‘லட்சுமி’ என்ற தமிழ்க் குறும்படம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் விவாதங்களைத் தொடங்கி வைத்துள்ளது. இந்தக் குறும்படம் பற்றிய விமர்சனத்தைவிட, இப்படத்தின் மூலம் அனை வராலும் பேசப்படும் பொருளாக மாறியுள்ள ‘பெண்ணின் கற்பு’, ‘பெண்ணின் ஒழுக்கம்’ ஆகியவை குறித்து கூடுதலாக விவாதிப்பது அவசியமாகிறது. லட்சுமியை மறந்துவிட்டு, நேரடியாக விவாதிப் போம்.
கணவனைத் தவிர வேறொருவரை விரும்புவது சரியா?
கணவனோடு வாழும்போதே - கணவனைத் தவிர வேறொரு ஆணிடம் செக்ஸ் வைத்துக் கொள்வது சரியா? இது தான் ஆண்களின் பதட்டம். ஒரே வரியில் பதில் சொல்லலாம். இது பெண்களின் பிரச்சனை. அவர்களே முடிவு செய்யட்டும். மனைவி யுடன் வாழும்போதே இன்னொரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதை அந்தந்த ஆண் தான் முடிவு செய்து கொள்கிறான். அல்லது அந்த ஆணும், குறிப்பிட்ட அந்தப் பெண்ணும் முடிவு செய்கிறார்கள்.
அதேபோல, பெண்களும் முடிவு செய்து கொள்ளட்டும். கணவரைத் தவிர பிற ஆண்களை, பாலியல் தேவைக்காக மட்டுமே நாடுவது சரிதான் என்றோ - பெண்கள் இப்படி நினைக்கவே கூடாது என்றோ நாம் எந்தக் கருத்தையும் திணிக்க வர வில்லை. சூழலைப் பொறுத்து, தேவையைப் பொறுத்து அதைப் பெண்களே முடிவு செய்து கொள்ளட்டும். அதனால் வரும் இன்ப - துன்பங் களை ஆண்களைப் போல அவர்களே ஏற்றுக் கொள்ளட்டும்.
மனைவியோடு வாழும் ஒருவன் வேறொரு பெண்ணை பாலியல் தேவைக்காக மட்டுமே அணுகியபோதும், அவற்றைக் கேள்விப்பட்ட போதும், அது பற்றிய கலை இலக்கியங்களைப் படித்த போதும் - அதுபற்றிய திரைப்படங்களைப் பார்த்த போதும் ஆண்கள் அனைவரும் பதறினார் களா? வரலாற்றில் அப்படி ஒரு நிகழ்வே நடந்த தில்லையே?
தனது துணையைத் தவிர வேறொரு பெண்ணை பாலியல் தேவைக்காக மட்டுமே வைத்துக் கொள்பவர்கள் தான் நமக்கு - ஆரியக் கடவுள்களாகவும், குலதெய்வ - நாட்டார் தெய்வங் களாகவும், பார்ப்பன இதிகாசங்களின் நாயகர் களாகவும், தமிழ்க்காப்பியங்களின் தலைவர் களாகவும், தமிழ்ப் பேரரசுகளின் மன்னர்களாகவும், திரைப்படங்களில் கதாநாயகர்களாகவும் இருக் கின்றனர். தற்கால அரசியல் தலைவர்களாகவும், பார்ப்பனச் சாமியார்கள்-தமிழ்ச்சாமியார்களா கவும், அதிகாரிகளாகவும், பத்திரிக்கையாளர்களாகவும், முற்போக்காளர்களாகவும், சராசரி மனிதர்களாகவும் நம்மிடையே வாழ்ந்தும் வருகிறார்கள்.
இவர்களைப் பார்த்து நாம் என்றாவது ஒழுக்கம், கற்பு என்ற கண்ணோட்டத்தில் விரலை நீட்டியிருப்போமா? சராசரி ஆண்களும் சரி. முற்போக்குப் பேசும் ஆண்களும் சரி மேற்கண்ட ஒழுக்கக் கேடுகளை அங்கீகரித்துத்தான் வந்துள் ளோம். ஆண்கள் மட்டுமல்ல; புரட்சிகரமாகப் பெண்ணியம் பேசும் பல பெண் தோழர்கள்கூட பெண்ணடிமைத்தனத்தை விதைத்து, பரப்பவும் செய்யும் மதங்களையும், சாஸ்திரங்களையும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு, பழக்கவழக்கங்கள், இலக்கியங்களையும் எதிர்த்து எந்த எதிர்வினைகளையும் நடத்துவதில்லை.
