‘நான் இல்லாவிட்டால் இந்த மேலவை கலைக்கப்படாமல் நீடிக்குமென்றால் நான் இந்தப் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். கருணாநிதி ஒழிந்தான். இனி கவலையில்லை. அவன் இல்லாத மேலவை தொடர்ந்து நீடிக்கட்டும் என்ற முடிவை முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) எடுக்க முன்வரட்டும்’
தமிழக சட்டமன்ற மேலவை 1986ல் கலைக்கப்படுவதற்குமுன் மேலவையில் திமுக தலைவர் கலைஞர் பேசியதுதான் மேலே இருப்பது. எண்பதுகளில் கலைக்கப்பட்ட மேலவையைத் திரும்பக் கொண்டுவருவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது திமுக.
நாடாளுமன்றத்துக்கு மாநிலங்களவை இருப்பது போல சட்டமன்றங்களுக்கு மேலவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிரம்பிய அவை சட்டப்பேரவை. மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் நியமன உறுப்பினர்களும் நிரம்பியது மேலவை. படித்தவர்கள், பண்பாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போன்றவர்கள் இடம்பெறவேண்டும் என்ற காரணத்துக்காக உருவாக்கப்பட்டது மேலவை.
இந்த அவையில் இடம்பெற்ற பலரும் தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றியமைத்தவர்கள். சட்ட நிபுணர் லட்சுமணசாமி முதலியார், ஆந்திர கேசரி டி. பிரகாசம், மூதறிஞர் ராஜாஜி, நீதிக்கட்சித் தலைவர்களான பி.டி.ராஜன், டாக்டர் நடேசனார், முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ம.பொ.சி போன்றவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் மேலவையில் இடம்பெற்றுள்ளனர். ஆழமும் அர்த்தமும் நிரம்பிய விவாதங்கள் ஏராளம் நடந்துள்ளன.
கனவான்கள் சங்கமிக்கும் இடம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த அவை ஒருகட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பின்வாசல், மக்களைச் சந்தித்து வெற்றிபெற இயலாதவர்கள் பதவிக்கு வருவதற்கான கொல்லைப்புறம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. 1952 தேர்தலில் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் சார்பாக யாரை முதல்வராக்குவது என்ற கேள்வி எழுந்தபோது அதற்குப் பொருத்தமானவராகக் கருதப்பட்டவர் ராஜாஜி. ஆனால் அவர் அப்போது சட்டமன்ற, மேலவைகளில் உறுப்பினராக இல்லை. அதனைத் தொடர்ந்து ஆளுநரால் மேலவைக்கு நியமிக்கப்பட்டார் ராஜாஜி. மக்களைச் சந்திக்காமலேயே முதலமைச்சராகிவிட்டார் ராஜாஜி என்று எதிர்கட்சிகள் விமர்சித்தன.
அதேபோல 1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டிய அண்ணாவோ மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனால் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சரானார். பிறகு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ராஜாஜியின் வழியில் நியமிக்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்துக்கு வந்திருந்த திமுக உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் மேலவை உறுப்பினரானார் அண்ணா.
1986 பிப்ரவரி மாதம் தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களைத் திமுக கைப்பற்றியிருந்தது. அதிமுகவுக்குப் படுதோல்வி. எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த முக்கியத் தோல்வி இது. இதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் வடசென்னை மக்களவைத் தொகுதி மற்றும் எழும்பூர், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுகவே வெற்றி பெற்றிருந்தது. தற்போது உள்ளாட்சித் தேர்தல்களில் கிடைத்த தோல்வி எம்.ஜி.ஆரைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தது. அதுவும் சட்டமன்ற மேலவைக்கு.
பட்டதாரிகளும் ஆசிரியர்களும் வாக்களித்து உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அப்போது நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் பூர்த்தி ஆகிவிட்டதால் அந்தத் தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் திமுகவுக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. மற்ற இரண்டு தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றிபெற்றனர். ஆக, நான்கில் ஒரு தொகுதியிலும் அஇஅதிமுக வெற்றி பெறவில்லை. எம்.ஜி.ஆருக்கு மீண்டும் ஒரு தோல்வி கிடைத்தது.
அடுத்து, மேலவைக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அமைச்சரவை பரிந்துரை செய்யும் மூவரை மேலவை உறுப்பினர்களாக ஆளுநர் நியமிக்கமுடியும். எம்.ஜி.ஆர் அரசு அறிவித்த மூன்று பேரில் ஒருவர், பிரபல நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. இவர், எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தவர். பொருளாதார ரீதியாக பலவீனப்பட்டிருந்த அவரைக் கைதூக்கிவிட நினைத்தார் எம்.ஜி.ஆர். மேலவைக்கு வர வாய்ப்புக் கொடுத்தார். அவரும் மேலவைக்கு நியமிக்கப்பட்டார்.
இந்த இடத்தில்தான் இன்னொரு பிரச்னை வந்தது. நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கடன் பிரச்னை காரணமாக ஏற்கெனவே திவால் நோட்டீஸ் கொடுத்திருந்தார். ஆகவே அவரை மேலவைக்கு நியமித்தது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பத்திரிகைகள் தோண்டித் துருவ ஆரம்பித்துவிட்டன.
