பத்தாண்டு காலத்தில் காங்கிரஸ் மீது உருவான அத்தனை அதிருப்தி வாக்குகளையும் ஓரணியில் ஒருங்கிணைத்து, பாரதிய ஜனதாவைத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினார் நரேந்திர மோடி. சரி. நல்ல காலம் வரப்போகிறது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது சொன்னார் மோடி. உண்மையில் அவர் சொன்ன நல்ல காலம் வந்து விட்டதா? மோடியின் ஓராண்டு கால ஆட்சி நிறைவுபெற்றுள்ள தருணத்தில், அவர் சொன்னது என்ன, செய்தது என்ன என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்.

சித்தாந்தத்தை முன்னிறுத்தக்கூடிய கட்சியாக அறியப்பட்ட பாரதிய ஜனதா ஒரு தனிமனிதரை நம்பிக் களமிறங்கியது கடந்த மக்களவைத் தேர்தலின்போதுதான். மோடி அலை வீசுவதாக அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலரும் மேடைகளில் பேசினார்கள். தேர்தல் வெற்றி வந்தபிறகு அதை உறுதிசெய்யும் காரியத்தில் மோடியே இறங்கினார். அமைச்சர்கள் தேர்வில் இருந்து ஒவ்வொரு விஷயத்திலும் தானே முடிவெடுத்தார்.

உச்சகட்டமாக, 77 அமைச்சரவைச் செயலாளர்களை நேரில் அழைத்த அவர், துறைசார் முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் அவர்கள் அனைவரும் தன்னுடன் நேரிலோ, மின்னஞ்சலிலோ, தொலை/அலைபேசியிலோ பேசலாம் என்றார். அதன்மூலம் ஒரே சமயத்தில் அமைச்சர்களின் அதிகாரங்களைக் குறைத்து, அனைத்து அதிகாரங்களையும் தன்பக்கம் குவித்துக்கொண்டார் மோடி.

கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும், பின்பற்றப்படும் விழாக்கள் தொடங்கி, திட்டங்கள் வரை அனைத்திலும் நேரு முத்திரையோ, காங்கிரஸ் முத்திரையோ இருப்பது வழக்கம். ஆட்சிக்கு வந்த கையோடு அவற்றை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக மோடி முத்திரையைப் பதிக்க விரும்பினார்.

நேரு காலத்தில் இருந்து நடைமுறையில் இருக்கும் திட்டக்குழுவைக் கலைத்தார் மோடி. ஆனால் திட்டக்குழுவுக்கு மாற்றாக அவர் உருவாக்கிய நிதி ஆயோக் அப்படியான அதிகபட்ச உரிமைகளையோ, அதிகாரங்களையோ மாநில முதல்வர்களுக்குத் தந்துவிடவில்லை. ஆக, நேரு உருவாக்கிய திட்டக்குழு இன்று இல்லை, மாறாக, மோடி உருவாக்கிய நிதி ஆயோக் இன்று இருக்கிறது. அவ்வளவுதான்.

இந்தியாவுக்கென்று தனியான வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மாஸ்வராஜ் உள்ளார். ஆனால் பிரதமர் மோடிதான் உலக நாடுகள் முழுக்கச் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்கிறார். தொழிலதிபர்கள் சகிதம் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். இந்த ஓராண்டின் பெரும்பாலான தினங்களை வெளிநாடுகளிலேயே கழித்துள்ளதால், அவரை Flight Mode பிரதமர் என்றே சமூக வலைத்தளங்கள் வர்ணிக்கின்றன. இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டிய பிரதமர், உயர்தர, ஆடம்பர ஆடையை அணிந்து சர்ச்சைக்கு உள்ளாகிறார்.

தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்விஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப்பணம் முழுமையாக மீட்கப்படும்; அதன்மூலம் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் ரூபாய் போடப்படும் என்றார் மோடி. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒரு விசாரணைக் குழுவை நியமித்ததைத் தவிர வேறெந்த முக்கிய நகர்வும் இல்லை.

