சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் (1860 - 1946) டாக்டர் அம்பேத்கரும் (1891 - 1956) இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்கள்; விரிந்த எல்லை கொண்ட படிப்பாளிகள்; பல்துறை ஞானம் கொண்ட கல்விமான்கள்; இருவரும் மிகப் பின்தங்கிய சமூகத்திலிருந்து மேதைகளாக மாறியவர்கள்; இருவரும் சட்டத்திலும், பொருளாதாரத்திலும் ஆற்றல் மிக்கவர்கள்; இருவரும் தங்கள் இல்லங்களில் பல்லாயிரக்கணக்கான நூல்களையுடைய நூலகங் களை வைத்திருந்தவர்கள்; இருவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாளும் உழைத்தவர்கள்; ஒருவர் தொடக்கக் காலத்தில் பௌத்தராக இருந்து பின்னர் மார்க்சியராக மாறியவர். மற்றொருவர் இந்து மதத்தில் இருப்பதை இழிவெனக் கருதிப் பௌத்தத்தை ஏற்றுப் பௌத்தராக விளங்கியவர்; ஒருவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் காங்கிரஸ்காரராக இருந்து பின்பு பொதுவுடைமை இயக்க முன்னோடி யாக விளங்கியவர். மற்றொருவர் தலித் சமுதாயத் திற்காகவே பாடுபட்டு, தேசிய இயக்கத்தையும், பொதுவுடைமை இயக்கத்தையும் வெளியே இருந்து நோக்கியவர்.

இருவரும் தொழிலாளர்களுக்காக உழைத் தவர்கள்; போராட்டங்களில் பங்கேற்றவர்கள்; இருவரும் அறிவைப் பரப்ப இதழ்களை நடத்தி யவர்கள்; ஒருவர் நாத்திகர்; மற்றொருவர் ஆத்திகர். ஒருவர் சமயத்தை முற்றிலும் மறுத்தவர். மற்றொருவர் சமயத்தை விரும்பி மதித்தவர். ஒருவர் உள்நாட்டி லேயே கற்று உலகத் தத்துவத்தை (மார்க்சியம்) ஏற்றவர்; மற்றொருவர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கற்று உள்நாட்டுத் (பௌத்தம்) தத்துவத்தை ஏற்றவர்; சமுதாய மாற்றத்திற்கு ஒருவர் மார்க்சியத்தை வழிகாட்டியாக ஏற்றவர். மற்றொருவர் சமுதாய மாற்றத்திற்குப் பௌத்தத்தை வழிகாட்டியாகக் கொண்டவர். ஒருவர் 86 ஆண்டுகள் வாழ்ந்தவர்; மற்றொருவர் 65 ஆண்டுகள் வாழ்ந்தவர்; இருவரும் பன்மொழி அறிஞர்கள்; சமுதாயப் போராளிகள்; கொண்ட கொள்கையில் உறுதி வாய்ந்தவர்கள்; இருவரும் நேர்வழி கொண்டவர்கள்; சலசலப்புக்கும் சமரசத்திற்கும் உட்படாதவர்கள்.

இருவரும் சாதியத்தையும், வருணப் பேதத்தையும் கடுமையாக எதிர்த்தவர்கள்; அவற்றை அறிவியல் அடிப்படையில் விளக்கியவர்கள்; இருவரும் பெண் முன்னேற்றத்தில் பேரீடுபாடு கொண்டவர்கள்; பெண் சமத்துவத்திற்கு வழிகாட்டியவர்கள்.

இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வினையும், சாதி - வருணப் பேதங்களை ஒழிப்பதிலும் கொள்கை முறையில் வேறுபட்டவர்கள்; அதாவது அடிப் படையில் வேறுபட்டவர்கள்; சமுதாய மாற்றத் திற்கும், வளர்ச்சிக்கும் மார்க்சியமே ஏற்றதென்றவர் சிங்காரவேலர். டாக்டர் அம்பேத்கரோ பௌத்தமே சரியானது என்றவர். இன்றைய நிலையில் இது மறுவாசிப்புக்கும் மறு சிந்தனைக்கும் உரியது. இருவர் பார்வையிலும் எது சரி என்பதைச் சில நிகழ்வுகளின் மூலம் ஒப்பிட்டு நோக்குவது பொருத்த மானது. 1930- நவம்பரில் நடந்த வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கரும், எம்.சி. ராஜாவும் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் அவர்கள் பல கோரிக்கைகளை வைத்தார்கள். அவற்றில் தலித்துகளுக்குச் சொத்துரிமை, மதஉரிமை, சாதி யுரிமை ஆகியவற்றைப் பிரிட்டிஷ் அரசு உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டிருந்தனர். இவற்றைச் சிங்காரவேலர் குடியரசு இதழில் விமர்சித்து எழுதியிருந்தார்.