பெரிய அளவிலான தொகையைக் கடன் பாக்கி வைத்திருக்கிறார் நிர்மலா என்று தெரிந்ததும் நீதிமன்றத்தில் அவர் சார்பாக முதலில் ஏழு லட்சம் ரூபாய் கட்டப்பட்டது. பிறகு மூன்று லட்ச ரூபாய் கட்டப்பட்டது. பணம் கட்டியது யார் என்ற கேள்வி பகிரங்கமாக எழுப்பப்பட்டபோது வெண்ணிற ஆடை நிர்மலாவிடம் இருந்து ராஜினாமா கடிதம்தான் பதிலாக வந்தது.
மேலவையில் திமுகவின் பலம் உயர்ந்தது. இதன்மூலம் மேலவை எதிர்க்கட்சித் தலைவராக கலைஞர் வரப்போகிறார் என்று ஊடகங்கள் எழுதின. அதைக் கலைஞரும் ஆமோதித்தார். இதற்கிடையே சட்டமன்ற மேலவை முற்றிலுமாக நீக்கிவிடலாம் என்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்படக்கூடும் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தன. திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலவையை ஒட்டுமொத்தமாக நீக்கிவிடும் நடவடிக்கையை கலைஞர் கடுமையாக எதிர்த்தார். ஆனாலும் 14 மே 1986 அன்று சட்டமன்றத்தில் மேலவை நீக்குதல் தீர்மானம் நாவலர் நெடுஞ்செழியனால் முன்மொழியப்பட்டது. வாக்கெடுப்பு தொடங்கியது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தீர்மானத்தை எதிர்த்தன. இந்திரா காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியேறியது. தீர்மானம் நிறைவேறியது. சட்டமன்ற மேலவை நீக்கப்பட்டது!
அதன்பிறகு மேலவை என்பதே கடந்தகால வரலாறு என்றாகிவிட்டது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக, மேலவையை மீண்டும் அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால் அதற்குள் திமுக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு 1991ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக நிறைவேற்றியிருந்த மேலவை கோரும் தீர்மானத்தை வாபஸ் பெற்றது.
பிறகு 1996ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மேலவைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதை 2001ல் ஆட்சிக்கு வந்த அதிமுக வாபஸ் பெற்றது. 2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக மேலவைக் கோரிக்கையை மீண்டும் எழுப்பியது. அதற்கான ஆயத்தப் பணிகளையும் செய்தது. ஆனால் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் அந்த முயற்சி கைகூடவில்லை. தற்போது மீண்டும் ஆட்சிக்கும் வந்தால் மேலவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது திமுக.
கடந்த கால் நூற்றாண்டாக இங்குமங்கும் பந்தாடப்பட்டுவரும் மேலவைத் தீர்மானம் இந்த முறையேனும் கவனிக்கப்படவேண்டும். மேலவை கொண்டுவர அனுமதி கிடைக்கவேண்டும் என்பது திமுகவின் எதிர்பார்ப்பு. இந்தியாவின் பல மாநிலங்களில் மேலவை சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதைப்போலவே தமிழ்நாட்டுக்கும் மேலவை வேண்டும் என்பது திமுகவின் வாதம்.
ஆனால் அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்டோர் மேலவைத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். எம்.ஜி.ஆர் எடுத்த முடிவு என்று சொல்லி அதிமுக எதிர்க்கிறது. மேற்குவங்கத்தில் மேலவை இல்லை. ஆகவே இங்கும் வேண்டாம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் வாதம்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு மேலவை மீண்டும் உருவாக்கப்படும் பட்சத்தில் அந்த மேலவையில் யார் யாருக்கெல்லாம் பிரதிநிதித்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது முக்கியத்துவம் வாய்ந்த விவாதம்.
பழைய மேலவையில் பட்டதாரிகள் என்ற ஒரு பிரிவு இருந்தது. அது இன்றைய சூழலுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை. ஏனெனில், சட்டமன்றம், உள்ளாட்சிமன்றம் உள்ளிட்ட அனைத்திலுமே பட்டதாரிகள் பரவலாக இடம்பெற்றுள்ளனர். ஆகவே, இந்தப் பிரிவுக்குப் பதிலாக வேறொரு பிரிவைக் கொண்டுவரலாம்.
தகுதியுள்ள பெண்கள் அவையில் வந்து பணியாற்ற மேலவை பொருத்தமான வாயிலாக இருக்கும். அடுத்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, களப்பணி ஆற்றி, வெற்றியை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் மேலவையில் இடம்பெற வழிவகை செய்யலாம்.
மேலவைக்கான அதிகாரம். நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உள்ள அதிகாரம் மேலவைக்கும் இருக்கிறதா என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். புதிய மேலவை உருவாக்கப்படும்போதே அதற்கான அதிகாரங்களும் தெளிவுபடுத்தப்படவேண்டியது அவசியம்!