உச்சக்கட்டமாக, “பதினைந்து லட்சம் ரூபாய் என்று நாங்கள் சொன்னது வெறும் மேடைப் பிரசார உத்திதானே தவிர வாக்குறுதி அல்ல”என்றார் பாஜக தலைவர் அமித் ஷா.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கொடுத்த முக்கியமான வாக்குறுதி, மீனவர் நலன் தொடர்பானது. தமிழகத்தின் தீராத தலைவலியாக இருக்கும் கச்சத்தீவு விவகாரத்தைத் தீர்ப்பதற்கு ஏதுவாக மீனவர்களுக்கென்று தனித் துறை உருவாக்கப்படும் என்றது பாஜக. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் “வாக்குறுதி கொடுத்த”மீனவர் துறைக்குப் பதிலாக “வாக்குறுதி தரப்படாத”கங்கை சுத்திகரிப்புத் துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் அமைச்சராக உமா பாரதியை நியமித்தார் மோடி.

மீனவர்கள் தொடர்பாகத் தமிழகத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தான் கொடுக்காத ஒரு வாக்குறுதியை வலுக்கட்டாயமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அதுதான் இந்தித் திணிப்பும் சமஸ்கிருதத் திணிப்பும். ஆனால் அத்தகைய திணிப்புகள் நடக்கும் போதெல்லாம் தமிழகம் உரத்த குரலில் எதிர்ப்பதால் சற்றே பின்வாங்கவேண்டிய நிலை.

மோடி அரசின் மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனம் அவசரச் சட்டங்களைக் கொண்டு வருவது. உண்மையில், தன்னுடைய முதன்மைச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலேயே அவசரச் சட்ட ஆயுதத்தைக் கையிலெடுத்துவிட்டார். ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்த நிர்பேந்திர மிஸ்ராதான் மோடியின் விருப்பம். ஆனால் ட்ராய் அமைப்பின் தலைவராக இருந்தவர், வேறெந்த அரசு உயர்பதவிக்கும் செல்லக்கூடாது என்பது சட்ட விதிமுறை.

வேலி தடுக்கிறது என்றால், வேலியை அகற்றவேண்டியதுதானே! அவசரச் சட்டத்தின் வழியே அந்த விதிமுறையை நீக்கினார் மோடி. நிர்பேந்திர மிஸ்ரா முதன்மைச் செயலாளர் பதவிக்கு வந்தார். அதன்பிறகு மோடி அரசு தான் விரும்பிய பல விஷயங்களையும் அவசரச் சட்டத்தின் வழியாகவே கொண்டுவர எத்தனித்தது. அதற்கான மிகப்பெரிய உதாரணம், நிலம் கையகப்படுத்தும் மசோதா.

அவசரச் சட்டங்கள் எல்லாம் அத்திபூத்தாற்போலப் பயன்படுத்தவேண்டிய ஆயுதம். நாடாளுமன்றத்தில் பலமில்லை என்ற காரணத்துக்காக அவற்றை அவசரச் சட்டத்தின் வழியே கொண்டுவருவது கொல்லைப்புற நடைமுறை. அதைப் பொறுப்பு வாய்ந்த அரசு அடிக்கடி செய்யக்கூடாது என்று மென்மையாக ஆலோசனை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அவர் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக உள்ளன. ஆனால் தான் எடுத்த முடிவில் அவர் விடாப்பிடியாக இருக்கிறார். இன்னும் பல சட்டங்கள் அவசரப் பாதையில்தான் அணிவகுத்து நிற்கின்றன.

தேர்தலுக்கு முன்புவரை வளர்ச்சி என்ற வார்த்தையை மட்டுமே அதிகம் பயன்படுத்திய பாஜகவினர் பலரும் தற்போது மதம் பற்றியே அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்துமதப் பெருமிதங்களைப் பேசிவரும் அதேவேளையில் மாற்று மதத்தினரை விமர்சிக்கவும் தவறவில்லை. அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “பகவத் கீதையை தேசிய நூலாக்கவேண்டும்”என்கிறார். பாஜகவைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர், “மோடிக்கு வாக்களிக்காதவர்கள் ராமனுக்குப் பிறக்காதவர்கள்”என்கிறார். இன்னொரு பாஜக உறுப்பினர், இஸ்லாமியர்கள் இத்தனைக் குழந்தைகள்தான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்.

ஆக, மோடியின் ஆட்சியில் “வளர்ச்சி”யை “மதம்”பதிலீடு செய்துவிட்டதாகவே தெரிகிறது. இது மோடி அரசுக்கும் நல்லதில்லை, எதிர்கால இந்தியாவுக்கும் நல்லதில்லை.

Pin It