ஏழை எளிய மக்களின் மனித உரிமைகளையும், குடி உரிமைகளையும் சட்டத்தின் துணை கொண்டு காப்பாற்றப் போராடி வரும் வழக்கறிஞர்கள் ஒருவர் பொ.ரத்தினம் தீண்டாமை வன்கொடுமைக் குற்றங்களை கேள்விப்பட்டவுடன் தானாகவே வலியச் சென்று பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு பேசி, களப்பணியாற்றுவதுடன் வழக்கையும் தானே ஏற்று நடத்தி வரும் அரிய மனிதர். மேலவளவுப் படுகொலை, சென்னகரம் பட்டிப் படுகொலை, திண்ணியம் வன்கொடுமை, கண்ணகி முருகேசன் படுகொலை போன்ற முக்கியமான படுகொலை வழக்குகளை நடத்தும் போது, சாதிவெறியர்களின் கொலை மிரட்டலைச் சந்தித்த போதிலும், தனது பணியில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் மக்களுக்காகப் பணியாற்றி வரும் போற்றுதலுக்குரிய வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து ‘சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம் ‘என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். தனது நெடிய களப் பணி அனுபவத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சந்தித்து வரும் அனைத்து வகை சவால்களையும் எதிர்கொண்ட அவரிடம் உரையாடினோம். அதிலிருந்து!

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியலின் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்கும் நோக்கில் காவல்துறையினரும் நீதித்துறையினரும் செயல்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது?

மனித உயிரை நேரடியாகக் கையாளும் அதிகாரம் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்பார் புரட்சியாளர் அம்பேத்கர். அத்தகைய பொறுப்பு வாய்ந்த துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் கூட தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை காவல்துறையினர் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர். நீதிபதிகளோ அந்தச் சட்டத்தை ஒன்றுமில்லாததாக்கப் பல நூதனமான வழிகளைக் கையாண்டு வருகிறார்கள். படுகொலை வழக்குகளில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி முன் ஜாமீன் வழங்கக் கூடாது.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு போட்டால், நீதிபதிகள் தள்ளுபடி செய்யாமல் கீழ் நீதிமன்றத்திற்கு ஒரு Direction (குறிப்பாணை) தருகிறார்கள். முன்ஜாமீன் கேட்டவரை, கீழ் நீதிமன்றத்தில் மனுப் போடுமாறு அறிவுரை கூறுகின்றனர். அவர் மனுப் போடப் போகும் கீழ் நீதிமன்றத்திற்கு ஒரே நாளில் ஜாமீன் மனு மீது தீர்ப்பளிக்க வேண்டும் என்று குறிப்பாணை அனுப்புகின்றனர். அதைப் பார்த்த கீழ்நீதிமன்ற நீதிபதி ‘நமக்கு ஏன் வம்பு’ என்று பயந்து உடனே ஜாமீன் வழங்கி விடுகிறார்கள். இது போன்ற குறிப்பாணைகளைத் தலித் சமூகத்தைச் சார்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளே வழங்குகிறார்கள் என்பதுதான் வேதனையானது.

காவல் துறையினரைப் பற்றி சொல்லவே வேண்டாம். முழுக்க முழுக்க குற்றவாளிகளுக்குச் சாதகமான மன நிலையிலிருந்து அவர்கள் இன்றுவரை மாறவில்லை. அதற்குக் காரணம் காவல் துறையினரின் சாதி உணர்வுதான். அந்த தீய உணர்விலிருந்து அவர்களை மீட்பதற்கு அரசு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அந்த தீய சாதி உணர்வுக்கு, மாவட்டக் கண்காணிப்பாளர்கள் போன்ற உயர் அதிகாரிகள் கூட தலை வணங்கிப் போகிறார்கள்.

அண்மையில் திருச்சி முசிறி வட்டத்தில் கோட்டூர் அண்ணாநகர் என்ற இடத்தில் தலித்துக்கள் தார் சாலையில் பிணம் தூக்கிச் செல்ல அனுமதிக்க முடியாது என்று முத்தரையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கூறினார்கள். அந்த தார்சாலை அரசுக்குச் சொந்தமானது. எல்லா வாகனங்களும் போய் வருகின்றன. ஆனால் தலித்துகள் மட்டும் அந்த வழியில் பிணம் தூக்கிக் கொண்டு செல்லக் கூடாது என்று கூறினார்கள். திருச்சி மாவட்ட கண்காணிப்பாளரே, தலித் மக்கள் தார் சாலையில் பிணத்தைத் தூக்கிச் சென்றுவிடாதபடி காவல் காத்தார். தார்சாலைக்கு அருகில் உள்ள மண் பாதையில்தான் பிணத்தைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்ற சட்ட விரோதமான சாதி ஆதிக்கத்திற்குத் துணை போயுள்ளார் அவர்.

பிணத்தை ஏற்றிச் சென்ற ‘ஆம்புலன்ஸ்’ வாகனத்தை கூட மண்பாதையில் ஓட்டிச் சென்றுள்ளனர். இது போன்ற தீண்டாமை கருத்தியலுக்கு மாவட்ட காவல்துறை அதிகாரியே துணை போனால், காவல்துறை கீழ் அதிகாரிகள் எந்த அளவிற்கு போவார்கள். நியாயமான முறையில் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே காவல் துறையினருக்கு வருவதில்லை. குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனை என்றால் அவர்களுக்கு சாதி வெறியுணர்வு தீவிரமடைகிறது.