அக்கட்டுரையில் இந்தியாவிலுள்ள மக்கள் தொகையில் நிலவுரிமையுடையோர் மிகச் சிலர்; அவர்களிலும் தலித் மக்களில் எங்கோ சிலர்தான் நிலவுரிமையுடையவர்களாக உள்ளனரென்றும், அவர்களில் எண்ணற்றோர் கூலிகளாகவும், அன்றாடங் காய்ச்சிகளாகவும், நாளும் பசிப்பிணிமிக்கவர் களாகவும் இருக்கும்போது, தலித்துக்குச் சொத்துரிமை கேட்பதில் என்ன நியாயம் உள்ளது? இந்தியாவில் பல மாநிலங்களில் ஏழைத் தலித்துகளுக்கு உண்ண உணவும், தங்க வீடும், உடுத்த உடையும், கற்கக் கல்வியும் இல்லாதபோது அவர்களைப் பற்றிச் சித்திக்காமல், சொத்துடைய தலித்துகளைப் பற்றிக் கோரிக்கை வைப்பதில் என்ன பயன்? என்று கேட்டுள்ளார். பிரித்தாளும் சூழ்ச்சியுடைய பிரித்தானிய அரசு, காங்கிரசின் பலத்தைக் குறைக்க, தலித் மக்களுக்கு ஒன்றிரண்டைச் செய்யும். ஆனால் முழுமையாகச் செய்யாது என்றும் தலித் மக்கள் எல்லாநிலைகளிலும் முன்னேற்றம் பெற வேண்டு மென்றால், பள்ளு - பறையன் என்ற இழிவு அடியோடு தீர வேண்டுமென்றால் அதற்குச் சமதர்ம ஆட்சியால்தான் வழி ஏற்படுமென்றும் அக்கட்டுரையில் குறித்துள்ளார். தலித் மக்களின் முன்னேற்றம் குறித்து அவர் பற்பல கட்டுரைகளை மிக நுணுக்கமாக எழுதியுள்ளார். அவை இன்றளவும் பயன் மிக்கவை.

1889-ஆம் ஆண்டிலேயே சிங்காரவேலர் அயோத்திதாஸ் பண்டிதரோடு இணைந்து (அப் போது அம்பேத்கருக்கு எட்டு வயது) பௌத்தம் குறித்தும், சாதி-வருணம் குறித்தும் தீண்டாமை குறித்தும் தாங்கள் நடத்திய பௌத்த சங்கத்தின் வாயிலாகப் பலபடப் பேசியுள்ளனர். கான்பூரில் 25-12-1925-இல் பொதுவுடைமை இயக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்து அவர் தலைமையுரை ஆற்றிய போது, தலித் மக்கள் முன்னேற்றம் குறித்துச் சிந்தனை மிக்க உரையாற்றியுள்ளார். அப்பேச்சில் ஏறக்குறைய செம்பாதி தலித்துகளைப் பற்றிய பேச்சுதான் உள்ளது. ஓர் அகில இந்திய மாநாட்டில் தலித்துகளைப் பற்றிப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பேசிய தலித்தல்லாதத் தலைவர்களில் சிங்காரவேலரே முதன்மையானவர். தலித்துகளைப் பற்றி சிங்கார வேலரின் பார்வை கூர்மையானது; ஏனெனில், அப்பார்வை மார்க்சியம் வழிப்பட்டது.

தலித் மக்களுக்குத் தனித்தொகுதி வேண்டி அம்பேத்கர் முயன்றபோது சிங்காரவேலர் அதற்கு ஆதரவு அளித்தார்; அதனை எதிர்த்த காந்தியடி களைக் கண்டித்தார். இதுகுறித்துக் குடியரசில் அவர் அரிய கட்டுரை எழுதியுள்ளார். அம்பேத்கர் தனித் தொகுதி கேட்டபோது, பொதுவுடைமை யாளரான சிங்காரவேலர், அதனைச் சமதர்ம ஆட்சியில் பார்த்துக்கொள்ளலாமெனக் கருதாமல், தலித் முன்னேற்றத்திற்கு அது ஓர் உடனடித் தேவை என்பதால் அதனை முழு மனதுடன் ஆதரித்தார். தலித்துகளுக்குத் தனித்தொகுதி கொடுத்தால் இந்துக் களுக்கும் தலித்துகளுக்கும் பகைமை ஏற்படுமென்றும் தலித்துகளை விரோதிகளாகப் பாவிப்பார்களென்றும் காந்தியடிகள் கூறியபோது, பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் தலித்துகளைப் பகைவர்களாக மட்டு மன்றி, அடிமைகளாகத்தானே நடத்தியிருக்கிறார்கள்? அதுதானே உண்மை! இனிமேல்தான் அவர்களை இந்துக்கள் பகைவர்களாகக் கருதப் போகிறார்களா? என வினா எழுப்பியுள்ளார்; மற்றும், மின்டோ மார்லி சீர்திருத்தம், செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மேல் சாதி யினர் சட்டசபைக்குப் போய் தலித்து மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையே! காந்தியார் அதனைப் பற்றி ஏதும் கூறவில்லையே ஏன்? என்கிறார் சிங்கார வேலர். தனித்தொகுதியைக் கொடுத்தாவது அவர் களை முன்னேற்றப் பார்க்கலாமே! அதனையொரு சோதனையாகப் பார்க்கலாமே! காந்தியார் இது பற்றிச் சிந்திக்கலாமே என்றார்.

