பீம்சென் டிதே / தமிழில்: இறையடியான்

தலையில் சுமந்த கல்லுடன்
தந்தை தள்ளாடிச் சென்றார்.
மீசையை முறுக்கிய எசமானன்
''ஏய் கிழவா!
சுகமான லாவணி ஒன்றைப் பாடு"-என
வழக்கம் போல் ஆணையிட்டார்.
ஊசிகளால் குத்திக் குத்தி
பொத்தலாகிப் போயிருந்த குரல்வளையில்
காற்றும் வலியும் போட்டியிட
தந்தை பாடினார்:
'வானம் நிலவு சூரியன்
விரிந்த மலர்கள்
பரந்த கடல் அலைகள்
காதலைப் பருகி
நெஞ்சைக் கிள்ளிய
அழகிய மங்கையென"
வலம் வந்தன பாடல் வரிகள்.

தந்தையைச் சூழ்ந்தன புகழுரைகள்
வியர்வையால் நனைந்த கரங்கள்
பெருமையோடு அதிர்ந்தன கரவொலியில்
மெய்ம் மறந்து போன தந்தையின் கண்களில்
நன்றி பெருக்கெடுத்தோடியது!

முதுமையின் தள்ளாத வயது அவருக்கு
வீட்டை அடைந்ததும்
தன் நினைவலைகளில் நீந்திய படியே
வழக்கமாகத் தான் பாடுகின்ற
உணவுக்கான பாடலைத் தேடினார்.
அப்பாடலை அவரால் மீட்டெடுக்கவும் முடியவில்லை
இராகத்தோடு இசைக்கவும் முடியவில்லை
இறுதிவரையில்!

Pin It