முடிகிறது. அதன் இயற்கையான சொந்தத் தொகுதியையும் மீறி பொது பேச்சுவழக்கில் மிக இயல்பாகக் கலந்து விடுகிறது. தெளிவான சான்றுகள்: ‘தந்தை மகற்குஆற்றும்’ ‘குழல் இனிது யாழி இனிது’ ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ இது கிறிஸ்தவ திருமறைக்கும் உண்டு. ‘குருடனுக்குக் குருடன் வழிகாட்டல்’ ‘உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்’; ’சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை’. ’பாலும் தேனும் ஓடுகிற தேசம்’.
திருமறைகளின் இன்னுமொரு வசதி நடப்புச் செய்திகளுக்கு ஏற்றவாறு வசனங்கங்களைத் தேர்ந்தேடுக்கலாம். உங்கள் பக்கத்தை நியாயப்படுத்தலாம். காலனிய நாட்களில் ஆங்கிலேயர் சீங்கப்பூரில் அபின் வியாபாரத்தில் ஈடுபட்டபோது அதற்கு தெய்வீக அனுமதியும் அங்கீகாரமும் பெற புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் வாசங்களைப் பாவித்தார்கள்: ’நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள்.’கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் சென்னை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis) 1818-இல் சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது 27 கிணறுகளைத் தோண்டிக் கல்வெட்டும் பதித்தார். அவரின் செய்கைக்கு மேற்கொள் காட்டிய குறள் 'புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.'
திருக்குறள் எல்லாராலும் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆறுமுக நாவலர் பரிமேலழகரின் திருக்குறளைப் பதிப்பித்தது உண்மை. அவருக்குப் பெரிதாகப்பட்டது ஒரு பிராமணரின் உரை. ஒரு நெசவாளரின் பிரதி அல்ல. செட்டியார் பெண்ணான கண்ணகியை ஏற்க மறுத்தவர், ஒரு நெசவாளரின் கருத்துக்களை அவர் ஒத்துக் கொள்வது கௌத்தம் ஆதானி, கார்ல் மார்க்சின் மூலதனந்தான் நான் படுக்கையில் வாசிக்கும் நூல் என்று சொல்வது போன்றது. சைவதூஷனபரிகார விக்கியாபனத்தில் நாவலர் பட்டியலிட்ட திருமறைகளில் திருக்குறள் இல்லை. திருஞானசம்பந்தமூர்த்தி முதலிய நாலு சமயக்குரவர்களினால் அருளிச்செய்த தேவாரம், திருவாசகம் என்னும் திராவிட வேதங்கள், மெய்கண்ட தேவர் முதலிய சிவானுபுத்திமான்களினால் அருளிச்செய்யப்பட்ட சிவஞானபோதம், சிவஞானசித்தியார் நூல்களிலே திரவிட சித்தாந்தாங்கள் உளாவாம் என்று நாவலர் எழுதுகிறார். கவனிக்க: திராவிட வேதங்கள், திராவிட சித்தாந்தாங்கள் நாவலருடைய வார்த்தைகள். அவர் மேற்சொன்ன இந்த நூல்களில்தான் நாவலரின் கணக்குப்படி சற்சமயலக்.ஷாணங்கள் குறைவற அமைந்திருக்கின்றன. குறளை நாவலர் தள்ளி வைத்திருப்பதற்கு வள்ளுவர் சைவ ஆகம மரபுகள், சைவ கோயில்களில் நிகழும் ஆகமச் சடங்குகள், கிரிகைகள் பற்றி அவருடைய எழுத்தாணிக்கு வேலை கொடுக்காமலிருந்தது காரணமாகவிருக்கலாம். அத்துடன் இன்னுமொரு காரணம் திருவள்ளுவரின் சமயசார்பற்றத் தன்மை..