மாயோன் பெருவிழா
விஷ்ணு என்ற பார்ப்பனக் கடவுளின் 8 வது அவதாரம் தான் கண்ணன். அவனுக்கு ருக்மணி, சத்தியபாமா, ஜாம்பவதி, நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமணை, பத்திரை என 8 மனைவிகள். இந்த எட்டு மனைவிகள் அல்லாமல், காதலுக்காக என்று தனியாக ‘இராதா’ என்ற ஒரு காதலியை வைத்திருந்தான் மாயோன். இந்த ஒன்பது பேரும் போதாது என்று கூடுதலாக 16,000 மனைவிகளும் இருந்தனர் என்று கிருட்டிணனின் புராணங்களே கூறுகின்றன.
இந்த ஒழுக்கசீலன் கண்ணனின் பிறந்த நாளைத்தான் ‘மாயோன் பெருவிழா’ என்ற பெயரில் நமது தமிழ்ப்பண்பாட்டுக் காவலர்கள் கொண்டாடி வருகிறார்கள். “ஆரியர்களுக்கு எதிராகத் தமிழ்ப் பண்பாட்டை மீட்கிறோம்” என்றும், “கண்ணன் என்பவன் தமிழ்த் தலைவன் மாயோன் தானே தவிர, கிருஷ்ணன் அல்ல”என்றும் தோழர் சீமான் அறிவிக்கிறார். ஆனால், மாயோன் பெருவிழாவுக்கு நாம்தமிழர் அமைப்பு தேர்ந்தெடுத்த நாள் பார்ப்பனர்கள் குறித்துக்கொடுத்த நாளாகும்.
‘ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில்’ கண்ணன் பிறந்ததாக பார்ப்பனர்களின் புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பார்ப்பனர்கள் கூறியுள்ளபடி ஆவணியில் ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் தான் இந்த ‘மாயோன் பெருவிழா’வும் கொண்டாடப்படுகிறது.
இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் தான் இந்துப் பார்ப்பனர்களும், தமிழ்ப் பண்பாட்டுப் புரட்சியாளர்களும் ஒருசேரக் கொண்டாடினர். அவன் மாயோனா? கிருஷ்ணனா என்ற ஆய்வு நமக்குத் தேவையில்லை. தமிழ்த் தலைவனாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவனுக்கு கற்பு வேண்டாமா? ஒழுக்கம் வேண்டாமா? எட்டு மனைவிகள் இருக்கும் போது, காமத்திற்காக கூடுதலாக ராதாவை வைத்திருந்த கண்ணன் - மாயோன் - கிருஷ்ணன் தான் நமக்குக் கடவுள்.
கெளதமர் என்ற முனிவரின் மனைவியாகிய அகலிகையை, இந்திரன் என்ற கடவுள் தனது பாலியல் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காக முயற்சி செய்தான். அதை அறிந்த முனிவர் இந்திரனுக்குச் சாபம் அளித்தார். இராமன் என்று ஒழுக்கசீலரான கடவுள் இந்திரனை அந்தச் சாபத்திலிருந்து காப்பாற்றியதையும் புராணங்கள் கூறகின்றன.
சிவனுக்கு பார்வதி என்ற மனைவி இருக்கிறார். விஷ்ணுவுக்கும் பல மனைவிகள் உள்ளனர். தேவ - அசுரப் போராட்டத்தில், அசுரர்களை வெல்வதற் காக, சிவனும், விஷ்ணு இணைந்து ஒரு திட்ட மிடுகின்றனர். போரில் வெல்ல முடியாத அசுரர் களை ஏமாற்றி வெல்ல முடிவெடுத்தனர். அதற்காக விஷ்ணு பெண்ணாக மாறி, அசுரர்களை ஏமாற்றி, போரில் வெல்கிறார்கள். பெண்ணாக மாறிய அந்த விஷ்ணுவைப் பார்த்து பாலியல் வெறி ஏற்பட்டு உறவு நடக்கிறது. அந்த உறவில் பிறந்தவன் தான் அய்யப்பன்.
