நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நெருங்கிய தோழி ஒருத்தியைச் சந்தித்தேன். அவள்  உறவினரின் குடும்பக் கதையை வேதனையோடு பகிர்ந்து கொண்டாள். இனி அவள் வாயிலாக சம்பவத்தைக் கேட்கலாம். இரண்டு பெண் குழந்தைகளை உடைய அந்தக் குடும்பத்தின் தந்தை இறந்துவிட உறவினர்களை அண்டியிருக்க வேண்டிய சூழ்நிலைக்கு அக்குடும்பம் உள்ளாகியது.

kaattaaru apr18மூத்த பெண் லதாவின் படிப்பு  8 ஆம் வகுப்போடு  பறிபோனாலும் பனியன் கம்பெனி வேலைக்குச் சென்று தாயையும், தங்கையையும்  கவனித்து வந்தார். இந்தச் சூழ்நிலையில் லதாவின் தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்தார்கள். “இன்னும் 2, 3 வருடம் கழித்துத் திருமணம் செய்து கொள்கிறேன் தற்போது வேண்டாம்” என்று லதா கூறியதைச் செவி மடுத்துக் கேட்காமல் சொந்தம் விட்டுப்போகக் கூடாது என்று கூறி 18 வயதே பூர்த்தியாகியிருந்த லதாவை லாரி டிரைவர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

லதாவின் கணவர் சுமாரான தோற்றப்பொலிவு கொண்டவர் என்பதால் இயல்பிலேயே சற்றே தாழ்வு மனப்பன்மை உடையவராக இருந்திருக்கிறார். லதா நன்றாக உடை உடுத்தி, பார்ப்பதற்கு மிக நன்றாக இருப்பார். திருமண வாழ்வில் ஒரு குழந்தையும் பிறந்தது. தனக்குக் கிடைக்காத கல்வியை தன் குழந்தைக்குக் கொடுப்பதற்குத் தன் கணவரின் வருமானம் மட்டும் போதாது என்று உணர்ந்த லதா மறுபடியும் வேலைக்குச் செல்ல  முடிவெடுத்தார்.

ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் இருந்த லதாவின் கணவர் சந்தேகக்கணைகளால் லதாவை துளைத்தெடுத்தார். லதாவின் அன்றாட வாழ்வு தினமும் சண்டை, சச்சரவு, அடிதடியோடு நகர்கிறது. மிருகத்தனத்தின் உச்சமாக சைக்கிள் டயரில் மண்ணை நிரப்பி லதாவை அடித்ததில்  வீட்டிலேயே  கருக்கலைப்பும் நிகழ்ந்திருக்கிறது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்து மீண்டு வந்த லதா, கணவனுடன் வாழ முடியாது என்று கூறி,  பிறந்த வீட்டிற்கு வந்தார்.

ஆனால் தன் பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளை விட போலிக் கவுரவம் தான் பெரிது என்று கூறியதோடு நில்லாமல் சொந்தக்காரர்கள் அனைவரும் நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள், சொந்தக்காரங்க தயவு இல்லாம உன் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ண முடியாது  அதனால் நீ வாழ்ந்தாலும், செத்தாலும் உன் கணவனோடு தான் இருக்க வேண்டும் என்று கூறி லதாவின் தாயார் அவளைக் கணவர் வீட்டுக்கு துரத்திவிடுகிறார்.

இத்தனை கொடுமைகளையும் நிகழ்த்திய அவள் கணவனோ அது பற்றிய குற்றவுணர்வே இல்லாமல் அனுதினமும் அவளைப் படுக்கை அறையிலும் பாடாய்ப் படுத்துகிறான். சம்மதிக்க மறுத்த ஒரு சமயத்தில் இவளைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யவும் முயன்றிருக்கிறான். உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து போயிருக்கும் அவளுக்கு, கணவனைக் கண்டாலே எந்த நேரத்தில் எந்த மாதிரி நடந்து கொள்வானோ என்ற அச்சவுணர்வுடனேயே அன்றாட வாழ்வு கழிகிறது. போதாததற்கு   அவள் வேலை செய்யும் இடத்தில்  மேலதிகாரியோடு தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி அவன் பிரச்சினை செய்ததால் வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் நிம்மதி இல்லாமல் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவிக்கிறாள் லதா.

அக்கம் பக்கம் இருப்பவர்கள் அதற்கு மேல் ஆம்பிளைன்னா அடிக்கத் தான் செய்வான், குடும்பம்னா அப்படி இப்படித் தான் இருக்கும், பொம்பளை தான் அனுசரிச்சு போகணும். சும்மா பேசுவானா நீ ஏதாவது பண்ணியிருப்ப? என்று வெறும் வாய்க்கு அவலாய்  லதாவின் குடும்ப விவகாரம் கிடைத்தது. இந்த நாகரீகக் காலத்திலும் தனக்கு நடக்கும் கொடுமைகளை ஒரு பெண் திருமணத்தின் பெயரால் சகித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்கும் இந்த இந்துச் சமூக அமைப்பு முறையே ஒழிய வேண்டும்.

