தந்தை பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கி, பெண்ணியச் சிந்தனை களுடனும் சுயமரியாதையுடனும் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அத்தனை பெண்களுக்கும் எனது எழுத்துக்களை சமர்ப்பிக்கிறேன்.
பெண் இயல்பிலேயே வலிமை வாய்ந்தவள் என்பது கடந்த காலங்களைத் திரும்பி பார்த்தால் நிரூபணமாகிறது. மனிதன் நாடோடிகளாக வாழ்ந்ததிலிருந்து பெண்கள் தான் அந்த குழுக்களின் தலைமை வகித்து வந்துள்ளார்கள். குழந்தை களுக்குத் தாய் மட்டும் தான் அடையாளப்படுத்தப் பட்டுள்ளார்கள். தாய்வழிச்சமூகமாக இருந்ததற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் காரணமாக அமைந்தது. காலப் போக்கில் குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் மண்ணைக் காக்கவும், தாங்கள் வாழ்ந்த பகுதிகளை ஆதிக்கம் செலுத்தவும் ஆசைப்பட்டுக் கூட்டுக் குடும்பங்களாக வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
மெல்ல மெல்ல, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நிலை உருவாகி, பெண்கள் வீடுகளில் குடும்பத்தைப் பராமரிப்பவர்களாக மாற்றம் பெற்றார்கள். வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போனதால் அவர்களின் திறன் முடங்கிப் போனது. விளைவு... ‘வலிமையற்றவள்’ என்ற முத்திரை குத்தப்பட்டது. மேலும் வீடுகளில் கிடைக்கும் சுக போகங்கள் வீட்டை விட்டு வெளியே போக மனதும் அனு மதிக்கவில்லை. வீட்டைப் பராமரிப்பதும் குழந்தை பெற்று அதனை வளர்ப்பதும் மட்டுமே அவளுக் கானதாக மாறிப்போனது. இதனால் பெண்ணின் மீதுள்ள அடக்குமுறைகளுக்குப் பெண்ணே காரணமாகி விட நேருகிறது.
எங்கெல்லாம் அடக்குமுறைகள் சமூகத்தால் ஏற்படுத்தப்படுகிறது என்று பார்த்தோமானால்... முதலில், பள்ளிக்கூடங்களில்... ஆணும், பெண்ணும் சேர்ந்து படிக்கும் கல்விக் கூடங்களில் இயல்பாக இருபாலரும் பேசுவது கட்டுப்படுத்தப்படுகிறது. விளைவு..சிறுவயதிலேயே பாலின ஈர்ப்புகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். ஈவ் டீசிங் போன்ற குற்றங்கள் நடக்க ஏதுவாகிறது. சமூக சிந்தனையற்ற மாணவர் களைத் தான் இன்றைய பள்ளிக்கூடங்கள் உருவாக்கு கின்றன. சக மனிதனிடம் பேசக்கூடாது என்பது உரிமை மீறலாகும்
பள்ளிகளில் பாலியல் கல்வி கற்றுத் தருவதால் பாலினப் பாகுபாடுகளைக் களைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாணவர்கள் எதிர்ப் பாலின ஈர்ப்புகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். காதலுக்காகப் பெண்களைக் கொலை செய்யும் அவலங்கள் குறையும். ஆண்-பெண் உடல் மாற்றங்களைத் தெரிந்து கொள்வது பாலியல் - பாலினக் கல்வியால் மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே, பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியைப் பாடமாக்க வேண்டும்.
JNU, AIMS போன்ற உயர் கல்வி நிறுவனங் களில் இரு பாலர் தங்கும் விடுதிகள் தனித்தனியே இல்லாமல் சேர்ந்து தங்குவதாக இருப்பது போல், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பழக்கப் படுத்தினால் இயல்பான தன்மைக்கு மாற வாய்ப் புகள் அதிகம். குடும்பங்களில் ஆணும் பெண்ணும் சகஜமாக இருப்பது போன்று மாற்றங்கள் ஏற்படலாம்.
பூப்புனித நீராட்டு, பெண்களுக்குச் செய்து வைப்பது அடிமைத் தனமானது. ஆண் வயதுக்கு வருவது சிதம்பர ரகசியமாக கட்டிக்காக்கப்படும் போது, பெண் வயதுக்கு வருவது ஊருக்குத் தம்பட்டம் அடிப்பதாகவே தான் உள்ளது. பெண்ணின் படிப்பு இதனால் தடையானது. கிராமங்களில் இந்தப் பழக்கம் அதிகமாக உள்ளது. நகரங்களில் இவ்விழா சற்று குறைந்துள்ளது. பெண் வயதுக்கு வருவது, பிள்ளைபெறத் தகுதியாகி விட்டாள் என்பதைப் பிறருக்குத் தெரியப்படுத்தும் இந்த விழாக்கள் தடை செய்யப்பட வேண்டும்.
திருமணத்திற்கு ஆண்கள் சரியான வேலை கிடைத்த பின்பே தயாராகிறார்கள். ஆனால் பெண்கள் பதினெட்டு வயது ஆனவுடனே திருமணம் செய்து வைக்கப்படுவதால் பெண்ணின் படிப்பும் வேலை பார்த்து பொருள் ஈட்டும் தன்மையும் அவளுக்கு மறுக்கப்படுகிறது. வீட்டைப் பராமரிக்கும் உணர்வற்ற மனுசியாக மாறிப் போகிறார்கள். ஆணும், பென்ணும் சரியான கல்வி, வேலை வாய்ப்பு பெற்றுத் திருமண வாழ்க்கைக்குள் செல்வதே மிகவும் சிறப்பாகும்.
சிவப்பழகு கிரீம்கள் பெண்களுக்காகத் தான் தனிச்சந்தையில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. இது சமூகத்தின் மிகவும் அபத்தமான செயல். பெண்கள் சிவப்பாக இருந்தால் தான், திருமணச் சந்தையில் விலை போகிறாள். அவளுடைய அறிவு, கல்வி ஆளுமைகள் எல்லாம் சிவப்பழகால் முடக்கப்படுகின்றன. பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் சிவப்பு ஆதிக்கம் தடைசெய்யப்பட வேண்டும். அதைத் தூண்டும் இந்தக் கிரீம்களும், விளம்பரங்களும் தடை செய்யப்படவேண்டும்.
- தோழர் திண்டுக்கல் விஜி, புதிய குரல்