“தலித்துக்களுக்குத் தனித்தொகுதி அமைவதை மறுத்து உண்ணாவிரதம் இருக்கும் காந்தியார், பல ஆண்டுகளாகத் தலித்துகளின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை மட்டுமன்றிக் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூடத் தரமறுக்கும் மிராசுதாரர்களுக்கு எதிராகவும், ஜமீன்தார்களுக்கு எதிராகவும் உண்ணாவிரதம் இருந்தால் நன்றாக இருக்கும். காந்தியார் முதலில் இதனைச் செய்தால் நன்றாக இருக்கும்” என்கிறார் சிங்காரவேலர். மற்றும் பல போராட்டங்களுக்குப் பின்னர் கோயிலில் நுழையும் அனுமதி தலித்து களுக்குக் கிடைத்தபோது எல்லோரும் மகிழ்ந்து வரவேற்றார்கள்; சிங்காரவேலரும் வரவேற்றார். வரவேற்றுக் கூர்மையாக ஒன்றை வலியுறுத்தினார். கோயிலில் நுழைய அனுமதி கிடைத்தவுடன், அதில் எல்லாம் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கிடைக்க வேண்டியவற்றைக் கோட்டைவிட்டு விடக் கூடாதென்றும் எச்சரித்தார். அதாவது, ஏனைய சாதியினர்க்குக் கிடைக்கின்ற அனைத்துத் தேவையும் உரிமையும் கிடைக்கப் பெற்று தலித் மற்றவர்களுக்குச் சமமாகச் சமத்துவம் பெறவேண்டும். தலித்துகள் அதனைப் பெற விழிப்பாக இருந்து போராடவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். 1923-ஆம் ஆண்டில் சென்னையில் அவர், தொழிலாளி - விவசாயி கட்சியைத் தோற்றுவித்தபோதே கட்சித் திட்டத்தில் தலித்துகளுக்கு உடனடித் தேவையான அடிப்படைத் திட்டங்களைக் குறிப்பிட்டுள்ளார். 1933-ஆம் ஆண்டில் எழுதிய “சுயராஜ்யம் யாருக்கு?” என்னும் நூலிலும் தலித் மக்களுக்கான திட்டங்களை வரைந்துள்ளார்.

தலித் மக்களைப் பற்றிப் பல கோணங்களில் ஆழமாகவும் நிரம்பவும் எழுதிய அரசியல் தலைவர் களில் (தமிழகத்தில்) சிங்காரவேலரே முதன்மை யானவர். தலித்துக்களைப் பற்றி அவருக்கு ஒரு தொலைநோக்குச் சிந்தனை இருந்தது. அந்தத் தொலைநோக்கு இருந்ததால்தான் அம்பேத்கர் தலித் மக்களைப் புத்த மதத்தில் இணைத்தபோது “டாக்டர் அம்பேத்கருக்கு நமது வேண்டுகோள்” என்னும் கட்டுரையைக் குடியரசில் எழுதினார். அக்கட்டுரை வேறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நுண்நோக்குக் கட்டுரையாகும். பற்பல நூற்றாண்டுகளாகத் தலித் மக்களைத் தீண்டாமை யென்னும் சமூக இழிவுமூலம் அடிமைகளாக இந்து மதம் நடத்தியது; இருபதாம் நூற்றாண்டிலும் அந்த இழிவும், அவலமும், புறக்கணிப்பும் தொடர்ந்ததால் அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவினார். பல மதங்கள் தத்தம் மதங்களில் சேர்க்க அழைப்பு விடுத்திருந்தும், அவற்றை ஏற்காது சமத்துவமும் முற்போக்கும் கொண்ட புத்தத்தில் அம்பேத்கர் தம் மக்களோடு இணைந்தார்.