இதையும் சொல்லி விடுகிறேன். நாவலர் குறளைப் பதிப்பிக்கும் முன்னமே இலங்கையில் புழக்கத்தில் இருந்திருக்கிறது. இது பற்றி Fernao de Queyroz's The Temporal and Spiritual Conquest of Ceylon இல். காணலாம். 16 ஆம் நூற்றாண்டில் கோட்டையில் நடந்த மத விவாதத்தில் பிரான்சிஸ்கன் சபை மதபரப்பாளர் Fra Joam de Villa Conde புவநேகபாஹுவின் அரசவையில் அவர் போதித்த கோட்பாடுகளுக்கு ஆதரவாக திருக்குறளில் இல்லாததை மேற்கோள் காட்டினார்: “நீங்கள் தீங்கிழைக்கும் வகையில் மறைத்து வைத்திருக்கும், வள்ளுவரால் இயற்றப்பட்ட நூலைப் படியுங்கள், நீங்கள் திரித்துவத்தின் ஒன்றியத்தைக் காண்பீர்கள். மகனின் அவதாரம், மனித வீழ்ச்சிக்குக் காரணம், அவர்களது தவறுகள் மற்றும் துயரங்களுக்கான தீர்வு மற்றும் இறுதி மீட்பு பற்றி அறிந்து கொள்வீர்கள்’ என்று முழங்கினார். இந்த முழக்கம் ஒரு ஆதாரமற்ற பிரசாரம். குறளில் திருத்துவம் பற்றியே அல்லது மனித அவதாரம், மனித மீட்பு பற்றி எந்த விஞ்ஞான திறன் கொண்ட தொலைநோக்கிக் கருவி வைத்துப் பார்தாலும் கிடைக்காது.
திருவள்ளுவர் அடிப்படையில் ஒரு பழமைவாத குறிப்பிட்ட மதப்பிரிவு தொடர்பற்ற சிந்தனையாளர். அவரது காலத்தை விட வள்ளுவர் முற்போக்கான கருத்துக்களைச் சொன்னாலும் அவர் காலத்து விளைபொருள். திருவள்ளுவரின் அரசியல் (அரசாங்கம்) ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல,. மன்னர் ஆட்சி பற்றி திருக்குறளில் நிறைய உண்டு, திருவள்ளுவரின் உலகம் தனிப்பட்ட விசுவாசத்தை அடித்தளமாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ ஒழுங்கை பிரதிபலிக்கிறது. குறளில் விதவையின் அவமானகரமான வாழ்க்கை பற்றி அனுதாபமோ அல்லது குறிப்போ காணப்படவில்லை. இந்தியாவின் மிக மோசமான சமூகக் கறையாகக் கருதப்படும் உடன்கட்டை பழக்கத்தை ஒழுக்கமுறை போதிப்பவர் எங்கேயும் கண்டிக்கவில்லை. அவர் அவருக்கு விதிக்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவதன் மூலந்தான் வாழ்க்கை வாழ்வில் உய்வடையலாம்.
வள்ளுவருக்குப் பிச்சையிடுதல்தான் வறுமைக்கான தீர்வாக அமைந்தது. செல்வத்தை மறுபகிர்வு செய்வது அல்ல. ஆனால் மக்களை பிச்சை எடுக்கக் கட்டாயப்படுத்தியதற்காக படைப்பாளியை சபிக்கவும் செய்தார் ’இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் (குறள் 1062). கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை விட்டுவிட்டு பாலியல் பணியாளர்களுடன் பழகுவதை அங்கீகரித்த சமூக மரபுகளை அவர் ஏற்றுக் கொண்டார். என்னதான் பிரதியைத் துப்பரவு படுத்தினாலும், மாற்று வாசிப்புச் செய்தாலும் அதிகாரங்கள் 91 (பெண்வழிசேரல்) 92 (வரைவின் மகளிர்) பெண்கள் பற்றிய வள்ளுவரின் தந்தைவழிப் பார்வையை மீட்கமுடியாதவை. ஒருபாலீர்ப்புடைய பெண்னும் இனப் பிரச்சனைகள், பெண்ணியம் பற்றிய உணர்ச்சிமிக்க எழுத்தாளருமான Audre Lorde இன் ஆத்திரமூட்டும் அறிவுறுத்தலும் நினைவுக்கு வருகிறது: ’ஆண்டைகையின் தளபாடங்கள் ஆண்டகையின் வீட்டை தரைமட்டமாக்காது.’
எல்லாத் திருமறைகள் போல் திருக்குறளிலும் முரண்பாடுகள் உண்டு. அறங்களுக்குள் முதன்மை கொல்லாமை போதித்தவரே கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தல் பற்றிச் சொன்னார். அவரது பணியின் ஒட்டுமொத்த நிலைப்பாடு அகிம்சையாகும். அவர் போதித்தது பொதுவான அறிவுறுத்தல்கள்தான். நடைமுறை பரிந்துரைகள் இல்லை.