இதெல்லாம் நாம் சொல்வதில்லை. அபிதான சிந்தாமணி என்று இந்துமத நூலும், இந்து மத பக்தி இலக்கியங்களும், புராணங்களும் கூறுபவை. இப்போது புதிதாக, இந்த சிவன், விஷ்ணு, இந்திரன், இராமன் அனைவரும் தமிழ்த்தலைவர்கள்தான் என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். இவர்களது ஒழுக்கம், கற்பு இவை தாம் நாம் கவனிக்க வேண்டியவை.
இப்படிப்பட்ட கற்பு மீறிய ஆண் கடவுள் களின் ஒழுக்கத்தை எதிர்க்காமல், அவர்களைக் கடவுள்களாக ஏற்றுக்கொண்டிருக்கும் சமுதாயம், இதே நிலையில் ஒரு பெண் - கணவனைத் தவிர வேறொரு ஆணைப் பாலியலுக்காக அணுகுவதைத் தவறு என்று சொல்வது மிகப்பெரும் அயோக்கியத் தனமும் நேர்மையற்ற செயலும் ஆகும்.
பெண்ணிய அமைப்புகள்
இவர்களை எல்லாம் கடவுளாக வழிபடும் சமுதாயத்தில் - இந்தக் கடவுள்களையும், இந்து மதத்தையும் அழித்து ஒழிப்பது பற்றிய விவாதங் களைக்கூடத் தொடங்காத பெண்ணிய இயக்கங் களால் பாலின சமத்துவமோ, பாலியல் சமத்து வமோ எப்படி உருவாகும்? பெண்ணிய அமைப்புகள் என்று பார்த்தாலும், தோழர் ஓவியா அவர்களின் புதியகுரல் அமைப்பைத் தவிர வேறு எந்தப் பெண்ணிய இயக்கங்களும் இதைப் பேசுவதில்லை.
ஒழுக்கம் - கற்புக்குக் கேடான கடவுளர்களின் பிறந்த நாட்களையோ - எந்த மதப் பண்டிகைகளை யுமோ கொண்டாடாத பெரியார் தொண்டர்களைத் தவிர, மற்ற தத்துவங்களைப் பேசும் முற்போக்காளர் கள் இன்றுவரை இந்தக் கடவுளர்களைப் பொது வெளியில் விமர்சிப்பது இல்லை.
தமிழ்நாட்டில் தோழர் பெரியாரைப் போல, வடநாட்டில் ‘இந்து மதம் ஒரு புதிர்’ ‘இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்’ போன்ற நூற்களின் மூலம், அனைத்து இந்துமதக் கடவுள்களையும், வேதங் களையும், சாஸ்திரங்களையும் சல்லி சல்லியாகப் பிரித்தெடுத்து, இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்தெறிந்தவர் தோழர் அம்பேத்கர். அவை போன்ற இந்து மத எதிர்ப்பு நூற்களை இதுவரை தி.க, தி.வி.க, த.பெ.தி.க போன்ற திராவிடர் இயக்கங்கள் மட்டுமே அச்சிட்டுப் பரப்பி வருகின்றன. மற்ற முற்போக்காளர்கள் இதைப் பேசுவதே இல்லை.
நாட்டார் தெய்வங்களிலும் ஆணாதிக்கம்
நாட்டார் தெய்வங்கள் என்று சொல்லப்படும் அய்யனார் என்ற ஆண் தெய்வத்திற்கு ‘பூசனை’, ‘புட்கலை’ என்று இரண்டு மனைவிகள் உள்ளனர். அதே நாட்டார் தெய்வங்களில் பெண் தெய்வமாக வணங்கப்படும் மாரியம்மன் தனது கணவன் ஜமதக்கினியைத் தவிர வேறொரு ஆணை மனதால் நினைத்ததால், தன் மகனாலேயே வெட்டிக் கொல்லப்படுகிறார்.
நாட்டார் தெய்வங்களிலும் ஆணுக்கொரு நியாயம். பெண்ணுக்கொரு நியாயம். நாட்டார் தெய்வங்களின் மீது ஆரியக்கற்பனைகள் திணிக்கப்பட்டு விட்டதாக ஆய்வாளர்கள் கூறலாம். அந்த விவாதம் வேறு. இப்போது மக்கள் நம்பும் கதை இதுதான். இதன் அடிப்படையில் நாட்டார் தெய்வங்களும் பெண்ணின் “கணவன் கடந்த காதலை” ஏற்கவில்லை என்பதே உண்மை.
