கொரோனாவில் இருந்து மூன்று ஆண்டு போராட்டத்திற்குப் பின் மனித சமூகம் மீண்டிருந்தது. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வேளையில்தான் இரஷ்யா உக்ரைன் மீது பிப்ரவரி 24 2022 அன்று போரைத் தொடங்கியது. ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்த போர் ஓர் ஆண்டு கடந்தும் இன்னும் முடியவில்லை. இரஷ்யா சைனா ஒரு பக்கமும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் மறுபக்கமும் இருந்து கொண்டு தங்களுக்கு இடையேயான நீண்ட காலப் பணி போரின் களமாக உக்ரைனை வைத்துக் கொண்டுள்ளனர்

போரின் பாதிப்பு உலக நாடுகள் அனைத்தின் பொருளாதாரத்தையும் வலுவாகத் தாக்கியிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகமாக ஏற்றுமதி செய்யும் பார்லி மற்றும் சோளத்தின் ஏற்றுமதி குறைந்துள்ளது. உக்ரைனின் 60% மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். 6.3 மில்லியன் உக்ரைன் மக்கள் அகதிகளாக ஐரோப்பாவில் பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். $139 பில்லியன் மதிப்பிலான உக்ரைன் கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1.8 லட்சம் இரஷ்யா மற்றும் ஒரு லட்சம் உக்ரைன் படைவீரர்கள் காயமடைந்தோ அல்லது இறந்திருக்கலாம் என்றோ கூறப்படுகிறது.war 551கடந்த 20ஆம் தேதி உக்ரைனுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், "ஓராண்டுக்கு முன்பு உக்ரைன் மீதான தாக்குதல்கள் தொடங்கப்பட்டது. உக்ரைன் வீழ்ந்து விடும் என சிலர் கூறினர்.ஆனால் ஓராண்டாக உக்ரைன் கம்பீரமாக எழுந்து நின்று போராடி வருகிறது. அமெரிக்கா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன .உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை அளித்து விட வேண்டும் என்று இரஷ்யா விரும்பியது. போரில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் எனப் புதின் கனவு கண்டார். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அவரின் கனவு தகர்ந்து விட்டது. இரஷ்ய இராணுவம் ஆக்கிரமித்து வைத்த பகுதிகளில் பாதி மீட்கப்பட்டிருக்கிறது’’என்று கூறியுள்ளார்.

மேலும் உக்ரைன் மக்களின் நலனுக்காக அமெரிக்க பட்ஜெட்டில் தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் இராணுவத்திற்கு அதிநவீன ஏவுகணைகள், ரேடர்கள், கவச வாகனங்கள் வழங்கப்படும் எனவும் கூடுதலாக 500 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும், அடுத்த ஒரு வாரத்தில் இரஷ்யாவுடன் தொடர்புடைய அமைப்புகள் நிறுவனங்கள் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார் . உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என விரும்பினாலும் அமெரிக்கா விடுவதாக இல்லை. போரைத் தொடங்கிய இரஷ்யா தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் எத்தனை உயிர்கள்?

இன்னும் எத்தனை அகதிகள்?

இன்னும் எத்தனை காயமுற்ற உடல்கள்?

இன்னும் எத்தனை ஆதரவற்ற குழந்தைகள்?

என்று முடியும் இந்தப் போர்?

- ஜனனி

Pin It