இது ஒன்றும் கற்பனையோ அல்லது ஏதோ ஒரு லதாவுக்கு நடந்த   நிகழ்வோ இல்லை. பெரும்பான்மையான வீடுகளில்  சகோதரர், பெற்றோர்,  காதலர், கணவர், புகுந்தவீட்டினர், சுற்றத்தார், மேலதிகாரி போன்றவர்களின் ஆணாதிக்கத்திற்கு எதிராக ஜாதியத்திற்கு எதிராகத்  தன் கல்வி, வேலை, காதல், திருமணம், விருப்பம், சுயமரியாதை, தன்மானம் என அனைத்துக்காகவும் பெண்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்..

தோழர் பெரியார் கூறுகிறார்.

“கலியாணம் செய்து கொள்ளும் விசயத்தில் தம்பதிகளை விட மூன்றாவதானவர்களுக்கே சகல சுதந்திரமும் இருந்து வருகிறது. கலியாண விசயத்தில் மணமக்களின் வாழ்க்கைச் சம்பந்தம் முக்கியமானது – இலட்சியமானது அல்லவென்றும், அதில் ஏதோ ஒரு தெய்வீக சம்பந்தம் இருக்கிறதென்றும், அதுவே தான் திருமண லட்சியமென்றும், ஆதலால் அப்பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவர் குற்றங்களையும் அநீதிகளையும் மற்றவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அதிலும் சிறப்பாக மாப்பிள்ளை செய்யும் கொடுமையையும், அநீதியையும் பெண் பொறுத்துக் கொண்டு வாழ்நாள் முழுதும் மாப்பிள்ளைக்கும் பெண் அடிமையாய்,பக்தியாய் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.” (குடி அரசு 12.05.1935)

கல்யாண விசயத்தில் முன்ன மாதிரி  இல்லீங்க இப்ப ரொம்பவே மாறீட்டாங்க என்று சொல்வீர்களானால் உங்களுக்கு இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்த முயல்கிறேன். சமீபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் இந்துத் திருமணச் சட்டம் பிரிவு 5 (ைை) மற்றும் 7 இல் திருத்தம் கோரி ஒரு வழக்கு தொடுத்தார். 11.04.2018 அன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில் மனுதாரரான அப்பெண் தன்னுடைய விருப்பம் இல்லாமல் தன்னை கட்டாயப்படுத்தி, மிரட்டி, துன்புறுத்தி, வற்புறுத்தி  திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், திருமணத்திற்கு முந்தைய இரவே தன்னைக் காப்பாற்றும்படி கூடுதல் காவல்துறை  அதிகாரிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், திருமணத்திற்குப் பிறகு தில்லியில் வசித்த காரணத்தால் அங்குள்ள ஒரு தொண்டுநிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தன்னை மீட்கக் கோரி விண்ணப்பித்ததையும் கூறி - தன்னை இந்தத் திருமண பந்தத்திலிருந்து விலக்கக் கோரியிருந்தார்.

மேற்கொண்டு அவர் இந்துத் திருமணங்களில் பல சடங்கு, சம்பிரதாயங்கள் இருப்பினும் பெண்ணின் சம்மதம் கோரும் ஒரு நிகழ்வுகூட கிடையாது என்றும், இந்துத் திருமணச் சட்டத்தில் (1955) பெண்ணின் சம்மதத்தைக் கண்டிப்பாகக் கேட்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி வழக்கு தொடுத்து இருந்தார். இந்துத் திருமணச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடியாது என்று கூறி உச்சநீதிமன்றம் அதைப் புறக்கணித்தது. அதே சமயம் திருமணத்தில் விலக்குக் கோரியது தொடர்பான  வழக்கு வரும் மே 5 ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாக கட்டமைத்திருக்கும் இந்திய ஜாதி வர்ணாஸ்ரம முறையில் திருமணமுறை இறுகிக் கற்பாறையாய்க் கிடக்கிற நிலையில் இந்துத் திருமணச் சட்டத்தில் மாற்றம் கோருகிற வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது நாம் அறிந்ததே. இந்துச் சட்ட மசோதாவை 1951 பிப்ரவரி 5 இல் அறிமுகப்படுத்திய தோழ அம்பேத்கர் அவர்களே “இந்துத் திருமணச் சட்டத் திருத்த மசோதாவில் ‘திருமணமும் முறிவும்’ என்ற பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டிருத்தால்  தன் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்க மாட்டார்.