அன்பானவன் - அசராதவன் - அடங்காதவன்: கோவலன்
தமிழின் பெருமை மிகுந்த ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று என்று கூறப்படும் சிலப்பதிகாரம் வலியுறுத்தும் பண்பாடு என்ன? கோவலன் என்ற தமிழ்த்தலைவனுக்குக் கண்ணகி மனைவியாக இருக்கிறார். கோவலனின் பாலியல் வெறிக்கு அவள் போதவில்லை. மாதவியைத் தேடி ஓடுகிறான். தன்னிடமிருந்த பொருள் எல்லாம் மாதவியிடம் இழக்கிறான். அப்போதும் அவனது வெறி அடங்கவில்லை. அவனது வெறி அடங்கு வதற்காகக் கண்ணகி தன்னிடம் இருந்த கால் சிலம்பைக் கொடுத்து, மாதவியிடம் அனுப்பி வைக்கிறார். அதனால் தான் கண்ணகி கற்புக்கரசி என இன்று வரை தமிழர்களால் புகழப்படுகிறார். சீவக சிந்தாமணியின் கதாநாயகன் சீவகனுக்கு எட்டு மனைவிகள் இருந்துள்ளனர்.
தமிழர்களின் பெருமை மிகுந்த அடையாள மாகக் கருதப்படும் இராஜராஜ சோழன், சேரன், பாண்டியன் என அனைத்துத் தமிழ் மன்னர்களும் - இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மன்னர் களும் தங்களது மனைவி - துணைவி கூட்டங் களோடு மட்டும் தங்களது அன்பை நிறுத்திக் கொள்ளவில்லை. மனைவி என்ற உறவைத்தாண்டி காமத்திற்காக அந்தப்புரங்களையும் இவற்றில் நூற்றுக்கணக்கான ஆசை நாயகிகளையும் வைத் திருந்தனர்.
வரலாற்றின் பெண் அரசிகள் மிகவும் குறைவு. வேலுநாச்சியார், ஜான்சி ராணி, ராணி மங்கம்மாள் போன்ற ஒரு சிலரைத்தான் காண முடிகிறது. அந்த அரசிகள் எவரும் கணவன் என்ற உறவைத் தாண்டி அந்தப்புரங்களில் ஆண் ஆசைநாயகர்களை வைத்துக் கொண்டிருந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை.
அந்தப்புரங்களில் கொட்டமடித்த மன்னர் களை அவர்களது கற்பு-ஒழுக்கக்கேட்டு நட வடிக்கைகளுக்கு எதிராக இன்றுவரை யாரும் கண்டித்ததில்லை. தமிழர்களின் பண்பாட்டையோ - இந்துக்களின் பண்பாட்டையோ சீரழித்து விட்ட தாகக் கொதித்தெழவில்லை.
முதல்வர் வேட்பாளர்களின் திரைப்படங்கள்
இக்கால இலக்கிய வடிவங்களில் ஒன்றான திரைப்படங்களிலும் இந்தப் போக்கு தொடர்கிறது. தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமாக உள்ளவரும், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குபவரு மான இரஜினிகாந்த் ‘வீரா’ என்ற படத்தில், திருமணத்திற்குப் பிறகு, தனது முன்னாள் காதலியைத் திருமணம் செய்வார். அந்த இரண்டாம் திருமணத்தை மறைக்க அவர் படும் பாட்டை நாம் எல்லோரும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம்.
முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கும் மற்றொரு வேட்பாளர் கமலஹாசன், பஞ்சதந்திரம் படத்தில், சிம்ரனின் கணவராக வருவார். அவரது பிறந்தநாளில் அவரது நண்பர்கள் ஒரு பரிசளிப் பார்கள். அந்தப் பரிசு, அதாவது பொருள் என்ன தெரியுமா? பாகுபலி ‘ரம்யா கிருஷ்ணன்.’ வெளிப்படையாகவே, பெண்ணை ஒரு காமப் பொருளாகவும், ஆண் திருமண உறவைத் தாண்டி பாலியல் தேவைக்காக வேறொரு பெண்ணை நாடலாம் என்பதையும் பஞ்சதந்திரம் காட்டியது. நாம் அனைவரும் கைதட்டி, பாராட்டி, வரவேற்றோம்.
கமலஹாசன் நடித்த மற்றொரு படம் ‘சதிலீலாவதி’. அதில், ஏற்கனவே திருமணம் ஆன இரமேஷ் அரவிந்த், திருமண உறவைத் தாண்டி, பாலியல் தேவைக்காக, ‘ஹீரா’வை வைத்துக் கொள்ளத் துடிப்பார். அதையும் பார்த்து கைதட்டிச் சிரித்து மகிழ்ந்தோம்.
