கீற்றில் தேட...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், மும்பை கோரேகான் தமிழ்ச் சங்கத்தில், நண்பர் சீனிவாசன் அவர்களின் அழைப்பை ஏற்று, இலக்கியத் தொடர் உரை ஆற்றச் சென்றிருந்தேன். முதல் நாள் கூட்டம் தொடங்கும் வேளையில், ‘அய்யர் வரார், அய்யர் வரார்’ என்று சொல்லி ஓடிப்போய் ஒரு முதியவரை உள்ளே அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு வயது 92. இயற்பெயர் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன்.

அந்தப் பெரியவர் மிகுந்த பண்புடன் என்னை அணுகி, “என்னால ரொம்ப நேரம் உக்கார முடியாது. சத்த நாழி இருந்துட்டுப் புறப்படறேன். தப்பா நெனைச்சுக்காதீங்க” என்றார். இந்த வயதில் நீங்கள் வந்ததே என்னைப் பெருமைப்படுத்துகிறது. எப்போது வேண்டுமானாலும் புறப்படுங்கள் என்றேன்.

அன்று நான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசினேன். அந்தப் பெரியவர் இடையில் புறப்படவில்லை. முழுப் பேச்சையும் சுவைத்துக் கேட்டார். வியப்பு என்னவெனில், அடுத்தடுத்த நாள்களிலும், தவறாது குறித்த நேரத்திற்கு வந்து, மூன்று நாள்களிலும் என் உரைகளை முழுமையாகக் கேட்டார்.

மூன்றாவது நாள் உரை முடிந்தபின், அருகில் வந்து, என் கைகளைப் பற்றிக் கொண்டு, என்னைப் பாராட்டினார். இந்த வயதிலும் புதிய செய்திகளை உங்கள் பேச்சிலிருந்து நான் அறிந்து கொண்டேன் என்று பெருந்தன்மையோடு கூறினார். நான் கூறிய சில கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லையென்றாலும். யாரையும் காயப்படுத்தாமல் அவற்றைக் கூறியதாகச் சொன்னார். அந்த அன்பு என்னை நெகிழ வைத்தது.

சில நாள்களுக்கு முன்பு, மும்பையிலிருந்து பேசிய நண்பர், ஹெச்.கே.மணி, அந்தப் பெரியவர், சில நாள்களுக்கு முன்பு, தன் 94 ஆவது வயதில் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கூறினார்.

அந்தப் பெரியவர் காட்டிய அன்பும், ஜனநாயகப் பண்பும் என் நெஞ்சில் நிறைந்திருக்கின்றன. அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்..!