தமிழ்ச் சமூகத்தின் இயங்குதிசையும் இச்சமூகத்தில் உருப்பெற்று வரும் நிகழ்வுகளும் ஏதோவொரு புள்ளியில் சந்திப்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனியம் பல்வேறு புதிய நிறுவனங்களை உருவாக்கியது. இவ்வகையில் சென்னையில் உருவாக்கப்பட்ட கலைப்பள்ளிக்கு முக்கியமான இடமுண்டு. இப்பள்ளியின் ஊடாக உருவான ஆளுமைகள், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், சிற்பம் மற்றும் ஓவியத் துறையில் உலகம் மதிக்கத்தக்க ஆளுமைகளாக உருப்பெற்றனர். சிற்பி தனபால் தொடங்கி இம்மரபு தமிழில் செழுமையாக உருப்பெற்று வருவதை நாம் அறிவோம். சிற்பி தனபால் அவர்களின் தொடர்ச்சியாக ஆதிமூலத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆதிமூலம் என்ற ஆளுமை உருவாக்கம் என்பது தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்த அரிய கொடை. மிகச் சாதாரண குடும்பப் பின்புலத்திலிருந்து இவ்வளவு செழுமையான ஆளுமை உருவாக்கம் நடைபெற்றமை மற்றும் அவரது பயணங்கள் ஆகியவை குறித்து அவரது மறைவையொட்டி நாம் மீள்நினைவாக மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டிய தேவையுண்டு.

தமிழ்ச் சமூக ஆளுமை உருவாக்கத்தில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைக்கு பாரதி ஒரு குறியீடு. தமிழ்ப் புனைகதைக்குப் புதுமைப்பித்தன் ஒரு குறியீடு. இவ்வகையில், ஓவியக் கலைக்கு ஆதிமூலம் ஒரு குறியீடு. பாரதி, புதுமைப்பித்தன், ஆதிமூலம் என்ற வரிசை இளங்கோ, வள்ளுவன், கம்பன் என்ற வரிசையை ஒத்தது. இவ்வொப்பீட்டின் ஊடாக ஆதிமூலம் எனும் ஆளுமையை நாம் புரிந்துகொள்ள முடியும். இவர் நமக்களித்துச் சென்றுள்ள ஓவியங்களினூடாகப் பயணித்த உலகத்திற்கும் தமிழ்ச் சமூக இயக்கத்திற்குமான உறவை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தரத்தில் இயங்காது, மண்ணோடு மண்ணாக இழைந்திருந்த இவரது கலைவாழ்வே தமிழ்ச் சமூகத்தின் கலை வரலாறாகவும் அமையக் கூடும்.

இளமை முதல் இருந்த ஈடுபாடுகள், தனபால், சந்தானராஜ் ஆகிய பிற கலைஞர்களால் கூர்மைப்படுத்தப்படும் வாய்ப்பு சென்னைக் கலைப்பள்ளியில் ஆதிமூலத்திற்கு வாய்த்தது. மாணவனாக இருந்தபோது, கலைஞர்களுக்கு இயல்பாக உருப்பெறும் தாக்கங்களிலிருந்து ஆதிமூலம் விடுபட்டவர் என்று கூற முடியாது. இதனால்தான் அவரைத் தமிழகத்தின் ரெம்பாராண்ட், தமிழகத்தின் பிக்காசோ என்றெல்லாம் அழைக்கிறார்கள். பிக்காசோ கோடுகளை நமது கோடுகளாக மாற்றியவர் ஆதிமூலம். பிக்காசோவின் ஆளுமையின் வளங்களையெல்லாம் தனக்கான, நம் மண்ணுக்கான வளங்களாக மாற்றிக்கொண்டார். பிக்காசோவும் கீழைத்தேயக் கலைமரபுகளின் தாக்கத்திற்கு உட்பட்டவரே. இவ்வகையான ஆளுமைச் செயல்பாடுகள் மிகமிக அரிய நிகழ்வே. அதனால்தான் நமது பிக்காசோவாக ஆதிமூலம் இருக்கிறார். உலகம் தழுவிய ஆளுமையான பிக்காசோவின் இன்னொரு பரிமாணமாக ஆதிமூலத்தைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