பெண்ணின் காதல்
மனைவியைத் தாண்டிய காதலையும், காமத்தையும் ஆதரித்த கடவுள்களும், இலக்கியங்களும், பண்பாடுகளும்-பெண்களின் காதலை எப்படிப் பார்த்தன? இராமாயணக் காலத்திலேயே இராமனை விரும்பிய ‘சூர்ப்பனகை’ மூக்கறுப்பட்டாள்.
இதே திரைத்துறையில், காதலை மய்யமாக வைத்து நூற்றுக்கணக்கான படங்கள் வந்திருக்கின்றன. அந்தக் காதல் படங்கள்கூட பெரும்பாலும் ஆணின் காதலைப் பேசுபவையாகத்தான் இருக்கின்றன. ஒரு பெண் ஒரு ஆணைப் பார்த்துக் காதலித்து, வெற்றி-தோல்விகளைச் சந்திப்பது போன்ற படங்கள் மிக மிகக் குறைவாகவே வந்துள்ளன.
ஆணைப்பார்த்து பெண் ஆசைப்பட்டால், அவள் வில்லியாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ரோசாப்பூ ரவிக்கைக்காரி தீபா, படையப்பா ரம்யா கிருஷ்ணன், பார்த்தேன் ரசித்தேன் சிம்ரன், உயிர் சங்கீதா, சூரியவம்சம் ப்ரியா ராமன் இப்படி பல எடுத்துக்காட்டுக்களைக் கூறமுடியும்.
பஞ்சதந்திரத்தையும், சதிலீலாவதியையும் பார்த்துச் சிரித்த நமக்கு, லஷ்மியையும் இதே அளவில் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிய வில்லையே ஏன்? நமது கடவுள்கள், நமது இலக்கியங்கள், நமது மன்னர்கள், நமது திரைக் காட்சிகள் என அனைத்துமே ஆண் தனது பாலியல் தேவைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கும்போதும் - அவற்றை இலட்சக்கணக்கான ஆண்கள் கண்டு கொள்வதில்லை. தனது துணையிடம் மட்டுமே பாலியல் உறவுகளை வைத்துக்கொண்டுள்ளனர்.
அதுபோல, நம் வீட்டுப்பெண்கள் இயல்பாகக் கடந்து போக மாட்டார்களா? இந்தக் குறும் படத்தைப் பார்த்த உடனேயே அடுத்தவனைத் தேடிப் போய்விடுவார்களா? சரி, அப்படிப் போக வேண்டிய நிலை இருந்தால், தேவை இருந்தால், அதைத் தடுக்கவோ, அதைக் குற்றம் என்று சொல்லவோ நாம் யார்? இந்தச் சமூக அக்கறை இத்தனை நூற்றாண்டுகளாக ஆண்கள் மற்ற மற்ற பெண்களைத் தேடியபோது ஏன் வரவில்லை?
ஆண் செய்யும் தவறுகளைத் தானும் செய்வதுதான் பெண்ணியமா?
இதுபோன்ற கேள்விகளை யார் கேட்கிறார் கள் என்று பாருங்கள். இன்றும், நாளையும் தன்வீட்டில், தான் சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைக்க வேண்டும் என்ற சிறு.... மிக மிகச் சிறு....அறிவுகூட இல்லாதவர்களும், அதைச் செய்யாதவர்களும்தான் இப்படிப்பட்ட கேள்வி களைக் கேட்டு வருகிறார்கள்.
திருமணம் ஆன ஒரு பெண், உறவுக்காக வேறொரு ஆணை நாடக்கூடாது. அது பெண் விடுதலை இல்லை என்று சொல்பவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாருங்கள். ஒரு நாள், ஒரு பொழுதாவது தன் மனைவிக்கு ஒரு கோப்பைத் தேநீராவது தயாரித்துக்கொடுத்திருக்க மாட்டான். சமையலில் சிறு உதவியாக, பாத்திரங்களைக் கழுவித்தருவது என்பதைக்கூடச் செய்திருக்க மாட்டான். ஆனால், லஷ்மி போன்ற படங்கள் வந்தால் பதறித்துடித்து, இதெல்லாம் பெண்ணியம் இல்லை. இது ஒழுங்கீனம். பெரியார் அப்படிச் சொல்லவில்லை. அம்பேத்கர் காட்டிய பெண்ணியம் இது இல்லை. மார்க்ஸ் இப்படி வரையறுக்கவில்லை என்றெல்லாம் வகுப்பு நடத்துவார்கள்.
