கீற்றில் தேட...

எது நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ, அது நடக்கவில்லை.

எது நடக்கக் கூடாது என்று எதிர்பார்த்தோமோ, அது நடந்துவிட்டது.

சட்டப் பிரிவு 161இன் படி தமிழக அரசு இயற்றிய தீர்மானத்தை, சட்டப் பிரிவு 162இன் படி தமிழக ஆளுநர் கையொப்பமிட்டு நிறைவேற்றவில்லை.

குற்றவாளிகளாகக் கருதிச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் எழுவரின் விடுதலைக்குத் தமிழக ஆளுநர் ஏற்பிசைவு வழங்காமல், மத்திய உள்துறை அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறார் என்பது வேதனையைத் தருகிறது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர்களின் தண்டனை, வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டு 27 ஆண்டுகளைக் கடந்து சிறையில் இருப்பதே மிகப் பெரும் தண்டனை.

தண்டனை என்பதே திருந்துவதற்குத்தான். மாறாகக் காலம் முழுவதும் சிறைக் கொட்டடியில் போட்டு வாட்டி வதைப்பதற்கு அன்று.

-இராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பின், அவரின் குடும்பத்தினரே நாங்கள் அவர்களை மன்னித்துவிட்டோம் என்று சொன்னபிறகும் கூட, தமிழக காங்கிரஸ் கட்சியின் இன்றைய தலைவர் திருநாவுக்கரசர் தன்னிச்சையாக கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எழுவரையும் விடுதலை செய்தால் அது விபரீதங்களை ஏற்படுத்தும், பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்.

என்ன பின்விளைவுகளை ஏற்படுத்தும்?

தமிழகமே அந்த எழுவரின் விடுதலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் பா.ஜ.க. காரரான இந்நாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இப்படிச் சொல்வதுதான் விபரீதமாக இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தமிழக ஆளுநர், ஆளுநராகச் செயல்படாமல் மத்திய அரசின் ‘ஏஜண்டாக’த்தான் இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவர் மத்திய உள்துறைக்கு அனுப்பிய தமிழகத் தீர்மானம் ஏழு பேர்களின் விடுதலையை கேள்விக்குறியாக்கிவிட்டது.

இது எரியும் கொள்ளிக்கட்டையின் மேல் எண்ணெயை ஊற்றுவதுபோல் இருக்கிறது.