பொதுவாக, பெண்கள் தொடர்பான முற்போக்கான முன்னெடுப்புகள் சட்ட வடிவிலோ, அறிவியல் வடிவிலோ வரும் போது சமூகத்தில் ஒரு அதிர்வு அலை ஏற்படுவதைக் காண முடிகிறது.

பெண்களின் திருமண வயது, 8 வயதிலிருந்து உயர்த்தப்பட்டுப் படிப்படியாக இன்று 21ஆக உயர்த்தப்படும் காலம் வரை சமூக எதிர்ப்பு பெரிய அளவில் காணப்படுகிறது. சிதம்பரத்தில் சிறுமிகளைத் திருமணம் செய்த

women 559தீட்சிதர்களை ஒட்டுமொத்தச் சமூகமும் எதிர்ப்பதை நாம் பார்க்கிறோம். அதேநேரம் பெண்கள் திருமண வயதைச் சட்டபூர்வமாக உயர்த்துவதையும் எதிர்ப்பதைப் பார்க்கிறோம். அதேபோல் தற்போது வாடகைத்தாய் பற்றிய விவாதங்கள் எழுகின்றன.

திரைத்துறையைச் சார்ந்தவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பார்களோ என்கிற யூகத்தை ஒட்டி நிறைய விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. வாடகைத் தாய் முறை பல ஆண்டுகளாக இந்தச் சமூகத்தில் இருந்து வருகிறது. இது குறித்து 2001 ஆம் ஆண்டு ‘‘கண்டேன் சீதையை’’ என்ற படமும் வந்துள்ளது. நாம் அன்றாடம் பார்க்கும் நாளிதழ்களிலும் வாடகைத் தாய் முறை பற்றி அறிகிறோம். ‘‘மகனின் குழந்தையைச் சுமக்கும் தாய்’’, ‘‘அண்ணனின் குழந்தையைச் சுமக்கும் தங்கை’’ என்ற தலைப்புகளோடு செய்திகள் வெளி வருகின்றன. ஒரு நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை அதில் சம்பந்தப்படும் போது இதற்கு விளம்பரம் தானாகக் கிடைத்து விடுகிறது.

உடல் ரீதியாக இதில் வாடகைத்தாய் சுரண்டப்படுகிறார் என்பது முதன்மையான வாதமாக முன் வைக்கப்படுகிறது. இது ‘தாய்மை’ சந்தையாகி விடக்கூடாது என்ற அச்சத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தாய்மை சந்தையானால் ‘தாய்மையைப் போன்ற புனிதம் உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை’, ‘பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்’ என்ற தாய்மை குறித்த வசனங்கள் கூறி பெண்களை அடிமைப்படுத்த முடியாது. தாய்மையின் மீதான பிம்பம் உடையும். வாடகைத் தாய் முறை பரவலாக்கப்பட்டு Commercial Surrogacy வந்துவிட்டால், ஜாதிய அமைப்பில் இயற்கையாகவே விரிசல் ஏற்படும். மத அடிப்படைவாதங்களும் சடங்குகளும் கேள்விக்குள்ளாகும். வளைகாப்பு யாருக்கு நடத்தப்படும்.

ஒரு சமூகத்தில் மாற்றம் படிப்படியாகத்தான் வரும். தன் வாரிசை, செயற்கைக் கருத்தரித்தல் வழியாக எப்பாடுபட்டாவது தன் மனைவிதான் சுமக்க வேண்டும் என்பதிலிருந்து நகர்ந்த, அடுத்த படிதான் வாடகைத் தாய் முறை. குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் மனப்பான்மை சமூகத்தில் வருவதற்கு வாடகைத்தாய் முறை ஒரு அடித்தளம்.

இது இரு தரப்பினருக்கிடையேயான ஒப்பந்தம். மற்றவர்களுக்கு என்ன கவலை?

“என்னதான் இருந்தாலும் வாடகைத் தாய் முறையில் உழைப்புச் சுரண்டல் இருக்கிறது” என்று சொல்பவர்களுக்கு நாம் சொல்வது :- “உழைப்புச் சுரண்டலைத் தடுக்க முதலாளித்துவக் கட்டமைப்பை எதிர்த்து, பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்!”

- ஜனனி

Pin It