இந்த சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டுமானால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முற்றிலும் மத்திய புலனாய்வு மற்றும் காவல் படைகளிடம் ஒப்படைப்பது சிறந்த வழியாக இருக்குமா?

இருக்கலாம். அதை ஒரு மாற்று வழியாக நாம் யோசிக்கலாம். ஆனால் சிபிஐ கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மிக அலட்சியமாகவே கையாளுகிறது. உதாரணத்திற்கு கண்ணகி, முருகேசன் கொலை வழக்கில், முருகேசன் சித்தப்பாவை 4வது குற்றவாளியாகச் சேர்த்தனர். அதற்கு என்ன தேவை இருக்கிறது? பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகச் சேர்ப்பதன் மூலம் இரு தரப்பினரும் தங்களுக்குள் பஞ்சாயத்து செய்து, வழக்கை ரத்து செய்யத் துண்டுவதுதான் அதன் நோக்கம். இந்த வேலையைத்தான் ‘லோக்கல் போலீசு’ செய்து வருகிறது. சிபிஐயிலும் கூட சாதி உணர்வாளர்கள்தானே அதிகாரிகளாக இருக்கிறார்கள். யாரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தாலும், அந்த அதிகாரத்தைப் பெற்றவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டுமே!

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், அந்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்றும் சில சாதி இந்து அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றனவே!

அதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது. பேராசிரியர் கல்யாணி, வழக்குரைஞர் லூசி போன்றவர்கள் மீது கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தோழர் லூசி மீது குற்றப் பத்திரிக்கையே தாக்கல் ஆகிவிட்டது. பிறகு நாங்கள் தலையிட்டு, இழப்பீடும், தவறுதலாக பழி சுமத்திய தலித் பெண்ணிற்கு ரூ.5,000/- அபராதம் பெற்றுத் தந்தோம். இதுபோல மேலும் சில வழக்குகள் உள்ளன. ஆனால் பொய் வழக்கு பதிவு செய்வது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மட்டும் நடைபெறவில்லை. எல்லாச் சட்டத்தின் கீழும் அத்தகைய தவறுகள் நடக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம், காவல்துறையினர்தான். பொய் வழக்குப் பதிவு செய்யும்படி வற்புறுத்துகின்றனர். பல இடங்களில் தூண்டி விடுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களாகச் சென்று யார் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்வதில்லை. தங்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளைக் காவல் நிலையம் வரை சென்று வழக்குப் பதிவு செய்யத் துணிவற்றவர்களாகத்தான் தலித் மக்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் தலித்துகள் பொய் வழக்குப் பதிவு செய்வது என்பது சாத்தியமற்றது. ஆனால், பொய் வழக்குப் பதிவு செய்யும்படி காவல் துறையினராலும், அவர்கள் பணிபுரியும் ஆண்டைகள்/முதலாளிகள்/ ஆதிக்க சாதியினர்/ அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரால் தூண்டிவிடப்படுகிறார்கள். வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்களாகத் திட்டமிட்டு பொய் வழக்குகளைப் பதிவு செய்வதில்லை. நிலைமை இவ்வாறிருக்க, சட்டத்தைத் திரும்பப் பெற கோருவது உள்நோக்கமுடையது. சட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்படும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்கும் காவல் துறையினரே அத்தனைக் கேடுகளுக்கும் பொறுப்பானவர்கள்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தலித் மக்கள் எந்தளவிற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்?

அந்தச் சட்டத்தைப் பற்றி தலித் மக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. தலித் அமைப்புகள், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. வன்கொடுமை நடந்தவுடன் பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போடுகிறார்கள். ஆனால் அந்த வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? புலன் விசாரணை நடந்ததா? இழப்பீடு வழங்கப்பட்டதா என்று கண்காணிப்பதில்லை. கட்டை பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வழக்கைச் சிதைப்பதற்குத் துணை போகிறார்கள். அதுவே மேலும் மேலும் வன்கொடுமைகள் நடக்கும் சூழலை அதிகரித்துவிடுகிறது.

அதே போன்று முற்போக்குக் கருத்துக்களைப் பேசும் தலித் அல்லாதார் கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளைக் குலைக்கும் நேரத்தில் செயல்படுகின்றனர். கண்ணகி & முருகேசன் கொலை வழக்கை கைவிடும்படி புலவர் கலியபெருமாள் மகன் வள்ளுவர் பலமுறை எனக்கு தொலைபேசி செய்து பேசினார். சட்ட நடவடிக்கைகளில் தலையிட்டு கட்டை பஞ்சாயத்து செய்யும் வேலையில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி எச்சரிக்கை செய்தேன். இவ்வாறு அந்தச் சட்டத்தை ஒழிக்க பல பேர் முயற்சிக்கிறார்கள்.

சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

தீவிரமாக கண்காணித்துச் செயல்படும் மக்கள் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். தலித்துகளும் தலித் அல்லாத சமூக நல ஆர்வலர்களும் இணைந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு வழக்கை கண்காணிக்க வேண்டும். தலித் அமைப்புகள் தங்களின் சட்டக் குழுக்களைப் பலப்படுத்த வேண்டும். வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கென்று தலித் அமைப்புகளில் தனி துணை நிலை அமைப்புகள் உருவாக்கப்பட்டு, எல்லா கிராமங்களிலும் கண்காணிப்பு செய்யப்பட்டால் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

Pin It