பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் படித்த படிப்பு போதாதென்று மருத்துவப் படிப்பில் சேரவிரும்பும் மாணவர்களுக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வு அறிமுகப் படுத்தப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் விருப்பத் தேர்வாக இருந்த இந்த நுழைவுத் தேர்வு, பாஜக ஆட்சியில் கட்டாயமாக்கப்பட்டது. இந்த வேறுபாடே பல அறிவு ஜீவிகளுக்கு இன்னும் புரியவில்லை.

டெல்லியிலும், மும்பையிலும், சென்னையிலும் ஒரு பெரிய தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள், 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்விற்குப் பிறகு ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற முடியும். ஆனால் கிராமங்களிலோ அல்லது மேற்குத் தொடர்ச்சி மலையின் குக்கிராமத்திலோ உள்ள மாணவர்கள் அந்த வசதியை ஒரு நாளும் பெற இயலாது.

அதனால்தான் கல்வியாளர்களும், சமூக சிந்தனை உடையவர்களும், பெண் கல்வியை ஊக்குவிக்க விரும்புபவர்களும் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர். ஏதோ தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமே நீட் தேர்வை எதிர்த்து வருவதைப் போல ஒரு பொய்யான பிம்பம் கட்டமைக்கப் படுகின்றது. ஆனால் அது உண்மை இல்லை. இந்தத் தேர்வு முறை மாணவர்களின் அறிவை சோதிப்பதாக அமையாமல், அவர்களின் பயிற்சியை (Coaching) சோதிப்பதாக அமைகின்றது.

பல மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் முழுமையாக இதற்காகப் பயிற்சியைப் பெறுகிறார்கள். தன்னுடைய வாழ்க்கையின் பொன்னான இரண்டு ஆண்டுகளை வாலிபப் பருவத்தில் இழக்கின்றனர்.

வட இந்தியாவில் உள்ள பல மாணவர்கள் நீட் தேர்விற்காகப் பயிற்சி பெறுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் செயல்படும் பயிற்சி நிலையங்களில் தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களில் கடந்த ஆண்டில் 15 பேரும் நடப்பு ஆண்டில் இதுவரை மட்டும் 20 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆண்டு ஒன்றிற்கு ஒவ்வொரு மாணவனும் ரூபாய் 20 லட்சம் வரை செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு மாணவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை மட்டுமே உண்டாக்குகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

அதன் காரணமாகவே இத்தனை தொடர் தற்கொலைகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் எந்தப் பயிற்சி மையத்திலும் இரண்டு மாதங்களுக்குத் தேர்வு நடத்தக் கூடாது என்று மாவட்ட நிர்வாகமே உத்தரவிடும் அளவிற்குப் பிரச்சனை ராஜஸ்தானில் தீவிரமானது. அதன் காரணமாகத் தற்போது பெற்றோர்கள், மாணவர்களின் தாத்தா பாட்டிகளை அங்கு அனுப்பி வருகின்றனர். அவர்கள் மாணவர்கள் தங்கி இருக்கும் பயிற்சி மையங்களுக்கு அருகிலேயே வீடு எடுத்துக் தங்கி வருகின்றனர். வயதான காலத்தில் அவர்களுக்கு இப்படி ஒரு நெருக்கடி!

அதனால் தான் சொல்கின்றோம் நீட் தேர்வு மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மிகப்பெரும் நெருக்கடி. மன ரீதியான தாக்குதல். சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிக்கக் கூடாது என்பதற்காகப் பின்பற்றப்படும் நவீன தீண்டாமையே, நீட் எனும் தேர்வு.

நீட் ஒரு பாவச்செயல்!

நீட் ஒரு பெருங் குற்றம்!

நீட் மனிதத் தன்மையற்ற ஒரு தேர்வு!

பேராசிரியர் புருனோ சந்திரசேகர்

Pin It