தமிழ்ச் சமூகத்தின் கோலங்கள் மற்றும் சிற்பங்கள் - குறிப்பாக மண்சிற்பங்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுத் தொடர்ச்சியைத் தம்முள் கொண்டிருப்பதை நாம் அறிவோம். இச்சிற்பங்களே நடுகற்களாக, பல்வேறு உலோகங்களில் வடிக்கப்பட்ட பிரதிமைகளாக, கோயில் உருவாக்கங்களாக நமது சமூகத்தில் உருப்பெற்றன. இவற்றின் ஊடாக நவீனக் கலைஞன் எப்படிச் செயல்படுவது என்ற கேள்வி முக்கியமானது. ஆதிமூலத்தின் செயல்பாடுகளே அக்கேள்விக்குப் பதிலாக அமைகிறது. பிக்காசோவை உள்வாங்குதல் என்பதன் மறுதலை நிகழ்வு என்பது நமது மரபின் கோடுகளை நிலைநிறுத்துவதாக ஆதிமூலத்திற்கு வாய்த்திருக்கிறது.

நமது மண், மர, கல், சுதை சிற்பங்களுக்குள் இருந்த கோடுகளை ஆதிமூலம் கண்டுபிடித்தார். அதனை இன்றைய மொழியோடு இணைத்தார். இச்செயல் மிகமிக இயல்பாகவும் எவ்வகையான கூச்சல்களும் ஆர்ப்பாட்டங்களுமின்றி நிகழ்ந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். நமது சமூகம் சாதியச் சமூகம். அனைத்து வரலாறுகளையும் ஆதிக்கச்சாதியின் நுண்ணரசியலாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அவைதிக மரபின் ஊடாக நமது வரலாற்றைக் கட்டமைக்காமல், அவைதிக மரபையும் வைதிக மரபாக மாற்றும் தந்திரம் ஆதிக்கச் சாதியின் தந்திரம். இவ்வகையான கலை மோசடிகளிலிருந்து தப்பித்தவர் ஆதிமூலம். இதனால்தான் இவரது ஆளுமை தனித்த ஆளுமையாக இருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரியக் கலைமரபின் இருபதாம் நூற்றாண்டினுடைய தொடர்ச்சியாகவும் அடையானமாகவும் ஆதிமூலம் இருக்கிறார். முற்றக்கோலங்கள், மதுபனி, கலங்காரி ஆகிய பிற மரபுகளிலிருந்து நவீன ஓவிய உலகம் பெற்றுள்ள செழுமைகள் ஏராளம். இதனை ஆதிமூலத்தின் ஊடாகவும் நாம் புரிந்துகொள்ள முடியும். இவ்வகையான ஆளுமை தமிழ்ச் சமூகத்திற்கு வாய்த்தமைக்கு நாம் என்றும் கர்வம் கொள்ளலாம்.

கலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மிக முக்கியமான பயிற்சி மெய்யுருக்களை உருவாக்குவது. இவ்வகைப் பயிற்சியின் ஊடாக, நமது சமூகத்தின் எதார்த்தமான மெய்யுருக்களை உருவாக்கும் தேடலுக்குக் கலைஞர்கள் செல்வர். ஆதிமூலம் அவர்களின் மெய்யுருக்கள் மூலமாக நாம் காணும் உடல்மொழி பிரமிக்கத்தக்கது. நமது மரபின் மதுரைவீரன், நாயக்கர் கால அரசர்கள் மற்றும் அவர்களைச் சுற்றி இருந்தவர்கள், காந்தி ஆகிய மெய்யுருக்களை உருவாக்கிய ஆதிமூலத்தின் கோடு, தனித்த மொழியை உள்வாங்கிய கோடுகளாகும். இம்மெய்யுருக்களின் கட்டுக்குடுமி, கொண்டை, முறுக்கு மீசை, வீர வாள், முரட்டுத் தசைகள், தசைகளுக்குள் இருக்கும் நரம்புகள் ஆகியவை உணர்த்தும் உடல்மொழி, பார்வையாளனின் புலன்களைக் கிறங்கச் செய்பவை. இவ்வகையான கிறங்கச் செய்யும் உடல்மொழியைக் காட்டிய இக்கலைஞன் பிற்காலங்களில் வெளிகள் (கஹய்க்ள்ஸ்ரீஹல்ங்) மூலம் காட்டிய வண்ணத்திலும் கிறங்கச்செய்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம். நாட்டார் மரபில் உருவான வீரர்கள், நாயக்கர் கால அரசர்கள் ஆகியோரை நம்முன் காட்சியாக நடமாடச் செய்த ஆதிமூலத்தின் ஆளுமை புளகாங்கிதம் தரும் வல்லமையுடையது.

