பா.ஜ.க.வைச் சேர்ந்த ராகவன் சொல்வதைப் பார்த்தால், நரேந்திர மோடி சுற்றிச் சுற்றி 90 கூட்டங்களுக்கு மேல் பேசிவிட்டார்.

பிழைகள் மலிந்த வரலாற்றுச் செய்திகள், போகிற இடங்களில் எல்லாம் பொய்யான வாக்குறுதிகள், இவைதான் மோடியின் மஸ்தான் பேச்சு.

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோகப் போகிறேன் என்று பிரதமர் கனவில் பேசிக் கொண்டிருக்கும் மோடி, அதற்கான தொலைநோக்கு, பொருளாதார அடிப்படையிலான மக்கள் நலத் திட்டங்கள் குறித்து இதுவரை பேசவில்லை.

மாறாக, தன்னுடைய பா.ஜ.க. ஆட்சியில்தான் குஜராத் மாநிலம் எல்லாத் துறைகளிலும் முன்னேறி விட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது.

கிராமப்புற மக்களின் வேலையை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட பா.ஜ.க. அரசு முடிவு செய்திருக்கிறது. அதனால் 13 ஆயிரம் பேர் பணி இழப்பிற்குப் பலியாக இருக்கிறார்கள்.

குஜராத் அரசுப் பணிகளுக்கு என்று, குறிப்பாக சுகாதாரப் பணியாளர் போன்ற அரசுத் துறைகளில் காலி இடங்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

வேலை வாய்ப்பை நாடி வருபவர்களிடம் லஞ்சமாகக் கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டுள்ளது. இந்த ஊழல் குஜராத் அரசு நிறுவனங்களில் நடந்துள்ளது.

இந்த ஊழலில் மாநில பா.ஜ.க. தலைவர்களுள் ஒருவரான கல்யாண்சிங், அவரின் உதவியாளர் நிஷால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் இதுகுறித்துச் சொல்லும் போது, இந்த ஊழல் முறைகேடு சங்கிலித் தொடர் போலப் போவதாகவும், காவல்துறையில் முறையிட்டால், நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சொல்கிறார்கள்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, தேநீரகங்களில் அமர்ந்து மோடி பேசுவதையும், புனையப்படும் கதைகளையும், ஊடகங்கள் பெரிதாக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. வடக்கே போனால் பாகிஸ்தானுக்குச் சவால் விடுவதும், வட கிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் பேசும்போது சீனாவுக்குப் போர் எச்சரிக்கை விடுவதுமாய் பல நாடகங்களை மோடி நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தலைமையிலான குஜராத்திலோ பல ஊழல்கள் நடைபெற்று வருவதை மேலே நாம் பார்த்தோம்.

இதுதான் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத்தின் நிலைமை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

மோடி பிரதமர் ஆனால் இந்தியாவே குஜராத்தாக மாறிவிடும் அபாயம் தெரிகிறது.

Pin It