உலகில் ஒழுக்கம், நியாயம், தர்மம், சட்டம் என்பவற்றின் வரையறைகள் எல்லாம், கைவலுத் தவர்கள் மட்டுமே நிர்ணயிப்பதாக உள்ளன. இந்த வரிசையில் பெண் விடுதலையும் சேர்ந்து விடக் கூடாது என்பதே நமது நிலை. இதே செயல்கள் இத்தனை நூற்றாண்டுகளாக பெருமையுடன் நடந்து கொண்டிருந்தன. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதையே இப்போதும் செய்யுங்கள். அதைத்தான் - அதை மட்டும்தான் ஒழுக்கம் என்கிறார் பெரியார்.
...“நான் திருடுவது குற்றமல்ல. நீ திருடுவது தான் குற்றம். நான் பொய் சொல்வது குற்றமல்ல. நீ சொல்வது தான் குற்றம். நான் விபசாரம் செய்வது குற்றமல்ல. நீ செய்வதுதான் குற்றம்” என்பது போன்றதான பொது ஒழுக்கங்கள் என்பவைகளும் பொதுக்கட்டுப்பாடுகள் என்பவைகளும் ஒரு நாளும் பொதுவாழ்வுக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பயன்படாது. இன்று உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் இருந்து வரும் ஒழுக்கம், கட்டுப்பாடு, தர்மம் முதலியவைகள் எல்லாம் பெரிதும் இயற்கைக்கு எதிராகவும் அடிமைத்தனத்திற்கு ஆதரவாகவும், தனிப்பட்டவர்கள் சுயநலத்திற்கேற்ற சூட்சியாகவும் செய்யப்பட்டவை களாகவே யிருக்கின்றன.
(குடி அரசு - 26.10.1930)
கற்பு - ஒழுக்கம்: தோழர் பெரியார்
...எப்படி கற்பு என்னும் வார்த்தையையும் அது பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமைகொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகு மென்றும் சொல்லுகின்றோமோ அது போலவே விபசாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற் கென்றே ஏற்படுத்தப்பட்ட தென்றும் காணப்படுவ தோடு அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமான தென்றும் கூட விளங்கும்.
சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாத தேயாகும்.. ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்த மற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவை யுடையதாகயிருக்கலாம். ஆன போதிலுங்கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப் படாமையும் அதைப் பற்றி லஷியம் செய்யாமையுமேயாகும்.
மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்ன வென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத் தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றா மலிருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக் கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அனுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும்.
இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எது வென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் ஒரு உதாரண மாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மை யைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூட்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும். மற்றும் விபசாரம் என்பது ஒருவனுடைய “பாத்தியதைக்கும்” ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாட்டிற்கும் மாத்திரம் விரோதமே தவிர உண்மையான ஒழுக்கத்திற்கு விரோதமல்ல என்பதற்கு மற்றொரு உதாரணம் கூறவோம்.
- குடி அரசு - 26.10.1930
கட்டற்ற பாலியல் சுதந்திரமா?
பாலியல் சுதந்திரம் பெண்ணுக்கும் தேவை என்று நாம் கூறியவுடன், சிலர் நம்மிடம் “அப்படியானால், நீங்கள் கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் தேவை என்கிறீர்களா?” நோய்களை உருவாக்கும் காட்டுமிராண்டித்தனமான செக்ஸ் முறைகளை ஆதரிக்கிறீர்களா?” “க்ரூப் செக்ஸை ஆதரிக்கிறீர்களா?” “இது பெண்களை ஏமாற்றவே பயன்படும்” என்றெல்லாம் பேசுகிறார்கள்.
‘பெண்ணியம்’ என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதையோ - ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் ஒடுக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதையோ - தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்று வதையோ - கம்யூனிசம் என்ற பெயரில் பாட்டாளி களை ஏமாற்றுவதையோ உறுதியாக நாம் எதிர்க்கிறோம். அதேசமயம் ஏமாற்றுப் பேர்வழிகள் சிலர் இருப்பதாலேயே - எவரும் மேற்கண்ட கருத்துக்களைப் பேசவே கூடாது என்ற அடக்கு முறையையும் எதிர்க்கிறோம். கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை நாம் ஆதரிக்கவில்லை. ஆனால், அந்தக் ‘கட்டு’ என்ன? எதனடிப்படையில் போடப்பட்ட கட்டு? என்பவற்றைப் பொறுத்து ஆதரவாகவும் நமது நிலை மாறும்.
ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல: பெரியார்
தோழர் குஷ்பு அவர்கள் 2005 ல் ‘இந்தியா டுடே’யில் கற்பு குறித்துத் தெரிவித்த ஒரு கருத்து பெரும் விவாதங்களை உருவாக்கியது. அது தொடர்பாக 15.01.2006-ல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் தி.வி.க தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையைப் பாருங்கள்.
‘தனிச் சொத்து தோன்றிய பின்னர் தான், தனது சொத்துக்கள் தனக்குப் பிறந்த குழந்தைக்கு மட்டுமே போய்ச்சேரவேண்டும் என்ற எண்ணம் தான், கறாரான ஒரு தாரத் திருமணமுறை - இறுக்கமான கற்புக் கோட்பாடுகள் அதற்கு ஆண்களின் விருப்பத்திற் கேற்ற வழியுறுத்தல்கள் தோன்றின’ என்கிறது ஏங்கல்சின் மானுடவியல் விளக்கம். சொத்துடைமை இல்லாத மக்களிடம் இப்படிப்பட்ட இறுக்கம் நிறைந்த, கற்புக் கோட்பாடுகள் இருக்காது; இருக்க வாய்ப்பில்லை என்பதையே மணவிலக்கு, மறுமணமுறை காட்டுகிறது. அதுவே இயல்பானதும் கூட....
...‘கற்பைப் பற்றிச் சுத்தமாகப் பேச வேண்டும் என்றால், நாடாப்புழு ஒன்று தான் மிஞ்சும். ஏனெனில், அதற்கு மட்டும் தான் தன் உடலிலேயே ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் உண்டு’ என்றார் ஏங்கெல்ஸ் (பலத்த கைத்தட்டல்).
...1971 ஜனவரி 23, 24 சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய ‘ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாது’ என்ற தீர்மானத்தை தோழர் அ.மார்க்ஸ் தற்போது மிகச் சரியாகச் சுட்டிக் காட்டினார்.
...திராவிடர் கழகத்தைச் சார்ந்த கரூர் வீர.கே.சின்னப்பன் என்ற வழக்கறிஞர் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 497 ஆவது பிரிவைச் சுட்டிக் காட்டி ‘விடுதலை’யில் எழுதினார் .
‘யாரொருவன், மற்றவன் மனைவியாக ஒருத்தி இருக்கிறாள் என்பதைத் தெரிந்தும் அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும், அந்த நபரின் அனுமதி யில்லாமலும் மறைமுக சம்மதம் இல்லாமலும் புணர்கிறானோ, அந்தப் புணர்ச்சி கட்டாய புணர்தலுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். பிறர் மனைவியை புணர்ந்தான் என்ற குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது குற்றத் தொகையும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கலாம். இந்தப் படியான வழக்குகளில் குற்றத்திற்கு உடந்தையாக மனைவி இருந்தார் என்பதற்காக அவரை தண்டிக்கக் கூடாது’ - என்பதே அச் சட்டப்பிரிவு.
ஆண்களை மட்டும் தண்டித்து, பெண்களைத் தண்டிக்காத இப்படிப்பட்ட சட்டம் ஏன் எழுதப்பட்டது என்று சட்டத்தை உருவாக்கிய கர்த்தாக்கள் சொன்ன மிக நீண்ட விளக்கம் 07.02.1971 ‘விடுதலை’யில் வெளிவந்தது.
‘‘மனைவிகளின் நம்பிக்கை துரோகத்திற்குத் தண்டனை வழங்கத் தீர்மானிப்பதற்கு முன் இரக்க உணர்ச்சியுள்ள மனிதனைச் சற்று நிறுத்தி நிதானிக்கும் படிச் செய்யும் வண்ணம் இந்த நாட்டிலுள்ள சமுதாய நிலைமையில் சில தன்மைகள் உள்ளன என்பதையும் எங்களால் உணராமல் இருக்க முடியவில்லை.
பலதார மணம் என்ற பெயரில் இந்த நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு கேட்டினை சட்டம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று எண்ணும் அளவுக்கு நாங்கள் கற்பனைவாதிகள் அல்லர். மெதுவானது ஆனால் நிச்சயமானது என்று நாங்கள் நம்பும் காலத்தின் செயல்பாட்டுக்கும் கல்வியின் செயல்பாட்டுக்கும் இதை நாங்கள் விட்டு விடுகிறோம்.
