இடிந்தகரையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும், போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், சிறையில் உள்ள தோழர் களை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக் கைகளை முன்வைத்து, சென்னையில் பரிமளா, சமந்தா, ஜார்ஜ் மற்றும் ஜான்சன் ஆகிய தோழர்கள் 100 மணிநேர உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

போராட்டத்தின் மூன்றாம் நாள் (13.05.2012), தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தோழர்களை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். ம.தி.மு.க. கவிஞர் மணி வேந்தன், இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் பேராசிரியர் சிவகுமார், சி.பி.ஐ.எம்.எல். மகேஷ், எம்.ஆர்.எப்.தொழிற்சங்கம் சிவபிரகாஷ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்திப் பேசினர்.

அப்போது, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள், “கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற தொடர் போராட்டத்தின் ஒரு வடிவமாக அங்கே இடிந்தகரையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும், பொது மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும், சிறையில் உள்ள தோழர்களை விடுதலை செய்ய வேண்டும், தொடர்ச்சியாக நம் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இங்கு 100 மணி நேர உண்ணாப் போராட்டம் நடக்கிறது. இந்தப் போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பிலே பாராட்டி, வாழ்த்துகிறேன். உறுதியான ஆதரவைத் தெரிவிக்கிறேன்.

இந்தப் போராட்டத்தைச் சமநிலையில் இருந்து நாம் நடத்தவில்லை. கூடங்குளம் பிரச்சினை மட்டும் அல்ல, ஈழத்தமிழர் சிக்கலும் சரி, காவிரிப் பிரச்சனை என்றாலும் சரி, எல்லா இடத்திலும் நமது கருத்து களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. எங்கும் அடக்கு முறையைத் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கி போராடினால், ஆட்சியாளரும், அவர்களை ஆதரிக்கிற ஊடகங்களும் என்ன சொல்கிறார்கள்? அமைதி வழியில் பேசுங்கள், உங்களுடையக் கருத்தை மக்களிடையே சொல் லுங்கள், ஆயுதம் என்பது சரியன்று சட்ட விரோதமானது என்று சொல்கிறார்கள். சரி அமைதிவழியில் சில கருத்துகளைச் சொல்லலாம் என்று சொன்னால் அதற் கான வாய்ப்பை அவர்கள் வழங்குவது இல்லை.

கூடங்குளம் அணுஉலை வேண்டும் என்று அப்துல்கலாம் மட்டுமல்லாமல் நாராயணசாமியும் சொல்லலாம். ஆனால் கூடங்குளம் வேண்டாம் என்று நாம் சொல்ல முடியாது.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை ஒரு நீடித்தப் போராட்டமாகத்தான் நாம் நடத்த முடியும். பல்வேறு அரசியல் கட்சிகளை அணுகி மேடையில் பேச வைப்பதால் மட்டும் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. இதையும் தாண்டி போராட்டத் திற்கு ஆதரவான கருத்தியல் நிலவ வேண்டும்.

நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்கே கொடுக்கப்பட்டால், இப்பொழுது இருக்கிற மின்சாரப் பற்றாக்குறையில் 80 விழுக்காட்டை சமாளிக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் மின் சாரத்தை மக்களுக்கு கொடுத்தால் மிச்சத்தையும் சரி செய்யலாம். இக்கருத்து மக்கள் மனதில் பதிய வேண்டும்.

இடிந்தகரையிலே போராட்டப் பந்தலில் மக்களைத் திரட்டி நடந்து கொண்டு இருக்கிற போராட்டம் உலக அரங்கிலே ஒரு விவாதத்தையும் அழுத்தத்தையும் தருகிறது. அதற்கெதிராக ஆட்சியாளர்கள் கூடங்குளம் இல்லை என்றால் தமிழ்நாடே இருண்டுவிடும் என்ற பரப்புரையைப் பரப்புகிறார்கள். அதை முறியடிக்கும் விதமாக நாம் குழுகுழுவாகப் பிரிந்து ஒரு கருத்தியலைப் பரப்ப வேண்டும்.இப்போது இருக்கின்ற தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் இதனைச் செய்ய வேண்டும். இப்படி மாற்றுக் கருத்து மேலாண்மையை நாம் நிறுவ வேண்டும்.

ஸ்பெயின் நாட்டில் பிராங்கோ என்ற சர்வாதிகாரி 40 ஆண்டுகளாக ஸ்பெயின் கம்யூனிஸ்டு கட்சியைத் தடை செய்தார். அப்போது தங்கள் கட்சி நாளிதழை 1 லட்சம் பிரதிகளை விற்று கருத்துகளைப் பரப்பினர். இப்போது இருக்கின்ற தகவல் தொழில் நுட்பம் இல்லை. அதைப் போல, அரசுகளின் எதிர்க் கருத்தியல்களை முறியடிக்க நாமே மாற்று ஊடகமாக மாற வேண்டியகாலமிது.

தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் போன்ற பல்வேறு அமைப்புகள், கட்சி சாரா சிவில் சமூகக் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கூட்டாகச் செயல்பட வேண்டும். மாற்று மின்சக்தியாகக் காற்றாலை, கதிரவன் ஒளி மின்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்“ என்று அவர் பேசினார்.

Pin It