அண்டை மாநிலமான கேரளாவின் முதல்வர் உம்மன் சாண்டியின் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சூரிய மின் தகடு முறைகேடு குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூபாய் 1.9 கோடி கொடுத்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது அதிகார வரம்பை மீறிய உத்தரவு என்று கேரள உயர் நீதிமன்றம் அவ்வுத்தரவை ரத்து செய்துள்ளது.

தன் ஆட்சியைக் கவிழ்க்க ரூபாய் 10 கோடி பேரம் பேசப்பட்டது என்று சரிதா நாயர் விசாரணை நீதிமன்றத்தில் கூறியதைச் சுட்டிக்காட்டி, உம்மன் சாண்டி தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இக் குற்றச்சாட்டுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்றும் தொலைபேசித் தொடர்புகளைக் கொண்டு விசாரிக்கப்படுகிறது என்றும் தகவல் வருகின்றது.

சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றம் நிருபிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டால்தான், அவர் குற்றவாளி. அதுவரை அவர் குற்றம் சாட்டப்பட்டவர். இப்பொழுது உம்மன் சாண்டி குற்றம் சாட்டப்பட்டவர்தான்.

இந்நிலையில் உம்மன் சாண்டி முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கிளர்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்கள் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

தமிழ்நாட்டில் இந்தக் கட்சியினர் நிலை என்ன?

ஊழல் வழக்கில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் கட்ட வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், முதல்வர் பதவியை இழந்து சிறை சென்றவர் ஜெயலலிதா.

தமிழகக் கம்யூனிஸ்ட்களுக்கு இந்த ஊழல் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை போலும்.

கடந்த மாநிலங்களவைத் தேர்தலின் போது, போயஸ் தோட்டத்திற்கு நடையாய் நடந்தார்கள் இவர்கள், ஓர் உறுப்பினர் பதவிக்காக.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட போயஸ் தோட்டத்தின் கதவைத் தட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அண்மையில், முதுபெரும் தலைவர் கலைஞர் மீது பேரவையில் கொண்டு வந்த உரிமை மீறல் அறிக்கையின் போது, எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் அம்மையாருக்கு ஆதரவாகப் பேரவையில் இருந்தார்கள்.

இப்பொழுது கூட அவர்களின் நால்வர் கூட்டணி மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகப் பரவலாகப் பேசுகிறார்கள்.

கேரளாவில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டதற்கே முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொன்ன கம்யூனிஸ்ட்டுகள், தமிழ்நாட்டில் தண்டனை பெற்ற முதல்வருடன் கைகோக்க முயல்கிறார்கள்.

ஊழல் என்பது குற்றம். அதற்குக் கேரளத்தில் தண்டனையாம். தமிழ் நாட்டில் தோழமையாம். அருமையான அரசியல்.

Pin It