கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

போராட்ட முழக்கமாக ஒலித்தச் சொல்லை வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திலும் உண்மையின் அனலடிக்கிறது. தமிழ் மண்ணில் நினைவின் இருட்டில் மறைக்கப்பட்ட பல கொடூரங்களின் வெளிச்சம் வெளித்தெரிகிறது.

surya jaibhimவாச்சாத்தி உள்ளிட்ட கடந்த காலச் சம்பவங்களைக் கிளற வைக்கிறது ‘ஜெய் பீம்’.

தலித் மக்களின் வலிகளைக் காட்சிப்படுத்திய சில அண்மைக் காலத்தியப் படங்களைத் தொடர்ந்து, வெகு காலமாகத் தாழ்த்தப்பட்டே வைக்கப்பட்டிருந்தப் பழங்குடி மக்களைக் – குறிப்பாக இருளர் என்கிற தொல் இனத்தின் வலிகளை உண்மைக்கு நெருக்கமாகப் பேசும் படத்தின் கதைக்களம்தான் அதன் ஆதாரபலம்.

கதையின் நாயகனான சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் சந்துரு. உண்மையிலேயே முன்னாள் நீதியரசரான சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது கையில் எடுத்து வாதாடி நீதியை நிலைநாட்டிய வழக்குதான் சில மாற்றங்களுடன் திரைப்படமாகி இருக்கிறது என்பதால் உண்மையின் வீரியம் படம் நெடுகிலும்.

ராசாக்கண்ணு – பாம்பு, எலி பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற இருளர் இனத்து இளைஞன். கர்ப்பமான மனைவி, ஒரு மகள். ஊர் நாட்டாமை வீட்டில் பாம்பு புகுந்துவிட, ராசாக்கண்ணு போய்ப் பாம்பைப் பிடித்து வருகிறான். அதில் ஆரம்பிக்கிறது வினை.

அவன் பிழைக்க வெளியூர்ச் செங்கல் சூளைக்குச் சென்றிருக்கும் போது நாட்டாமை வீட்டில் நகை திருடு போகிறது. திருட்டுப் புகார் ராசாக்கண்ணு மீது விழுகிறது.

அவனுடைய கர்ப்பமான மனைவியை முரட்டுத் தனத்துடன் காவல்நிலையத்துக்கு இழுத்துப் போய்ச் சித்திரவதைப்படுத்துகிறது. ராசாக்கண்ணுவின் உறவினரான இரண்டு இளைஞர்கள் காவல் நிலையத்தில் அனுபவிக்கும் சித்திரவதைகள் கொடூரம். அதிலும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பார்ப்பவர்களைக் கலங்கடிக்கும்.

ராசாக்கண்ணுவும் காவல்துறையிடம் மாட்ட அவருக்கு உச்சக்கட்டச் சித்திரவதை நடக்கிறது. தங்கள் மீது சுமத்தப்பட்ட புகார்களை மறுத்தும் காவலர்கள் சாத்தான் குளம் பாணியில் எல்லா அராஜகங்களையும் விசாரணை என்கிற பெயரில் அரங்கேற்றுகிறார்கள். சட்டென்று காவல் நிலையத்தில் இருந்த ராசாக்கண்ணுவும், உடனிருந்த இரண்டு பேரும் காணாமல் போகிறார்கள்.

ராசாக்கண்ணுவின் மனைவி (லிஜோமோல் ஜோஸ்) வழக்கறிஞர் சந்துரு(சூர்யா)வை அணுக, அவர் வழக்கை எடுத்துக்கொண்டு ஆட்கொணர்வு மனுவைப் போடுகிறார். காவல்துறை செயற்கையாகப் புனைந்திருக்கிற முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றன.

ஜோடனைகள் எல்லாம் கலைந்து காவலர்களின் அசலான வன்மம் எப்படிப் பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது என்பது தான் படத்தின் மையம்.

வழக்கமான காதல், பாடல்கள், சண்டைகள் என்று எதுவும் இல்லாமல் தாடி விரவிய முகம், அக்னியானப் பார்வை, கொதிக்கும் வசனங்களுடன் சூர்யாவின் திரை வாழ்வில் இது முக்கியமானப் படம். எத்தனை சரிவுகள் வந்தாலும், அலைக்கழிப்புக்கு ஆளானாலும், காவல்துறை என்ற இயந்திரத்தின் அசுர நெருக்கடிக்கு ஆளானாலும்,உண்மையை வெளிக்கொண்டு வர நம்பிக்கையுடன் சூர்யா மேற்கொள்ளும் யதார்த்தமும், மனிதாபிமானமுமான நடவடிக்கைகள் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றன.