வள்ளுவர் பல்வேறு கோணங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். வைத்தியராக( டி. தாரணி), சட்டவல்லுனராக (மு.ராஜேந்திரன்), பொருளாதார விற்பன்னராக (கீர்த்தி ஷைலேஷ்) மறுவடிவமைபுச் செய்யப்பட்டிருக்கிறார். எல்லோரும் திருக்குறளுக்கு உரை எழுதிவிட்டார்கள். தமிழ்நாட்டு ஆளுநர் ரவி தவிர. தமிழ் வரலாறு, பண்பாட்டைக் கோணல்மாணலாகப் பார்க்கும் இவர் குறளில் காணப்படும் மன்னர் என்பதை ஆளுநர் என்று வாசித்து தன்னை அதனுடன் அடையாளப்படுத்தினாலும் ஆச்சரியம் இல்லை.. ஆளுனர் ரவி தலைப்புக்காக தேடி அலைய வேண்டியதில்லை. இதோ ஒன்று: ’வள்ளுவரின் பார்வையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை துன்புறுத்துதல் மற்றும் சீர்குலைத்தல்’.
திருக்குறளுக்குக் கொடுக்கும் அர்த்தம் காலத்திற்கும், அரசியல், சமூக, மத தேவைகளுக்காக மாறிக் கொண்டே இருந்திருக்கிறது, மாறிக் கொண்டே இருக்கும். இந்த வியாக்கியானங்களில் திருக்குறளைப் பற்றித் தமிழ் சினிமா வில்லன்களின் பாஷையில் ஒரு மண்ணும் அறியப் போவதில்லை. இந்த வியாக்கியானங்கள் செய்கிறவர்கள் என்ன மாதிரியான ஆட்கள், அவர்களுடைய கருத்தியல் பின்னணி என்பதைத்தான் அறிய முடிகிறது. பரிமேலழகர் உரையில் அவரின் வைஷ்னவ பிராமண சித்தாந்தம்தான் தெரிக்கிறது. வரதராசனில் மனிதநேய பாரம்பரியம் இடையிடையே தூவிக் கிடக்கிறது. புலவர் குழந்தையில் திராவிட எண்ணங்களின் தடயங்களைப் பார்க்கலாம். அம்பாள் எந்த காலத்தில் பேசினாள் என்பது போல் திருக்குறள் கூகுள் அலக்சா போல் பேசுவதில்லை, வாசகர்கள்தான் பிரதியைப் பேச வைக்கிறார்கள், பொருள் கொடுக்கிறார்கள், கால தேவைகளுக்குப் பொருத்தமானதாக ஆக்குகிறார்கள். திருக்குறள் பற்றிய பொழிப்புரைகள் திருக்குறளைப் பற்றியது அல்ல. விமர்சிப்பவர்கள் பற்றியது. அவர்களின் வியாக்கியானங்கள் அவர் யார் என்பதை உங்களுக்குச் சொல்லும் விவரிப்பு. இது அனைத்து புனித நூல்களுக்கும் சமமான உண்மை.
இதையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் திருக்குறள் பற்றிய விளக்கங்கள் சலவைத் திரவக விளம்பரங்களில் வருவது போல் பளிச்சான, முற்றிலும் புதிய உரைகள் அல்ல. பழைய உரைகளின் பின்பற்றல் அல்லது சீர்திருத்தப்பட்ட நகல்கள். பெரும்பாலானவை நடப்புமுறை முற்போக்கான யோசனைகளை பூர்த்தி செய்யும் வகையில் பரிமேலழகரின் குறிப்புகளைச் சுத்தப்படுத்தியதும் பொருத்த வைத்ததும்தான். ஒருவிதத்தில் இவை பரிமேலழர் பற்றிய மீள் பார்வை. ஏன் இந்த உரைகள் பரிமேலழரின் மறுசுழற்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம். பரிமேலழகரை மறுபயன்பாடு செய்வதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் மூலப்பிரதியில் இல்லாதது உரையில் புகுந்து விடுகிறது. அது ஏனோ அசலில் இருப்பதைப் போல் ஒரு மருட்சியை எற்படுத்துகிறது. நான் மேலே சொல்லிய கலைஞரின் மாம்பழ வர்ணனை இதற்கு முக்கிய முன்சான்று.