தற்போதும் நடைமுறையில் இருப்பது மநுவின் ஆட்சி தான் என்பதற்கு  ஏகப்பட்ட சம்பவங்களே சான்றாகச் சொல்லலாம். சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தில் வசித்து வந்த பெண் அவர் குடும்பத்தினர் விருப்பம் இல்லாமல் காதல் திருமணம் செய்ததால் தம்பதியர் இருவரையும் நிர்வாணமாக்கி ஒருவர் தோளில் ஒருவரை அமர வைத்து ஊரே கூடி அவர்களை அடித்துத் துன்புறுத்திய சம்பவமும் ஒன்று. தாக்கியவர்களில் பெண்ணின் பெற்றோரும் அடங்குவர்.

தனிவுடைமைச் சமூக அமைப்பில் பெண் தனக்கு அடங்கியவளாக  நடக்க வேண்டும். தன்னுடைய வாரிசை மட்டுமே சுமக்க வேண்டும். அக்குழந்தைக்கு மட்டுமே தன் சொத்து போகவேண்டும் என்பதற்கான ஆணின் ஏற்பாடே திருமண முறை உண்டாகக் காரணம். இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனும் அகமணமுறையில்  மாற்றம் வராததற்குக் காரணம் ஜாதிய சமூக அமைப்பு முறை தான்.

திருமணங்களில் பெண்ணின் சம்மதமும் முக்கியம் என்ற நிலை உருவானால், இந்தச் சாதிய சமுதாயக் கட்டமைப்புக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியமாக அது அமையும் என்பதால்தான் பெண்ணின் உணர்வுகள் அடக்கப்படுகின்றன.

தோழர் அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியைவிட்டு விலகுவதற்கே முக்கியக் காரணம், பெண்விடுதலை, பெண்களின் மணவிலக்கு உரிமை, பெண்களின் சொத்துரிமைகளை இந்திய அரசாங்கம் மறுத்ததுதான் என்பதை நாம் அறியவேண்டும். பெண்கள் தங்கள் வாழ்வைத் தாங்களே நிர்ணயிப்பதற்குச் சட்டரீதியான வாய்ப்புகளை உருவாக்கப் போராடினார் அம்பேத்கர். அதே வாய்ப்புகளை சமுதாயத்தில் உருவாக்கப் போராடினார் பெரியார். இதோ பெரியாரின் வரிகள்:

“தாய்மார்களும் தங்கள் பெண்களுக்கு அவசரப் பட்டுத் திருமணம் செய்யக் கூடாது. நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அவர்களே, தங்களின் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்” - விடுதலை - 28.05.1967

“நம் பெண்கள் குறைந்த பட்சம் 20 வயது வரை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும். வாழ்விற்கு ஏற்ற வருவாயுள்ள தொழிலை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதன்பின் அவர்களாகத் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.” - விடுதலை - 08.04.1971

“திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும்.” - விடுதலை - 23.07.1971

இவ்வாறு, திருமணம் என்பதில், முடிவெடுக்கும் உரிமையைப் பெண்களுக்கு வழங்கக் கோருகிறார் பெரியார்.  அதைத்தான் காட்டாறு ஏடும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

பா.ம.க வின் நிறுவனர் இராமதாசு மற்றும் பல பிற்படுத்தப்பட்ட ஜாதிச்சங்கங்களின் தலைவர்கள் தொடர்ந்து ஒரு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். அதாவது, பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் நாடகக்காதல் திருமணங்கள் குறையும் என்பது அவர்களின் வாதம்.

நாமும் அதை வரவேற்கிறோம். ஆனால், கூடுதலாக ஒரு விதியைச் சேர்க்கச் சொல்கிறோம். பெண்ணின் திருமண வயதை 50 ஆகக்கூட உயர்த்துங்கள் வரவேற்கிறோம். எந்த வயதில் நடந்தாலும், பெண்ணின் சம்மதம் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அந்தச் சம்மதத்தைத் தெரிவிப்பதற்குக் காவல்துறையில் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுகள் இருப்பது போல ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பில் காவல்துறை மட்டுமல்லாமல், நீதித்துறை, முற்போக்கு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரின் பிரதிநிதிகளும் இருக்க வேண்டும். 

இந்த நிலை உருவானால் திருமணம் என்ற அமைப்பால், பெண்கள் முடக்கப்படுவது குறையும். தேவைப்பட்டால், திருமணம் செய்துகொள்வதையும் இது தடுக்காது. தோழர் பெரியாரின் கருத்துக்கள் இன்று கர்நாடப் பெண் ஒருவரால் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. நாளைய உலகம் இதை வரவேற்றுப் பாராட்டும்.

Pin It