தமிழ் ஓவிய மரபில் பெண் தொடர்பான ஓவியங்கள் ரவிவர்மா தாக்கத்திலிருந்து விடுபட்டதாகக் கூற முடியாது. ஆனால் ஆதிமூலத்தின் கோடுகளில் உருவான பெண்கள் ரவிவர்மா மரபை உடைத்ததைக் காண்கிறோம். பெண் தொடர்பான ஓவிய மரபில் புதிய கோடுகளை உருவாக்கியதைப்போல் கூத்துக் கலைஞர்களின் அசைவை தம் கோடுகளில் கொண்டு வந்தவர் ஆதிமூலம். அசைவைக் கோடுகளில் கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல.

காந்தி நூற்றாண்டில், இளமைக் காலம் முதல் பாதித்த காந்தியின் உருவங்களைப் பல்வேறு கோணங்களில் உருவாக்கி மகிழ்ந்தார். ஓவியர்களின் கோடுகளுக்குள் வெளிப்படும் உணர்வுகள் அவ்வோவியரின் உணர்வுகளாக உறுப்பெற்று, பார்வையாளரின் புலன்களுக்குள் அவர்களது உணர்வுகளாகவும் உருப்பெறும். ஆதிமூலத்தின் காந்தியார் தொடர்பான மெய்யுருக்களின் கோடுகளுக்கு அவ்வகையான வலிமை இருப்பதாகக் கூறலாம். காந்தி தொடர்பான விமர்சனங்களையும் கோடுகளில் கொண்டு வந்திருக்கலாம். அது நிகழவில்லை. நாம் எதிர்பார்க்கவும் முடியாது. காந்தி என்ற ஆளுமை இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு கலைஞர்களையும் பாதித்த ஆளுமை. கோடுகளில் ஆதிமூலத்தைக் காந்தியார் சார்ந்த உயர்வுகள் பாதித்த அளவிற்கு வேறு கலை வடிவங்களில் காந்தியார் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பிக் கொள்ளலாம். ஆம். காந்தியார் ஆதிமூலம் உருவாக்கிய மெய்யுருக்களில், அதனுள் உணர்வாகப் பதிந்துள்ள கோடுகளில் இடம் பெற்ற அளவிற்கு வேறு கலை வடிவங்களில் இடம் பெறவில்லை என்று கூற முடியும். ஆதிமூலத்தின் காந்தி மெய்யுருக்கள் ஆச்சரியங்களாக அமைபவை. காந்தியை உயிரோடு காலங்காலத்திற்கு உலவச் செய்பவை. இக்கலைஞனின் சமூக இயங்குதளத்தைப் புரிந்துகொள்ள காந்தி மெய்யுருக்கள் அரிய சாட்சி. காந்தியாரின் வெறும் வாழ்க்கை நிகழ்வுகளாக மட்டும் அவை அமையாமல் அவரின் பல்வேறு உணர்வுகளை இவரது கோடுகள் காட்சிப்படுத்துவதை நாம் உணரலாம்.

ஆதிமூலத்தின் கோடுகள், வண்ணங்கள், வெளி ஆகியவை தொடர்பான பயணம் 1950களில் தொடங்கி 2000களில் நிறைவடைகிறது. கோடுகளில் தொடங்கியவர் பிற்காலங்களில் நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைக்கொண்டு வெளிகளை உருவாக்கினார். இவ்வெளிகளின் வண்ணம் கோடுகளுக்குள் கிடைத்த உணர்வுத் தளத்தைச் சில கூறுகளில் மிஞ்சுவதாகவே கருத முடியும். உலக அளவில் இவரது வெளி சார்ந்த படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. உலகம் தழுவிய அளவில் நிகழ்த்தப்பெற்ற காட்சிகளில் ஆதிமூலத்தின் வெளி சார்ந்த வண்ண ஓவியங்கள் இடம் பெற்றன. இவ்வகையான அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற கலைஞர்கள் மிகமிகச் சிலருள் ஆதிமூலம் ஒருவர்.

பாரதியாக, புதுமைப்பித்தனாகத் தமது கோடுகள், வண்ணங்கள், வெளிகளில் வாழும் ஆதிமூலம் இருபதாம் நூற்றாண்டின் அரிய நிகழ்வே.

Pin It