திருக்குறள் மட்டும் அல்ல பொதுவாகத் தமிழ் செவ்விலக்கியங்கள் வரலாற்று விமர்சனத்திற்கு (historical critcism) உட்படுத்தப் படுவதில்லை. பிரதியின் அழகியல் மற்றும் தார்மீக மதிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், பறைசாற்றுகிறோம். திருக்குறளை நாம் பிரதியின் அளவில் படிக்கிறோம். பிரதிக்குப் பின் சென்று திருக்குறள் ஒரு பிரதியா அல்லது பல பிரதிகள் கொண்டதா, ஒரே இருக்கையில் எழுதப்பட்டதா? பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டதா? ஆசிரியர் ஒருவரா அல்லது பலரா என்று சரித்திரம் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்பதில்லை. விவிலியப் புத்தகங்களுக்கு நேர்ந்த கடுமையான பிரதியை வெட்டிச் சோதித்தல் தமிழ்ச் செம்மொழிப் புத்தகங்களுக்கு ஏற்படவில்லை. எபிரேய திருமறையின் முதல் ஜந்து நூல்களும் மோசேயினால் எழுதப்பட்ட கருத்து மாறி இவைகளுக்குப் பின்னால். நாலுக்கு மேலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஜந்து புத்தகங்களின் காலவரிசை பொதுவாக கிமு 4,000 முதல் கிமு 1,500 வரை இருக்கும். நமது கவனமெல்லாம் வாக்கிய உறுப்பாராய்வு (textual analysis) செய்வதில்தான் இருக்கிறது. பிரதியின் வரலாற்றுப் பின்னணியைப் பகுப்பாய்வு செய்வதில்லை. சரித்திர கேள்வி கேட்டவர்களின் அபூர்வமானவர் வ.உ.சி. திருக்குறளின் முதல் மூன்று அதிகாரங்களில் காணப்படும் அமைப்பு, பொருள் வைத்து இவை பின் இடைச் செருகல்களே என்று சொல்லி விட்டார்.
திருக்குறள் உரையாசிரியர்கள் ஒருவரும் வள்ளுவரின் மூலப் பிரதியில் கைவைப்பதில்லை. அர்வமும் இல்லை. கிறிஸ்தவ திருமறைத் திருப்பாளர்களும் மூல ஏபிரேய, கிரேக்க மொழியில் உள்ள வேதவாக்கியங்களிருக்கும் பாரபட்சமான ஆண் பாலின வார்த்தைகளைத் தொடுவதில்லை. மொழிபெயர்க்கப்பட்ட திருப்புதல்களில் பொதிந்து இருக்கும் பால் வகை சொல்வேறுபாடுகளைத்தான் துப்பரவுபடுத்துகிறார்கள். மலைப் பிரசங்கத்தில் வரும் ’பாக்கியவான்கள்’ என்று பல பழைய திருப்புதல்களில் காணப்படும் ஆண் பாலினத்தை வலியுறுத்தும் சொல்லை மாற்றி ’பேறுபெற்றோர்’ என்று சமீபத்தில் வெளிவந்த பொது மொழிபெயர்ப்பு திருவிவிலியத்தில் வேத மொழிபெயர்ப்பாளர்கள் பாலின நடுநிலையான பொருளைத் தந்திருக்கிறார்கள்.
கடைசியாக இதையும் சொல்லி இந்த வியாசத்திலிருந்து விடைபெறுகிறேன். ஏபிரேய ஞானி சொன்ன பழைய பொன்மொழியை மூலத்துக்கு விசுவாசமில்லாத மொழிபெயர்ப்பில் தருகிறேன்: ’பிள்ளாய், அநேக புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை’. இன்று அவர் இருந்திருந்தால் இதை அநேக உரைகள் உருவாக்குவத்திற்கு முடிவே இல்லை என்று மாற்றி எழுதிப்பார். அவரின் அடுத்த வரி அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு என்பது எழுதுகிறவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் விளம்பரங்களில் வரும் அறிவுப்பு போல் ஒரு பயமுறுத்துதல், எச்சரிகை போல் இருக்கிறது.
(நன்றி: காலச்சுவடு மார்ச் 2023. இது வெறுமனே மறுபதிப்பு அல்ல.. புதிய தகவல்களுடன் விரிவாக்கப்பட்டது).
(கட்டுரையாளர், எழுத்தாளர், இலங்கைத் தமிழரான இவர் இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது நூல்கள் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹார்டுவேர்டு பல்கலைக் கழகங்களின் வெளியீடுகளாக வந்துள்ளன. தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன், கொரியன், மலேயன், சீன மொழிகளிலும் இவரது நூல்கள் வெளிவந்துள்ளன.)