“எம்ஜிஆரைத் தெரியுமா உனக்கு? எம்ஜிஆரைப் பார்த்திருக்கிறாயா நீ?” என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஐப் பார்த்துக் கேட்ட பிறகுதான், ஓ..... இவர்களுக்குப் பெரியார், அண்ணாவை மட்டும்தான் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். எம்ஜிஆரையே தெரியாது என்பது இப்போது புரிகிறது.

இந்த இருவருடைய சண்டைக் காட்சிகள் உச்சத்தை அடைந்திருப்பதற்கு இவர்கள் இரண்டு பேருமே காரணம் இல்லை. ஆட்டுவிப்பவர்கள் பின்னால் இருக்கிறார்கள், நம் கண்ணுக்கு முன்னால் ஆடுகிறவர்கள் தெரிகிறார்கள்.

2024 ஆம் ஆண்டு தேர்தல் பணிகளைப் பா.ஜ.க எந்த திசையில் இருந்து தொடங்கி இருக்கிறது என்பது இப்போது புரிகிறது! இரண்டு பேரையும் மறுபடியும் சேர்த்து வைத்து, அதிமுக ஒரு பெரிய கட்சி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடாமல், இருவரையும் உடைத்து அந்தக் கட்சியை முற்றிலுமாக ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு, பிறகு இரண்டு பேரையுமே தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள், தன் கருணையை எதிர்பார்த்து நிற்கிறவர்களாக ஆக்கி விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம்.

modi ops and eps 598வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணியில், சில இடங்கள் ஈ.பி.எஸ் கட்சிக்கும், சில இடங்கள் ஓ.பி.எஸ் கட்சிக்கும் கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். அதிலும் ஓ.பி.எஸ் கட்சியினர் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனையாக இருக்கலாம் என்கின்றனர்.

இந்த இரண்டு அணிகளும் எப்படிப் போனால் நமக்கு என்ன என்று இருந்து விடலாம். ஆனால் இரண்டையும் அழித்து விட்டு, பாஜக அந்த இடத்திற்கு வர முயற்சி செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது!

பாஜக என்பது ஓர் அழிவு சக்தி. ஒற்றுமையாக இருக்கும் மக்களிடத்தில் மத வெறியையும், வேறுபாட்டையும் உருவாக்கி, மத மோதல்களுக்கு இடையில், தான் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே அவர்கள் திட்டம்.

அதிமுகவை அழிப்பது போல, திமுகவை அழித்து விட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் திமுகவின் நல்ல பெயரைக் கெடுப்பதற்கு எல்லா முயற்சிகளையும் அவர்கள் செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.

நாகர்கோவில், நீலகிரி, கோவை, தென் சென்னை போன்ற தொகுதிகளைக் குறி வைத்திருக்கும் அவர்கள், அந்தத் தொகுதிகளில் திமுகவின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் யாராக இருக்கும் என்று ஊகம் செய்து, அந்த வேட்பாளர்களின் நற்பெயர்களைக் கெடுப்பதற்கான பணிகளை முதல் கட்டமாகத் தொடங்கி இருக்கின்றனர். இன்னும் பல திட்டங்கள் அவர்கள் கைவசம் இருக்கக்கூடும்.

2023 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான எல்லா விதமான உத்திகளோடும்தான் தொடங்கப் போகிறது! ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம், பாஜக தன்னுடைய வஞ்சகம், சூழ்ச்சி, வன்முறை எல்லாவற்றையும் கட்டவிழ்த்து விடும்.

2024 தேர்தல் என்பது, யார் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடக்கவிருக்கும் தேர்தலே இல்லை. இனிமேல் இந்தியாவில் தேர்தல் என்ற ஒன்று நடக்குமா, நடக்காதா என்கிற கேள்விக்கான பதிலை முடிவு செய்வதுதான் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்.

ஜெர்மன் தேசத்தின் மிகப்பெரும் சர்வாதிகாரியாக உருவெடுத்து, உலக அமைதிக்கே ஊறு விளைவித்த ஹிட்லர் கூட, தேர்தலில் வெற்றி பெற்றுத்தான் பதவிக்கு வந்தான் என்பதை மறந்து விடக்கூடாது! அந்தத் தேர்தலில் ஹிட்லருக்கு வாக்கு அளித்த ஜெர்மானிய மக்கள், பிறகு அடுத்து ஒரு தலைமுறைக்குத் தேர்தல் என்பதை அறியாதவர்களாக ஆகிவிட்டார்கள்.

இந்தியா இந்தியாவாக இருக்கப் போகிறதா அல்லது ஹிட்லரின் பாதையை ஏற்கப் போகிறதா என்பதை வரவிருக்கும் தேர்தல் முடிவு செய்யும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It