தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திருமண உதவி திட்டத்தை செயல்படுத்தும் வகையில், படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன், 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்பதை பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அவர் அறிவித்த கையோடு தமிழக சமூகநலம், சத்துணவுத்துறையின் முதன்மைச் செயளாலர் மோகன் பியாரே மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் திருமண உதவி பெறுவதற்கு உரிய தகுதிகளாக அவர் முன் வைத்துள்ளவைகளை பார்க்கும்போது வரும் ஆனா வராது' ரேஞ்சில் உள்ளதை காண முடிகிறது.
"திருமண உதவி கேட்கும் போது, இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்'' என்று தமிழக அரசு புதிய நிபந்தனையை விதித்துள்ளது.
திருமண உதவித்தொகை பெற வேண்டுமானால் பெண்ணின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 24,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது அரசு. இந்த காலத்தில் பெற்றோரின் மாத வருமானம் இரண்டாயிரம் என்பது சாத்தியமா? அரசின் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூட நூறு ரூபாய் சுளையாக சம்ப ளம் கிடைக்கும் நிலையில் இந்த கணக்குப்படி பார்த்தாலே மாதம் மூவாயிரமாகவும், ஆண்டு வருமானம் ரூ. 36,000 ஆகவும் ஆகிவிடு கிறதே. வயற்காட்டில்களை எடுக்கும் ஒரு பெண்ணின் ஒரு நாள் கூலி ரூ.100 முதல் ரூ.130வரை கொடுக்கப்படுகிறது. ஒரு சித்தாளின் சம்பளம் ரூ. 170 ஆக உள்ளது. அவ்வளவு ஏன் சாதாரண பிச்சைக்காரர்கள் கூட நாள் ஒன்றிற்கு நூறு ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதிக்கும் நிலையில், பெற்றோரின் மாத வருமானம் 24 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் திருமண உதவி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது எந்த வகையில் நியாயம்? அரசின் இந்த அறிவிப்புப்படி பார்த்தால் 99சதவிகித மக்கள் இந்த உதவியை பெற முடியாது. அல்லது ஆண்டு வருமானத்தை குறைத் துக்காட்டும் போலியான சான்றி தழ் வாங்கி அரசை ஏமாற்றினாலே சாத்தியம். அரசு இதை விரும்புகிறதா? எனவே மக்களின் இன்றைய வருவாய் அடிப்படையில் திட்டங்களுக்கான நிபந்தனை விதிக்க அரசு முன்வர வேண்டும். இல்லையேல் அரசின் நோக்கம் நிறைவேறாததுடன் மக்களுக்கும் எவ்வித பயனுமில்லாமல் போவதோடு, இடைத்தரகர்களுக்கு வழியை திறந்து விட்டதாகவும் ஆகிவிடும். அரசு கவனிக்குமா?
- தரசை தென்றல்