ஆனால் அது நடைமுறையில் இருந்து வரும் போது, பெண்களின் மரியாதைக்குரிய தன்மை மீதும், மகிழ்ச்சியின் மீதும் தனது தவிர்க்க முடியாத விளைவு களை உண்டாக்கும் வண்ணம் அது தொடரும் போது, தண்டனைச் சட்டம் என்ற அதிகப்படியான பளுவை ஏற்கனவே ஒருபுறமே மிகவும் அழுத்தப்பட்டுக் கிடக்கும் அதே தராசுத் தட்டில் ஏற்றுவதற்கு நாங்கள் மனங்கொள்ளவில்லை”.....
தோழர் கொளத்தூர் மணி அவர்களின் மேற்கண்ட உரை, 2007 ல் ‘தமிழர் பண்பாடு’ என்ற சிறுநூலாக வெளியிடப்பட்டது. தி.வி.க வின் இணையதளத்தில் அந்நூலை இலவசமாகத் தரவிறக்கலாம்.
ஏங்கெல்ஸ் - பெரியார் - மெக்காலே - அம்பேத்கர்
பெண்களுக்கு ஆதரவாக இந்த இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கியவர் ஆங்கிலேய ஆட்சியாளர் மெக்காலே ஆவார். இந்த 497 என்ற சட்டப்பிரிவுக்கு எதிராகப் பலமுறை நீதிமன்றங் களில் வழக்குகள் நடந்தன. 1954 ல் யூசுப் அப்துல் அசீஸ் வழக்கு, 1985 ல் செளமித்ரி விஷ்ணு என்ற பெண் தொடர்ந்த வழக்கு போன்ற அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்படித் தள்ளுபடி செய்யப்பட்ட போதெல்லாம், பெண்ணைத் தண்டிக்கக்கூடாது என்பதற்கு அடிப்படையாக இருந்தது தோழர் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் சட்டத்தின் 15 வது பிரிவு ஆகும்.
திராவிடர் பண்பாட்டைச் செதுக்கிய தோழர் பெரியார் ‘லஷ்மி’களை ஆதரிக்கிறார். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய தோழர் அம்பேத்கர், பாட்டாளி வர்க்கப் பண்பாட்டைப் பேசும் தோழர் ஏங்கெல்ஸ், தோழர் லெனின், இந்தியத் தண்டனைச் சட்டங்களை உருவாக்கிய மெக்காலே போன்ற சமுதாயத்தை புரிந்த - சமுதாய அக்கறை கொண்ட தலைவர்கள் ‘லஷ்மி’ களைக் குற்றமற்றவளாக அறிவித்துவிட்டனர். அந்தத் தலைவர்களைப் பின்பற்றுபவர்கள் முதலில் ‘லஷ்மிகள்’ குறித்த பார்வையை மாற்றுங்கள். சமுதாயம் தானாக மாறும்.
பாலியல் சமத்துவத்துக்கு முன் பாலின சமத்துவம்
ஆண் - பெண் இருபாலருக்கும் பாலியல் சுதந்திரம் வேண்டுமானால், முதலில் பாலின சமத்தும் என்பதை கருத்தளவிலாவது ஆண் ஏற்றுக் கொள்ளவேண்டும். ஒரு பெண்ணின் பாலியல் விருப்பங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டுமானால், முதலில் அந்த ஆண் பாலின சமத்துவத்தை ஏற்றுக்கொண்டவனாக இருக்க வேண்டும்.
சமையலறையில் மனைவியை மட்டும் வேலை செய்ய வைக்கும் எவனும் - வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண்களை மட்டுமே செய்ய வைக்கும் எவனும் - குடும்ப வாழ்வில் ஒவ்வொரு முடிவையும் தனது துணையோடு விவாதித்து எடுக்காத எவனும் - பெண்ணின் சிறு சிறு உணர்வு களையும், உணர்ச்சிகளையும், உடலையும் புரிந்து கொள்ளாத எவனும் - படுக்கையில் சமத்துவத்தோடு நடந்துகொள்ள மாட்டான். அப்படிப்பட்டவர் களால் ‘லஷ்மி’கள் உருவாவதைத் தடுக்கவும் முடியாது.