படத்தின் ஜீவனான இன்னொரு கதாபாத்திரம் இருளரான ராசாக்கண்ணுவாக நடித்திருக்கும் மணிகண்டன். எலியை வயலில் புகைபோட்டுப் பிடிப்பதில் துவங்கி பாம்பைப் பிடிப்பதுடன், திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி காவல்நிலையத்தில் சித்திரவதைக்கு ஆளாகிறக் காட்சி வரையிலும் நடிப்பில் காட்டியிருக்கும் யதார்த்தம் படத்தை உண்மைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது. கபாலிக்குப் பிறகு பாராட்டத்தக்க வளர்ச்சி.

ராசாக்கண்ணுவின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை லிஜோமோல் ஜோஸ் கர்ப்பமான வயிற்றுடன் எந்தப் பேரத்திற்கும் அடிபணியாமல் கணவருக்காக நீதி கேட்டுப் போராடும் பாத்திரத்திற்கு முடிந்தவரை தன் நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார். ‘ஜோக்கர்’ படத்தின் மையத்துடன் இசையால் இணைந்திருந்ததைப் போல, படம் முழுக்க உக்கிரமான இசையால் நிரம்பியிருக்கிறார் ஷான் ரோல்டன்.

துல்லியமான உச்சரிப்புடன் கூடிய யுகபாரதியின் பாடல் வரிகளும், படத்தின் சித்திரவதைகளையும், சில கணங்களின் அழுத்தம் பெறும் பின்னணி இசையும் பார்வையாளர்களின் மனதில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றன.

படத்திற்குத் துடிப்பேற்றியிருக்கும் இன்னொரு அம்சம் வசனங்கள். மிகையற்ற, இயல்பான கம்பீரம் கொண்ட வசனங்கள். நீதிமன்றக் காட்சிகள் சற்றே நீண்டிருந்தாலும், அதில் ஆவணப்படச்சாயல் வந்துவிடாதபடி இருக்கின்றன நீதி குறித்தும், காவல்துறை குறித்துமான வசனங்கள். பொருத்தமான நடிகர், நடிகைகள் தேர்வும் கச்சிதம்.

 காவல்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், காவலர்களாக நடித்திருப்பவர்கள்,ராசாக்கண்ணுவின் மகளாக நடித்திருக்கும் அந்தச் சிறுமி, இருளர்களாக நடிப்பவர்கள் என்று பலரும் நடிப்பில் நிறைவைத் தந்திருக்கிறார்கள். இருளர் வாழ்விடம் துவங்கி நீதிமன்றம், காவல்நிலையக் கொட்டடி என்று ஒளிப்பதிவு சிறப்பு.

சிறையில் இருந்து வெளியேறும் கைதிகளிடம் சாதியைக்கேட்டு, தாழ்த்தப்பட்ட பழங்குடிகளைக் கேட்க யாருமற்றக் கூட்டமாய் இனம் பிரித்துப் பொய் வழக்குப் போடும் முதல் காட்சியிலிருந்து,எவ்வளவு அடக்குமுறையையும் மீறி கனத்த சிசு அடங்கிய வயிற்றுடன் வென்று நகரில் பட்டா பெற்று அதற்குக் கணவரின் பெயரைச் சூட்டும் இறுதிக் காட்சி வரை படத்தைத் தூக்கிப் பிடித்திருப்பது நடந்த உண்மையின் வேர்.

உண்மை சுடும்தானே. அதுதான் இந்தப் படத்தின், இயக்குநர் த.செ.ஞானவேலின் பெரும் பலம்.

இறுதியில் எத்தனையோச் சிக்கலான வழக்குகளில் குரலற்றவர்களுக்கான நீதிமன்றக் குரலாய் ஜஸ்டிஸ் சந்துரு விளங்கியிருப்பதை இறுதியில் ‘டைட்டில் கார்டாக’க் காட்டுகிறார்கள்.

 ‘ஜெய்பீம்’ படத்தலைப்புக்கு அழுத்தமான உருவாக்கத்தின் மூலம் அதிகம் வலுச் சேர்த்திருக்கிறார் இயக்குநரான த.செ.ஞானவேல்.

காட்சி மொழியில் நீதியரசர் சந்துருவுக்கும், சமூக நீதிக்கும் கௌரவம் சேர்த்திருக்கிறது ‘ஜெய்பீம்’!

- மணா