அம்பேத்கர் அப்படி இணைந்ததில் தவ றொன்றும் இல்லை. மிகச் சரியான முடிவு; காலந் தோறும் தம் மக்களை இழிவுபடுத்தி ஊமைகளாக வைத்திருந்த இந்துமதம் மீது அவருக்கு அள வொண்ணா வெறுப்பு இருந்தது; தம் மக்கள் யாருக்கும் கீழானவர்கள் அல்லர். அவர்கள் எல் லோர்க்கும் சமமானவர் என்பதை உறுதிப்படுத்தவே சமத்துவநோக்கு கொண்ட புத்தத்தில் இணைந்தார்; ஆனால் அதுமட்டும் போதுமானது அன்று என்பது சிங்காரவேலரின் முடிவு; காரணம், புத்தம் எத்துணை முற்போக்குக் கொண்டதாக இருந்தாலும் அதுவும் மதம் தான்! ஓரளவு மனஅமைதியை மட்டுமே அம்மதத்தால் அளிக்க முடியும். இந்து மதத்தில் இருந்த ஒரு. சமூகம் இப்போது புத்த மதத்தில் இருக்கிறது அவ்வளவுதான்! ஆனால் நடைமுறை வாழ்க்கையில் கடைக் கோடியிலுள்ள ஒரு சமூகத் திற்கு, கல்வி, இருப்பிட வசதி, நிலவுரிமை, வேலை வாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்யும் அரசியல் கொள்கை இல்லையென்றால் எம் மதத்தில் சேர்ந்தும் பயனில்லை என்பது சிங்காரவேலரின் கொள்கை. வெறும் புத்தம் என்பதால் எல்லாம் கிடைத்துவிடாது.

அரசியல் சட்டத்தின் மூலமோ, தலித் கட்சிகளின் மூலமோ தலித்துகளுக்கு வேலைவாய்ப்பையும், கல்வியையும் பெறலாம்; ஆனால் அதுவும் ஓர் அளவுக்குள்தான் பெறலாம், முழுமையாகப் பெற முடியாது. அதாவது, இந்தமுறை கிழிந்த சட்டையில் ஒட்டுப்போட உதவுமேயன்றி, கிழிந்த சட்டையை முழுமையாக மாற்ற உதவாது என்பது சிங்கார வேலரின் கருத்து. இதுகுறித்து அவர் எழுதியிருப்பது நம் கவனத்திற்கு உரியது.

“எந்த மதத்தை நீங்கள் தழுவினாலும் அந்தந்த மதத்திலுள்ள முதலாளிகளுக்கும், நிலச்சுவான்தாரர் களுக்கும், மகுட வர்த்தனர்களுக்கும், ஏழுகோடி மக்களாகிய நீங்கள் அவர்களுடைய பெருத்த பொருளாதார ஆஸ்தி என்று அறிக.

நமது தீண்டாமை ஒழிய வேண்டுமாயின் நமது ஏழுகோடி மக்களின் பொருளாதாரத் தாழ்வை முதலில் போக்க முயலுங்கள். மத மாறுதலால் நமது தாழ்ந்த நிலைமை உயராது.”

தனிச் சொத்துரிமைக்குப் பாதுகாப்பு இருக்கும் வரை நமது நாட்டுத் தரித்திரமும் நீங்காது. மதங் களும் தொலையா. சாதி சமயங்களும் நீங்கா; மதங் களும் சாதிச் சனியன்களும் ஒழிந்து மனிதர் பகுத்தறிவு அடைய வேண்டுமானால் சமதர்ம ராஜ்யம் நாட்டில் வரவேண்டும்.” (சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம். பக் 1635)

சாதிவேறுபாடும் தீண்டாமையும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் முழுமையாக ஒழிய வேண்டுமானால் மதம் மாறுதலால் பலனில்லை. பொதுவுடைமை தான் நல்ல தீர்வாகும் என்பதால் டாக்டர் அம் பேத்கருக்குச் சிங்காரவேலர் வேண்டுகோள் விடுத் தார். அவர் வேண்டுகோள் விடுத்ததற்குக் காரணம், அம்பேத்கர் இந்தியத் துயரைத் துடைப்பதற்கு மார்க்ஸைக் காட்டிலும் புத்தரே ஏற்றவர் என்று கூறியதுதான்; இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய புத்தரால் இன்றைய சமூக இழிவையும், பொருளாதார ஏற்றத்தாழ்வையும் ஒழிக்க முடியு மென்று அம்பேத்கர் எண்ணியது கற்பனையென்று இப்போதுதான் ஆராய்ச்சியாளர் எழுதுகின்றனர். ஆனால், அதனை அப்போதே அடையாளம் காட்டி யவர் சிங்காரவேலர்; அவர் நமக்குப் பல அறிவு ஆயுதங்களைத் தந்துவிட்டுச் சென்று உள்ளார். அவற்றைத் தூசு தட்டிப் பயன்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.

Pin It