திரியம்பக் சப்கலே / தமிழில்: இறையடியான்

படங்கள் அடங்கிய
புத்தகத்தைப் புரட்டினேன்
இளைய மகன் இளம்பரிதி
என்னோடு சேர்ந்து கொண்டான்!
ஒரு படத்தில் -
ஏழையை அடித்துக் கொண்டிருந்தான் ஒருவன்
''ஒருவனை மற்றொருவன் ஏன் அடிக்கிறான்?" - இளம்பரிதி கேட்டான்.
''ஏனெனில் அடிக்கிறவன் பணக்காரன்"
எனச் சொல்லிப் பக்கத்தைப் புரட்டினேன்.
ஏழையைக் கொல்வதற்கு
செல்வந்தனின் வலது கரத்தில்
ஓர் ஆயுதம் இருப்பதைப் பார்த்த மகன்
''அப்பா! ஒரு நிமிடம்" எனச் சொல்லி
பிளேடுடன் திரும்பி வந்து
ஆயுதம் தாங்கிய கையை வெட்டிவிட்டு
வெற்றிக் களிப்பில் என்னைப் பார்த்தான்!
''அவனுக்கு உதவி செய்ய அடியாட்கள் உண்டு" - என்றேன்
''துண்டிக்கப்பட்ட அவன் தோற்றம்
பிறர் நினைவில் இருக்கும். எனவே
யாரும் அவனைத் தாங்கமாட்டார்கள்" - என்றான்.

Pin It