ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்ற காஞ்சி சங்கரன் விஜயேந்திரனும், அவருடன் சென்ற ”ஹைகோர்ட்” எச்.ராஜா, அரசியல் தரகர் குருமூர்த்தி உள்ளிட்ட கும்பலும் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் கருவறைக்குள் சென்று காஞ்சி சங்கரன் விஜயேந்திரன் பூஜை செய்ய முயற்சி செய்துள்ளார். அந்தக்கோவிலின் சிவ ஆகமவிதி அதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறி அங்கிருந்த குருக்கள் தடுத்துள்ளனர்.
உடனே ”ஹைகோர்ட்” எச்.ராஜாவும், அரசியல் புரோக்கர் குருமூர்த்தியும் தகராறு செய்து, அறநிலையத் துறை அதிகாரிகளை மிரட்டி விஜயேந்திரனைக் கருவறைக்குள் போய்ப் பூஜை செய்ய வைத்துள்ளனர்.
ஏற்கனவே சுந்தர்ராமன் கொலையில் சிறைக்குச் சென்ற சங்கரன் ஜெயேந்திரனுக்கு இதே கோவிலில் அனுமதி மறுக்கப்பட்டது தெரிந்தும், மறுபடியும் இந்தக் கும்பல் ரவுடியிசம் செய்து இதைச் சாதித்துள்ளது.
அனைவரும் அர்ச்சகராகலாம் என்று தலைவர் கலைஞர் சட்டம் கொண்டுவந்து செயல்படுத்திய போது... ஆகமம் அனுமதிக்காது என்று புழுகி நீதிமன்றம் சென்ற கூட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம் பாடிய பெரியவர் ஆறுமுகசாமியைத் தூக்கி வெளியில் வீசி எறிந்த கூட்டம்தான், இப்போது உண்மையிலேயே ஆகமத்தில் சொல்லியிருப்பதை மீறியுள்ளது... அதாவது அவர்கள் மொழியில் சொல்வதென்றால் ராமநாத சுவாமிக் கோவில் தீட்டுப் பட்டுவிட்டது... அப்படியென்றால் தீட்டுக்கழிக்க வேண்டுமா இல்லையா? என்ன செய்யப் போகிறார்கள் சைவம் காப்பவர்கள்?
சரி போகட்டும்... இதை சத்தியவேல் முருகனார் போன்ற சைவப் பெரியவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
ஆனால் இதுவன்று மையச் சிக்கல்...
ராமேசுவரம் கோவில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்த அரசு அதிகாரிகளை சங்கரனுடன் சென்ற எச்.ராஜா, குருமூர்த்தி என்ற இரண்டு பார்ப்பனர்கள் மிரட்டி காரியத்தைச் சாதித்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் அதிகாரிகளை அந்தக் கூட்டத்தோடு ஒத்துப்போகச் சொல்லியிருக்கிறார். இன்று ராமேசுவரம் கோவிலில் ரவுடித்தனம் செய்து தங்கள் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டியதைப் போல, தமிழ்நாடு முழுவதுமுள்ள கோவில்களிலும் செய்யப் பார்க்கிறார்கள்.
நூறாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல அனைத்துக் கோவில்களையும் அக்ரகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பார்ப்பனக் கூட்டம் தொடர்ந்து முயற்சி செய்கிறது.
இது போன்ற சிறு தடைகூட இல்லாமல் எல்லாக் கோவில்களிலும் தாங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான், இந்து சமய அறநிலையத் துறையைக் கலைத்துவிடச் சொல்கிறது பார்ப்பனக் கும்பல்.
இந்துக் கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்கச் சொல்லும் இந்த “பஜனை கோஷத்தின்” பொருள் அக்ரகாரத்திடம் ஒப்படையுங்கள் என்பதுதான். அறநிலையத் துறை மட்டும் இல்லையென்றால் இன்று ராமேசுவரம் கோவிலில் நடந்தது அனைத்துக் கோவில்களிலும் நடக்கும்.
இந்தக் கோவிலில், சிருங்கேரி மடத்தில் ஆகம தீட்சை பெற்ற மகாராஷ்டிரா பார்ப்பனர்கள்தான் பூஜை செய்ய வேண்டும் என விதி இருக்கிறதாம். இது மாநிலங்கள் பிரிக்கப்படாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட விதியாக இருக்கலாம்.
இப்போது தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறைக்குக் கீழ் வந்துவிட்டபின் தமிழர்களுக்கே பூஜை வேலை தருவதுதான் சரி. ஆகமம் பயின்ற இருநூறுக்கும் மேற்பட்ட நம்முடைய இளைஞர்கள் இதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப் போல முறைப்படி ஆகமக் கல்லூரியில் சேர்ந்து படித்துச் சான்றிதழ் பெற்றால் காஞ்சி சங்கரன் விஜயேந்திரன் கூட இந்த வேலைக்குத் தகுதி பெற்றுவிடுவார்தானே... பிறகு யார் தடுக்கப் போகிறார்கள்? அப்படித் தடுப்பது சட்டப்படித் தவறாகிவிடுமே...
தமிழ்நாட்டின் கோவில்களைப் பார்ப்பனர்கள் கைப்பற்றப் போடும் சதித்திட்டமே... ‘‘அறநிலையத் துறை வேண்டாம்.. இந்துக்களிடம் கோவில்களை ஒப்படையுங்கள்’’ என்ற விசப்பிரச்சாரம்...
சங்கரனைக் கருவறைக்குள் விடச்சொல்லி தகராறு செய்த எச்.ராஜாவும் குருமூர்த்தியும் ஒரு நாடார் இந்துவையோ, முதலியார் இந்துவையோ, செட்டியார் இந்துவையோ கருவறைக்குள் விட்டால் அமைதியாக இருப்பார்களா? மாட்டார்கள்.
ஏனெனில் கோவில் கருவறை மீதான அவர்களின் ஆதிக்கமே, இந்த இந்திய நாட்டின் சமூக அரசியல் ஆதிக்கத்தின் அடித்தளமாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
அந்த அடித்தளத்தை அசைத்து அடித்து நொறுக்குவதே அனைத்து மக்களுக்குமான சமூக நீதி அரசியலை வலுவாக நிலைநாட்டுவதற்கான வழி என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ராமேசுவரம் கோவிலில் ரவுடியிசம் செய்த இந்தக் கும்பலின் ஆதிக்கத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கோவில்களில் இருந்தும் துடைத்தெறிய வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையை மேலும் வலுவாக்க வேண்டும்.
- இரா.உமா