JKLF 350தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் எத்தனை எத்தனை “துல்லியத் தாக்குதலை” நாடு எதிர்கொள்ளப்  போகிறதோ தெரியவில்லை.

நேற்று மோடி அரசு நடத்தியுள்ள துல்லியத் தாக்குதல், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (JKLF) மீதானது! தீவிரவாத அமைப்பைத் தடை செய்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டு, 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அந்த அமைப்பு 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.  ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்த ஒரு தீவிரவாத அமைப்புதான் அது. முதல் 10 ஆண்டுகள் இந்தியாவிற்கு வெளியில் மட்டுமே அந்த அமைப்பு இயங்கியது. 1987இல்தான் இந்தியாவில் தன் கிளையைத் தொடங்கியது. அதன்பின் 7 ஆண்டுகள் கடுமையான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

1994 ஆம் ஆண்டு தன் சிந்தனைப் போக்கை அது மாற்றிக் கொண்டது. ஜனநாயக முறையில் இயக்கத்தைக் கொண்டு செல்ல முடிவு செய்தது. யாசின் மாலிக் எடுத்த இம்முடிவை அமானுல்லா கான் ஏற்றுக்கொள்ளவில்லை. மாலிக் தலைமையிலான அணி ஜனநாயக வழிக்குத் திரும்பியது. அமானுல்லா கான் தலைமையிலான அணி ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தது.

1999 இல் வாஜ்பாய் அரசு இருந்தபோது, யாசின் மாலிக் தீவிரவாத அமைப்புகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உதவினார். இதனைக் குறிப்பிட்டு வாஜ்பாய் அவரைப் பாராட்டினார்.

பிறகு 2004 ஜனவரி 21 அன்று, இந்த மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்ட பண்டிட் குடும்பங்கள் மீண்டும் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றும், அவர்களுக்கும் இந்த மண்ணில் உரிமை உள்ளது என்றும், அனைவரும் சகோதரர்களாய்ச் சேர்ந்து வாழ்வோம் என்றும் மாலிக் வேண்டுகோள் விடுத்தார். முதலில் அந்த அமைப்பிற்குள் அதற்கு எதிர்ப்பு  இருந்தாலும், பிறகு அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவாக, 2005 இல் பிரிந்திருந்த இரு அணியினரும் ஒன்று கூடினர். ஜனநாயகப் பாதையில் உரிமைகளுக்காகப் போராடுவது என்று முடிவெடுத்தனர்.

இப்போது மோடி அரசு ஜேகேஎல்எப் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு என்று கூறித் தடை செய்துள்ளது. நாட்டின் பாதுகாவலர்கள் இல்லையா......எங்காவது ஒரு தீவிரவாதத்தைக் காட்டி அதனைத் தடைசெய்து, தங்களின் தேசபக்தியைத் தேர்தலுக்குள் நாட்டிற்கு உணர்த்தியாக வேண்டியுள்ளது போலும்!  

இந்த மக்களின் காவலர்களை - அதுதான் அந்த சவுக்கிதார்களை - இன்னும் இரண்டு மாதங்களுக்கு நாம்- பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்!

Pin It