இந்திய ஒன்றியத்தில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வு என்று சொல்லக்கூடிய மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மட்டும் ஏன்ஏற்க மறுக்கிறது என்று பாஜக, அது சார்ந்த ஒருசில கட்சிகள், அமைப்புகளால் பேசப்படுகின்றன.

 இந்திய ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களின் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி, கல்வியின் தரம் என்று கணக்கிட்டுப் பார்த்தால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 38 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக எந்த மாநிலத்திலும் இல்லை.

நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்கிற நிலை வருவதற்கு முன்னால் மாணவர்கள் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சியின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்குச் சென்றார்கள்.

ஆனால் இன்று அப்படியில்லை. 12ஆண்டு காலம் பள்ளியில் படித்தும், நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றும் கூட, அதைக் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கித் தள்ளி விட்டு, சம்பந்தம் இல்லாமல் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு எழுத வேண்டும் என்றால், கல்வித் திட்டத்தில் ஒரு சர்வாதிகாரத்தைப் புகுத்துகிறார்கள் என்றுதானே சொல்ல வேண்டும் ?

 நீட் தேர்வில் 400 மதிப்பெண் பெற்று இருக்கும் மாணவர் கல்லூரியில் சீட்டு கிடைக்காமல் வெளியே நிற்கிறார். ஆனால் பணம் படைத்தவர்கள் 300 மதிப்பெண் இருந்தால் கூடத் தனியார் கல்லூரியில் இடம் பெற்று விடுகிறார்கள். அதற்காகப் பெற்றோர் லட்சங்களில் செலவு செய்ய வேண்டியுள்ளது.

கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுகள் இவைகளினால் நொறுங்கி விடுகின்றன. அத்துடன் 20 மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். ஒரு மாணவனின் தந்தையும் உயிரை விட்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட கொடிய நீட் தேர்வுக்கு எதிராக 20-08-2023 அன்று தி.மு.கழகம், தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.

அதே நாளில் மதுரையில் மாநாடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார், 2019 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியாம், தமிழ்நாட்டில் தி.மு.க.ஆட்சியாம், அப்போதுதான் நீட் தேர்வு தமிழகத்திற்கு வந்ததாம். எடப்பாடி குறிப்பிடும் அந்த ஆண்டில் டில்லியில் மோடியும், தமிழ்நாட்டில் எடப்பாடியும் தான் அமைச்சர்களாக இருந்தார்கள் என்பது கூட அவருக்கு எப்படித் தெரியாமல் போனது? அன்று அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத்தின் ஒரே ஓட்டால்தான் நீட் தமிழ் நாட்டில் நடைமுறைக்கு வந்தது. எடப்பாடி சொல்கிறார் அதிமுக நீட்டை எதிர்க்கிறதாம்.

வள்ளுவர் கோட்டத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டத்தில் இருந்த மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் எடப்பாடியை நோக்கி ஓர் அறைகூவல் விடுத்தார்.

“நீங்கள் நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால், வாருங்கள் நாம் டில்லிக்குப் போவோம். பிரதமர் வீட்டின்முன் போராட்டம் நடத்துவோம். அப்படி நீங்கள் வந்தால், போராடினால் நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன்” என்ற ஓர் அழைப்பை விடுத்தார் எடப்பாடியை நோக்கி.

அவ்வளவுதான்! நடிகர் சத்தியராஜுவுக்குப் போட்டியாக, யாரோ சிலர் கொடுத்த ‘புரட்சித் தமிழன்? ‘ என்ற பட்டத்தை வாங்கிக் கொண்டு, நீட்டுக்கு எதிராக ஒரு தீர்மானம் கூடப் போடாமல், அமைச்சர் உதயநிதியின் போராட்ட அழைப்புக்குப் பதில் கூறாமல் மாயமாகி விட்டார் எடப்பாடி.

உண்மையில் நுழைவுத் தேர்வு என்கிற பெயரில் ஒரு நவீனத் தீண்டாமையைக் கல்வியில் நுழைத்து மாணவர்களின் வாழ்க்கையைப் புதைகுழிக்குள் தள்ளுகின்ற பாஜக மோடி அரசும், அதற்கு அடிமை வேலை பார்க்கும் அதிமுகவின் எடப்பாடி அரசும் இனி ஆட்சியைப் பிடிக்கத் தகுதியற்றவைகள்.

மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்காக மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறது தி.மு.கழகம்.

தி.மு.கழகத்தின் முன்னெடுப்பில் அரும்பியிருக்கும் I.N.D.I.A. கூட்டணி, 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலமே பாசிசத்தை விரட்டி, மக்களாட்சியை மலர வைக்க முடியும்.

அதற்கானப் பணிகளைச் செய்வோம்.

இன்றே செய்வோம்! இடைவிடாது செய்வோம்!!